வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

Jump to section

கிறிஸ்துவின் பிறப்பு: லூக்காவின் பதிவு

குறிக்கோள்: முழுமையான தேவனும் பரிபூரணமான மனிதனுமாயிருக்கிற தேவ-மனிதனாகிய மிகுந்த அற்புதமான, மேன்மையான நபரின் பிறப்பைப்பற்றிய லூக்காவின் பதிவைக்கொண்டு வாலிபர்களை கவர்வது.

பொருட்சுருக்கம்: கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய லூக்காவின் பதிவு அநேக விசுவாசிகளுக்கு நன்றாகத் தெரியும், அவர்கள் அவருடைய பிறப்பை ஒரு மாபெரும் காரியம் என்றும் ஒத்துக்கொள்கிறார்கள், ஆனால் அது ஏன் இவ்வளவு மகா பெரியது என்பது சிலருக்குத்தான் தெளிவாகத் தெரியும். கிறிஸ்து கருவானதையும் பிறந்ததையும் நாம் பரிசீலிக்கும்போது, கிறிஸ்துவின் பிறப்பு ஒரு தேவ-மனிதனின் பிறப்பாக இருந்தது என்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அவர் தெய்வீக சாராம்சத்தைக் கொண்டிருக்க, பரிசுத்த ஆவியானவரால் கருவானார்; அவர் மனித சாராம்சத்தைக் கொண்டிருக்க, ஒரு மனித கன்னிகையினால் பிறந்தார். இதன் விளைவாக, கிறிஸ்து இரண்டு ஊற்றுகளையும் இரண்டு சாராம்சங்களையும் உடைய நபராக இருக்கிறார், அதாவது, அவர் முழுமையான தேவனும் பரிபூரணமான மனிதனுமாகிய ஒரு தேவ-மனிதனாக இருக்கிறார். பெத்லகேம் என்னும் நகரத்தில் அவர் பிறந்தார், பின்பு, தொழுவத்தின் முன்னணையில் கிடத்தப்பட்டார், அங்கே மிகத்தாழ்வான நிலையில் அவர் தம் வாழ்வை தொடங்கினார். இருப்பினும், முன்னணையில் இருந்த அந்த சிறிய குழந்தை “வல்லமையுள்ள தேவனாக” இருந்தது (ஏசா. 9:6). நாமெல்லாரும் கிறிஸ்துவின் பிறப்பை ஒரு தேவ-மனிதனின் பிறப்பாக உணர்ந்துகொள்வோமாக.

பின்புலம்: கிறிஸ்து மனிதமாம்சமானபோது, மனித இனத்தின் வரலாற்றில் முக்கியத்துவமான ஒன்று நிகழ்ந்தது. கிறிஸ்துவின் வருகை மனிதர்களிடையே சமாதானத்தின் வருகையாக இருந்தது என்று கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய லூக்காவின் பதிவு காண்பிக்கிறது (2:14). அது இரட்சணியக் கொம்பின் வருகையாக இருந்தது (1:75). அவருடைய வருகையில், தேவதூதர்கள் களிகூரினார்கள் (2:13-14), மேய்ப்பர்கள் தேவனை மகிமைப்படுத்தி, அவரைத் துதித்தார்கள் (2:20). அவர் உன்னதமானவருடைய குமாரன் என்று அழைக்கப்படுகிறார், தாவீதின் சிங்காசனம் அவருக்கு கொடுக்கப்படும் (1:32). அவர் ஒரு பெண்ணால் பிறந்த, தேவனுடைய குமாரனாயிருக்கிறார் (1:35). இந்த பாடத்தின் ஒவ்வொரு குறிப்பும் “கிறிஸ்துவுடன்” ஆரம்பிக்கிறது; லூக்காவின் புத்தகத்தில் இந்த கிறிஸ்து எவ்வளவு ஐசுவரியமாயிருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு, ஒவ்வொரு குறிப்பையும் மனப்பாடம்செய்வது வாலிபர்களுக்கு உதவியாக இருக்கலாம்.

