வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 7
✵பாடம் 01 – 08
✵பாடம் 09 – 18
கிறிஸ்து என்னும் நபர்
மனிதமாம்சமாகுதலில் கிறிஸ்து: மாம்சத்தில் வெளியரங்கமான தேவன்
குறிக்கோள்: கிறிஸ்து முழு மூவொரு தேவனின் ஊனுருவாயிருந்தார் என்பதையும், அவருக்குள் தெய்வீகமும் மனுஷீகமும் ஒரே நபராக கலந்திணைந்திருந்தது என்பதையும் புரிந்துகொள்வது.
பொருட்சுருக்கம்: மனிதமாம்சமாகுதலில், கிறிஸ்து மாம்சத்தில் வெளியரங்கமான தேவனாயிருக்கிறார். அவர் குமாரனாக மட்டுமல்ல, முழு தேவனாகவும், அதாவது, பிதாவாகவும் குமாரனாகவும் ஆவியானவராகவும் மாம்சத்தில் வெளியரங்கமானார். மனிதமாம்சமாகுதலின்மூலம் கிறிஸ்து தேவ-மனிதனானார், அதாவது, முழுமையான தேவனும் பரிபூரணமான மனிதனுமான ஒருவரானார். அவர் தெய்வீக சாராம்சத்தை உடையவராக, பரிசுத்த ஆவியானவரால் கருவானார்; அவர் மனித சாராம்சத்தை உடையவராக, ஒரு மனித கன்னிகையினால் பிறந்தார். தேவ-மனிதனாகிய அவருக்குள், தெய்வீகமும் மனுஷீகமும் ஒன்றாக கலந்திணைந்திருந்தன; ஒரு மனிதனில் தேவனுடைய குறிக்கோளும் நிறைவேறியது.
பின்புலம்: இந்த பாடத்தின் தலைப்பு சொல்லுகிறபடி, மனிதமாம்சமாகுதல் என்பது தேவன் “மாம்சத்தில் வெளிப்படுவதாகும்” என்பதை வாலிபர்களால் சொல்லமுடிந்தால், அவர்கள் இந்த பாடத்தின் கருத்தைப் புரிந்துகொண்டார்கள் என்று அர்த்தம் (1 தீமோ. 3:16). சிலர் வாலிபர்களை அணுகி, இயேசு முழுமையான தேவனல்ல அல்லது இயேசு முழுமையான மனிதனல்ல என்று அவர்களிடம் சொல்லும்போது, அவர்களுடைய விசுவாசம் அசைக்கப்படாமல் இருக்க அவர்களுக்கு இந்த பாடம் தேவை. 1 தீமோத்தேயு 3:16-ன்படியும், கொலோசெயர் 2:9-ன்படியும், கிறிஸ்து மாம்சத்தில் வெளியரங்கமான தேவனாக இருக்கிறார் என்றும், அவர் முழு மூவொரு தேவனின் ஊனுருவாகவும் இருக்கிறார் என்றும் அவர்கள் தைரியமாய் அறிக்கையிடக்கூடியவர்களாக இருக்கவேண்டும். அவர் தேவ-மனிதனாக இருக்கிறார்.
அதிகாரங்கள்: மத்தேயு 1, லூக்கா 2, யோவான் 1.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதல் பிரபஞ்சத்தில் ஒரு மாபெரும் நிகழ்வாக இருந்தது. மேலோட்டமாக பார்த்தால், பூமியில் நிகழ்ந்துகொண்டிருந்த அநேக பிறப்புகளில் அதுவும் ஒரு பிறப்பாகத்தான் இருந்தது, ஆனால் இயேசுவின் பிறப்பு மிக உயர்ந்த அளவுக்கு அசாதாரணமாகவும் அற்புதமாகவும் இருந்தது, ஏனென்றால், இந்த கருத்தரிப்பினாலும் பிறப்பினாலும் தேவன் மனுஷீகத்தோடு கலந்திணைந்து, ஒரு மனிதனாக மனுஷீகத்திற்குள் பிறந்தார். அது வெறுமனே மனித இனத்திற்கான ஓர் இரட்சகரின் பிறப்பாகக்கூட இல்லை; அது மனிதனுக்குள் முழு மூவொரு தேவனின் பிறப்பாக இருந்தது.
I. கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதல் மாம்சத்தில் தேவனுடைய வெளியரங்கமாக இருந்தது—1 தீமோ. 3:16
கன்னி மரியாளின் கர்ப்பத்திற்குள் தேவன் நுழைந்தபோது, அவருடைய நித்திய குறிக்கோளை நிறைவேற்றக்கூடிய வழிமுறைக்குள் அவர் நுழைந்தார். ஒருபக்கம், அவர் இவ்விதமாக மனிதனோடு சம்பந்தப்பட்டுவிட்டால், இந்த சம்பந்தத்திலிருந்து அவரால் விடுபடவேமுடியாது; அவரால் பின்வாங்கவே முடியாது. மறுபக்கம், அவர் மனிதனோடு மனிதனாக வசிப்பதை விரும்பினார் (பாடல் எண் 84), ஏனென்றால், மனிதனோடு ஒன்றாகவேண்டுமென்பது அவருடைய ஆழமான ஏக்கமாகவும், தயவுள்ள சித்தமாகவும் இருந்தது.
A. இயேசுகிறிஸ்துவின் பிறப்பில் முழு மூவொரு தேவனும் சம்பந்தப்பட்டிருந்தார்
அவருடைய மனிதமாம்சமாகுதலின் நேரத்தில் குமாரன் உண்டானார் என்பதோ, அல்லது குமாரன் மட்டும் தனியாக மனிதமாம்சமானார் என்பதோ அல்ல. மூவரும் (பிதா, குமாரன், ஆவியானவர் ஆகிய யாவரும்) கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதலில் சம்பந்தப்பட்டிருந்தார்கள்.
- இயேசு தேவனுடைய குமாரனாக பிறந்தார்—லூக். 1:35
இயேசுகிறிஸ்து தேவனுடைய குமாரன் என்பதை உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாரும் ஒத்துக்கொள்கிறார்கள். இயேசுவின் பிறப்பு, மனுஷீகத்திற்குள் திரியேகத்துவத்தின் இரண்டாமவருடைய வருகையாக இருந்தது. இது பரம்புதிரானது, ஏனென்றால், பின்வரும் குறிப்புகளில் காணப்படுவதுபோல, அவருடைய பிறப்பு முதலாமவரை (பிதாவை) அதின் ஊற்றாகவும், மூன்றாமவரை (ஆவியானவரை) அதின் வழிவகையாகவும் கொண்டிருந்தது.
