வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 7
✵பாடம் 01 – 08
✵பாடம் 09 – 18
கிறிஸ்து என்னும் நபர்
கிறிஸ்துவின் பிறப்பு: மத்தேயுவின் பதிவு
குறிக்கோள்: ஒரு தேவ-மனிதனை உற்பத்திசெய்வதற்காக எப்படி கிறிஸ்துவின் பிறப்பு தேவனுடைய இறையாண்மையால் ஆயத்தம்செய்யப்பட்டு, பரிசுத்த ஆவியானவரால் நிறைவேற்றப்பட்டது என்பதை வாலிபர்களுக்கு காண்பிப்பது.
பொருட்சுருக்கம்: “இயேசுகிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது…” என்று சொல்லி, கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய தன் பதிவை மத்தேயு தொடங்குகிறான். (மத். 1:18). இயேசுகிறிஸ்து அடைந்த பிறப்பைப்போல வேறெந்த மனிதனும் ஒருபோதும் அடைந்ததில்லை. கிறிஸ்துவைப் பிறப்பிப்பதற்காக, தேவன் தம் இறையாண்மையில், மரியாளையும் யோசேப்பையும் திருமணத்தில் ஒன்றுசேர்த்தார். கிறிஸ்துவுக்கு தகுந்த வம்சவரலாறைக் கொடுக்க இவர்கள் இருவரும் சரியான நபர்களாயிருந்தார்கள், கிறிஸ்துவைப் பிறப்பிக்க இவர்கள் இருவருமே உயர்ந்த விலைக்கிரயம்செலுத்தினார்கள். மரியாள் “பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள்,” என்று கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து மத்தேயு கூறுகிறான் (மத். 1:18). இயேசுகிறிஸ்து தெய்வீக சாராம்சத்தைப் பெற, நேரடியாக பரிசுத்த ஆவியானவரால் கருவானார் என்பது இதன் அர்த்தமாகும். அவர் மனித சாராம்சத்தைப் பெற ஒரு மனித கன்னிகையினால் பிறந்தார். இவ்வாறு, கிறிஸ்து தெய்வீகம், மனுஷீகம் ஆகிய இரண்டையும் உடைய தேவ-மனிதனாக இருந்தார். இவ்விதமாகப் பிறந்தவர் இயேசு (இரட்சகராகிய யெகோவா) என்றும், இம்மானுவேல் (நம்மோடு இருக்கிற தேவன்) என்றும் அழைக்கப்பட்டார். இவர்தான் யெகோவா, இவர்தான் தேவன், இவர்தான் தீர்க்கதரிசமாக உரைக்கப்பட்ட இராஜா, இவர் பரலோக இராஜ்யத்தை பூமிக்கு கொண்டுவரும்படி வந்திருக்கிறார்.
பின்புலம்: வாலிபர்கள் இந்த பாடத்திற்கு வரும்போது, மூன்றாவது பாடத்தில் இராஜ-இரட்சகரைப்பற்றியும், முந்தைய பாடங்களில் அவருடைய மனிதமாம்சமாகுதலைப்பற்றியும் நாம் ஏற்கெனவே பேசிவிட்டதால், மத்தேயுவிலுள்ள கிறிஸ்துவின் பிறப்பைக்குறித்து பேசவேண்டியது ஏன் என்று அவர்கள் யோசிக்கக் கூடும். எனினும், இந்த பாடத்தில், இராஜ-இரட்சகராக கிறிஸ்துவின் தொடக்கத்தைப்பற்றிய ஏதோவொன்றை மட்டுமல்ல, கிறிஸ்துவைப் பிறப்பிப்பதற்காக தேவனுடைய இறையாண்மையுடன் மனிதனுடைய ஒத்துழைப்பையும் நாம் பார்க்கிறோம். தேவன் மரியாளையும் யோசேப்பையும் ஒன்றுசேர்க்க ஆச்சரியமான விதத்தில் கிரியைசெய்தார், அவர்களும் விலைக்கிரயம்செலுத்தி ஒத்துழைத்தார்கள். இந்த பாடத்திற்குப்பின், கிறிஸ்துவைப் பிறப்பிப்பதைக்குறித்து ஏதோவொன்றை விவரமான விதத்தில் வாலிபர்கள் பார்க்கவேண்டும்.