அதிகாரங்கள்: லூக்கா 1–2.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

வாலிபர்களிடம் இந்த செய்திக்குறிப்பை பேசுவதற்குமுன்பு, லூக்கா 1:26-38; 2:1-20 ஆகியவைகளில் தரப்பட்டுள்ள கிறிஸ்துவின் கருத்தரிப்பையும் பிறப்பையும்பற்றிய லூக்காவின் பதிவிலுள்ள விவரங்களை முதலில் பேசுவது உதவியாக இருக்கக்கூடும். இவருடைய கருத்தரிப்பும் பிறப்பும், வேறெந்த நபருடைய கருத்தரிப்பையும் பிறப்பையும்போல் இல்லை என்று இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன. முழுமையான தேவனும் பரிபூரணமான மனிதனுமாகிய ஒரு பிள்ளை இதற்குமுன்பு பிறந்ததேயில்லை. கிறிஸ்துவின் கருத்தரிப்பு, கிறிஸ்துவின் பிறப்பு ஆகிய இரண்டு காரியங்களை இந்த செய்திக்குறிப்பின் இரண்டு குறிப்புகள் வலியுறுத்துகின்றன.

I. கிறிஸ்து தெய்வீக சாராம்சமும், மனித சாராம்சமும் ஆகிய இரண்டையும் உடைய தேவ-மனிதனாக இருக்கும்படி, ஒரு மனித கன்னிகையின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியானவரால் கருவானார்

ஒரு நபரின் வாழ்க்கைவரலாறை அளிக்கும்போது, எழுத்தாளர்கள் ஒருபோதும் அந்த நபரின் கருத்தரிப்பைப்பற்றிப் பேசி ஆரம்பிப்பதில்லை. எனினும், லூக்கா கிறிஸ்துவின் பிறப்பை மட்டுமல்ல, அவருடைய கருத்தரிப்பைப்பற்றியும் பேசி தன் பதிவை ஆரம்பிக்கிறான். தெய்வீக சாராம்சம், மனித சாராம்சம் ஆகிய இரண்டு சாராம்சங்களைக் கொண்டிருக்கும்படி, கிறிஸ்து ஒரு கற்புள்ள கன்னிகையின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியானவரால் கருவானார். இப்படிப்பட்ட ஒரு கருத்தரிப்பு, கர்த்தராகிய இயேசு என்ற மிகுந்த அற்புதமான, மிகுந்த மேன்மையான நபரை உற்பத்திசெய்து, அவரை ஒரு தேவ-மனிதனாக்கியது. (Luke 1:35, footnote 2-‍ஐ பார்க்கவும்.)

A. கிறிஸ்துவின் கருத்தரிப்பு ஒரு மனித கன்னிகைக்குள் பரிசுத்த ஆவியானவரால் நிகழ்ந்தது—லூக். 1:31, 35; மத். 1:18, 20

“இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக,” என்று லூக்கா 1:31-ல் தேவதூதன் மரியாளிடம் சொன்னான். இது எப்படியாகும்? என்று மரியாள் கேட்டபோது, “பரிசுத்த ஆவி உன்மேல் வரும்; உன்னதமானவருடைய பலம் உன்மேல் நிழலிடும்; ஆதலால் உன்னிடத்தில் பிறக்கும் பரிசுத்தமுள்ளது தேவனுடைய குமாரன் என்னப்படும்,” என்று தூதன் பதிலளித்தான் (லூக். 1:35). கிறிஸ்துவுக்கு இரண்டு ஊற்றுகள் இருக்கின்றன என்று இந்த வசனங்களில் நாம் பார்க்கிறோம். மனிதனை வந்தடைகிற தேவனாகிய பரிசுத்த ஆவியானவர் ஓர் ஊற்றாக இருக்கிறார். மரியாள் கருத்தரிப்பதற்கான வல்லமையாக மட்டும் பரிசுத்த ஆவியானவர் அவள்மேல் வரவில்லை, குழந்தையாகிய இயேசுவை மரியாள் பெற்றெடுப்பதற்குமுன்பே பரிசுத்த ஆவியானவரிலிருந்து தெய்வீக சாராம்சம் அவளுடைய கர்ப்பத்திற்குள் பெற்றெடுக்கப்பட்டது என்பதை மத்தேயு 1:18, 20-லிருந்து நாம் அறிந்துகொள்கிறோம். மனித கன்னிகையாகிய மரியாள் இன்னோர் ஊற்றாக இருக்கிறாள் (லூக். 1:27). எனவே, பரிசுத்த ஆவியானவரால் கருவாகி, ஒரு மனித கன்னிகையினால் பிறந்த கிறிஸ்து தெய்வீகமாகவும் இருக்கிறார், மனுஷீகமாகவும் இருக்கிறார். இதனால்தான், கிறிஸ்து உன்னதமானவருடைய குமாரன் என்றும், இராஜாவாகிய தாவீதின் குமாரன் என்றும் லூக்கா 1:32-ல் தேவதூதன் மரியாளிடம் சொன்னான். கிறிஸ்து தம் தெய்வீகத்தில் உன்னத தேவனாகவும், தம் மனுஷீகத்தில் உயர்ந்த பதவியுள்ள ஒரு மனிதனின் குமாரனாகவும் இருக்கிறார்.

