வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 7
✵பாடம் 01 – 08
✵பாடம் 09 – 18
கிறிஸ்து என்னும் நபர்
தம் மனித வாழ்க்கையில் கிறிஸ்து
குறிக்கோள்: ஒரு மனிதனாக மாற கிறிஸ்து எப்படி தம் இடத்தை மாற்றிக்கொண்டார் என்பதையும், ஒரு சராசரி மனிதனாக எப்படி அவர் மனுஷீகத்தில் ஒரு வாழ்க்கை வாழ்ந்தார் என்பதையும் புரிந்துகொள்வது.
பொருட்சுருக்கம்: கர்த்தராகிய இயேசு தம் மனித வாழ்க்கையில் மனுஷரூபமாய் காணப்பட்ட, மனுஷகுமாரனாக இருந்தார். அற்பமாய் எண்ணப்பட்ட ஒரு நசரேயனாக, அவர் ஒரு தச்சனாகவும், தச்சனுடைய மகனாகவும் இருந்தார். அவர் தேவனுக்கும் மனிதர்களுக்கும் சேவைசெய்கிற அடிமையின் ரூபமெடுத்துக்கொண்டார், அவர் தேவனுடைய உண்மையுள்ள சாட்சியாகவும் இருந்தார். இப்படிப்பட்ட சாட்சியாக, அவர் தேவனுடைய சித்தத்தை செய்து, தேவனுடைய வார்த்தையை பேசி, தேவனுடைய வேலையை நிறைவேற்றுகிற, ஒரு தேவ-மனித வாழ்க்கை வாழ்ந்தார். அவர் மனுஷீகத்தில் தெய்வீகத்தை வாழ்ந்தார், இதனால், அவர் என்னவாக இருந்தாரோ, என்ன சொன்னாரோ, என்ன செய்தாரோ, அவையெல்லாவற்றிலும் தேவனை வெளிக்காட்டினார்.
பின்புலம்: கிறிஸ்து தம் மனித வாழ்க்கையில் எப்படி அடிமையின் ரூபமெடுத்துக்கொண்டார் என்பதையும், கிறிஸ்து இயேசுவிலிருந்த இந்த சிந்தையே நம்மிலும் இருக்கக்கடவது என்று எப்படி பிலிப்பியர் 2:5 நம்மை ஊக்கப்படுத்துகிறது என்பதையும் இந்த பாடம் காண்பிக்கிறது. கிறிஸ்துவைப்போல் வாழ்கிறவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க, அவர் ஒரு மூலப்படிவமாக வாழ்ந்தார். இப்படிப்பட்டவராக, அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்துக்கொண்டார். நாம் அவருடைய பகிர்ந்தளித்தலின்கீழ் இருக்கும்போது, சபைவாழ்க்கையில் ஏதோவொன்றாக இருக்கவேண்டுமென்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்கிறோம். “ஆண்டவரே, உம்முடைய மீட்டுத்திருப்புதலில் விசேஷமான ஏதோவொன்றாக இருக்கவேண்டுமென்று விரும்புகிற என் பேராசையிலிருந்து என்னை இரட்சியும்,” என்று நாம் ஜெபிக்கவேண்டும்.
அதிகாரங்கள்: மாற்கு 10, யோவான் 12.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
மனிதனுக்குள் நுழைந்து, மனிதன்மூலம் வெளிக்காட்டப்படவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பம். எனவே, தேவனை உள்ளடக்கிக்கொள்ளும் பாத்திரமாக தேவன் மனிதனை சிருஷ்டித்தார், ஆனால் மனிதன் விழுந்துபோய், தேவனைவிட்டு பிரிந்துபோனான். ஆயினும், (மனிதனை தேவனிடமிருந்து பிரிப்பது எதுவாயிருந்தாலும் அதோடு இடைபடும்படி) மனிதனுக்காக மரிக்க தேவன்தாமே மனிதனாக மாறி, (அவர் மனிதனுக்குள் நுழையும்படி) பதனிடப்பட்டார். தேவன் தம் நித்திய குறிக்கோளை நிறைவேற்ற ஒரு மனித வாழ்க்கை வாழ்ந்தார்.
