வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

Jump to section

சிருஷ்டிப்பில் கிறிஸ்து

குறிக்கோள்: சிருஷ்டிப்பில் கிறிஸ்து எப்படி எல்லாவற்றின் சிருஷ்டிகராகவும் இருக்கிறார், ஒரு சிருஷ்டியாகவும் இருக்கிறார் என்பதைக் காண்பிப்பது.

பொருட்சுருக்கம்: இப்பிரபஞ்சத்தில் உள்ள எல்லாவற்றையும் இரண்டு பிரதான தலைப்புகளின்கீழ் வகைப்படுத்தலாம்: சிருஷ்டிகர் மற்றும் சிருஷ்டிப்பு. வேதாகமம் கிறிஸ்துவே எல்லாமாகவும் இருக்கிறார் என்பதை நமக்கு காண்பிக்க, அவர் சிருஷ்டிகராகவும் இருக்கிறார், சர்வ சிருஷ்டிப்பிலும் முதற்பேறானவராகவும் இருக்கிறார் என்று அது திரைநீக்கிக் காண்பிக்கிறது. சகலத்தையும் உள்ளடக்கிய நம் கிறிஸ்து எவ்வளவு அற்புதமானவராயிருக்கிறார்! தேவன் என்ற முறையில் அவர், எல்லாவற்றையும் சிருஷ்டித்தவராக இருக்கிறார். சகலமும் அவருக்குள், அவரைக்கொண்டும், அவருக்கென்று சிருஷ்டிக்கப்பட்டது. அவர் சகலத்தையும் தம் வல்லமையான வார்த்தையினால் தாங்கிப்பிடித்திருக்கிறார், சகலமும் அவருக்குள் ஒன்றாக நிலைநிற்கிறது. மனிதன் என்ற முறையில் அவர், சர்வ சிருஷ்டிப்பிலும் முதற்பேறானவராக இருக்கிறார், அதனால், சிருஷ்டிக்கப்பட்டவைகளில் அவரே முதலாவதாயிருக்கிறார். அவர் தேவனாகவும் இருக்கிறார், மனிதனாகவும் இருக்கிறார்; சிருஷ்டிகராகவும் இருக்கிறார், சிருஷ்டியாகவும் இருக்கிறார். இவரே நம் கிறிஸ்து!

பின்புலம்: பிரபஞ்சத்தை எது ஒன்றாகத் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆனால், கிறிஸ்துவே அதை ஒன்றாகத் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறார் என்று வேதாகமம் நமக்கு காண்பிக்கிறது. அவரால் பிரபஞ்சத்தை ஒன்றாகத் தாங்கிப்பிடித்திருக்கமுடியும், அவரால் நம்மையும் நம்மோடு தொடர்புடைய எல்லாவற்றையும் ஒன்றாகத் தாங்கிப்பிடித்திருக்கமுடியும். பெளதீக பிரபஞ்சம், நம் தனிப்பட்ட பிரபஞ்சம் ஆகிய இரண்டிலும், கிறிஸ்துவே தாங்கிப்பிடிக்கிற மையமாக இருக்கிறார். நம்முடைய தனிப்பட்ட பிரபஞ்சம் இடிந்துவிழுகிறது என்றும், தாங்கிப்பிடிக்கிற நம் மையமாக அவர் நமக்குத் தேவை என்றும் நாம் உணரும்போதெல்லாம், நாம் அவரிடம் வரவேண்டும்.

