வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

Jump to section

மனிதமாம்சமாகுதலில் கிறிஸ்து: இயேசுவும் இம்மானுவேலும்

குறிக்கோள்: மனிதமாம்சமாகுதலில் கிறிஸ்துவினுடைய நாமத்தின் உட்கருத்தை பாராட்ட வாலிபர்களுக்கு உதவுவது, அது இயேசு (இரட்சகராகிய யெகோவா) என்பதும், இம்மானுவேல் (நம்மோடு இருக்கிற தேவன்) என்பதுமாகும்.

பொருட்சுருக்கம்: கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதலில் அவருக்கு இரண்டு அற்புதமான நாமங்கள் கொடுக்கப்பட்டன, அவர் எப்படிப்பட்ட நபர் என்பதைக்குறித்து ஆச்சரியமான ஏதோவொன்றை அவை வெளிப்படுத்துகின்றன. அவர் தேவனிடமிருந்து பெற்ற நாமம் இயேசு, இது யோசுவா என்ற எபிரேய நாமத்திற்கு இணையான கிரேக்க நாமமாகும், “இரட்சகராகிய யெகோவா” அல்லது “யெகோவாவின் இரட்சிப்பு” என்பது இதன் அர்த்தமாகும். இந்த அற்புதமான நபரில் நமக்கு, யெகோவா இருக்கிறார், இரட்சகர் இருக்கிறார், இரட்சிப்பு இருக்கிறது, நல்ல தேசமாகிய தமக்குள்ளாகவே நம்மை கொண்டுவருகிற நிஜமான யோசுவா இருக்கிறார். அவர் மனிதர்களிடமிருந்து பெற்ற நாமம் இம்மானுவேல், “நம்மோடு இருக்கிற தேவன்” என்பது இதன் அர்த்தமாகும். நாம் இயேசுவை அனுபவிக்கும்போதெல்லாம், தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வு நம்மிடம் இருக்கிறது. கிறிஸ்து என்ற நபரை நாமெல்லாரும் பாராட்டக்கூடியவர்களாக இருப்போமாக; இவர் மனிதன் மட்டுமல்ல, யெகோவாவாகவும் இருக்கிறார், யெகோவா மட்டுமல்ல, நம் இரட்சகரும் இரட்சிப்புமாகிய யெகோவாவாகவும், நம்மோடிருக்கிற தேவனாகிய இம்மானுவேலாகவும் இருக்கிறார்.

பின்புலம்: ஒரு வாலிபன் கர்த்தரை தொடுவதற்கு, கர்த்தருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடுவது, மிகுந்த விலையேறப்பெற்ற, நடைமுறைக்குரிய வழிகளுள் ஒன்றாக இருக்கக்கூடும். இயேசு, இம்மானுவேல் ஆகிய நாமங்களைப்பற்றிய வரையறைகளை நாம் பார்க்கும்போது, அவர் யார் என்பதைக்குறித்தும், அவர் நமக்காக என்ன செய்யமுடியும் என்பதைக்குறித்தும் நம்முடைய பாராட்டுதல் உயர்கிறது. கர்த்தரைநோக்கிக் கூப்பிடுதல் என்ற நடைமுறை வாலிபர்களுக்கு ஒருபோதும் பழமையாகாமல் அல்லது பொதுவானதாகாமல் இருப்பதாக.