B. கிறிஸ்துவின் கருத்தரிப்பு, தேவனையும் மனிதனையும் தம் இரண்டு சாராம்சங்களாகக்கொண்டு நடந்தது, இது அவரை ஒரு தேவ-மனிதனாக்கியது

கிறிஸ்துவுக்கு இரண்டு ஊற்றுகள் இருப்பதால், அவருக்கு இரண்டு சாராம்சங்கள் இருக்கின்றன, இதனால் அவர் ஒரு தேவ-மனிதனாக இருக்கிறார். இங்கு, “சாராம்சம்” என்பது, “சுபாவம்” என்பதைவிட ஆழமான ஒன்று; இது ஒரு குறிப்பிட்ட சாரப்பொருளின் உள்ளார்ந்த ஆக்கக்கூறை குறிக்கிறது. நாம் ஓர் ஆணால் கருத்தரிக்கப்பட்டு, ஒரு பெண்ணிலிருந்து பிறந்தபடியால், நமக்கு ஒரேவொரு சாராம்சம்தான் இருக்கிறது. எனினும், கிறிஸ்து தெய்வீக சாராம்சத்தைக் கொண்டிருக்க, பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டார், அவர் மனித சாராம்சத்தைக் கொண்டிருக்க, ஒரு மனித கன்னிகையினால் பிறந்தார்.

  1. கிறிஸ்து ஒரு தேவ-மனிதனாக இருக்கிறார், அதாவது, தேவன், மனிதன் ஆகியோரின் கலந்திணைதலாக இருக்கிறார்

கிறிஸ்துவின் கருத்தரிப்பு, ஒரு தேவ-மனிதனை உற்பத்திசெய்யும்படி, மனித சாராம்சத்தோடு தெய்வீக சாராம்சத்தின் கலந்திணைதலாக இருந்தது. ஒவ்வொரு கருத்தரிப்பும் கலந்திணைதலைப்பற்றிய விஷயமாகவே இருக்கிறது. Webster’s Unabridged Dictionary சொல்வதின்படி, “கலந்திணைதல்” என்றால், “ஒரு பொருள் வேறொரு பொருளோடு, அல்லது இரண்டுக்குமேற்பட்ட பொருட்களோடு ஒன்றாக இணைதல் அல்லது சேருதல் ஆகும், இவ்வாறு இணைவதில், விசேஷமாக, மூலப் பொருட்கள் வேறுபடுத்திப்பார்க்கக்கூடிய வகையில் இருக்கின்றன.” தேயிலையை ஒரு கோப்பை வெண்ணீருக்குள் இடுவது, கலந்திணைதலுக்கான ஓர் எடுத்துக்காட்டாகும். தேயிலை நீருடன் கலந்திணைகிறது, இதனால் உங்களுக்கு “தேநீர்” உண்டாகிறது. ஒரு தேவ-மனிதனாகும்படி இரண்டு சாராம்சங்கள் ஒன்றாகக் கலந்திணையப்பெற்ற ஒரு நபர்தான் கிறிஸ்து.

  1. கிறிஸ்து முழுமையான தேவனாக இருக்கிறார்

கிறிஸ்துவின் கருத்தரிப்பு தேவனுடைய மனிதமாம்சமாகுதலாகவே இருந்தது. எனவேதான், கிறிஸ்து மாம்சத்தில் வெளியரங்கமான தேவனாக இருக்கிறார் (1 தீமோ. 3:16). அவர் பாதி தேவனல்ல. அவர் முழுமையான தேவன்.

  1. கிறிஸ்து பரிபூரணமான மனிதனாக இருக்கிறார்

இந்த பூமியில் வாழ்ந்ததிலேயே நேர்த்தியான, இயல்பான, பரிபூரணமான ஒரே மனிதனைப்பற்றிய முழு சித்திரத்தை லூக்காவின் பதிவு வழங்ககிறது. இப்படிப்பட்ட மனிதன் என்ற முறையில் அவர், முழு மனித இனத்திற்கும் இரட்சகராக இருக்கத் தகுதியுள்ளவராயிருக்கிறார்.