I. கர்த்தராகிய இயேசு தம் மனித வாழ்க்கையில் மனுஷரூபமாய் காணப்பட்ட, மனுஷகுமாரனாக இருந்தார்
A. கிறிஸ்து ஒரு மனித கன்னிகைக்கு பிறந்ததின்மூலம், அவர் மனுஷகுமாரனாக மாறி, மனித இனத்தோடு தம்மை சம்பந்தப்படுத்திக்கொண்டார்
அவர் மகிமையின் தேவனாயிருந்தார். ஆனால் அவருடைய மனிதமாம்சமாகுதல், அவருடைய மகிமையிலிருந்து அவரை கீழே இறக்கிக்கொண்டுவந்து, ஒரு மனிதனாக்கியது. அவர் பழைய மனிதனுக்குரியவராகுமாறு அடிவரை கீழே சென்றார். அவர் புதிய சிருஷ்டிப்பின் பகுதியாக இருப்பதற்கு அல்ல, மாறாக, பழைய சிருஷ்டிப்பின் பகுதியாக இருப்பதற்கே மனிதமாம்சமாகுதலில் வந்தார்.அவர் தம் மனுஷீகத்தில், பாவமில்லாமல், அதின் சாயலில் “மாம்சத்தின்படி,” அதாவது “பாவ மாம்சத்தின்படி” இருந்தார் (ரோ. 8:3). மனுஷகுமாரனாகிய கிறிஸ்து பாவமில்லாதவராக இருந்தாலும், விழுந்துபோன மனித இனத்தோடு அவர் முற்றிலும் சம்பந்தப்பட்டிருந்தார் என்று இயேசுகிறிஸ்துவின் வம்சவரலாறு (மத்தேயு 1) தெளிவாக வெளிப்படுத்துகிறது. அவர் வேறொரு சிருஷ்டிப்பிலிருந்து உண்டான ஓர் உடலுடன் தோன்றிவிடவில்லை. அவர் மனித இனத்திற்குள் பிறந்ததின்மூலம்தான் தம் மனுஷீகத்தை அடைந்தார். இப்போது தேவனுக்கு ஒரு மனித வம்சவரலாறு இருக்கிறது! கர்த்தருடைய சில “தாத்தாக்களும்” “பாட்டிகளும்” யார்யார் என்றும், அவர்களுடைய பின்புலங்கள் என்னென்னவென்றும் பரிசீலிப்பது மகத்தாயிருக்கும். அவர் ஸ்திரீயின் வித்தாக ஒரு கன்னியினால் பிறந்தார் (ஆதி. 3:15), எனினும் அவர் எந்த மாம்சத்துடன் பிறந்தாரோ அந்த மாம்சம், விழுந்துபோன மனித இனம்முழுவதுடனும் அவரை இணைத்து, அதனுடன் அவரை சம்பந்தப்படுத்தியது.
B. கிறிஸ்து தம்மைத்தாமே வெறுமையாக்கி, தம் தெய்வத்தன்மையின் வெளியாக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, மனிதர்களைப்போலானார்—பிலி. 2:5-8
கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில், தம் தெய்வத்தன்மையின் ரூபத்தை, அதாவது, புறம்பான வெளியாக்கத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, மனிதர்களைப்போலானதின்மூலம் தம்மைத்தாமே வெறுமையாக்கினார். அவர் தேவனுடைய வெளியாக்கத்தை உடைய தேவனாயிருந்தார். அவர் தேவனுக்கு சமமாயிருந்தாலும், அவர் இந்த சமத்துவத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, மனிதர்களின் சாயலை எடுத்துக்கொண்டதின்மூலம் தம்மைத்தாமே வெறுமையாக்கினார். அவர் மனிதமாம்சமாகுதலின்மூலம் ஒரு மனிதனானார். அவர் தேவனுக்கு சமமாயிருப்பதை, பற்றிப்பிடித்துக்கொள்ளவேண்டிய ஒரு பொருளாக கருதவில்லை. மாறாக, இந்த சமத்துவத்தை அவர் ஒதுக்கிவைத்துவிட்டு, தம்மைத்தாமே வெறுமையாக்கினார். ஆயினும், கிறிஸ்து தம் மனித வாழ்க்கையில் தேவனாக இல்லை என்பதல்ல இதன் அர்த்தம். அவர் தேவன் என்ற தம் புறம்பான வெளியாக்கத்தை ஒதுக்கிவைத்தார் என்பதுதான் இதன் அர்த்தம். அவர் தேவனுடைய ரூபத்தில் தொடர்ந்து இருந்தாலும், அவர் மனுஷர்சாயலாகவும், மனிதரூபமாகவும் ஆனார். இதன் விளைவாக, தேவனுடைய வெளியாக்கத்திற்குபதிலாக, அவரிடம் ஒரு மனிதனுடைய தோற்றம் இருந்தது.