- இயேசு பிதாவிலிருந்தும் பிதாவோடும் அனுப்பப்பட்டார்—யோவான் 8:16, 29
ஒருபக்கம், இயேசுவின் பிறப்பு குமாரனின் மனிதமாம்சமாகுதலாக இருந்தது. மறுபக்கம், அவருடைய வருகை பிதாவின் வருகையாக இருந்தது. அவர் பிதாவினால் அனுப்பப்பட்டார் (கலா. 4:4), எனினும் அவரை அனுப்பியவர் அவரோடு இருந்தார் (யோவான் 8:29; John 1:14, footnote 5-ஐ பார்க்கவும்). பிறந்த பாலகனும், கொடுக்கப்பட்ட குமாரனும் நித்திய பிதா என அழைக்கப்படுவார் என்று ஏசாயா 9:6 வெளிப்படையாக நமக்குச் சொல்லுகிறது. தம்மைக் கண்டவன் பிதாவைக் கண்டான் என்று இயேசுதாமே சொன்னார் (யோவான் 14:9), எனவே அவர் பிதாவின் ஊனுருவாக இருந்தார். கண்களுக்குத் தெரிந்த இந்த ஊனுருவாகுதல் எப்படி அல்லது எப்போது நிகழ்ந்தது? இயேசு கருவானதிலும் பிறந்ததிலும் ஆரம்பித்த மனிதமாம்சமாகுதல் என்ற வழிமுறையின்மூலம்தான் இது நிகழ்ந்தது. கிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதல் பிதாவின் வருகையாகவும் இருந்தது. பிதா குமாரனோடு வருவது மட்டுமல்ல, பூமியில் வாழவும் வேலைசெய்யவும் குமாரன் வந்தபிறகு, பிதா அவரோடுகூட வாழ்ந்து, அவரோடுகூட வேலையும் செய்கிறார். அவர் வாழும்போது, பிதாவும் வாழ்கிறார். (The Divine Dispensing of the Divine Trinity, Chapter 11, 110). “தேவனிடத்தினின்று வந்தவரே தவிர வேறொருவரும் பிதாவைக் கண்டதில்லை; இவரே பிதாவைக் கண்டவர்,” என்று யோவான் 6:46 கூறுகிறது. “இடத்தினின்று” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க சொல் பாரா என்பதாகும்.”தேவனிலிருந்து, தேவனோடு” என்பதுதான் இங்குள்ள இந்த சொல்லின் அர்த்தம்.அவர் தேவனிடமிருந்து வந்திருந்தாலும், அவர் இன்னும் தேவனோடுதான் இருக்கிறார் (யோவான் 8:16, 29; 16:32). “நான் என் பிதாவிடமிருந்தும் என் பிதாவோடும் வருகிறேன். நான் என் பிதாவிடமிருந்து வரும்போது, நான் அவரோடுகூட வருகிறேன்,” என்று இந்த வசனங்களில் கர்த்தர் சொல்வதுபோல் தோன்றுகிறது. குமாரன் தம் மனித பிறப்பின்மூலம் “அனுப்பப்பட்டார்.” இயேசு தம் பிறப்புமுதல், “பிதாவிலிருந்தும் பிதாவோடும்” இருந்தார்.
3. இயேசு பரிசுத்த ஆவியானவரால் பிறந்தார்—மத். 1:18, 20
அவர் பிதாவிடமிருந்தும் பிதாவோடும் அனுப்பப்பட்டிருந்தாலும், அவர் பரிசுத்த ஆவியானவரால்தான் பிறந்தார். குமாரன் தேவனுடைய ஊனுருவாக மனிதமாம்சமானபோது, அவர் ஆவியானவரால்தான் அவ்வாறு செய்தார். எனவே, “ஆவியானவர் உள்ளே வந்தார், குமாரன் வெளியே வந்தார், அவருடைய பெயர் பிதா என்றழைக்கப்பட்டது!” என்று இயேசுவின் மனிதமாம்சமாகுதலைக்குறித்து நாம் சொல்லலாம். நிச்சயமாக இது பரம்புதிரானதுதான், ஆனால் இது ஓர் அற்புதமான நிஜம்.
B. இயேசுகிறிஸ்து முழு மூவொரு தேவனின் ஊனுருவாக இருந்தார்—கொலோ. 2:9
முதலாவதாக, தேவத்துவத்தில் நம்முடைய கிறிஸ்து முழுமையான தேவனாக இருக்கிறார். கிறிஸ்து முழுமையான தேவனாக இருப்பதென்றால், அவர் மூவொரு தேவனாக இருக்கிறார், அதாவது, பிதாவும் குமாரனும் ஆவியானவருமாக இருக்கிறார் என்று அர்த்தம். இதைக்குறித்து வாக்குவாதம்செய்து, கிறிஸ்து குமாரன் மட்டும்தான் என்று சொல்லுகிறவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம், கிறிஸ்து குமாரனாக இருக்கிறார் என்று புதிய ஏற்பாடு வெளிப்படுத்துகிறது; மறுபக்கம், கிறிஸ்து தேவன் என்றும், முழுமையான தேவன் என்றும்கூட புதிய ஏற்பாடு வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து ஒரு பகுதி தேவன் மட்டும்தான் என்று நாம் சொல்லக்கூடாது. அதற்கு மாறாக, அவர் முழுமையான தேவனாக, அதாவது, மூவொரு தேவனாக இருக்கிறார். கிறிஸ்து மனிதமாம்சமானபோது, முழு மூவொரு தேவனும் ஒரு மனிதனாக மாறினார்.