II. கிறிஸ்துவின் பிறப்பு, தேவனுடைய சிருஷ்டிப்பின் பிரமாணத்திற்கேற்றபடி, ஓர் உண்மையான மனித பிறப்பாயிருந்தது

கிறிஸ்து முழு வளர்ச்சியடைந்த ஒரு மனிதனாக தீடீரென்று பூமியில் தோன்றவில்லை. மாறாக, சர்வவல்லமையுள்ள தேவனாக அவர் ஒன்பது மாதங்கள் கர்ப்பத்தில் தங்கியிருந்து, ஒரு குழந்தையாக மனுஷீகத்துடன் பிறந்தார். பிறந்த குழந்தை வல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படும் என்று ஏசாயா 9:6 கூறுகிறது. என்னே அதிசயம்!

A. கிறிஸ்துவின் பிறப்பு அகுஸ்துராயனுடைய ஆட்சியின்கீழ் நிகழ்ந்தது, குடிமதிப்பு எழுதப்படவேண்டுமென்று அவன் கட்டளையிட்டான்—லூக். 2:1

தேவனுடைய இறையாண்மையால், ஒவ்வொருவனும் தன் சொந்த நகரத்திற்கு திரும்பிவந்து, பதிவுசெய்துகொள்ளவேண்டும் என்று சொல்லி, அகுஸ்துராயன் முழு பூமிக்கும் முதல் குடிமதிப்பீட்டை கட்டளையிட்டான். இரட்சகரின் பிறப்பிடத்தைக்குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறுவதற்காக இரட்சகர் பெத்லகேமில் பிறக்குமாறு, இந்த குடிமதிப்பீட்டின்மூலம் மரியாளும் யோசேப்பும் நாசரேத்திலிருந்து பெத்லகேமுக்கு கொண்டுவரப்பட்டார்கள் (மீகா 5:2; யோவான் 7:41-42). இந்த கட்டளையில்லாமல், கிறிஸ்து பெத்லகேமில் பிறப்பது சாத்தியமாகியிருக்காது.

B. கிறிஸ்துவின் பிறப்பு பெத்லகேமில் நிகழ்ந்தது, அங்கு அவர் மிகத்தாழ்வான நிலையில் முன்னணையில் கிடத்தப்பட்டிருந்தார்—லூக். 2:5, 7

சிறுமையிலும் தாழ்வான நிலையிலும் கர்த்தர் பிறந்ததை விவரிப்பதில் லூக்காவின் பதிவு ஒப்பற்றதாயிருக்கிறது. யோசேப்பும் மரியாளும் பெத்லகேமுக்கு வந்தபிறகு, மரியாள் “தன் முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்கு இடமில்லாதிருந்தபடியினால், பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தினாள்” (லூக். 2:7). விழுந்துபோன மனிதன் பரப்பரப்பான தன் நடவடிக்கைகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த காரணத்தால், சத்திரத்தில் கிறிஸ்துவுக்கு இடமில்லாதிருந்தது. எனவே, அவர் முன்னணையில் கிடத்தப்பட்டிருந்தார். பாடல் எண் 85, இந்த நிகழ்வின் அதிசயத்தை இவ்வாறு விவரிக்கிறது: “இதோ! சர்வவல்லமையுள்ள தேவன் முன்னணையில் படுத்திருக்கிறார்.” பிறந்த குழந்தை வல்லமையுள்ள தேவன் என்று அழைக்கப்படும் என ஏசாயா 9:6 கூறுகிறது.