அதிகாரம்: கொலோசெயர் 1.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

முழு வேதாகமத்திலும் கிறிஸ்துவே மையமான நபராக இருக்கிறார், நாம் அனுபவிப்பதற்காக அவர் வார்த்தையில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறார். கிறிஸ்துவை அனுபவிக்காமல் கடந்துபோகிற எந்த நாளும் வீணாய் செலவழிந்த நாளாகும். ஆனால் கிறிஸ்துவை அனுபவிப்பதற்கு, முதலில் நாம் அவரைப்பற்றிய வெளிப்பாட்டைப் பெற்றுக்கொள்ளவேண்டும். அப்போஸ்தலனாகிய பவுல் முதலில் கிறிஸ்துவைப்பற்றிய வெளிப்பாட்டைப் பெற்றுக்கொண்டான், அதன்பின், அவன் அவரை ஆதாயப்படுத்தி, அனுபவமாக்கி, அனுபவித்துமகிழ்ந்து, உடைமையாக்கிக்கொள்ளும்படி ஊக்கமடைந்தான். பவுல், “கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக,” எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணியதாக பிலிப்பியர் 3:8-ல் கூறினான். இந்த பகுதியில், கிறிஸ்து என்னும் நபரைக்குறித்து நாம் பார்க்கும்போது, கிறிஸ்துவைப்பற்றிய அறிவின் மேன்மையை நாம் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இது, அவரை ஆதாயப்படுத்தி, அனுபவமாக்குவதற்கு எல்லாவற்றையும் நஷ்டமாக எண்ண நமக்கு ஊக்கமாக மாறுகிறது. இந்த பாடத்தில், கிறிஸ்து என்ற அற்புதமான நபரின் இன்னோர் அம்சத்தை நாம் பார்க்கிறோம். தேவன் என்ற முறையில், அவர் சிருஷ்டிகராகவே இருக்கிறார். மனிதன் என்ற முறையில், அவர் ஒரு சிருஷ்டியாக இருக்கிறார், இதனால், அவர் சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாக இருக்கிறார். சிருஷ்டிகரும் சிருஷ்டியுமாகிய இந்த கிறிஸ்துவைப்போல, சகலத்தையும் உள்ளடக்கியவர் பிரபஞ்சத்தில் வேறு யாரும் இல்லை.

I. தேவன் என்ற முறையில் கிறிஸ்து, எல்லாவற்றையும் சிருஷ்டித்தவராக இருக்கிறார்—எபி. 1:10, 2; யோவான் 1:3; கொலோ. 1:16-17

தேவனே எல்லாவற்றையும் சிருஷ்டித்தவர்; கிறிஸ்து தேவனாக இருப்பதால், அவர் சிருஷ்டிகராகவும் இருக்கிறார். “கர்த்தாவே, நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர்; வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியைகளாயிருக்கிறது,” என்று எபிரேயர் 1:10 கூறுகிறது. வானங்கள், பூமி ஆகிய இரண்டுமே அவருடைய கரத்தின் கிரியைகளாயிருக்கின்றன, சகலமும் அவர்மூலமாகவே உண்டாயின.

A. சகலமும் வார்த்தையாகிய அவர்மூலம் உண்டாயின—யோவான் 1:1-3

வார்த்தையாகிய கிறிஸ்துவே வழிவகையாக இருக்கிறார், அவர்மூலமாகவே சகலமும் உண்டாயின. “சகலமும் அவர்மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை,” என்று யோவான் 1:3 கூறுகிறது. தாங்கள் தாங்களாகவே உண்டாயிருப்பதாக யாராலும் சொல்லமுடியாது. உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை.

B. சகலமும் சிருஷ்டிக்கப்பட்டன:

சிருஷ்டிப்பு அகம்சார்ந்தரீதியில் கிறிஸ்துவோடு தொடர்புடையது என்று பின்வரும் குறிப்புகள் காண்பிக்கின்றன. கிறிஸ்து வெறுமனே சிருஷ்டிப்பைவிட்டு தனித்துநின்று, அவைகளை உண்டாகும்படி அழைக்கவில்லை. மாறாக, சிருஷ்டிப்புக்குரிய சகலமும் அவருக்குள்ளும், அவரைக்கொண்டும், அவருக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டதினால் அது அகம்சார்ந்தவிதத்தில் அவரோடு தொடர்புடையதாக இருந்தது. இதன் விளைவாக, கிறிஸ்துவின் நித்திய வல்லமை, தெய்வீக குணாதிசயங்கள் உட்பட, அவருடைய குணாதிசயங்களை சிருஷ்டிப்பு வெளிக்காட்டுகிறது (ரோ. 1:20). இதனால்தான், கண்களுக்குத் தெரியக்கூடிய சிருஷ்டிக்கப்பட்டவைகளை நோக்கிப்பார்ப்பதின்மூலம், கண்களுக்குத் தெரியாத தேவனுடைய குணாதிசயங்களுக்குரிய ஏதோவொன்றை மனிதனால் பார்க்கமுடியும். உயிரினங்களின் பல்வேறு வகைகளும், நட்சத்திர மண்டலங்களின் மகத்துவமும், சிருஷ்டிப்பின் அழகும் ஆகிய யாவும் தேவனுக்குரிய ஏதோவொன்றை வெளிக்காட்டுகின்றன, அவைகள் மனிதனுக்கு எந்த சாக்குபோக்கும் இல்லாதபடிச்செய்கின்றன. தேவன் இருக்கிறார் என்பதை எல்லாரும் விசுவாசித்தேயாகவேண்டும், ஏனென்றால், சிருஷ்டிப்பு அவருடைய குணாதிசயங்களை வெளியரங்கமாக்குகிறது.