அதிகாரம்: மத்தேயு 1.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
மத்தேயுவும் லூக்காவும் மட்டுமே கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய பதிவை வழங்குகிறார்கள். அடிமை-இரட்சகரைக்குறித்த மாற்குவின் சுவிசேஷம் கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றிய பதிவை வழங்கவில்லை, ஏனென்றால், ஓர் அடிமையின் பிறப்பில் யாரும் ஆர்வம்காட்டுவதில்லை. தேவ-இரட்சகரைக்குறித்த யோவாவின் சுவிசேஷம்கூட, அவருடைய பிறப்பைப்பற்றி எதுவும் பதிவுசெய்யவில்லை, ஏனென்றால், தேவனுக்குப் பிறப்பு இல்லை, அவருக்குத் தொடக்கம் இல்லை. இந்த பாடத்திலும் அடுத்த பாடத்திலும், கிறிஸ்துவின் ஒப்பற்ற, ஆச்சரியமான பிறப்பைப்பற்றிய மத்தேயுவின் பதிவையும், லூக்காவின் பதிவையும் நாம் பார்ப்போம். குறிப்பாக மத்தேயு, இராஜ பிள்ளையாக கிறிஸ்து எப்படி தெய்வீக சுபாவமும் மனித சுபாவமும் ஆகிய இரண்டையும் உடைய தேவ-மனிதனாக பிறந்தார் என்பதை காண்பிக்கிறது. வாலிபர்களுடன் சேர்ந்து மத்தேயு 1:18-25-ஐ வாசிப்பது பயனுள்ளது. கிறிஸ்துவின் பிறப்பைப்பற்றி இங்குள்ள அனைத்தும் வெளிச்சம்தருகிறதாயிருக்கிறது.
I. கிறிஸ்துவின் பிறப்பு தேவனுடைய இறையாண்மையால் ஆயத்தம்செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது—மத். 1:16, 18
கிறிஸ்துவின் பிறப்பு தேவனுடைய இறையாண்மையால் ஆயத்தம்செய்யப்பட்டு, நிறைவேற்றப்பட்டது. யோசேப்பு, மரியாள் ஆகியோரின் முற்பிதாவான செருபாபேலுடைய தலைமைத்துவத்தின்கீழ், அவர்களுடைய மூதாதையரை பாபிலோனில் உள்ள சிறையிருப்பிலிருந்து யூதேயாவுக்கு தேவன் தம் இறையாண்மையினால் திரும்பக்கொண்டுவந்தார் (மத். 1:12; எஸ்றா 5:1-2). மீண்டும், யோசேப்பு, மரியாள் ஆகிய இருவரையும் தேவன் தம் இறையாண்மையினால் நாசரேத்து என்னும் ஒரே நகரத்தில் வைத்தார் (லூக். 1:26; 2:5). மேலும், தாவீதின் சிங்காசனத்திற்கு சட்டப்பூர்வமான வாரிசாக கிறிஸ்து கொண்டுவரப்படுமாறு, யோசேப்பையும் மரியாளையும் தேவன் தம் இறையாண்மையினால் திருமணத்தில் ஒன்றுசேர்த்தார். செருபாபேல் சிறையிருப்பிலிருந்து திரும்பியிராவிட்டால், யோசேப்பும் மரியாளும் எங்கு பிறந்திருப்பார்கள்? அல்லது, யோசேப்பும் மரியாளும் நல்ல தேசத்தில் வாழ்ந்தாலும், தூரமான நகரங்களில் இருந்திருந்தால், அவர்கள் எப்படி திருமணத்தில் ஒன்றுசேர்ந்திருக்கமுடியும்? தேவன் தம் இறையாண்மையில், அவர்களுடைய மூதாதையரை நல்ல