C. கிறிஸ்துவின் பிறப்பு தேவதூதனால் மேய்ப்பர்களுக்கு அறிவிக்கப்பட்டது—லூக். 2:8-12

“அப்பொழுது அந்த நாட்டிலே மேய்ப்பர்கள் வயல்வெளியில் தங்கி, இராத்திரியிலே தங்கள் மந்தையைக் காத்துக்கொண்டிருந்தார்கள்….தேவதூதன் அவர்களைநோக்கி: பயப்படாதிருங்கள்; இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார். பிள்ளையைத் துணிகளில் சுற்றி, முன்னணையிலே கிடத்தியிருக்கக் காண்பீர்கள்; இதுவே உங்களுக்கு அடையாளம் என்றான்” (லூக். 2:8, 10-12). (மனிதனுக்கு உணவை அளித்தது மட்டுமல்லாமல், தேவனுக்கு பலிகளையும் அளித்த) மந்தையை மேய்த்துப்பேணுகிற மேய்ப்பர்களின் வேலையும், இரவுநேரக் காவல்காப்பதில் அவர்களுடைய சிரத்தையும் இரட்சகரின் அற்புதமான பிறப்பைப்பற்றிய நற்செய்தியைப் பெறக்கூடிய முதல் நபர்களாக அவர்களைத் தகுதிப்படுத்தியது, அது தேவதூதனால் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது. வரலாற்றிலேயே மிகப்பெரிய நிகழ்வாகிய கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதல், இரவுநேரக் காவல்காக்கிற சிரத்தையுள்ள சில மேய்ப்பர்களுக்கு வெளிப்படுத்தப்பட்டது.

D. கிறிஸ்து பிறந்ததின் விளைவாக, திரளான தேவதூதர்களின் பரலோக சேனை தேவனுக்கு துதிசெலுத்தியது—லூக். 2:13-14

“அந்தக்ஷணமே பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” (லூக். 2:13-14). பூரிப்படைந்த தேவதூதர்களின் பரலோக சேனையை, மனிதனுடைய இரட்சிப்புக்கென்று இரட்சகரின் பிறப்புக்காக தேவனுக்கு துதிசெலுத்தும்படிச்செய்த அளவுக்கு கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதல் அவ்வளவு மாபெரும் நிகழ்வாக இருந்தது. மனிதமாம்சமாகுதலுக்குமுன்பு, தேவன் தேவனாயிருந்தார், மனிதன் மனிதனாயிருந்தான், ஆனால் மனிதனோடு கலந்திணையும்படி தேவன் மனிதனுக்குள் கொண்டுவரப்பட்டதேயில்லை. கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதல், இரண்டு சாராம்சங்களும் ஒன்றாகக் கலந்திணையப்பெற்ற நபராகிய தேவ-மனிதனை உற்பத்திசெய்யும்படி, மனுஷீகத்தில் தேவனுடைய மனிதமாம்சமாகுதலாக இருந்தது. “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக,” என்று சொல்லி, தேவதூதர்கள் தேவனைத் துதித்தார்கள் (லூக். 2:14). கிறிஸ்துவின் வருகை தேவனுக்கு மகிமையளித்தது, பூமியில் நமக்கு சமாதானத்தை கொண்டுவந்தது.

E. கிறிஸ்துவின் பிறப்பை மேய்ப்பர்கள் கண்டு, அதை மற்றவர்களிடம் சொன்னார்கள்—லூக். 2:15-20

தேவதூதர்கள் மேய்ப்பர்களுக்கு நற்செய்தியை அறிவித்தார்கள். அதன்பின், மேய்ப்பர்கள் வந்து, பிள்ளையை கண்டு, “தங்களுக்குச் சொல்லப்பட்டதின்படியே கேட்டு கண்ட எல்லாவற்றிற்காகவும் தேவனை மகிமைப்படுத்தி, துதித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்” (லூக். 2:20). நற்செய்தியை கேட்டு, இந்த தேவ-மனிதனுடைய பிறப்பைப்பற்றிய வெளிப்பாட்டை பார்த்திருக்கிற நாமும் தேவனை மகிமைப்படுத்தி, அவரை துதிக்கவேண்டும். கிறிஸ்துமஸில் பங்குபெறுகிறவர்களுக்கு, கிறிஸ்துவின் பிறப்புக்குரிய உள்ளார்ந்த உட்கருத்தைப்பற்றிய நிஜமான புரிந்துகொள்ளுதலும் உணர்வும் இல்லை. கிறிஸ்துவின் பிறப்பு கிறிஸ்துமஸைப்பற்றிய விஷயமல்ல (அது போலியானது, அஞ்ஞான பழக்கவழக்கங்களே அதின் ஊற்றாயிருக்கிறது), கிறிஸ்துவின் பிறப்பு வெறுமனே ஒரு குழந்தை முன்னணையில் படுத்திருப்பதை மேய்ப்பர்கள் வந்துபார்க்கிற விஷயமும் அல்ல. மாறாக, கிறிஸ்துவின் கருத்தரிப்பிலும் பிறப்பிலும், தெய்வீக சாராம்சத்தையும் மனித சாராம்சத்தையும் உடைய ஒரு தேவ-மனிதனை உற்பத்திசெய்ய மனிதனோடு தேவனுடைய கலந்திணைதல் சம்பந்தப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட பிறப்பு, இந்த பூமியில் வாழ்ந்ததிலேயே நேர்த்தியான, இயல்பான ஒரே மனிதனாக கிறிஸ்துவைப் பிறப்பித்தது. ஆதாம் தேவனைத் தனக்குள் எடுத்துக்கொண்டு, தேவனை வாழத் தவறிவிட்டான். எனவே, மனிதன் தேவனை வெளிக்காட்டுமாறு தம்மையே மனிதனோடு கலந்திணைக்கவேண்டும் என்ற தேவனுடைய நோக்கத்தை அவன் ஒருபோதும் நிறைவேற்றவில்லை. ஆயினும், லூக்காவின் சுவிசேஷத்தில், தேவன்தாமே மனிதனுக்குள் நுழைந்து, மனுஷீகத்தை தரித்துக்கொண்டு, மனிதனுடைய இரட்சிப்புக்காக ஒரு மனித குழந்தையாக பிறந்தார் (மத். 1:18, 20; யோவான் 1:1, 14). தேவதூதர்கள் களிகூரினார்கள் என்பதில் ஆச்சரியமேயில்லை!