II. இயேசுகிறிஸ்துவின் மனிதமாம்சமாகுதல் மனுஷீகத்தோடு தெய்வீகத்தின் கலந்திணைதலாக இருந்தது, இது ஒரு தேவ-மனிதனை உற்பத்திசெய்தது
மரியாளின் கர்ப்பத்தில் தெய்வீக மூலக்கூறும், சாராம்சமும், சுபாவமும் மனித மூலக்கூறோடும், சாராம்சத்தோடும், சுபாவத்தோடும் கலந்திணைந்தது இயேசு என்னும் தேவ-மனிதனை உற்பத்திசெய்தது.
A. இயேசுகிறிஸ்துவில், தெய்வீக சுபாவமும் மனித சுபாவமும் ஒரே நபராக ஒன்றாய் கலந்திணைந்திருக்கின்றன—லூக். 1:35
தேவனும் மனிதனும் இயேசு என்ற நபரில் சேர்ந்து, இணைந்து, கலந்திணைந்துமிருக்கிறார்கள். தேவனும் மனிதனும் நம் அற்புதமான இரட்சகராகிய இயேசுகிறிஸ்து என்னும் ஒரே நபராக மாறினார்கள்.
- அவருடைய மனிதமாம்சமாகுதல்மூலம், தெய்வீகம் மனுஷீகத்திற்குள் கொண்டுவரப்பட்டு, மனுஷீகத்தோடு ஒன்றானது
முழு வரலாற்றிலேயும் மிகுந்த அசாதாரணமான, விசேஷமான கருத்தரிப்பு இதுதான்—தேவன் மனிதனிடம் கருத்தரித்தது. மனித கருத்தரிப்பில், மனித சாராம்சம் என்னும் ஒரே வகையான சாராம்சம்தான் இருக்கிறது. ஆனால் இயேசு கருத்தரிக்கப்பட்டது தெய்வீக சாராம்சத்தினாலும் மனித சாராம்சத்தினாலுமானது. தெய்வீக மூலக்கூறு, மனித மூலக்கூறு ஆகிய இரண்டு மூலக்கூறுகளினால் இயேசு பிறந்தார். எனவே, தெய்வீக சுபாவம், மனித சுபாவம் ஆகிய இரண்டு சுபாவங்கள் அவரிடம் இருந்தன. அவர் முழுமையான தேவனாகவும், பரிபூரணமான மனிதனாகவும் இருந்தார், அதாவது, தேவ-மனிதனாக இருந்தார். அவருக்குள் தேவனும் மனிதனும் சேர்ந்து இணைந்து, ஒன்றானார்கள். (The Divine Economy, Chapter 6, p. 45).
- இயேசுகிறிஸ்து என்ற நபரில் தெய்வீகமும் மனுஷீகமும் பரிபூரணமாக ஒன்றாய் கலந்திணைந்தன
செக்கில் ஆட்டிய தூய்மையான ஒலிவ எண்ணெயோடு கலந்திணைந்த மெல்லிய மாவின் சித்திரம் பழைய ஏற்பாட்டில் இருக்கிறது (லேவி. 2:4-5). இவ்விரண்டு மூலக்கூறுகளும் மிக நுணுக்கமான, முழுமையான விதத்தில் ஒன்றாக கலந்திணைகின்றன. இதேபோலத்தான், இயேசுகிறிஸ்துவில் தெய்வீகமும் மனுஷீகமும் ஒன்றாக கலந்திணைகின்றன. இயேசுவில், தெய்வீக குணாம்சங்களும் மனித நற்பண்புகளும் பரிபூரணமாகவும் முழுமையாகவும் பொருந்துகின்றன. அவருடைய மனுஷீகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் தேவனை காணமுடியும்.