அதிகாரம்: மத்தேயு 1.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதலில் அவருக்கு இரண்டு நாமங்கள் கொடுக்கப்பட்டன: இயேசு மற்றும் இம்மானுவேல்.இவ்விரண்டு பெயர்களுமே கிறிஸ்து என்ற நபரைப்பற்றிய வெளிப்பாட்டினால் நிறைந்திருக்கின்றன. இயேசு என்ற நாமத்தின் அர்த்தம் “இரட்சகராகிய யெகோவா” என்பதாகும், அவரே யெகோவா, அதாவது, அவரே கடந்த நித்தியத்திலிருந்து வரப்போகிற நித்தியம்வரை இருக்கிறேன் என்பவர் என்று இது காண்பிக்கிறது. இம்மானுவேல் என்ற நாமத்தின் அர்த்தம் “நம்மோடு இருக்கிற தேவன்” என்பதாகும், அவரே தேவன் என்று இது காண்பிக்கிறது. எனினும், அவர் யெகோவாவாகவும் தேவனாகவும் இருக்கிறார் என்பதைவிட, அவர் நம் அனுபவத்திற்காக இருக்கிறார் என்பதை அவருடைய நாமம் அதிகமாய் காண்பிக்கிறது. இயேசு என்ற முறையில், அவர் நம் இரட்சிப்புக்கான யெகோவாவாக இருக்கிறார்; இம்மானுவேல் என்ற முறையில், அவர் நம்மைவிட்டு தூரமாயிருக்கிற தேவனல்ல, மாறாக, நம்மோடு இருக்கிற தேவனாக இருக்கிறார். இவ்விரண்டு நாமங்களைப்பற்றிய பாராட்டுதலுக்குள் வாலிபர்களை கொண்டுவருவதும், இந்த பாராட்டுதலின்மூலம், இந்த அற்புதமான நபரை அனுபவமாக்குவதற்குள்ளாகவும், அனுபவித்துமகிழ்வதற்குள்ளாகவும் அவர்களை வரவழைப்பதுமே இந்த பாடத்தின் பாரம்.

I. இயேசு என்பது, தேவனால் அவருக்கு கொடுக்கப்பட்ட நாமமாகும்—மத். 1:21; லூக். 1:31

லூக்கா 1:31-ல் காபிரியேல் மரியாளிடம் தோன்றியபோது, அவள் கர்ப்பவதியாகி, ஒரு குமாரனை பெறுவாள் என்றும், இயேசு என்று அவள் அவருக்கு பெயரிடவேண்டும் என்றும் அவன் மரியாளிடம் சொன்னான். பிற்பாடு, மத்தேயு 1:21-ல் கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு தோன்றியபோது, இயேசு என்று அந்த பிள்ளை அழைக்கப்படவேண்டும் என தூதன் யோசேப்பிடம் சொன்னான். இவ்வாறு, இயேசு என்பது தேவனால் கர்த்தருக்கு கொடுக்கப்பட்ட நாமமாக இருக்கிறது.

A. இயேசு என்றால், “இரட்சகராகிய யெகோவா” அல்லது “யெகோவாவின் இரட்சிப்பு” என்று அர்த்தம்

இயேசு என்ற நாமம் ஐசுவரியமான அர்த்தமுள்ளதாயிருக்கிறது, இவர் எவ்வளவு அற்புதமான நபர் என்பதை அதின் உட்கருத்துகள் காண்பிக்கின்றன. இயேசு என்றால், “இரட்சகராகிய யெகோவா” அல்லது “யெகோவாவின் இரட்சிப்பு” என்று அர்த்தம். இயேசு என்பவர் ஒரு மனிதன் மட்டுமல்ல, அவர் யெகோவாவாகவும் இருக்கிறார், அவர் யெகோவா மட்டுமல்ல, அவர் நம் இரட்சிப்பாக மாறுகிற யெகோவாவாக இருக்கிறார். பின்வரும் குறிப்புகள் இயேசு என்ற நாமத்தில் அடங்கியுள்ள மூலக்கூறுகளை காண்பிக்கின்றன.