  1. அவருக்குள், அதாவது, அவருடைய வல்லமையில்—கொலோ. 1:16

“அவருக்குள்” என்றால், கிறிஸ்து என்ற நபரின் உள்ளார்ந்த வல்லமையில் சகலமும் சிருஷ்டிக்கப்பட்டன என்று அர்த்தம். இந்த காரணத்தினால்தான், சர்வ சிருஷ்டிப்பும் கிறிஸ்துவினுடைய வல்லமையின் குணாதிசயங்களைக் கொண்டிருக்கிறது.

  1. அவரைக்கொண்டு, அதாவது, செயல்படுகிற கருவியாகிய அவரைக்கொண்டு—கொலோ. 1:16

“அவரைக்கொண்டு” என்றால், செயல்படுகிற கருவியாகிய அவரைக்கொண்டே சர்வ சிருஷ்டிப்பும் உண்டாக்கப்பட்டது என்று அர்த்தம். இந்த வழிமுறையில், தேவனுடைய நித்திய வல்லமையும், தெய்வீக குணாதிசயங்களும் வெளியரங்கமாக்கப்பட்டன (ரோ. 1:20).

  1. அவருக்கென்று, அதாவது, இலக்கும் முழுநிறைவேற்றமுமாகிய அவருக்கென்று—கொலோ. 1:16

“அவருக்கென்று” என்றால், கிறிஸ்துவே சர்வ சிருஷ்டிப்பின் இலக்காகவும் முழுநிறைவேற்றமாகவும் இருக்கிறார் என்று அர்த்தம். அவர் உடைமையாக்கிக்கொள்வதற்காகவே சகலமும் சிருஷ்டிக்கப்பட்டது. சர்வ சிருஷ்டிப்பும் கிறிஸ்துவுக்குள்ளும், கிறிஸ்துவைக்கொண்டும், கிறிஸ்துவுக்கென்றும் சிருஷ்டிக்கப்பட்டதால், சர்வ சிருஷ்டிப்பும் கிறிஸ்துவின் எல்லா குணாதிசயங்களிலும் அவரை வெளிக்காட்டுகிறது. கிறிஸ்துவுக்குள்ளும், கிறிஸ்துவைக்கொண்டும் பிரபஞ்சம் சிருஷ்டிக்கப்பட்டபிறகு, அவர் பூமிக்கு வந்து, தம்மைக்குறித்து விவரிப்பதற்கு சிருஷ்டிப்பிலிருந்து அநேக காரியங்களை அவரால் சுட்டிக்காட்டமுடிந்தது. அவர் தம்மைக்குறித்தே விவரிப்பதற்கு, திராட்சச்செடி, கோழி, விதைப்பவர், வாசல், மேய்ச்சல், ஆட்டுக்குட்டி, வைத்தியர், மணவாளன், துணி, புதிய வஸ்திரம், சிறந்த அங்கி, புதிய திராட்சரசம், கொழுத்த கன்று, கோதுமை மணி, மின்னல் ஆகியவைகளைப் பயன்படுத்தினார். கிறிஸ்துவை விவரிக்கவேண்டுமென்ற நோக்கத்திற்காகவே பிரபஞ்சம் அதிலுள்ள கோடிக்கணக்கான காரியங்களோடும் நபர்களோடும் சிருஷ்டிக்கப்பட்டதால், அவர் தம் சீடர்களுக்குத் தம்மை வெளிப்படுத்தும்போது, எந்தவொரு சூழ்நிலையிலும் தம்மைக்குறித்த எடுத்துக்காட்டாக ஏதோவொன்றை அல்லது யாரோவொருவரை அவரால் சுலபமாக கண்டெடுக்கமுடிந்தது. முழு பிரபஞ்சமும் கிறிஸ்துவைப்பற்றிய சித்திரமாக இருக்கிறது. நாம் இதைப் பார்த்தால், கிறிஸ்து எவ்வளவு ஐசுவரியமானவர், ஆழமானவர், எல்லையற்றவர், ஆராய்ந்தறியமுடியாதவர் என்பதை நாம் உணர்வோம். மெய்யாகவே அவர் நமக்கு எல்லாமுமாக இருக்கிறார்! (The Conclusion of the New Testament, Message 48, p. 522).