- இயேசுகிறிஸ்துவில் இவ்விரண்டு சாராம்சங்களும் வெவ்வேறாக இருந்தன, எனினும் அவை பிரிந்திருக்கவில்லை, அவை ஒன்றிணைந்து மூன்றாவது சாராம்சத்தையோ அல்லது சாரப்பொருளையோ உருவாக்கவுமில்லை
சபையின் ஆரம்பகால நூற்றாண்டுகளில், கிறிஸ்துவைக்குறித்த அநேக பல்வேறு துர் உபதேசங்கள் பரப்பப்பட்டுவந்தன. (அவைகளில் சில உபதேசங்கள் யெகோவாவின் சாட்சிகள், மொர்மோன் போன்ற சில துர் உபதேச குழுக்களில் இன்னும்கூட போதிக்கப்பட்டுவருகின்றன). இயேசுவிலிருந்த இரண்டு சுபாவங்கள் மூன்றாவதாக ஒரு புதிய சுபாவத்தை உருவாக்கியது என்று இவைகளுள் ஓர் உபதேசம் அறிவித்தது; இயேசு தேவனும் அல்லாத, மனிதனும் அல்லாத ஒரு தேவ-மனிதன் என்பதுதான் இதன் அர்த்தம். நிச்சயமாக அவர் தேவன்தான், எனினும் அவர் ஒரு மனிதனாக தோற்றம் மட்டுமே அளித்தார், ஏனென்றால், பாவமுள்ள, விழுந்துபோன மனித இனத்தோடு தேவன் ஒருபோதும் ஒன்றாகமாட்டார் என்று இன்னோர் உபதேசம் கூறியது. இயேசு தேவனே அல்ல, மாறாக அவர் நமக்காய் மரிக்கும்படி மனிதனாக மாறிய ஒரு சிருஷ்டி (ஒரு தூதன்) மட்டும்தான் என்று வேறோர் உபதேசம் கூறியது. இயேசுவும் கிறிஸ்துவும் இரண்டு தனித்தனி நபர்கள் (ஒருவர் தெய்வீகமானவர், இன்னொருவர் மனுஷீகமானவர்), இவர்கள் அவருடைய ஞானஸ்நானத்தின்போது இணைந்து, அவருடைய மரணத்தில் மீண்டும் பிரிந்துவிட்டார்கள் என்று வேறு சிலர் போதித்தார்கள். ஆதி சபைத் தலைவர்கள் வார்த்தையை அதிகமாய் ஆராய்ந்துபார்த்ததின்மூலம், கிறிஸ்து என்ற நபரைப்பற்றிய உண்மையான வெளிப்பாட்டை பிடித்துக்கொள்ளமுடிந்தது. இயேசுகிறிஸ்துவில், தேவனும் மனிதனும் ஒரே நபராக ஒன்றாய் சேர்ந்திணைந்து, கலந்திணைந்தார்கள், எனினும் தெய்வீக சுபாவமோ அல்லது மனித சுபாவமோ அதின் தனித்துவமான குணாதிசயங்களை இழக்கவில்லை. இரண்டு சுபாவங்களையும் வேறுபடுத்திப்பார்க்கமுடிந்தது, ஆனால் அவைகளைப் பிரிக்கமுடியவில்லை. மனுஷீகமும் தெய்வீகமும் ஒன்றாக கலந்திணைந்தபிறகு, அவைகளை ஒருபோதும் பிரிக்கமுடியாது. இதற்காக கர்த்தரை துதியுங்கள்! இயேசு கருவானபோது, தேவனும் மனிதனும் ஒருபோதும் பிரிக்கப்படமுடியாதவர்களாகவும், எனினும், தேவனும் மனிதனும் தங்கள் தனித்துவமான அடையாளங்களைத் தக்கவைத்துக்கொள்கிறதுமான வகையில் தேவன் தம்மை பூரணமாய் மனிதனுக்கு ஒப்புவித்தார். இதுதான் கலந்திணைதல். அல்லேலூயா! இந்த விஷயத்தை வாலிபர்களுக்கு தெள்ளத்தெளிவாக்கவேண்டும். லேவியராகமம் 2:4-5ல் மாவும் எண்ணெயும் கலந்திணைவது ஒரு நல்ல எடுத்துக்காட்டாகும். உதராணமாக, Life-study of 2 Corinthians, Message 38, pp. 334–335-ஐ பார்க்கவும்.
