வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

Jump to section

கிறிஸ்துவின் தெய்வீக குணாம்சங்களும் மனித நற்பண்புகளும்

குறிக்கோள்: தேவ-மனிதனாகக் கிறிஸ்துவின் மனித வாழ்க்கை அவருடைய மனித நற்பண்புகளின்மூலம் அவருடைய தெய்வீக குணாம்சங்களின் வெளியாக்கமாக இருந்தது என்பதைக் காட்டுவது.

பொருட்சுருக்கம்: ஒரு தேவ-மனிதனாக, கிறிஸ்து தெய்வீக குணாம்சங்களையும் கொண்டிருந்தார், மனித நற்பண்புகளையும் கொண்டிருந்தார். தேவன் என்னவாக இருக்கிறாரோ அதுதான் குணாம்சங்கள். உதாரணமாக, தேவன் அன்பும் ஒளியுமாக இருக்கிறார், அவர் நீதியும் பரிசுத்தமுமாக இருக்கிறார். மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான், இதனால் அவன், தெய்வீக குணாம்சங்களுக்கு பொருத்தமான நற்பண்புகள் உடையவனாக இருக்கிறான். மனித நற்பண்புகள் “கையுறையாக” இருக்கின்றன, தெய்வீக குணாம்சங்கள் “கையாக” இருக்கின்றன, இந்த கைக்காகவே கையுறை உண்டாக்கப்பட்டது. தேவன் என்ற முறையில், கிறிஸ்துவுக்கு தெய்வீக குணாம்சங்கள் இருக்கின்றன; மனிதன் என்ற முறையில், அவருக்கு மனித நற்பண்புகள் இருக்கின்றன. முதல் தேவ-மனிதனாக அவர் வாழ்ந்த வாழ்க்கையில், தெய்வீக குணாம்சங்கள் என்ற “கை” மனித நற்பண்புகள் என்ற “கையுறையில்” வெளிப்படுத்தப்பட்டது. எடுத்துக்காட்டிற்கு, மனதுருக்கம் என்னும் தம் மனித நற்பண்பில், தெய்வீக குணாம்சமாகிய மனதுருக்கத்தை அவர் வெளிக்காட்டினார். அவர் தம் நபரில், தேவனும் மனிதனும் கலந்திணைகிற கலந்திணைதலாக இருக்கிறார்; அவர் தம் வாழ்க்கையில், மனித நற்பண்புகளில் தெய்வீக குணாம்சங்களின் வெளியாக்கமாக இருந்தார். ஆரம்பத்திலிருந்தே தேவன் விரும்பிய மனித வாழ்க்கை இதுதான்.

பின்புலம்: ஆரம்பத்திலிருந்தே நாம் வாழவேண்டும் என்று தேவன் உத்தேசித்திருந்த வாழ்க்கையின் தரம் என்ன? இன்று, வெகுசிலரே இந்தத் தரத்தின்படி வாழ்வதை நாம் பார்க்கிறோம். நல்ல வாழ்க்கை வாழ நாமாகவே முயற்சிசெய்து, ஒழுக்கநெறியோடு இருப்பதுதான் வாழ்வதற்கான வழி என்று சிலர் நினைக்கிறார்கள். கல்விகற்பதுதான் வாழ்வதற்கான வழி என்று வேறுசிலர் நினைக்கிறார்கள். ஆனால், மனித நற்பண்புகளுக்குள் இருக்கும் தெய்வீக குணாம்சங்களை மனிதன் வாழ்ந்துகாட்டவேண்டும் என்றே தேவன் உத்தேசித்தார். இது, தேவனுடன் சேர்ந்து வாழும் வாழ்க்கையாகும். தங்கள் வாழ்க்கை தேவனில்லாத வாழ்க்கையாக அல்ல, மாறாக, தங்களுக்குள் தேவன் இருந்து, தங்கள்மூலம் அவர் தம்மையே வெளிக்காட்டுகிற வாழ்க்கையாக இருக்கவேண்டியது என்பதை வாலிபர்கள் பார்க்கவேண்டும். தேவனே நம் அன்பாகவும், சகிப்புத்தன்மையாகவும், தயவாகவும் நம் மனித நற்பண்புகளில் வெளிக்காட்டப்படாமல், நாம் அன்பாயிருக்கவும், சகித்துக்கொண்டிருக்கவும், தயவாயிருக்கவும் முயற்சிப்பது, கை இல்லாததும், கையை வெளிக்காட்டாததுமான ஒரு காலியான கையுறையின் வாழ்க்கையைப்போன்றது. மனித நற்பண்புகளுக்குள்ளிருந்து தெய்வீக குணாம்சங்களை வெளிக்காட்டி, தேவன் உத்தேசித்தபடி ஒரு மனிதன் வாழ்வது எப்படியிருக்கும் என்பதை குறிப்பு II-ல் நாம் பார்க்கிறோம்.