  1. அவர் யெகோவா, அதாவது, இருக்கிறவராக இருக்கிறேன்—யாத். 3:14

இயேசு என்ற நாமத்தில், யெகோவா என்ற நாமம் அடங்கியிருக்கிறது. யெகோவா என்ற நாமத்தின் அர்த்தம், இருக்கிறவராக இருக்கிறேன் என்பதாகும், அதாவது, தாமாகவே இருக்கிறவரும், என்றென்றும் இருக்கிறவருமானவர் என்பதாகும். இப்படிப்பட்டவராக, அவர் நிகழ்காலத்தில் இருக்கிறவராகவும், கடந்தகாலத்தில் இருந்தவராகவும், எதிர்காலத்தில் இருக்கப்போகிறவராகவும் இருக்கிறார். இயேசு ஒரு மனிதன் மட்டுமல்ல. அவர் தாமாகவே இருக்கிற, என்றென்றும் இருக்கிற யெகோவாவாகவே இருக்கிறார், அவரே இருக்கிறேன் என்பவர். இந்த பிரபஞ்சத்திலுள்ள மற்ற எல்லாமும் மாயையாயிருக்கிறது, அவைகள் இல்லை. அவர் மட்டுமே இருக்கிறார், அவர் மட்டுமே என்றென்றும் இருக்கிறார், “இருக்கிறேன்” என்று அவரால் மட்டுமே சொல்லமுடியும். நமக்கு உண்டாயிருக்கிற ஒவ்வொரு தேவைக்கும், “நான் இருக்கிறேன்,” என்று அவர் சொல்லுகிறார். நமக்கு ஜீவனோ, ஒளியோ, இரட்சிப்போ, பலமோ, ஞானமோ, இரக்கமோ, கிருபையோ அல்லது அன்போ தேவைப்பட்டால், அதாகவே அவர் நமக்கு இருக்கிறார். நமக்கு தேவையான தொகையை நாம் எழுதிக்கொள்வதற்காக காத்திருக்கிற, கையொப்பமிட்ட ஒரு காலியான காசோலையைப்போல அவர் இருக்கிறார். நமக்கு ஒரு டாலர் தேவைப்பட்டால், ஒரு டாலர் என்று நாம் அதில் எழுதிக்கொள்ளலாம். நமக்கு ஒரு கோடி டாலர்கள் தேவைப்பட்டால், ஒரு கோடி டாலர்கள் என்று நாம் அதில் எழுதிக்கொள்ளலாம். நமக்கு தேவையான எல்லாவற்றையும் இயேசு என்ற ஐசுவரியமான, அற்புதமான நாமத்தில் கண்டடையமுடியும்.

  1. அவர் இரட்சகராகவும் இரட்சிப்பாகவும் இருக்கிறார்—மத். 1:21

இயேசு என்ற நாமத்தில், “இரட்சகர்,” “இரட்சிப்பு” ஆகிய அர்த்தமும் அடங்கியிருக்கிறது. அவர் யெகோவா மட்டுமல்ல, அவர் யெகோவா கூட்டல் ஏதோவொன்று. அவர் நம் இரட்சகராகிய யெகோவா மற்றும் நம் இரட்சிப்பாகிய யெகோவா. யூதர்கள் யெகோவாவை விசுவாசிக்கிறார்கள், ஆனால் அவர்கள் யெகோவாவை தங்கள் இரட்சகராக கொண்டில்லை. அவர்களிடம் உள்ளதைவிட நம்மிடம் அதிகமாக இருக்கிறது, ஏனென்றால், யெகோவா மட்டுமல்ல, நம் இரட்சகரும் இரட்சிப்புமாகிய யெகோவா நம்மிடம் இருக்கிறார். இயேசு பாவத்திலிருந்தும், பாவங்களிலிருந்தும், உலகத்திலிருந்தும், சாத்தானிடமிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும், கோபத்திலிருந்தும், கலகத்திலிருந்தும், நாம் வெறுக்கிற எல்லாவற்றிலிருந்தும் நம்மை இரட்சிக்கிற நம் இரட்சகராகிய யெகோவாவாக இருக்கிறார். இந்த காரணத்தினால்தான், ஒருவன் இயேசுவின் நாமத்தைநோக்கிக் கூப்பிடும்போதெல்லாம், அவனுக்குள் ஒரு குறிப்பிட்ட உணர்வு உண்டாயிருக்கிறது. ஒருவன் “ஆபிரகாம் லிங்கன்” என்ற நாமத்தைநோக்கிக் கூப்பிட்டால், உள்ளே எந்த உணர்வும் இல்லை, நிச்சயமாக இரட்சிப்புக்குரிய அனுபவம் எதுவும் இல்லை. ஒருவன் இயேசுவின் நாமத்தைநோக்கிக் கூப்பிடும்போது, அவனுக்குள் ஒரு குறிப்பிட்ட உணர்வு உண்டாயிருக்கிறது, அவன் யெகோவாவை தன் இரட்சகராகவும் இரட்சிப்பாகவும் அனுபவிப்பான். நாம் அனுதினமும் இந்த நாமத்தைநோக்கிக் கூப்பிட ஆரம்பிப்போமானால், யெகோவாவை நம் இரட்சகராகவும் இரட்சிப்பாகவும் அனுபவிப்பது எவ்வளவு விலையேறப்பெற்றது என்பதைக்குறித்து நாமெல்லாரும் சாட்சிபகர்வோம்.