B. தேவ-மனிதன் என்ற முறையில், இயேசுகிறிஸ்து முழுமையான தேவனாகவும் இருக்கிறார், பரிபூரணமான மனிதனாகவும் இருக்கிறார்
- தேவனுடைய மனிதமாம்சமாகுதல் ஒரு தேவ-மனிதனை உற்பத்திசெய்தது—யோவான் 1:14
தேவன்தான் கருவானார். வெளியே வந்ததோ, தேவ-மனிதன். முன்னணையில் கிடத்தப்பட்டிருந்த குழந்தை இயேசு பரம்புதிரான தேவ-மனிதனாக இருந்தார், அவரில் தெய்வீகமும் மனுஷீகமும் ஒன்றாக கலந்திணைந்திருந்தது.
p 24). கலந்திணைதல் என்னும் வழிமுறையின்மூலம் தேவனை உள்ளடக்கி, அவரை வெளிக்காட்டவேண்டும் என்பதற்காக தேவன் மனிதனை சிருஷ்டித்தார்; இதை முழு அளவுக்கு அனுபவித்த முதல் நபர் இயேசுதான்.
- இந்த தேவ-மனிதன் எல்லா விதத்திலும் ஒரு சராசரி மனிதனாகவே இருந்தார், எனினும் பாவமில்லாதிருந்தார்—எபி. 2:14; 4:15
இயேசு ஒரு “விசேஷமான” உடலைக்கொண்ட ஓர் அசாதாரண மனிதனாக பிறக்கவில்லை. அவர் ஒரு சராசரி மனிதனாகவே பிறந்தார். ஆதாம்முதல் மரியாள்வரையிருந்த அவருடைய எல்லா மூதாதையராலும் குவித்துவைக்கப்பட்டு, கடத்தப்பட்ட குறைபாடுகள் அவருடைய மாம்சத்தில் இருந்தன. எனினும், (நோய்கள், பலவீனங்கள், குறைகள் போன்ற) பாவத்தின் அடையாளங்களையும் தாக்கங்களையும் இயேசுவின் மாம்சம் கொண்டிருந்தாலும், அவருடைய மாம்சத்தில் பாவ-மூலக்கூறு இல்லை. அவர் “பாவமாம்சத்தின் சாயலில்” வந்தார் (ரோ. 8:3). நம்மிடமுள்ள அதே இரத்தத்திலும் மாம்சத்திலும் இயேசு பங்கெடுத்தார், எனினும் அவர் பாவமில்லாதிருந்தார் (எபி. 2:14; 4:15).
III. இப்படிப்பட்ட மனிதன் தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றக்கூடியவராக இருந்தார், நிறைவேற்றக்கூடியவராக இருக்கிறார்
தேவன் தம் நித்திய குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான வழிவகைதான் அவருடைய பொருளாட்சி. மனிதனில் தம்முடைய கூட்டு வெளியாக்கத்தை அடையவேண்டும் என்பதே தேவனுடைய நித்திய குறிக்கோள். ஒரு தேவ-மனிதனால் மட்டுமே, அதாவது, தெய்வீகமும் மனுஷீகமும் ஒரே நபரில் ஒன்றாக கலந்திணைந்துள்ள ஒரு நபரால் மட்டுமே இப்படிப்பட்ட குறிக்கோளை நிறைவேற்றமுடியும். இயேசு இப்படிப்பட்ட தேவ-மனிதனாக இருந்ததினிமித்தம், அவரால் தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றமுடிந்தது.