அதிகாரங்கள்: மத்தேயு–யோவான்.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

I. ஒரு தேவ-மனிதனாக, கிறிஸ்து தெய்வீக குணாம்சங்களையும் கொண்டிருந்தார், மனித நற்பண்புகளையும் கொண்டிருந்தார்

கர்த்தராகிய இயேசு தேவ-மனிதனாக இருப்பதால், அதாவது, மனுஷீகத்துடன் தெய்வீகத்தின் கலந்திணைதலாக இருப்பதால், அவரிடம் தெய்வீக குணாம்சங்களும் இருக்கின்றன, மனித நற்பண்புகளும் இருக்கின்றன.

A. தேவன் என்னவாக இருக்கிறாரோ, அதுவே தெய்வீக குணாம்சங்கள்

தெய்வீக குணாம்சங்கள் என்பவை, தேவன் என்னவாக இருக்கிறாரோ, அதின் எல்லா உள்ளியல்பான குணாதிசயங்களாகும் அல்லது பண்புகளாகும். தேவன் அவருடைய ஆள்தத்துவத்தில் என்னவாக இருக்கிறார் என்பது, அவருடைய எல்லா குணாம்சங்களின் கூட்டுமொத்தமாகும். தேவன் அன்பாகவும் ஒளியாகவும் இருக்கிறார், அவர் நீதியாகவும் பரிசுத்தமாகவும் இருக்கிறார் ஆகியவை அவருடைய பிரதானமான சில குணாம்சங்களாகும். தேவன் மகிமையாகவும், வல்லமையாகவும், சர்வஞானியாகவும், சர்வவியாபியாகவும், பராக்கிரமமாகவும், சர்வவல்லவராகவும், இரக்கமுள்ளவராகவும், உத்தமமானவராகவும், சத்தியமானவராகவும், கிருபையுள்ளவராகவும், ஐசுவரியசம்பன்னராகவும், மகிழ்ச்சியாகவும், சமாதானமாகவும்கூட இருக்கிறார். தேவன் என்னவாக இருக்கிறாரோ, அதில் இவைகள் சில குணாம்சங்கள் மட்டும்தான்.

B. மனித நற்பண்புகள் என்பவை, ஒரு மனிதனின் பலமான ஒழுக்கங்களும் போற்றத்தக்க குணங்களுமாகும்

மனித நற்பண்புகள் என்பவை, ஒரு மனிதனிடமுள்ள போற்றத்தக்க குணங்களாகும்; நல்லதை செய்ய ஒருவனிடமுள்ள ஒழுக்கரீதியான வலிமைகளையும் அல்லது ஆற்றல்களையும்கூட அவைகள் குறிக்கின்றன. உதாரணமாக, அன்பு, மனதுருக்கம், தைரியம், நியாயம், நேர்மை, தன்னடக்கம், தாராளகுணம் ஆகிய யாவும் மனித நற்பண்புகளாகும். ஆயினும், இவைகள் வெறும் புறம்பான நடத்தைகள் அல்ல; இவைகள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படுவதற்கான உள்ளான ஆற்றல்களாகும். சிலர் மனதுருக்கமாக, தாராளகுணமுள்ளவர்களாக அல்லது நேர்மையாக இருக்க பயிற்சிசெய்திருப்பதால், சந்தர்ப்பம் வரும்போது, இந்த நற்பண்புகளை வெளிப்படுத்த அவர்களிடம் ஒழுக்கரீதியான வலிமையும் ஆற்றலும் இருக்கின்றன. மனித நற்பண்புகள் என்பவை, ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படுவதற்கான ஆற்றல்களாக இருப்பதால், அவைகள் வெறும் கூடு அல்லது “கையுறை” மட்டும்தான்; உள்ளான நிஜமாகவும் பலமாகவும் இருக்கும்படி தெய்வீக “கை” அவைகளுக்குள் வரவேண்டியிருக்கிறது.

C. மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான், இதனால் அவன், தெய்வீக குணாம்சங்களுக்கு பொருத்தமான நற்பண்புகளைக் கொண்டிருக்கிறான்

தேவன் என்னவாக இருக்கிறாரோ அதின்படியே, மனித நற்பண்புகளை உடைய மனிதன் தேவனால் சிருஷ்டிக்கப்பட்டான் என்பதை ஆதியாகமத்தின் முதல் இரண்டு அதிகாரங்களில் ஆரம்பம்முதல் நாம் பார்க்கிறோம். குறிப்பாக, தேவன் ஒளியாகவும் அன்பாகவும், பரிசுத்தமுள்ளவராகவும் நீதியுள்ளவராகவும் இருப்பதால், அவர் இந்தக் குணாம்சங்களின்படி மனிதனை சிருஷ்டித்தார். மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டது ஆதியாகமம் 1-ல் விவரிக்கப்பட்டிருக்கிறது. மனிதன் சிருஷ்டிக்கப்பட்ட நேரத்தில், அன்பு, ஒளி, பரிசுத்தம், நீதி ஆகியவற்றின் நிஜம் அவனிடம் இல்லை என்பதை நாம் சுட்டிக்காட்டினோம். உண்மையில், தேவனே இந்த தெய்வீக குணாம்சங்களின் நிஜம். சிருஷ்டிப்பின்மூலம் மனிதன் இந்தக் குணாம்சங்களின் சாயலைப் பெற்றான், ஆனால் அவன் இவைகளின் நிஜத்தைப் பெறவில்லை என்பதுதான் இதன் அர்த்தம். இதனால்தான், ஆதியாகமம் 2-ல், தேவன் ஜீவவிருட்சமாகிய தமக்குமுன்பாக மனிதனை வைத்தார்; தெய்வீக அன்பு, ஒளி, பரிசுத்தம், நீதி ஆகியவைகளின் நிஜத்தை மனிதன் பெறுமாறு, அவன் தேவனை தன் ஜீவனாக எடுத்துக்கொள்ளவேண்டுமென்று தேவன் விரும்பினார் என்பதை இது சுட்டிக்காட்டுகிறது. இது, மனிதனை மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தில் வாழச்செய்யும். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழ தவறிவிட்டாலும், தெய்வீக சுபாவமும் மனித சுபாவமும் உடைய மனித-இரட்சகரான கர்த்தராகிய இயேசு, மனித நற்பண்புகளில் தேவனுடைய குணாம்சங்களை வெளிக்காட்டுகிற வாழ்க்கையை பூமியில் வாழ்ந்தார். இந்த முக்கியமான விஷயம் லூக்காவின் சுவிசேஷத்தில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது.