தேசத்திற்கு திரும்பக்கொண்டுவந்தார், யோசேப்பையும் மரியாளையும் ஒரே நகரத்தில் வைத்தார், கிறிஸ்துவைப் பிறப்பிக்க அவர்களை திருமணத்தில் ஒன்றுசேர்த்தார். மேலும், தேவனுடைய இறையாண்மையால்தான், கிறிஸ்து சிங்காசனத்திற்குத் தகுதியான வாரிசாக இருக்க, யோசேப்புக்கும் மரியாளுக்கும் தகுந்த வம்சவரலாறு உண்டாயிருந்தது. யோசேப்பும் மரியாளும் ஒன்றுசேர்ந்ததினால், கிறிஸ்து (யோசேப்புடன் மறைமுகமாக சம்பந்தப்பட்டிருந்ததின்மூலம்) சாலொமோனின் அரச வம்சாவளியோடு இணைந்திருந்தார், இருப்பினும், அவர் (மரியாளிடமிருந்து நேரடியாகப் பிறந்ததினால்) நாத்தானின் பொதுவான வம்சாவளியின்மூலம் தாவீதின் நேரடி சந்ததியாக இருந்தார். எனவே, கிறிஸ்து அரசகுலத்திற்குரியவராகவும், சிங்காசனத்திற்கு தகுந்த சட்டப்பூர்வமான வாரிசாகவும் இருப்பதற்குத் தேவையான வம்சாவளியை யோசேப்பும் மரியாளும் அவருக்கு வழங்கினார்கள். தேவனால் மட்டுமே இதை இறையாண்மையாய் ஏற்பாடுசெய்திருக்கமுடியும்.
II. கிறிஸ்துவின் பிறப்பு, மரியாளும் யோசேப்பும் விலைக்கிரயம்செலுத்த சித்தமுள்ளவர்களாயிருந்ததின்மூலம் நிகழ்ந்தது
“இயேசு கிறிஸ்துவினுடைய ஜெநநத்தின் விவரமாவது: அவருடைய தாயாகிய மரியாள் யோசேப்புக்கு நியமிக்கப்பட்டிருக்கையில், அவர்கள் கூடிவருமுன்னே, அவள் பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது,” என மத்தேயு 1:18 கூறுகிறது. மரியாள், யோசேப்பு ஆகிய இருவருமே கிறிஸ்துவைப் பிறப்பிக்க விலைக்கிரயம்செலுத்தினார்கள். மரியாள் ஓர் இளம் கன்னிகையாக இருந்தாள், கிறிஸ்து அவளுடைய கர்ப்பத்தில் கருத்தரிக்கப்பட்டிருந்தபோது அவள் யோசேப்புக்கு நிச்சயிக்கப்பட்டிருந்தாள். அவள் கிறிஸ்துவைப் பிறப்பிக்க, அவள் திருமணம்செய்வதற்குமுன்பே தன் கர்ப்பத்தில் ஒரு பிள்ளையை சுமந்திருப்பதின் அவமானத்தைத் தாங்கவேண்டியிருந்தது. நிச்சயமாக இது அவமானம்மிக்க அனுபவமாகவே இருந்தது. அதேபோல, யோசேப்பு கர்த்தருடைய தூதனின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, (தன் கர்ப்பத்தில் ஒரு பிள்ளையை சுமந்திருந்த) மரியாளை தன் மனைவியாக ஏற்றுக்கொண்டபோது, அவனும் விலைக்கிரயம்செலுத்தினான். அவனும் மரியாளும் ஆகிய இருவருமே தங்களை கவனித்துப்பார்த்தவர்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதை அனுபவித்திருக்கக்கூடும், இருந்தாலும், அவர்கள் இருவரும் கர்த்தருடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து, கிறிஸ்துவைப் பிறப்பிப்பதற்கு