C. சகலமும் அவருடைய வல்லமையான வார்த்தையினால் தாங்கிப்பிடிக்கப்பட்டிருக்கின்றன—எபி. 1:2-3

கிறிஸ்து எல்லாவற்றையும் சிருஷ்டித்தபிறகு, அவர் தம் வல்லமையான வார்த்தையினால் எல்லாவற்றையும் தாங்கிப்பிடித்திருக்கிறார். “ஏதோவொன்று” பிரபஞ்சத்தைத் தாங்கிப்பிடித்துக்கொண்டிருக்கிறது என்று மக்கள் சொல்லுகிறார்கள், ஆனால் தம் வல்லமையான வார்த்தையினால் சகலத்தையும் தாங்கிப்பிடித்திருக்கிற கிறிஸ்துவே இந்த “ஏதோவொன்று” என்று அவர்கள் அறியாமலிருக்கிறார்கள். அவரால் பிரபஞ்சத்தைத் தாங்கிப்பிடிக்கமுடியுமென்றால், நிச்சயமாக, உங்கள் குடும்ப வாழ்க்கையையும், உங்கள் கிறிஸ்தவ வாழ்க்கையையும், உங்கள் சபைவாழ்க்கையையும் அவரால் தாங்கிப்பிடிக்கமுடியும். எல்லா விதத்திலும் நம்மைத் தாங்கிப்பிடிக்க இன்று அவர் நம் ஜீவனாக இருக்கிறார்.

D. சக்கர மையமாகிய அவருக்குள் சகலமும் ஒன்றாக நிலைநிற்கிறது—கொலோ. 1:17

“எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது [ஒருங்கே அமைந்திருக்கிறது],” என்று கொலோசெயர் 1:17 கூறுகிறது. கிறிஸ்துவுக்குள் ஒருங்கே அமைந்திருப்பதென்றால், ஒரு சக்கரத்தின் கம்பிகள் சக்கர மையத்தினால் அவைகளின் மையத்தில் ஒன்றாகத் தாங்கிப்பிடிக்கப்பட்டிருப்பதுபோல, தாங்கிப்பிடிக்கும் மையமாகிய கிறிஸ்துவினால் ஒன்றாக இருப்பதாகும். “நிலைநிற்கிறது” என்ற வார்த்தை, “இருக்கிறது,” “வாழ்கிறது,” “சேர்ந்து வாழ்கிறது” ஆகிய அர்த்தங்களையும் உள்ளடக்கியிருக்கிறது. கிறிஸ்துவே பிரபஞ்சத்தின் தாங்கிப்பிடிக்கும் மையமாக இருக்கிறார், அவரால் சகலமும் இருக்கின்றன, வாழ்கின்றன, சேர்ந்துவாழ்கின்றன. இந்த காலகட்டத்தில், அநேக திருமணங்களும், குடும்பங்களும், நட்புறவுகளும், கூட்டாண்மைகளும் பிரிந்துபோயிருக்கின்றன, ஏனென்றால், பிரபஞ்சத்தின் தாங்கிப்பிடிக்கும் மையமாக கிறிஸ்துவை அநேகர் அறிந்துகொள்ளவில்லை. நம்மை மற்றவர்களோடுகூட இருக்கவும், வாழவும், சேர்ந்து வாழவும்செய்கிற சக்கர மையம் அவர்தான். நம்மால் மற்றவர்களுடன் சேர்ந்து வாழமுடியவில்லை என்று நாம் எப்போதாவது உணர்ந்தால், நாம் கிறிஸ்துவிடம் வந்து, சக்கர மையமாகவும், நம்முடைய ஒவ்வோர் உறவையும் தாங்கிப்பிடிக்கிற மையமாகவும் அவரை ஏற்றுக்கொள்ளவேண்டும்.