II. தேவ-மனிதனாக வாழ்ந்ததில், கிறிஸ்து மனித நற்பண்புகளில் தெய்வீக குணாம்சங்களை வெளிக்காட்டினார்

கிறிஸ்து தம் நபரில், தேவனும் மனிதனும் கலந்திணைகிற கலந்திணைதலாக இருக்கிறார்; அவர் தம் வாழ்க்கையில், மனித நற்பண்புகளில் தெய்வீக குணாம்சங்களின் வெளியாக்கமாக இருந்தார். தேவன் என்ற முறையில், கிறிஸ்துவுக்கு தெய்வீக குணாம்சங்கள் இருக்கின்றன; மனிதன் என்ற முறையில், அவருக்கு மனித நற்பண்புகள் இருக்கின்றன. மனித நற்பண்புகள் “கையுறையாக” இருக்கின்றன; தெய்வீக குணாம்சங்கள் “கையாக” இருக்கின்றன, இந்த கைக்காகவே கையுறை உண்டாக்கப்பட்டது. முதல் தேவ-மனிதனாக அவர் வாழ்ந்த வாழ்க்கையில், தெய்வீக குணாம்சங்கள் என்ற “கை” மனித நற்பண்புகள் என்ற “கையுறையில்” வெளிக்காட்டப்பட்டது. கர்த்தராகிய இயேசு, தெய்வீக குணாம்சங்களைக்கொண்டு பலப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்ட தம் மனித நற்பண்புகளால் வாழ்ந்த மனித வாழ்க்கையில் தேவனை வெளிக்காட்டினார். எடுத்துக்காட்டிற்கு, மனதுருக்கம் என்னும் மனித நற்பண்பில், தெய்வீக குணாம்சமாகிய மனதுருக்கத்தை அவர் வெளிக்காட்டினார். ஒரு விதவை தன் ஒரே மகன் மரித்ததினிமித்தம் அழுதுகொண்டிருப்பதை கர்த்தர் பார்த்தபோது (லூக். 7:12-14), அவர் அவள்மேல் மனதுருகி, அருகில் வந்து, பாடையைத் தொட்டார். என்னே மிருதுவான தொடுதல்! இது, தெய்வீக குணாம்சத்தினால் பலப்படுத்தப்பட்டு, செறியூட்டப்பட்ட மனதுருக்கம் என்னும் அவருடைய மனித நற்பண்பாகும்.

A. தேவன் என்ற முறையில், கிறிஸ்துவிடம் தெய்வீக குணாம்சங்கள் இருக்கின்றன

B. மனிதன் என்ற முறையில், அவரிடம் மனித நற்பண்புகள் இருக்கின்றன

C. முதல் தேவ-மனிதனாக அவர் வாழ்ந்த வாழ்க்கையில், தெய்வீக குணாம்சங்கள் என்ற “கை” மனித நற்பண்புகள் என்ற “கையுறையில்” வெளிக்காட்டப்பட்டது

III. ஆரம்பத்திலிருந்தே தேவன் விரும்பிய மனித வாழ்க்கை இதுதான்

மனிதன் தெய்வீக குணாம்சங்களை மனித நற்பண்புகளில் வெளிக்காட்டுகிற வாழ்க்கை வாழவேண்டும் என்பதே ஆரம்பம்முதல் தேவனுடைய நோக்கமாக இருந்துவருகிறது. இதனால்தான், தேவனை ஜீவனாக உள்ளடக்கிக்கொள்ளுமாறு, ஒரு மண்பாத்திரமாக (2 கொரி. 4:7; ஆதி. 2:7) தம்முடைய சாயலில் தேவன் மனிதனை சிருஷ்டித்தார் (ஆதி. 1:26). அவர் ஜீவவிருட்சத்திற்குமுன்பாக மனிதனை வைத்ததின் காரணமும் இதுதான் (ஆதி. 2:8-9), இதனால், மனிதனுடைய பாத்திரத்தின் உள்ளடக்கமாகவும் நிஜமாகவும் இருக்கும்படி அவன் தேவனை ஜீவனாக தனக்குள் எடுத்துக்கொள்ளக்கூடும்.