  1. அவர் நம்மை இளைப்பாறுதலுக்குள் கொண்டுவருகிற நம் யோசுவாவாக இருக்கிறார்—எபி. 4:8; மத். 11:28-29

இயேசு என்பது, யோசுவா என்னும் எபிரேய நாமத்திற்கு இணையான கிரேக்க நாமமாகும். மோசே, இஸ்ரவேல் மக்களை எகிப்தைவிட்டு, வனாந்தரத்திற்குள் கொண்டுவந்தான். யோசுவா, வனாந்தரத்திலிருந்து நல்ல தேசத்திற்குள் அவர்களைக் கொண்டுவந்தான். யோசுவா முன்னடையாளமாகக் காண்பிக்கிற இயேசு, நிஜமான இளைப்பாறுதலுக்குள், அதாவது, நல்ல தேசமாகிய தமக்குள்ளாகவே நம்மை கொண்டுவருகிறார். நாம் நல்ல தேசமாகிய கிறிஸ்துவை அனுபவித்துமகிழ்வதற்குள் நுழைவது சாத்தியமற்றதாக தோன்றும்போது, நிஜமான யோசுவாவாக இயேசுவை அனுபவிக்க நாம் அவரைநோக்கிக் கூப்பிடவேண்டும், அவர் தேசத்தை அனுபவத்துமகிழ்வதற்குள்ளாக நம்மை வழிநடத்த வல்லவராயிருக்கிறார். அவருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடுவதின்மூலம், நம் நல்ல தேசமாகிய கிறிஸ்துவுக்குள் நாம் கொண்டுவரப்பட்டு, அவருடைய எல்லா ஐசுவரியங்களின் இனிமையான சுவையையும் அனுபவித்துமகிழ்கிறோம்.

B. இயேசு என்ற நாமத்தைநோக்கிக் கூப்பிடுவதின்மூலம், நாம் இரட்சிக்கப்பட்டு, இளைப்பாறுதலுக்குள் கொண்டுவரப்படுகிறோம்

“இயேசுவே, இயேசுவே, பிரியமான ஆண்டவரே! அன்பினிமித்தம், உம் தூய நாமத்தை ஒரு நாளுக்கு ஆயிரம்முறை நான் சொன்னால், அதற்காய் என்னை மன்னித்தருளும்,” என்று பாடல் எண் 208 கூறுகிறது. நாம் அவரை யெகோவாவாகவும், நம் இரட்சிப்பாகவும், இளைப்பாறுதலான நல்ல தேசத்திற்குள் நம்மை கொண்டுவருகிற நம் யோசுவாவாகவும் அனுபவிக்குமாறு, அவருடைய பிரியமான நாமத்தை அனுபவித்துமகிழ ஒவ்வொரு கணப்பொழுதும் அவருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடவேண்டும். மற்றவர்கள் இரட்சிக்கப்படும்படி நாம் அவர்களுக்கு உதவ, இயேசுவின் நாமத்தைநோக்கிக் கூப்பிட நாம் அவர்களுக்கு உதவவேண்டும். அதன்பின், அவர்களை இரட்சிப்புக்குள் கொண்டுவந்தபிறகு, தொடர்ச்சியாக அவருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடுவதின்மூலம் அனுதினமும் இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து தண்ணீர் மொண்டுகொள்ள நாம் அவர்களுக்கு உதவவேண்டும் (ஏசா. 12:3-4).