II. மனிதன் என்ற முறையில் கிறிஸ்து, சர்வ சிருஷ்டிப்பிலும் முதற்பேறானவராக ஒரு சிருஷ்டியாயிருக்கிறார்—கொலோ. 1:15

கிறிஸ்து சிருஷ்டிகர் மட்டுமல்ல; அவர் சர்வ சிருஷ்டிப்பிலும் முதற்பேறானவராகவும் இருக்கிறார். சிருஷ்டிகர் என்ற முறையில் அவர், ஆரம்பமும் முடிவும் இல்லாத தேவனாகவே இருக்கிறார். சர்வ சிருஷ்டிப்பிலும் முதற்பேறானவர் என்ற முறையில், அவர் சிருஷ்டிக்கப்பட்டார், அதனால், அவருக்கு ஓர் ஆரம்பம் இருக்கிறது. அவர் மாம்சமாக மனிதமாம்சமானார் (யோவான் 1:14), அவர் ஒரு பாலகனாக பிறந்தார் (ஏசா. 9:6), பூமியில் ஓர் உண்மையான மனிதனாக வாழ்ந்தார் (1 தீமோ. 2:5), சிருஷ்டிக்கப்பட்ட இரத்தத்தோடும் மாம்சத்தோடும் சிலுவையில் மரித்தார் (எபி. 2:14), ஒரு மனிதனாக உயிர்த்தெழுந்து, பரமேறினார் (அப். 7:56), ஒரு மனிதனாக திரும்பிவருவார் (மத். 26:64). கிறிஸ்து ஓர் உண்மையான மனிதன் என்பதை தவறான போதனைகள் மறுதலித்தாலுங்கூட, கிறிஸ்து சிருஷ்டிக்கப்படாத தேவன் மட்டுமல்ல, அவர் சிருஷ்டிக்கப்பட்ட ஒரு மனிதனாகவும் இருக்கிறார் என்று வேதாகமம் தெளிவாக சொல்லுகிறது.

A. சிருஷ்டிக்கப்பட்ட இரத்தத்திலும் மாம்சத்திலும் அவர் பங்குபெறுகிறார்—எபி. 2:14

“இரத்தமும் மாம்சமும்” சிருஷ்டிக்கப்பட்டவையாகும். ஒரு மனிதனாக கிறிஸ்து இரத்தத்திலும் மாம்சத்திலும் பங்குபெற்றார். அவர் தேவன் மட்டும்தான் என்றால், மனித இனத்தின் பாவங்களுக்காக மனித இரத்தத்தை சிந்த சிலுவையில் அவர் மரித்திருக்கமுடியாது. அவர் ஓர் உண்மையான மனிதனாக மரித்த மரணம், விழுந்துபோன மனித இனத்தின் பாவங்களை நீக்கும்படி தம் இரத்தத்தை சிந்தும் தேவ ஆட்டுக்குட்டியாக அவரைத் தகுதிப்படுத்தியது.

B. சிருஷ்டிக்கப்பட்டவைகளில் அவரே முதன்மையானவராக இருக்கிறார், சர்வ சிருஷ்டிப்பிலும் அவருக்கே முதன்மை இருக்கிறது—கொலோ. 1:15

“சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறானவர்” என்னும் சொற்றொடர், சர்வ சிருஷ்டிப்பிலும் கிறிஸ்துவுக்கே முதன்மை இருக்கிறது என்பதை மறைவாக சுட்டிக்காட்டுகிறது. சிருஷ்டிக்கப்பட்ட எல்லாவற்றிலும் அவரே முதன்மையானவர், அதாவது, எல்லா சிருஷ்டிகளிலும் அவரே முதன்மையானவர். இது எப்படி சாத்தியம் என்று நாம் வியக்கக்கூடும். கிறிஸ்து 2000 ஆண்டுகளுக்குமுன்புதானே பிறந்தார்? அவர் எப்படி சர்வ சிருஷ்டிப்பிலும் முதற்பேறானவராக இருக்கமுடியும்? தேவனிடத்தில் காலம் என்னும் மூலக்கூறு இல்லை என்பதுதான் இதற்கான பதில். அவருடைய நித்திய கண்ணோட்டத்தின்படி, உலகம் தோன்றுவதற்குமுன்பே கிறிஸ்து பிறந்துவிட்டார், உலகத்தோற்றமுதல் கிறிஸ்து அடிக்கப்பட்டார் (வெளி. 13:8). என்னே அற்புதமான கிறிஸ்து! அவர் சிருஷ்டிகராகவும் இருக்கிறார், சர்வ சிருஷ்டிப்பிலும் முதற்பேறானவராகவும் இருக்கிறார். பல வழிகளில் இவரை அனுபவிக்க, இந்த கிறிஸ்துவைப்பற்றிய அறிவின் மேன்மை நம்மெல்லாரையும் கவர்ந்திழுக்கட்டும். அவரால் நாம் இருக்கிறோம். அவரால், எல்லாவற்றிலும் நாம் தாங்கிப்பிடிக்கப்படுகிறோம். அவரால், சக்கர மையமாகிய அவருக்குள் நாம் நிலைநிற்கிறோம், நாம் மற்றவர்களோடு சேர்ந்து கூட்டாக இருக்கவும்முடியும். மேலும் அவரால், மனித இரத்தம் சிந்தப்பட்டதின்மூலம் நிறைவேற்றப்பட்ட நிறைவான மீட்பும் நமக்கு இருக்கிறது. அவரைப்போல யாருமில்லை; இந்த காரணத்தினால்தான், எல்லாவற்றிலும் நாம் அவருக்கு முதன்மையளிக்கவேண்டும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: பூமி ஓர் ஆச்சரியமாக இருக்கிறது, தேவன் இருக்கிறார் என்பதற்கு அது மறுக்கமுடியாத ஆதாரமளிக்கிறது. பார்ப்பதற்கு எதனாலும் தாங்கிப்பிடிக்கப்படாததுபோல் தோன்றுகிறதும், (பூமியிலுள்ள உயிரினங்கள் உறைந்துபோகாமலும் எரிந்துபோகாமலும் காக்கும்படி) சூரியனைவிட்டு கச்சிதமான இடத்தில் அமைந்திருக்கிறதும், 24 மணிநேரத்திற்கு ஒருதடவை முறைப்படி சுழல்கிறதும், வருடாவருடம் 365 நாட்களுக்கு ஒருதடவை சூரியனைச் சுற்றிவருகிறதுமான பூமி அதிசயங்களுக்கெல்லாம் அதிசயமாக திகழ்கிறது. பூமியையும், அதிலுள்ள சிருஷ்டிகள் எல்லாவற்றையும் நாம் நோக்கிப்பார்க்கும்போது, தேவனுடைய நித்திய வல்லமைக்கும், தெய்வீக குணாதிசயங்களுக்குமுரிய ஏதோவொன்றை நாம் பார்க்கிறோம் (ரோ. 1:20). பூமியை நோக்கிப்பார்த்தபிறகு, தேவன் இல்லையென்று யாராலும் நியாயமாய் சொல்லமுடியாது. சிருஷ்டிப்பு மனிதனை சாக்குபோக்குச்சொல்லமுடியாதபடிச்செய்துவிடுகிறது. மேலும், பூமியில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள எல்லாவற்றையும் நாம் நோக்கிப்பார்ப்பதின்மூலம், தேவன் எப்படிப்பட்டவர் என்பதைக்குறித்து ஏதோவொன்றை நம்மால் பார்க்கமுடியும். பூமியிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் பார்ப்பதினால், தேவன் என்பவர் ஜீவனால் நிறைந்த தேவனாக இருக்கிறார் என்று நாம் அறிகிறோம். சிருஷ்டிக்கப்பட்டுள்ள எல்லாவற்றின் அழகையும் பார்ப்பதினால், தேவன் என்பவர் அழகும் மகத்துவமுமான தேவனாக இருக்கிறார் என்று நாம் அறிகிறோம். (நம் மனித உடல்போல) சிருஷ்டிக்கப்பட்டுள்ள எல்லாவற்றின் பரிபூரண ஒழுங்கையும் பார்ப்பதினால், தேவன் என்பவர் ஒழுங்குள்ள தேவனாக இருக்கிறார் என்று நாம் அறிகிறோம். என்னே அற்புதமான தேவன் நமக்கு இருக்கிறார். (Romans 1:20, footnote 2-ஐ பார்க்கவும்).