பயன்படுத்தப்பட்டார்கள். மற்றவர்களிடம் கிறிஸ்துவைப் பிறப்பிக்க கர்த்தரால் பயன்படுத்தப்படுகிறவர்களாக இருப்பதற்கு, நாம்கூட அவருக்காக அவமானத்தைத் தாங்க மனமுவந்து விலைக்கிரயம்செலுத்தவேண்டும். கிறிஸ்துவின் விசுவாசிகளாக நாம் வாழ்கிற வாழ்க்கையை மற்றவர்கள் எப்போதும் ஒத்துக்கொள்வார்கள் என்றோ அல்லது போற்றுவார்கள் என்றோ நாம் எதிர்பார்க்கக்கூடாது. பலவேளைகளில், நாம் அவமானத்தையும், தவறாகப் புரிந்துகொள்ளப்படுவதையும் அனுபவிக்கக்கூடும். கிறிஸ்துவைப் பிறப்பிக்கிறவர்களைப்பொருத்தவரையிலும், கிறிஸ்துவைப் பிறப்பிக்கிற வாழ்க்கை வாழ்கிறவர்களைப்பொருத்தவரையிலும், அப்படித்தான்.
III. கிறிஸ்துவின் பிறப்பு ஒரு தேவ-மனிதனின் பிறப்பாக இருந்தது—மத். 1:18, 20
மரியாள் “பரிசுத்த ஆவியினாலே” கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது என மத்தேயு 1:18 கூறுகிறது. அதன்பின், “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது,” என்று மத்தேயு 1:20-ல் கர்த்தருடைய தூதன் யோசேப்புக்கு சொன்னான். முதலில், தேவன் தம் ஆவியின்மூலம் மரியாளுக்குள் பிறந்தார்; கருத்தரிப்பு முமுமையடைந்தபின், அவர் தெய்வீகம், மனுஷீகம் ஆகிய இரண்டையும் உடைய தேவ-மனிதனாக மனித சுபாவத்துடன் பிறந்தார். இதுவே கிறிஸ்துவின் தொடக்கம். இவ்விதமாக வேறெந்த நபரும் பிறந்ததேயில்லை.
A. கிறிஸ்து தெய்வீக சாராம்சமுள்ளவராக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரால் கருவானார்—மத். 1:18, 20
மரியாள் “பரிசுத்த ஆவியினாலே கர்ப்பவதியானாள் என்று காணப்பட்டது,” என மத்தேயு 1:18 கூறுகிறது. கிறிஸ்து தெய்வீக சாராம்சமுள்ளவராக இருக்கும்படி பரிசுத்த ஆவியானவரால் கருவானார் என்று இந்த வசனம் காண்பிக்கிறது. “பரிசுத்த ஆவியினாலே கர்ப்பந்தரிக்கப்பட்டவர்” என்ற முறையில், அவர் நேரடியாக பரிசுத்த ஆவியானவரால் பிறந்தார். பரிசுத்த ஆவியானவர் அவருடைய ஊற்றாக இருந்தார், அவருடைய மூலக்கூறு தெய்வீகமாயிருந்தது. “அவளிடத்தில் உற்பத்தியாயிருக்கிறது பரிசுத்த ஆவியினால் உண்டானது,” என்று மத்தேயு 1:20 கூறுகிறது. பரிசுத்த ஆவியானவர்மூலம் தேவன் மரியாளுக்குள் பிறந்தார் என்பதுதான் இதன் அர்த்தம். மரியாளின் கர்ப்பத்திற்குள் பிறந்த தேவன்தான் கர்த்தராகிய இயேசு. கிறிஸ்துவிடம் தெய்வீகம் இருக்கிறது என்று இவ்விரண்டு வசனங்களும் சுட்டிக்காட்டுகின்றன.