C. அற்பமாய் எண்ணப்பட்ட இடத்தில் கடினமான சூழ்நிலைகளின்கீழ் கிறிஸ்து வளர்ந்தார்—ஏசா. 53:2
மற்ற மனிதர்களைவிட கிறிஸ்துவை அதிகமாக விரும்பத்தக்கவராக்கிய எந்தவொரு குறிப்பிட்ட அழகும் அவரிடம் இல்லை என்று ஏசாயா நமக்கு சொல்லுகிறது. வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போல அவர் வளர்ந்தார், அதாவது, கடினமான சூழ்நிலைகளில் அவர் வளர்ந்தார் (ஏசா. 53:2). நாசரேத்து என்னும் அற்பமாய் எண்ணப்பட்ட பட்டணத்தில், கலிலேயா என்ற அற்பமாய் எண்ணப்பட்ட பிராந்தியத்தில், ஏழ்மையான ஒரு தச்சனுடைய வீட்டில் கர்த்தர் வளர்ந்தார். இது ஏசாயாவிலுள்ள வறண்ட நிலத்தின் நிறைவேற்றமாகும். தாவீதின் சந்ததியாகவும், அவனுடைய சிங்காசனத்திற்கான வாரிசாகவும், இயேசு ஓர் அரண்மனையில் வளர்ந்திருக்கவேண்டும், ஆனால் அதற்குபதிலாக, ஈசாய் என்னும் அடிமரத்திலிருந்து தோன்றிய முக்கியத்துமில்லாத ஒரு துளிரைப்போல அவர் எருசலேமைவிட்டு தூரமாக வளர்ந்தார் (ஏசா. 11:1). இயேசு நாசரேத்திலிருந்த ஒரு தச்சனுடைய மகன் என்ற முறையில், முக்கியத்துவமில்லாத நிலையில் வசித்துவந்தார். இப்படிப்பட்ட பின்புலத்திலிருந்துதான், அவர் ஊழியஞ்செய்யும்படி புறப்பட்டுவந்தார் (யோவான் 1:46; மாற்கு 6:3). அநேகருக்கு, அவர், தாங்கள் எதிர்பார்த்திருந்த மேசியாபோல் தோன்றவில்லை (யோவான் 7:41).
D. கிறிஸ்து தம் மனித வாழ்க்கையில், தேவனுக்கும் மனிதனுக்கும் சேவைசெய்கிற, அடிமையின் ரூபமெடுத்துக்கொண்டார்—பிலி. 2:7
கிறிஸ்து அடிமையின் ரூபமெடுத்துக்கொள்ளும்படி தேவனுடைய ரூபத்தை கைவிட்டார். அறிவுப்பூர்வமாக பேசுவதானால், யாரும் ஓர் அடிமையாக மாறுவதை தேர்ந்தெடுக்கமாட்டார்கள். ஓர் அடிமை என்பவன், தனக்காக எதையும் செய்துகொள்ள உரிமையில்லாதவன்; அவன் தன் எஜமானை கவனித்திருக்கவேண்டும், தன் எஜமானுடைய நோக்கங்களை நிறைவேற்ற தயாராக இருக்கவேண்டும். இயேசு நமக்காக இப்பேர்ப்பட்ட அடிமையாக இருந்தார். ஒருபக்கம், தேவன் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுகிற அடிமையாக அவர் தேவனை சேவித்தார். மறுபக்கம், அவர் மனிதனுடைய தேவைக்கு அக்கறைசெலுத்தியதின்மூலம் மனிதனை சேவித்தார். அவர் எவ்வளவு தாழ்மையாயிருந்தார்! மாற்கு 10:45-ல் கர்த்தர் இவ்வாறு கூறினார்:”மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக்கொடுக்கவும் வந்தார்.” கர்த்தர் தம்முடைய மீட்கும் மரணத்தைக்கூட, பாவிகள் தேவனுடைய பொருளாட்சியில் பங்குபெறுவதற்காக அவர்களுக்கு வழங்கப்படும் சேவையாகவே கருதினார். கர்த்தர் கீழ்ப்படிந்து, தம்மைத்தாமே தாழ்த்தியதினால்தான், அவர் நமக்காக சிலுவையில் மரித்தார் என்று பிலிப்பியர் 2:8-கூட சொல்லுகிறது. தேவனாயிருந்த கர்த்தர் நம்மை சேவிக்க அடிமையின் ரூபமெடுத்துக்கொள்ளும்படி, தேவன் என்ற தம் இடத்தையும் ரூபத்தையும் துறந்தார்.