சுவிசேஷ செயலாக்கம்: மனித வாழ்வின் பரம இரகசியம், தேவனுடைய சிருஷ்டிப்பை விவரிப்பதுடன் ஆரம்பிக்கிறது. தேவனுடைய சிருஷ்டிப்பு, வேறெதையும்போல் அல்லாமல், மனித வாழ்வின் பரம இரகசியத்தைத் திறந்துகாண்பித்து, பூமியில் ஏன் மனிதன் உயிர்வாழ்கிறான் என்பதை வெளிப்படுத்துகிறது. எப்படி தேவன் மனிதனை சிருஷ்டித்தார் என்றும், அவர் ஏன் இவ்விதமாக மனிதனை சிருஷ்டித்தார் என்றும் வேதாகமத்தில் நான்கு வசனங்கள் திரைநீக்கிக் காண்பிக்கின்றன. “பின்பு தேவன்: நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக…என்றார்,” என ஆதியாகமம் 1:26 கூறுகிறது. மற்ற எல்லா சிருஷ்டியையும்விட வித்தியாசமான விதத்தில் தேவன் மனிதனை சிருஷ்டித்தார், அதாவது, அவர் மனிதனை அவருடைய சாயலில் சிருஷ்டித்தார். ஒரு கையுறை ஒரு கையை தன்னுள்ளடக்கிக்கொள்வதற்காக கையின் ரூபத்தில் உண்டாக்கப்படுவதுபோல, மனிதன் தேவனை தன்னுள்ளடக்கிக்கொள்வதற்காக தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான். அதன்பின், தேவன் “தாம் மகிமைக்காக எத்தனமாக்கின கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய்…நம்மை அழைத்திருக்கிறாரே,” என்று ரோமர் 9:23-24 கூறுகிறது. தம்மை உள்ளடக்கிக்கொள்ளும் பாத்திரங்களாக தேவன் நம்மை சிருஷ்டித்தார். தண்ணீரை உள்ளடக்கிக்கொள்வதற்காக புட்டிகள் உண்டாக்கப்படுவதுபோலவே, நாம் தேவனை உள்ளடக்கிக்கொள்வதற்காக உண்டாக்கப்பட்டோம். இந்த காரணத்தினால்தான் நாம் நமக்குள் எடுத்துக்கொள்கிற பல காரியங்களால் நம்மைத் திருப்திப்படுத்தமுடிவதில்லை, ஏனென்றால், நாம் தேவனை உள்ளடக்கிக்கொள்ளவேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காகவே உண்டாக்கப்பட்டோம். கடைசியாக, “உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும்…காக்கப்படுவதாக,” என்று 1 தெசலோனிக்கேயர் 5:23 கூறுகிறது. பாத்திரம் என்ற முறையில் நாம், (பெளதீக உலகத்தைத் தொடர்புகொள்ள) ஒரு சரீரத்தோடும், (உளவியல்ரீதியான உலகத்தைத் தொடர்புகொள்ள) ஓர் ஆத்துமாவோடும், (தேவனைத் தொடர்புகொள்ள) ஓர் ஆவியோடும் உண்டாக்கப்பட்டோம் என்று இந்த வசனம் காண்பிக்கிறது. நாம் நம் ஆவியில் தேவனைத் தொடர்புகொண்டு, அவரை உள்ளடக்கியிருப்போம் என்ற நோக்கத்திற்காகவே தேவன் நம்மை சிருஷ்டித்தார். இதுவே மனித வாழ்வின் நோக்கம்! வெறுமனே உங்கள் வயிற்றில் உணவை உள்ளடக்கிக்கொள்வதற்காகவோ, அல்லது உங்கள் மனதில் அறிவை உள்ளடக்கிக்கொள்வதற்காகவோ நீங்கள் சிருஷ்டிக்கப்படவில்லை, நீங்கள் உங்கள் ஆவியில் தேவனை உள்ளடக்கிக்கொள்வதற்காக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறீர்கள்.

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்புக்காக: The Conclusion of the New Testament, Message 25; The Experience of Christ, Chapter 13, pp. 111-112.

ஒப்பீடுகள்: Colossians 1:17, footnote 2; Life-study of Colossians, Message 8, pp. 66–70; Romans 1:20, footnote 2; The Conclusion of the New Testament, Message 25; Message 48, p. 522; The Experience of Christ, Chapter 12, p. 108; Chapter 13, pp. 111-112; The Secret of Experiencing Christ, Chapter 1, pp. 7-8; Chapter 2, p. 24; The Triune God and the Person and Work of Christ, A Lesson Book, Lesson 13, pp. 67-68; The Mystery of Human Life, pp. 4-6.

 

Jump to section