B. கிறிஸ்து மனித சாராம்சமுள்ளவராக இருக்கும்படி ஒரு மனித கன்னிகையினால் பிறந்தார்—மத். 1:20
கிறிஸ்து ஒரு மனித கன்னிகையின் கர்ப்பத்தில் பிறந்ததால், அவர் மனுஷீகத்தைத் தரித்துக்கொண்டு, மனித சாராம்சமுள்ளவராக இருக்கிறார். கன்னி மரியாளின்மூலம், மனித சுபாவமாகிய மாம்சத்தையும் இரத்தத்தையும் அவர் தரித்துக்கொண்டார், அதாவது, மனுஷர் சாயலாகிய (பிலி. 2:7) மாம்ச சாயலை எடுத்துக்கொண்டார் (ரோ. 8:3).
C. கிறிஸ்து தெய்வீகம், மனுஷீகம் ஆகிய இரண்டையும் உடைய தேவ-மனிதனாக பிறந்தார்
கிறிஸ்து தெய்வீக சாராம்சத்துடன் பரிசுத்த ஆவியானவரால் கருவானதாலும், மனித சாராம்சத்துடன் ஒரு மனித கன்னிகையினால் பிறந்ததாலும், அவர் தெய்வீகம், மனுஷீகம் ஆகிய இரண்டையும் உடைய தேவ-மனிதனாக பிறந்தார். என்னே அற்புதமான பிறப்பு! கர்த்தராகிய இயேசுவை நாம் பெற்றுக்கொண்டபோது, இந்த தேவ-மனிதனைத்தான் நமக்குள் பெற்றுக்கொண்டோம். அவர் தேவ-மனிதனாக இருக்கிறார்; கிறிஸ்தவர்களாகிய நாம் கிறிஸ்து-மனிதர்களாக இருக்கிறோம். கிறிஸ்துவின் பிறப்பு என்ற விஷயம் நமக்கு வெறும் உபதேசமாக இருக்கக்கூடாது. மாறாக, நம் வாழ்க்கை கிறிஸ்துவினுடைய மனிதமாம்சமாகுதலின் விளைவாயிருக்கவேண்டும். அவர் ஒரு தேவ-மனிதனாக பிறந்தார். நாம் அவரைப் பெற்றுக்கொண்டுள்ளோம், நாமும் தேவ-மனிதர்களாக இருக்கிறோம். நாம் பள்ளிவகுப்பில் இருக்கும்போது, நாம் வாலிபர் கூட்டல் ஏதோவொன்று என்பதை நம்மைச்சுற்றியுள்ள மாணவர்கள் உணரவேண்டும். நாம் வாலிபர் கூட்டல் தேவன். நம் நடத்தை, நடந்துகொள்ளும்முறை, மனப்பான்மை, வாழ்க்கைமுறை, பேச்சு, சூழ்நிலைகளை கையாளும் விதம் ஆகிய யாவும், நாம் தேவ-மனிதர்களாக தேவனால் பிறந்த வாலிபர்களாயிருக்கிறோம் என்று சாட்சிபகர்கின்றன (யோவான் 1:12).