II. இம்மானுவேல் என்பது, அவர் மக்களால் அழைக்கப்பட்ட நாமமாகும்

இயேசு என்பது தேவனால் கர்த்தருக்கு கொடுக்கப்பட்ட நாமமாகும். இம்மானுவேல் என்பது மனிதர்களால் அவருக்கு கொடுக்கப்பட்ட நாமமாகும் (மத். 1:23).

A. இம்மானுவேல் என்றால், “நம்மோடு இருக்கிற தேவன்” என்று அர்த்தம்—மத். 1:23

“இதோ, ஒரு கன்னிகை கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாள்; அவருக்கு இம்மானுவேல் என்று பேரிடுவார்கள் என்று சொன்னான். இம்மானுயேல் என்பதற்குத் தேவன் நம்மோடிருக்கிறார் என்று அர்த்தமாம்,” என மத்தேயு 1:23 கூறுகிறது. நம் இரட்சகராகிய இயேசு இம்மானுவேலாக இருக்கிறார், அதாவது, நம்மோடு இருக்கிற தேவனாக இருக்கிறார். அவர் நம்மிடையே வாசம்பண்ணும்படி மாம்சத்தில் ஒரு மனிதனாய் மாம்சமான தேவனாகவே இருக்கிறார் (யோவான் 1:14). நாம் எவ்வளவு அதிகமாக இயேசுவை நம் இரட்சகராக அனுபவிக்கிறோமோ, அவ்வளவு அதிகமாக அவர் நம்மோடு இருக்கிற தேவனாகவே இருக்கிறார் என்பதை நாம் கண்டுகொள்கிறோம். அவர் நம்மோடு எந்த சம்பந்தமும் இல்லாமல், பரலோகங்களில் தூரமாயிருக்கிற தேவனல்ல; மாறாக, அவர் நம்மோடு இருக்கிற தேவன், நமக்கு அருகில் உள்ள தேவன், நாம் அனுபவமாக்குவதற்கும் அனுபவித்துமகிழ்வதற்குமான தேவன் என்பதை நாம் உணர்கிறோம். தேவன் உங்களைவிட்டு தூரமாயிருக்கிறார் என்று நீங்கள் உணர்கிறீர்களா? அப்படியானால், உங்களோடு இருக்கிற தேவனை அனுபவமாக்குவதற்கும், அனுபவித்துமகிழ்வதற்கும் நீங்கள் அவருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடவேண்டும்.

B.அவர் நம்மோடு இருக்கிற தேவன்:

நம் இம்மானுவேலாக நம்மோடு இருக்கிற கர்த்தரை சில வேத பகுதிகள் காண்பிக்கின்றன.

  1. நம் கூட்டங்களில்—மத். 18:20

“இரண்டு பேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்,” என்று மத்தேயு 18:20 கூறுகிறது. நாம் பரிசுத்தவான்களுடன் அவருடைய நாமத்திற்குள் கூடிவரும்போதெல்லாம், அவர் இம்மானுவேலாக, நம்மோடு இருக்கிற தேவனாக, அங்கே இருக்கிறார்.

  1. சகல நாட்களிலும்—மத். 28:20

“…இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்…”என்று மத்தேயு 28:20 கூறுகிறது. ஒவ்வொரு நாளும் கர்த்தர் நம்மோடு இருக்கிறார். நாம் இதை விசுவாசிக்கவேண்டும்.