A. மனிதன் தெய்வீக குணாம்சங்களை மனித நற்பண்புகளில் வெளிக்காட்டுகிற வாழ்க்கை வாழவேண்டுமென்று தேவன் உத்தேசித்திருந்தார்—ஆதி. 1:26; 2:7-9

B. இந்த வாழ்க்கை மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தின்படியான வாழ்க்கையாகும்

இங்கு, “ஒழுக்கம்” என்ற வார்த்தை மிகுந்த நேர்த்தியான மனித வாழ்க்கையையும், தேவன் கோருகிற வாழ்க்கைத் தரத்தையும், தேவன் மனிதனை சிருஷ்டித்தபோது ஆரம்பம்முதல் அவர் உத்தேசித்திருந்த வாழ்க்கைத் தரத்தையும் குறிக்கிறது. தெய்வீக குணாம்சங்கள் மனித நற்பண்புகளில் வெளிக்காட்டப்படுகிற வாழ்க்கையே மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தில் வாழப்படுகிற வாழ்க்கை. இந்த ஒழுக்கம், தெய்வீக குணாம்சங்களால் மனித நற்பண்புகள் பலப்படுத்தப்பட்டு, செறியூட்டப்படுவதைப்பற்றிய விஷயமாகும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: மனித நற்பண்புகள் என்பவை, ஒரு மனிதனிடமுள்ள போற்றத்தக்க குணங்களாகும்; நல்லதை செய்ய ஒருவனிடமுள்ள ஒழுக்கரீதியான வலிமைகளையும் அல்லது ஆற்றல்களையும்கூட அவைகள் குறிக்கின்றன (குறிப்பு I.B-ஐ பார்க்கவும்). மனித நற்பண்புகள் என்பவை, வளர்ச்சியடைவதற்கு பயிற்சிசெய்யப்படவேண்டிய வலிமைகளாகும். ஒருவன் தன் அனுதின வாழ்வில் தாராளகுணமுள்ளவனாக இருப்பதை நடைமுறைப்படுத்தவில்லையென்றால், தேவை எழும்போது, திடீரென்று அவன் தாராளகுணமுள்ள ஒரு பெருந்தன்மையான செயலை செய்ய சாத்தியமில்லை. ஒருவன் தன் தவறுகளை ஒத்துக்கொண்டு, அவைகளோடு இடைபடுவதற்குபதிலாக, பழக்கமாகவே அவைகளை மூடிமறைக்கிறான் அல்லது சாக்குபோக்குசொல்லுகிறான் என்றால், அவன் மிகப்பெரிய நெருக்கடியை சந்திக்கும்போது, திடீரென்று அவன் தைரியமான நேர்மையுள்ளவனாக மாறமுடியாது. அநேகர் தாங்கள் எப்படிப்பட்ட நபராக இருக்க விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்கிற நேரம் உயர்நிலைப்பள்ளிப்பருவம்தான். மேலும், உயர்நிலைப்பள்ளிப்பருவமே, அநேக மனித நற்பண்புகள் கட்டியெழுப்பப்படுகிற நேரமாகவோ அல்லது இடித்துப்போடப்படுகிற நேரமாகவோகூட இருக்கிறது. எனினும், நம் மனித நற்பண்புகள் வெறும் “கையுறை” மட்டும்தான் என்றும், உள்ளான நிஜமாகவும் பலமாகவும் இருக்கும்படி தெய்வீக “கை” உள்ளே வரவேண்டும் என்றும் விசுவாசிகளாகிய நாம் உணர்கிறோம். (வாலிபர்களுக்கு விளக்கிக்காட்டுவதற்காக கூட்டத்திற்கு நீங்கள் ஒரு கையுறையை கொண்டுவரலாம்.) தைரியம், மனதுருக்கம், நேர்மை ஆகிய நம் மனித நற்பண்புகளை கட்டியெழுப்ப நாம் பயிற்சிசெய்யும்போது, நாம் கர்த்தரை தொடர்புகொள்வதினாலும், நம் அனுதின வாழ்வுக்குரிய எல்லா விஷயங்களுக்குள்ளாகவும் வரும்படி கர்த்தரை அனுமதிப்பதினாலும் அவைகள் பலப்படுத்தப்பட்டு, செறியூட்டப்படுகின்றன.