A. தேவ-மனிதன் என்ற முறையில் இயேசுகிறிஸ்து நமக்காக சட்டரீதியான மீட்பை நிறைவேற்றும்படி மரித்தார்—வெளி. 5:9-10
தேவ-மனிதன் என்ற முறையில் கிறிஸ்து, முழு பழைய சிருஷ்டிப்பையும் முடிவுகட்டி, தேவனுடைய கூட்டு வெளியாக்கத்தின் பகுதியாயிருக்கும்படி தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட எல்லாருக்காகவும் மீட்பை நிறைவேற்றிய மரணத்தை மரிக்கமுடிந்தது.
B. தேவ-மனிதன் என்ற முறையில் இயேசுகிறிஸ்து, அநேக குமாரர்களுக்குள் தெய்வீக ஜீவனை பரப்புவதற்காக, தமக்குள்ளிருந்த தெய்வீக ஜீவனை வெளியிட்டார்—யோவான் 12:23-24; 19:34
தேவ-மனிதன் என்ற முறையில் அவர், தம் மனுஷீகத்திற்குள் பொதிந்திருந்த தெய்வீக ஜீவனை வேறு பல “மணிகளுக்குள்” வெளியிடுவதற்காக மரிக்க நிலத்தில் விழக்கூடிய ஒரு கோதுமை மணியாகவும் இருந்தார். அவர் தேவனுடைய ஊனுருவாக இல்லாவிட்டால், தேவன் தாமே இப்படிப்பட்ட விதத்தில் மற்றவர்களுக்குள் பெருக்கமடைய அவருக்கு எந்த வழியும் இருந்திருக்காது.
C. தேவ-மனிதன் என்ற முறையில் இயேசுகிறிஸ்து தம் விசுவாசிகளுக்குள் தம்மையே ஜீவனாக வழங்க ஆவிக் கிறிஸ்துவாக மாறும்படி உயிர்த்தெழுந்தார்—யோவான் 20:22; 1 கொரி. 15:45
D. தேவ-மனிதன் என்ற முறையில் இயேசுகிறிஸ்து, பிரபஞ்சத்திற்கு தேவனை வெளிக்காட்டவும், நித்தியத்தில் தேவனுடைய பெருகிய மகிமைக்காக தம்மைப்போலவே தேவனை வெளிக்காட்டும்படி தம்முடைய சக தேவ-மனிதர்கள் எல்லாரையும் கொண்டுவரவும், அவர் மகிமையில் தேவனுடைய சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிறார்—எபி. 1:3; 2:10; எபே. 3:21
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: வெவ்வேறு போதனைகள் எப்படி வெவ்வேறு விதத்தில் கிறிஸ்துவை விவரிக்கின்றன என்பதை விவரித்து தொடங்குங்கள். அவர் நிஜமாகவே ஒருபோதும் மனிதனாக மாறவில்லை (அது ஒரு மாயத்தோற்றம்தான்) என்பதால், அவர் தேவனாக மட்டுமே இருந்தார் என்று சிலர் சொல்லுகிறார்கள். அவர் ஓர் இரத்தசாட்சியின் மரணத்தை மரித்த ஒரு மனிதனாக மட்டுமே இருந்தார், அவர் தேவன் அல்ல என்று சிலர் சொல்லுகிறார்கள். அவர் ஒரு மனிதனாக மாறிய தூதன் என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள். கிறிஸ்துவும் இயேசுவும் இரண்டு வெவ்வேறு நபர்கள், அதாவது, கிறிஸ்து தெய்வீகமானவர், இயேசு மனுஷீகமானவர்; அவர்கள் அவருடைய