IV. தேவ-மனிதனாகிய கிறிஸ்து, இயேசு என்றும், இம்மானுவேல் என்றும் அழைக்கப்படுகிறார்—மத். 1:21, 23
இப்படிப்பட்ட அற்புதமான விதத்தில் இரண்டு சாராம்சங்களுடன் பிறந்தவர் இயேசு என்றும், இம்மானுவேல் என்றும் அழைக்கப்படுகிறார். இயேசு என்றால், “இரட்சகராகிய யெகோவா” அல்லது “யெகோவாவின் இரட்சிப்பு” என்று அர்த்தம். இம்மானுவேல் என்றால், “நம்மோடு இருக்கிற தேவன்” என்று அர்த்தம். இயேசு ஒரு மனிதனாக இருந்தாலும், அவர் மனிதனுடைய இரட்சிப்புக்கான சாட்சாத்து யெகோவாகவும், மனிதர்களிடையே வசிக்கிற சாட்சாத்து தேவனாகவும் இருந்தார். இயேசு எப்படி தேவனாகவே இருக்கிறார் என்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கக்கூடும். ஆனால், “கர்த்தராகிய இயேசுவே” என்று ஒருவன் கூப்பிடும்போதெல்லாம், இயேசு தன் இரட்சிப்புக்கான யெகோவாவாகவே இருக்கிறார் என்றும், அவர் தன்னோடு இருக்கிற தேவனாகவே இருக்கிறார் என்றும் அவன் உணர்கிறான். புத்தர், முகமது, கன்ஃபியூஷியஸ் அல்லது ஜார்ஜ் வாஷிங்டனை நோக்கிக் கூப்பிடுவது நமக்கு எந்த உணர்வையும் தருவதில்லை, ஆனால், இயேசுவைநோக்கிக் கூப்பிடுவது, தேவன் நம்மோடு இருக்கிறார் என்ற உணர்வினால் நம்மை நிரப்புகிறது.
V. இராஜாவாக மாம்சத்தில் பிறந்த யெகோவா தேவனே கிறிஸ்து—மத். 1:20; லூக். 1:27, 32-33
மத்தேயுவில், கிறிஸ்து பரலோக இராஜ்யத்தை பூமிக்கு கொண்டுவரும்படி இராஜ-இரட்சகராக மாம்சத்தில் பிறந்த யெகோவா தேவனாகவே இருக்கிறார். அவருடைய பிறப்பு, இராஜாவாக கிறிஸ்து வருவதைக்குறித்து சொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களுக்கும் நிறைவேற்றமாயிருந்தது (மீகா 5:2; 2 சாமு. 7:12, 13; எரே. 23:5-6). அவர் இரட்சகராகிய யெகோவாவும், நம்மோடு இருக்கிற தேவனும் மட்டுமல்ல, அவர் நமக்குள் ஆளுகைசெய்ய வருகிற இராஜாவாகவும் இருக்கிறார். நாம் இயேசுவைநோக்கிக் கூப்பிடும்போது, உடனே ஒருவர் நம்மீது ஆளுகைசெய்கிறார். உங்கள் சுவற்றில் சில தகாத படங்கள் அல்லது புகைப்படங்கள் இருந்தால், நீங்கள் இயேசுவைநோக்கிக் கூப்பிடும்போது, அவர் உங்கள் இராஜாவாயிருந்து, “அதை தூக்கிப்போடு!” என்று சொல்லுவார். இராஜாவாகிய இயேசு உங்களுக்குள் தம் இராஜ்யத்தை ஸ்தாபித்து, உங்கள் இருதயத்தில் தாவீதின் சிங்காசனத்தை நிறுவ விரும்புகிறார். நீங்கள் எவ்வளவு அதிகமாக இயேசுவைநோக்கிக் கூப்பிடுகிறீர்களோ, அவ்வளவு அதிகமாக ஆளுகைசெய்கிற வல்லமை அங்கு