E. கிறிஸ்து தம் மனித வாழ்க்கையில், தேவனுடைய உண்மையுள்ள சாட்சியாக இருந்தார்—வெளி. 1:5; 3:14
ஒரு மனிதனாக கிறிஸ்து தேவனுடைய உண்மையுள்ள சாட்சியாயிருந்தார். அவர் என்னவாக இருந்தாரோ, என்ன செய்தாரோ, அவை யாவும் தேவனை சாட்சிபகர்ந்தது. தம்மில் தேவன் முழுவதுமாக வெளிக்காட்டப்பட்ட ஒரு மனிதனாக அவர் இருந்தார். தேவனுடைய குணாம்சங்கள் இயேசுவின் நற்பண்புகளில் முழுவதுமாக வெளிக்காட்டப்பட்டன. அவருடைய செயல்களும் வார்த்தைகளும் ஆகிய யாவும் தேவனுடைய பேசுதலாக இருந்தன (எபி. 1:1-2). தேவன் கிறிஸ்துவில் காட்சியாக்கப்பட்டார். இயேசுவை கண்ட எவரும், ஒரு மனிதனில் தேவன் வாழ்ந்துகாட்டப்படுவதை கண்டார்கள். இப்படிப்பட்டவராக, கிறிஸ்து தேவனுடைய உண்மையுள்ள சாட்சியாயிருந்தார். அவர் தேவனுடைய சித்தத்தை செய்தவராகவும் (யோவான் 5:30), தேவனுடைய வார்த்தையை பேசியவராகவும் (யோவான் 14:24), தேவனுடைய வேலையை நிறைவேற்றியவராகவும் (யோவான் 4:34; 14:10-11) இருந்தார். அவர் தேவ-மனிதனாக இருந்ததால், அவர் தம் மனுஷீகத்தில் ஒரு மனிதனாக தேவனுடைய தெய்வீக ஜீவனை வாழ்ந்துகாட்டமுடிந்தது.
II. கிறிஸ்துவைப்போலவே தேவ-மனிதர்களாக மாறப்போகிறவர்களுக்கு முன்மாதிரியாகவும், மூலப்படிவமாகவும் இருக்குமாறு, கிறிஸ்து ஒரு தேவ-மனித வாழ்க்கை வாழ்ந்தார்—பிலி. 2:5
நாம் கிறிஸ்துவின் மனதை நம்முடைய மனமாக எடுத்துக்கொள்ளவேண்டும் என்று பவுல் நமக்கு சொல்லுகிறான் (பிலி. 2:5). இந்த குறிப்புகள் எல்லாவற்றிலும், அநேக தேவ-மனிதர்களாக நாம் எப்படி வாழவேண்டும் என்பதற்கு கிறிஸ்து முன்மாதிரியாக இருக்கிறார். எனினும், நாம் வெறுமனே கிறிஸ்துவைப்போல பாவனைசெய்ய முற்படுவதால் இப்படிப்பட்ட வாழ்க்கை வாழமுடியாது; கிறிஸ்து தம்மையே நமக்குள் பகிர்ந்தளிக்கும்படி நாம் அவரை அனுமதிக்கவேண்டும். அப்போது, அவர் வாழ்ந்ததுபோல, தானாகவே நம்மால் வாழமுடியும். இப்படிப்பட்டவராக கிறிஸ்து தம் சரீரத்தின் அவயவங்களாகிய நமக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டுவருகிறார். நாம் அவருடைய பகிர்ந்தளித்தலின்கீழ் இருந்தால், நிச்சயமாக, அவர் தம் மனித வாழ்க்கையில் எப்படிப்பட்ட நபராக இருந்தாரோ, அப்படிப்பட்ட நபராக நாமும் இருப்போம். நாம் உயர்ந்த பதவிவகிக்க விரும்பமாட்டோம், மாறாக, பதவியிலும் நிலைமையிலும் தாழ்வாக இருப்போம். உண்மையில், இவ்விதமாக வாழ்வது நாம் அல்ல. இது, நமக்குள் பகிர்ந்தளிக்கப்பட்டபிறகு, கிறிஸ்து நம்மில் வாழ்வதாகும். இது அவருடைய அடிச்சுவடுகளை பின்பற்றுகிற காரியமோ அல்லது அவரை பாவனைசெய்கிற காரியமோ அல்ல. இது, நமக்குள் கிறிஸ்து பகிர்ந்தளிக்கப்பட்டு, அதன்பின், அவரை வாழ்கிற காரியமாகும்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம், பிரதானமாக, பிலிப்பியர் 2:5-8-ல் (அடிக்குறிப்புகளுடன்) கவனம்செலுத்துவது