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: நம் இரட்சிப்புக்காகவும் அனுபவத்திற்காகவும் தேவன் வரம்புள்ள ஒரு மனிதனாக மாறுகிற அதிசயத்தை காண்பிக்க சில பாடல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. “தம் மகிமையைவிட்டு இறங்கினார், என்றும் ஜீவ கதை, என் தேவனும் இரட்சகருமானவர் வந்தார், இயேசு அவர் பெயர். முன்னணையில் பிறந்தார், தம் சொந்த மக்களுக்கே அவர் அந்நியரானார், துக்கங்களும் கண்ணீரும் வேதனையுமுள்ள மனிதரானார்” என்று பாடல் எண் 82, சரணம் 1 கூறுகிறது. “உன்னதமான பரலோகத்தால் ஆராதிக்கப்பட்ட கிறிஸ்து, நித்திய கர்த்தராகிய கிறிஸ்து, கடைசிநாட்களில் அவர், கன்னியின் கர்ப்பத்து பிறப்பாய் வரக் காண்டோம். மாம்சத்திற்குள் மறைந்துள்ள தேவத்துவத்தைக் கண்டு, மனிதமாம்சமான தேவனைப் போற்றுவீர்! மனிதனோடு மனிதனாக வசிக்க விரும்பிய, இயேசு நம் இம்மானுவேல்” என்று பாடல் எண் 84, சரணம் 2 கூறுகிறது. “விசுவாசமுள்ள யாவரும் வாருங்கள்! மகிழ்ச்சியாய் வெற்றியுடன், சந்தோஷமாய் ஒற்றுமையுடன் பெத்லகேமுக்கு இப்போதே விரைந்துவாருங்கள்; இதோ! சர்வவல்லமையுள்ள தேவன் முன்னணையில் படுத்திருக்கிறார்” என்று பாடல் எண் 85, சரணம் 1 கூறுகிறது. “மகிமை கிறிஸ்து என் இரட்சகர், மெய் தெய்வீகப் பிரகாசமே; வரம்பில்லா நித்திய தேவன், வரம்புள்ள மாந்தனானார். கிறிஸ்துவே மாதேவனின் வெளிப்பாடு, பேர் ஐஸ்வர்யசம்பன்னர்! மானிடத்தோடிணைந்த தேவன், என்னுள் எல்லாமாயுள்ளார்” என்று பாடல் எண் 501, 1-ஆம் சரணமும், பல்லவியும் கூறுகிறது. இந்த பாடல்கள் ஒவ்வொன்றிலும், கிறிஸ்து நமக்கு என்னவாக இருக்கிறார் என்பதைப்பற்றிய ஏதோவொன்றை நாம் பார்க்கிறோம். இந்த பாடல்களை எழுதியவர்கள், தேவ-மனிதனாக கிறிஸ்துவைப்பற்றி பெற்றிருந்த அதே பாராட்டுதலுக்குள்ளாக வாலிபர்களும் நுழையுமாறு, இவைகளின் பொருளடக்கத்தையும், ராகத்தையும், உணர்ச்சியையும் பரிசீலிக்கும்படி வாலிபர்களை ஊக்கப்படுத்துங்கள்.