இருக்கும். நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லையென்றால், இதை செய்துபார்க்கும்படி நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பத்து நிமிடங்கள் இயேசுவின் நாமத்தைநோக்கிக் கூப்பிடுங்கள், என்ன நடக்கிறதென்று பாருங்கள். இராஜாவானவர் உங்கள்மீது ஆளுகைசெய்து, உங்களைத் தொந்தரவுசெய்வார்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: கிறிஸ்துவின் பிறப்பைச்சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகளை பார்க்கும்போது, கிறிஸ்துவைப் பிறப்பிப்பதற்காக புதிய ஏற்பாட்டில் தேவன் எவ்வாறு வேலைசெய்கிறார் என்பதற்குரிய சில கோட்பாடுகளை நாம் பார்க்கமுடியும்: 1) அவர் சிறிய அளவில் வேலைசெய்கிறார். மத ஆராதனையின் மிகப்பெரிய மையமாகிய எருசலேமுக்கு தேவன் ஒரு தூதனை அனுப்பவில்லை. (மிகப்பெரிய விளம்பரம் எதுவும் இல்லாமல்) நாசரேத்து என்னும் சிறிய பட்டணத்திற்கே அவர் தூதனை அனுப்பினார். பெரிய அளவில் செய்யப்படுகிற காரியங்களுக்கு தேவன் அக்கறைசெலுத்துவதில்லை. நாம்கூட பிரம்மிக்கவைக்கும் அனுபவங்களை நாடக்கூடாது, மாறாக, கர்த்தரை நேசித்தல், அவருடைய வார்த்தையை வாசித்தல், உண்மையாய் கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் ஆகிய சாதாரணமான, அனுதின ஜீவ நடைமுறைகளுக்கே அக்கறைசெலுத்தவேண்டும். 2) அவர் ஓர் இளம் கன்னிகையிடம் சென்றார். மிகப் புதிதாகவும், மிகப் பசுமையாகவும் இருக்கிற இளமையான, பலவீனமான, காலியான, கல்லாத, அனுபவமில்லாத நபர்களை கர்த்தர் பயன்படுத்துகிறார். நாமும் இதுபோல் இருக்கவேண்டும். 3) அவர் மரியாளிடம் எதையும் செய்யும்படி சொல்லவில்லை. பழைய ஏற்பாட்டில், அநேக விதிமுறைகளும் கோரிக்கைகளும் இருந்தன. ஆனால் புதிய ஏற்பாட்டில், செய்வது காரியமல்ல, மாறாக, கிறிஸ்துவை கருத்தரித்து, அவரைப் பிறப்பிப்பதே காரியம். நாம் ஏராளமான காரியங்களை செய்வதற்கு அக்கறைசெலுத்தக்கூடாது, மாறாக, நமக்குள் ஏதோவொன்றை செய்யும்படி நாம் கிறிஸ்துவை அனுமதிக்கவேண்டும் என்பதே இதன் அர்த்தம். மரியாள் கருத்தரிப்பாள் என்று மட்டுமே தேவதூதன் அவளிடம் சொன்னான். “அதற்கு மரியாள்: இதோ, நான் ஆண்டவருக்கு அடிமை, உம்முடைய வார்த்தையின்படி எனக்கு ஆகக்கடவது என்றாள்…” (லூக். 1:38). மரியாளைப்போல, நாம் வெறுமனே கர்த்தருடன் ஒத்துழைத்து, நமக்குள் ஏதோவொன்றை செய்யும்படி நாம் ஆவியானவரை அனுமதிக்கவேண்டும், அவ்வளவுதான்.