சுவிசேஷ செயலாக்கம்: தயவு, நீதி, தைரியம், வீரம், பொறுமை, உண்மை, அன்பு, பரிசுத்தம் போன்ற மனித நற்பண்புகளைக்குறித்து மனிதனுக்குள் ஏன் ஒரு பாராட்டுதல் இருக்கிறது என்று எப்போதாவது நீங்கள் யோசித்திருக்கிறீர்களா? இந்த பூமியில் பொல்லாப்பையும், தீய எண்ணத்தையும், துன்பத்தையும், அந்தகாரத்தையும், மரணத்தையும் மெய்யாகவே நாடுகிறவர்கள் சிலர் மட்டும்தான். இதற்குபதிலாக, மனிதன் நீதியையும், பரிசுத்தத்தையும், அன்பையும், ஒளியையும் நேசிக்கிறான். இதனால்தான், யாராவது நம்மிடம் தயவையும், இரக்கத்தையும், அன்பையும் காண்பிக்கும்போது, நாம் சந்தோஷப்படுகிறோம். யாராவது நம்மிடம் அநியாயமாகவும், உண்மையில்லாமலும், தயவில்லாமலும், வெறுப்பாகவும் நடந்துகொள்ளும்போது, நாம் துக்கப்படுவதற்கான காரணமும் இதுதான். (ஒருவன் அநியாயமாய் வெறுக்கப்படும்போது, இன்னும் அதிகமாய் சந்தோஷப்படுகிற நபரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? அநேகமாக பார்த்திருக்கமாட்டீர்கள்.) மனிதன் இயல்பாகவே நேர்மறையான நற்பண்புகளைப் போற்றுவது ஏன்? இந்த நற்பண்புகள் இருப்பதற்கான நோக்கம் என்ன? தேவன் மனிதனை சிருஷ்டித்ததில் இதற்கான பதிலை நாம் காண்கிறோம். “…நமது சாயலாகவும் நமது ரூபத்தின்படியேயும் மனுஷனை உண்டாக்குவோமாக…” என்று ஆதியாகமம் 1:26 கூறுகிறது. தேவன் மனிதனை தம் சொந்த சாயலில் சிருஷ்டிப்பதென்றால், தேவனில் தாமே உள்ள குணங்களுக்கு பொருத்தமான போற்றத்தக்க குணங்களுடன் அவர் மனிதனை சிருஷ்டித்தார் என்று அர்த்தம். அன்பு, ஒளி, பரிசுத்தம், நீதி ஆகிய குணாம்சங்கள் தேவனிடம் இருக்கின்றன. அவர் மனிதனை சிருஷ்டித்தபோது, மனிதன் தன் நற்பண்புகளின்மூலம் அவரை வெளிக்காட்டுமாறு, இதே குணங்களைக்கொண்டிருக்கும்படி அவர் அவனை தம் சொந்த சாயலில் சிருஷ்டித்தார். இதனால்தான், அன்பு, ஒளி, பரிசுத்தம், நீதி ஆகியவைகளை மனிதன் விரும்புகிறான்; சிலவேளைகளில் இந்த நற்பண்புகள் அவனுடைய நடத்தையிலும் வெளிக்காட்டப்படுகின்றன. எனினும், மனிதனிடம் இருப்பது சாயல் மட்டும்தான், நிஜம் அல்ல. மனிதன் தேவனை தன் ஜீவனாகவும், உள்ளடக்கமாகவும் பெற்றுக்கொள்ளவேண்டும், அப்போது, தேவனுடைய அன்பும், ஒளியும், பரிசுத்தமும், நீதியும் நிஜமாகும்படி, மனித நற்பண்புகளான அன்பு, ஒளி, பரிசுத்தம், நீதி ஆகியவைகளை நிரப்பி, அவைகளை செறியூட்டும்.

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்புக்காக: The Conclusion of the New Testament, Message 61, pp. 655-656; Life-study of Luke, Messages 2, 58, 61.

REFERENCES: The Conclusion of the New Testament, Messages 61–62; Life-study of Luke, Message 1, pp 6–9; Message 2; Message 10, pp 84–87; Message 15, pp 129–130; Messages 56–58, 60–61; Truth Lessons, Level 1, Volume 1, Lesson 3, p 31.

Jump to section