  1. நம் ஆவியில்—2 தீமோ. 4:22

“கர்த்தராகிய இயேசுகிறிஸ்து உன் ஆவியுடனேகூட இருப்பாராக. கிருபை உங்களோடிருப்பதாக,” என்று 2 தீமோத்தேயு 4:22 கூறுகிறது. கர்த்தர் ஜீவன்தரும் ஆவியானவராக நம் ஆவியில் இருக்கிறார், நாள்முழுவதும் நாம் நம் ஆவியில் வாழும்படி நம்மை ஆதாரிக்கிற கிருபையாகவும் அவர் நம் ஆவியில் இருக்கிறார்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: கர்த்தருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடுதல் என்ற அற்புதமான நடைமுறைக்குள்ளாக அறிமுகப்படுத்தப்படுவதற்கு, உயர்நிலைப்பள்ளிப்பருவம் ஒரு நல்ல தருணமாகும். தங்கள் வீடுகளில் தங்கள் பெற்றோர் கர்த்தருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடுவதையும், கூட்டங்களில் பரிசுத்தவான்கள் கூப்பிடுவதையும் அநேக வாலிபர்கள் கேட்டிருக்கிறார்கள். எனினும், சில வாலிபர்கள் தாங்களே இந்த இனிமையான அனுபவமகிழ்ச்சிக்குள்ளாக நுழையாமல் இருக்கக்கூடும். கர்த்தருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடுதல் என்ற சிறுபுத்தகம், நாம் ஏன் கூப்பிடவேண்டும் என்பதற்கு சில எளிமையான காரணங்களையும், நாம் வீரியமுள்ள விதத்தில் கூப்பிடுவதற்கான வழியையும் அளிக்கிறது. இந்த சிறுபுத்தகத்தை வாசிப்பதின்மூலம், கர்த்தருடைய நாமத்தைநோக்கிக் கூப்பிடுதல் என்னும் ஆரோக்கியமான நடைமுறைக்குள் நுழைய நாம் வாலிபர்களுக்கு உதவமுடியும். சுருக்கமாக சொல்வதானால், கூப்பிடுவதற்கான நோக்கம்: 1) இரட்சிக்கப்படுவதற்காக (ரோ. 10:13), 2) இரட்சிப்பின் ஊற்றுகளிலிருந்து தண்ணீர் மொண்டுகொள்வதற்காக (ஏசா. 12:2-4), 3) இக்கட்டிலிருந்தும் பிரச்சனையிலிருந்தும் துயரத்திலிருந்தும் வேதனையிலிருந்தும் காப்பாற்றப்படுவதற்காக (சங். 18:6; 50:15; 86:7; 81:7; 116:3-4), 4) அவருடைய இரக்கத்தை அனுபவித்துமகிழ்வதற்காக (சங். 86:5), 5) ஆவியானவரைப் பெற்றுக்கொள்வதற்காக (அப். 2:17, 21), 6) கர்த்தரைப் புசித்து, குடிப்பதற்காக (ஏசா. 55:1, 6), 7) அவருடைய ஐசுவரியங்களை அனுபவித்துமகிழ்ந்து (ரோ. 10:12), கர்த்தரைப் பற்றிக்கொள்ளும்படி நம்மைநாமே கிளர்ந்தெழச்செய்வதற்காக (ஏசா. 64:7). கூப்பிடுவதற்கான வழி: 1) தூய்மையான இருதயத்திலிருந்து கூப்பிடுதல் (2 தீமோ. 2:22), 2) சுத்தமான உதடுகளுடன் கூப்பிடுதல் (செப். 3:9), 3) திறந்த வாயுடன் கூப்பிடுதல் (சங். 81:10), 4) கூட்டாக கூப்பிடுதல் (2 தீமோ. 2:22), 5) அனுதினமும் கூப்பிடுதல் (சங். 88:9), 6) நாம் உயிரோடிருக்கும்வரை கூப்பிடுதல் (சங். 116:2).