நன்மை பயக்கலாம். முதலில், கிறிஸ்து தம்மைத்தாமே வெறுமையாக்கினார். அவர் தேவன் என்ற நிலைமையிலும் ரூபத்திலும் இருந்தார், ஆனால் அவர் அதை பற்றிப்பிடித்துக்கொண்டிருக்கவில்லை. அதற்குபதிலாக, அவர் ஒரு மனிதனாக மாறும்படி, தேவன் என்ற தம் ரூபத்தைவிட்டு தம்மைத்தாமே வெறுமையாக்கினார். மேலும், அவர் அடிமையின் ரூபத்தில் வந்தார் என்றும் இந்த வசனங்கள் சொல்லுகின்றன. அவர் தேவனுடைய ரூபம்கொண்டிருந்தார் என்று 6-ஆம் வசனம் கூறுகிறது. அவர் அடிமையின் ரூபமெடுத்துக்கொண்டார் என்று 7-ஆம் வசனம் கூறுகிறது. நாம் தேவனாயிருந்தால், ஒரு மிகப்பெரிய அதிபர் அல்லது வீரன் என்னும் ரூபத்தை எடுத்துக்கொள்வது மிகவும் பொருத்தமாயிருக்கும் என்று நாம் நினைக்கக்கூடும். இருப்பினும், கர்த்தர் எல்லாவற்றையும்விட மிக மறைவான, தாழ்வான விதத்தில்தான் வளர்ந்தார். அவர் அற்பமாய் எண்ணப்பட்ட இடமாகிய நாசரேத்தில் வாழ்ந்து, ஒரு தச்சனாக கடினமாய் உழைத்தார். அநேகமாக அவருடைய கைகள் காப்புகாய்த்திருக்கலாம், அநேகமாக அவருடைய முகமும் உடலும் கடின உழைப்பினால் தொய்வடைந்து, இளைத்துப்போயிருக்கலாம். அவர் மனித இனத்தின் மத்தியில் தம்மை ஓர் அடிமையாக வைத்துக்கொண்டார். அவர் தேவன் என்னும் தம் உரிமையை கோரவில்லை. மக்கள் தமக்கு தலைவணங்கவேண்டும் என்றோ, தமக்கு காணிக்கைசெலுத்தவேண்டும் என்றோ அவர் கோரிக்கைவைக்கவில்லை. அதற்குபதிலாக, அவர் வியாதிப்பட்டவர்களுக்கு அக்கறைசெலுத்தினார், சீடர்களின் பாதங்களை கழுவினார், கிணற்றின் அருகேயிருந்த சமாரிய பெண்ணைப்போல, மிகத்தாழ்வான நிலைமையில் இருந்த மக்களை சந்திக்க மெனக்கிட்டுச்சென்றார். அவர் சிலுவையில் அறையப்படுவதற்குமுன்பு, தம்மை கைதுசெய்தவர்களால் (தம் சொந்த சிருஷ்டிகளால்!) அடிக்கப்பட்டபோதுகூட, அவர் பதிலுக்கு எதுவும் செய்யவில்லை. அவர் நம் ஜீவனாக மாறும்படி சிலுவையில் மரித்தத்தின்மூலம், நமக்கான தம் மாபெரும் சேவையை புரிந்தார். அவர் எவ்வளவு கீழே இறங்கிவந்தார்! எந்தளவுக்கு தம்மையே தாழ்த்தினார்! அவர் பிதாவாகிய தேவனுக்கு சமமாயிருந்தார், மகிமையில் சிங்காசனத்தில் அமர்ந்து, சர்வ சிருஷ்டிப்பினாலும் ஆராதிக்கப்பட்டார். எனினும், நம் பாவங்களுக்காக மரிக்கும்படி தேவன் தம் ஒரேபேறான குமாரனை அனுப்புகிற அளவுக்கு அவர் இவ்வளவாய் உலகத்தை நேசித்தார்! கிறிஸ்து ஒரு சிறிய மனிதனாக மாறி, நமக்காக சிலுவையில் அறையப்பட தம் உடலை ஒப்புக்கொடுத்தார். கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதலிலும் மரணத்திலும் சம்பந்தப்பட்டுள்ள தாழ்மையின் உணர்வை வாலிபர்களுக்கு சற்று வழங்குங்கள். அவர் முற்றும்முடிய நம்மை சேவித்தார், அவரிடம் கேட்டுக்கொள்ளப்பட்ட எல்லா வேலையையும் செய்துமுடித்தார். சிலுவையில், “முடிந்தது” என்று அவரால் சொல்லமுடிந்தது! (யோவான் 19:30).