சுவிசேஷ செயலாக்கம்: Gospel Outlines, Subject 80, லூக்கா 2:8-14-ற்கான சுவிசேஷ செயலாக்கத்தை அளிக்கிறது. கர்த்தருடைய தூதன் நற்செய்தியை அறிவித்தபோது, வயல்வெளியில் இரவுநேரக் காவல்காத்திருந்த மேய்ப்பர்களுக்கு அவன் அதை அறிவித்தான். வயல்வெளி என்பது மனித வாழ்வின் வனாந்தரத்தை அடையாளப்படுத்துகிறது; இரவு என்பது மனித வாழ்வின் இருளை அடையாளப்படுத்துகிறது; மேய்த்துப்பேணுதல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் என்ன தேவையோ, அதை காண்பிக்கிறது, அதாவது, அவனுக்கு மேய்த்துப்பேணுதல் தேவை. இரட்சகரின் பிறப்பு மனித இனத்திற்கு இந்த மேய்த்துப்பேணுதலை கொண்டுவந்தது. இந்த காரணத்தினால்தான், “…மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன்,” என்று தேவதூதன் சொன்னான் (லூக். 2:10). அப்போது, உடனே “பரமசேனையின் திரள் அந்தத் தூதனுடனே தோன்றி: உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும் உண்டாவதாக என்று சொல்லி, தேவனைத் துதித்தார்கள்” (லூக். 2:13-14). மனிதன் சமாதானமடையுமாறு அவனுடைய பாவத்தை நீக்குவதினாலும், தேவன் மகிமையடையுமாறு மனிதனுக்குள் தம் ஜீவனை வழங்குவதினாலும் கர்த்தர் அவனை மேய்த்துப்பேணுகிறார். மனிதனுக்கு எல்லாவற்றையும்விட மிகுந்த தொந்தரவான காரியம் அவனுடைய பாவங்கள்தான். மனிதன் பாவஞ்செய்கிறபோதெல்லாம், அவன் எல்லா சமாதானத்தையும் இழந்துவிடுகிறான். எனினும், இரட்சகர் பிறந்தபோது, தேவதூதர்கள் மனிதர்களிடையே சமாதானத்தை பறைசாற்றினார்கள், ஏனென்றால், கிறிஸ்துவின்மூலம்தான் மனிதன் பாவத்திலிருந்து விடுதலையடைகிறான். மேலும், மனிதன் மரணத்திற்காக காத்திருக்கிறான். எனவே, தேவன் மகிமையடையுமாறு, கிறிஸ்து தம் ஜீவனை மனிதனுக்குள் வழங்குவதின்மூலம் அவனை மேய்த்துப்பேணுகிறார். இவ்வாறு, கிறிஸ்துவின் வருகையில், “உன்னதத்திலிருக்கிற தேவனுக்கு மகிமையும், பூமியிலே சமாதானமும், மனுஷர்மேல் பிரியமும்” உண்டாயிருக்கிறது (லூக். 2:14). நாம் பாவத்தில் பிறந்தோம் என்பதையும், நாம் மரணத்திற்காக காத்திருக்கிறோம் என்பதையும் அறிக்கைசெய்வதினாலும், இரட்சகராகிய கிறிஸ்துவுக்குள் விசுவாசிப்பதினாலும், நாம் சமாதானமடைந்து, தேவனுக்கு மகிமைசெலுத்துமாறு, பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிக்கப்படுகிறோம்.

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்புக்காக: Truth Lessons, Level 1, Volume 2, Lesson 18, pp. 85-88.

REFERENCES: Life-study of Luke, Message 1, pp 4–5; Message 3, pp 25–29; Message 6, pp 47–50; Luke 1:32, footnotes 1–2; 1:35, footnote 2; 2:2, footnote 1; 2:7, footnotes 1–2; 2:8, footnote 1; 2:14, footnotes 1–2; Hymns, #82, #84–85, #501; The Triune God, A Lesson Book, Lesson 14; Truth Lessons, Level 1, Volume 2, Lesson 18, pp 85–88; Lesson 20, p 131; Gospel Outlines, Subject 80.

 

Jump to section