சுவிசேஷ செயலாக்கம்: நாம் தெய்வீக ஜீவனையும் சுபாவத்தையும் உடைய தேவ-மனிதர்களாகவேண்டும் என்ற நோக்கத்திற்காக சிருஷ்டிக்கப்பட்டோம் என்பதே தேவனுடைய சுவிசேஷத்தின் மிக உயர்ந்த கட்டம். தேவன் வெவ்வேறு மிருகங்களை சிருஷ்டித்தபோது, ஒவ்வொரு மிருகத்தையும் அதினதின் இனத்தின்படி அவர் சிருஷ்டித்தார். ஆனால் அவர் மனிதனை சிருஷ்டித்தபோது, அவர் அவனை மனிதனுடைய இனத்தின்படி சிருஷ்டிக்காமல், தேவனுடைய இனத்தின்படி சிருஷ்டித்தார். மனிதன் (மனம், உணர்ச்சி, சித்தம் போன்ற உள்ளான பகுதிகளை உடையவனாக) தேவனுடைய சாயலிலும், (தேவனுடைய உருவத்தை உடைய புறம்பான சரீரமாகிய) தேவனுடைய ரூபத்தின்படியும் உண்டாக்கப்பட்டான். தேவன் சிருஷ்டித்த மனிதனை நீங்கள் பார்த்தால், தேவன் எப்படியிருப்பார் என்பதை பார்ப்பீர்கள், ஏனென்றால், மனிதன் தேவனுடைய இனத்தின்படி உண்டாக்கப்பட்டான். அதன்பின், இந்த மனிதன் தேவனுடைய ஜீவனை தனக்குள் எடுத்துக்கொள்ளுமாறு, தேவன் மனிதனை ஜீவ விருட்சத்திற்குமுன்பாக நிறுத்தினார். மனிதன் தேவனுடைய சாயலையும் ரூபத்தையும் கொண்டிருக்கவேண்டும் என்று மட்டுமல்ல, அவன் தேவ-மனிதனாக இருக்குமாறு தேவனுடைய ஜீவனை தன்னுள்ளடக்கிக்கொள்ளவேண்டும் என்றும் தேவன் விரும்பினார். இருப்பினும், தேவன் தம் நோக்கத்திற்காக சிருஷ்டித்த மனிதன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு, தேவனைவிட்டு விழுந்துபோனான். எனவே, நான்காயிரம் ஆண்டுகளுக்குப்பிறகு, தேவன் ஒரு மனிதனாக மாம்சமாகி, தேவனையும் மனிதனையும் ஒரே வஸ்துவாக்கினார், அதாவது, தேவ-மனிதனாக்கினார். ஆதியில் நாம் எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக சிருஷ்டிக்கப்பட்டோமோ அதை நிறைவேற்றும்படி, அதாவது, தேவ-மனிதர்களாக இருக்க தேவனை ஜீவனாக உள்ளடக்கியிருக்கும்படி, அவர் சிலுவையில் மரித்ததின்மூலம், நமக்காக சட்டரீதியான மீட்பை நிறைவேற்றி, ஜீவ விருட்சத்திற்குப் போகிற அடைக்கப்பட்ட வழியைத் திறந்தார். கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கிறவர்கள் மனித ஜீவனை மட்டுமல்ல, தெய்வீக ஜீவனையும் உடைய தேவ-மனிதர்களாக மாறி (யோவான் 1:12-13), ஒரு புதிய இனமாகிய தேவ-மனித இனமாக மாறுகிறார்கள். கிறிஸ்துவில் விசுவாசம்வைப்பது, நீங்கள் ஒரு நல்ல மனிதனாகவோ, மேம்பட்ட மனிதனாகவோ அல்லது மதரீதியான மனிதனாகவோ மாறுவதற்காக அல்ல. மாறாக, நீங்கள் தேவனுடைய ஜீவனையும் (யோவான் 3:15, 36), தேவனுடைய சுபாவத்தையும் (2 பேதுரு 1:4) உடைய தேவ-மனிதனாக மாறுவதற்கே ஆகும். இதுவே தேவனுடைய சுவிசேஷத்தின் மிக உயர்ந்த கட்டம் (Life-study of 1 & 2 Chronicles, Message 4-ஐ பார்க்கவும்).
முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்புக்காக: Life-study of Matthew, Message 5; Matthew 1:18, footnote 1; Matthew 1:20, footnote 1; Matthew 1:25, footnote 1.
REFERENCES: Life-study of Matthew, Message 5; Matthew 1:18, footnote 1; Matthew 1:20, footnote 1; Matthew 1:25, footnote 1; New Testament Service, Chapters 1–2; 4, pp 35–38; The Conclusion of the New Testament, Message 84, pp 903–904; Message 231, pp 2460–2462; The Move of God in Man, Message 2; Life-study of 1 & 2 Chronicles, Message 4; Truth Lessons, Level 1, Volume 1, Lesson 3, pp 30–31.