சுவிசேஷ செயலாக்கம்: நம் மீட்புக்கான கிறிஸ்துவின் தாழ்மையைப்பற்றிய கதையில்தான், மிகுந்த உத்வேகமளிக்கக்கூடிய வகையில் சுவிசேஷம் சொல்லப்படுகிறது. நமக்காக கிறிஸ்து எந்தளவுக்கு தம்மையே தாழ்த்தினார் என்பதை யாராலும் அளவிடமுடியாது. பிலிப்பியர் 2:6-8-ல் உள்ள இந்த பகுதியில், கர்த்தர் தாழ்மைப்படுத்தப்படுவதில் ஏழு படிகள் அடங்கியுள்ளன: (1) தம்மைத்தாமே வெறுமையாக்குதல்; (2) அடிமையின் ரூபமெடுத்தல்; (3) மனுஷர்சாயலாகுதல்; (4) தம்மைத்தாமே தாழ்த்துதல்; (5) கீழ்ப்படிந்தவராகுதல்; (6) மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகுதல்; (7) சிலுவையின் மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராகுதல். சிலுவை மரணமே, கிறிஸ்து தாழ்மைப்படுத்தப்பட்டதின் உச்சகட்டம். யூதர்களுக்கு, இது ஒரு சாபமாக இருந்தது (உபா. 21:22-23). புறவினத்தாரைப்பொருத்தவரை, இது குற்றவாளிகளுக்கும் அடிமைகளுக்கும் விதிக்கப்பட்ட மரணத்தீர்ப்பாக இருந்தது (மத். 27:16, 18, 20-23). எனவே, இது ஓர் அவமானத்திற்குரிய காரியமாக இருந்தது (எபி. 12:2). அவர் தேவன் என்ற தம் ரூபத்தை ஒதுக்கிவைத்துவிட்டு, அடிமை என்ற ரூபத்தை எடுத்துக்கொண்டது ஏன்? மரணபரியந்தம், அதாவது, சிலுவையின் மரணபரியந்தமும் அவர் கீழ்ப்படிந்தவரானது யாருக்காக? அவர் தாழ்மைப்படுத்தப்பட்டதின் ஒவ்வொரு படியும் உங்களுடைய இரட்சிப்புக்காகத்தான்; அவர் உங்களுக்காகத்தான் அதை செய்தார். “அவர் உன்னதத்தில் தம் பிதாவின் சிங்காசனத்தை விட்டார், அவருடைய கிருபை எவ்வளவு இலவசமானது, எவ்வளவு வரம்பற்றது; அன்பைத்தவிர எல்லாவற்றையும்விட்டு தம்மை வெறுமையாக்கினார், நிர்க்கதியான ஆதாமின் இனத்திற்காக இரத்தஞ்சிந்தினார்” (பாடல் எண் 296, சரணம் 3). நிலைமையிலும் ரூபத்திலும் தமக்கு இருந்த எல்லாவற்றையும் கிறிஸ்து ஒதுக்கிவைத்துவிட்டு, மிகத்தாழ்வான ரூபத்தை எடுத்துக்கொண்டு, இறுதியில், நம் இரட்சிப்புக்காக மிகுந்த அவமானத்துக்குரிய மரணத்தை மரித்ததுதான் மாபெரும் அன்பு. இப்போது, தேவன் அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்திருக்கிறார். நாம் அவருடைய மன்னிப்பை பெறும்படி மனந்திரும்புவதினாலும், “பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று” அறிக்கையிடுவதினாலும் (பிலி. 2:11), அவர் தம் தாழ்மையில் நமக்காக செய்துமுடித்த எல்லாவற்றையும் நாம் அனுபவித்துமகிழ்கிறோம், நாம் இரட்சிப்பும் அடைகிறோம் (ரோ. 10:13). (பாடல் எண் 82-ஐ பார்க்கவும்).
முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்புக்காக: The Conclusion to the New Testament, Message 27.
REFERENCES: The Conclusion to the New Testament, Messages 26–27; Life-study of Mark, Message 2; Life-study of Luke, Message 6; Life-study of Philippians, Message 10, pp 86–90; Philippians 2:8, footnote 4; Hymns, #82; #296, stanza 3.