சுவிசேஷ செயலாக்கம்: கனவில் ஒரு தேவதூதன் யோசேப்புக்கு தோன்றி, மரியாள் “ஒரு குமாரனைப் பெறுவாள், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார்,” என்று அவனிடம் சொன்னான் (மத். 1:21). இந்த வசனத்தில் இரண்டு விஷயங்கள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. முதலில், அவருடைய நாமம் இயேசு என்று அழைக்கப்படுகிறது. அவர் வெறும் மனிதனைவிட மேலானவர் என்று கர்த்தருக்கு அளிக்கப்பட்ட “இயேசு” என்னும் நாமம் நிரூபிக்கிறது, ஏனென்றால், இயேசு என்றால், “இரட்சகராகிய யெகோவா” என்று அர்த்தம். அவர் ஒரு தச்சன் என்று யூதர்கள் சொன்னார்கள், அவர் ஒரு தீர்க்கதரிசி என்று சிலர் சொன்னார்கள், அவர் ஒரு மத புரட்சியாளர் என்று வேறு சிலர் சொன்னார்கள். இருப்பினும், இவர்கள் யாவரும் அவரை வெறுமனே ஒரு மனிதனாகத்தான் கருதினார்கள். இயேசு, அதாவது, நம் இரட்சகராகிய யெகோவா என்று அவர் அழைக்கப்பட்டார் என வேதாகமம் காண்பிக்கிறது. இவர் மனித வரலாற்றில் ஏற்படுத்தியுள்ள அசாதாரணமான தாக்கத்தையும், கிறிஸ்தவ விசுவாசத்தின் அசாதாரணமான வல்லமையையும் நாம் சற்று யோசித்துப்பார்த்தால், இயேசு தேவன்தான் என்ற உண்மையிலிருந்தே இந்த வல்லமை வருகிறது என்பதை நாம் உணராமல் இருக்கவேமுடியாது. அவருடைய நாமம் சொல்லப்படுவதை நீங்கள் கேட்கும்போதுகூட, இந்த நாமத்தின் ஒப்பற்றத்தன்மையைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படாமல் இருக்கவேமுடியாது. இயேசு என்ற நாமத்தைக் கேட்கும்போது சிலர் சங்கடப்படுகிறார்கள். இந்த நாமத்தைக் கேட்கும்போது சிலர் ஆறுதலடைகிறார்கள். எப்படியிருந்தாலும், எல்லாருமே ஏதோவொன்றை உணர்கிறார்கள். இது ஏனென்றால், இயேசு தேவனாயிருக்கிறார், அதாவது, இரட்சகராகிய யெகோவாவாயிருக்கிறார். இரண்டாவதாக, அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து இரட்சிப்பார் என்றும் இந்த வசனம் கூறுகிறது. இயேசு சிலுவையில் மரித்ததின்மூலம், பாவத்திற்கான தண்டனையிலிருந்து நம்மை விடுவிக்க தம் இரத்தத்தை சிந்தினார்; ஜீவன்தரும் ஆவியானவராக மாற அவர் உயிர்த்தெழுந்ததின்மூலம், பாவத்தின் வல்லமையிலிருந்தும், நம் பாவ வாழ்க்கையின் தொடர்ச்சியான சித்தரவதையிலிருந்தும் அவர் நம்மை விடுவிக்கிறார். நாம் பாவத்தில் பிறந்தோம் என்பதை அறிக்கைசெய்வதினாலும், பாவங்களிலிருந்து நம்மை இரட்சிக்க இயேசு இரட்சகராகிய யெகோவாவாக இருக்கிறார் என்பதை அறிக்கைசெய்வதினாலும் (மத். 1:21), நாம் அவரை இரட்சகராக பெற்றுக்கொள்ளமுடியும் (Gospel Outlines, Subject 61-ஐ பார்க்கவும்).

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்புக்காக: Life-study of Matthew, Message 5, pp. 60-62; Message 6, pp. 65-67, 75-78; The Conclusion of the New Testament, Message 26, pp. 284-287.

REFERENCES: Calling on the Name of the Lord (booklet), pp 9–10; Life-study of Matthew, Message 5, pp 60–62; Message 6, pp 65–67, 75–78; Life Lessons, Lesson 7, pp 45–46; The Conclusion of the New Testament, Message 26, pp 284–287; Gospel Outlines, Subject 61.

 

Jump to section