ஞானஸ்நானத்தில்தான் ஒன்றாக இணைந்தார்கள், அவருடைய மரணத்தில் அவர்கள் மீண்டும் பிரிந்துவிட்டார்கள் என்று வேறு சிலர் சொல்லுகிறார்கள். இயேசு மூவரில் ஒருவரான தேவனுடைய குமாரன் மட்டும்தான், இவர் ஒரு மனிதனாக மாறினார் என்று நினைப்பது கிறிஸ்தவத்தில் இன்னும் அதிக பொதுவான கருத்தாக இருக்கிறது. இதுகூட முற்றிலும் துல்லியமானதல்ல. கிறிஸ்து என்ற நபரைக்குறித்த குழப்பம், இந்த பாடத்திற்கு சிறந்த பின்னணியாக அமையும். அதன்பின், (ஒருவேளை, கொலோசெயர் 2:9, யோவான் 1:1, 14 போன்ற சில வசனங்களை பயன்படுத்தி) இயேசு எப்படி மனிதனாக மாறிய முழுமையான தேவனாக இருக்கிறார் என்பதை எளிமையான விதத்தில் பகிர்ந்துகொள்ளுங்கள். இயேசு தேவனாகவும் மனிதனாகவும் இருந்த ஒரு நபர், அதாவது, தெய்வீகம், மனுஷீகம் ஆகிய இரண்டையும் கொண்டிருந்தவர். தேயிலை நீருடன் கலந்திணைவது அல்லது எண்ணெய் மாவுடன் கலந்திணைவது போன்ற சில உதாரணங்களை அளித்து, கலந்திணைதல் என்றால் என்ன என்பதை மீண்டும் பகிர்ந்துகொண்டால், அது நன்றாயிருக்கும். கலந்திணைதல் என்றால், இரண்டு சுபாவங்களும் பிரிக்கப்படமுடியாதபடி ஒன்றாக இழைந்திணைவதாகும், இருந்தாலும், அவ்விரண்டும் இன்னும் வேறுபடுத்திப்பார்க்கக்கூடிய வகையில் இருக்கின்றன என்று அர்த்தம். இயேசுவில், தேவனும் மனிதனும் ஒரே நபராக ஒன்றாய் இழைந்திணைந்தார்கள்.
சுவிசேஷ செயலாக்கம்: கர்த்தராகிய இயேசு மாம்சத்தில் வெளியரங்கமான தேவனாகவும், மனுஷீகத்தோடு தெய்வீகத்தின் கலந்திணைதலாகவும் இருந்தபடியால், அவர் இரண்டு அந்தஸ்துகளை உடைய நபராக இருந்தார். அவர் மக்களை சீராட்ட தம் மனுஷீகத்தில் மனுஷகுமாரனாக இருந்தார், அவர் மக்களை போஷிக்க தம் தெய்வீகத்தில் தேவனுடைய குமாரனாக இருந்தார். அவர் தம் மனுஷீகத்தில், மக்களை சீராட்டினார், அதாவது, அவர் அவர்களை சந்தோஷப்படுத்தி, தாம் மிக இன்பமானவர் என்றும், தம்மை மிக சுலபமாய் தொடர்புகொள்ளமுடியும் என்றும் அவர்களுக்கு உணர்வை ஏற்படுத்தினார். எனினும், அவர் தேவனுடைய குமாரனாகவும் இருந்தார், எனவே, அவர் தம் தெய்வீக ஜீவனால் மற்றவர்களை போஷிக்கமுடிந்தது. அவர் தேவனுடைய குமாரனாக மட்டுமே இருந்து, மனுஷகுமாரனாக இல்லையென்றால், அவரை அணுகுவது யாருக்கும் செளகரியமாய் இருந்திருக்காது. ஆயினும், அவர் மனுஷகுமாரனாக மட்டுமே இருந்து, தேவனுடைய குமாரனாக இல்லையென்றால், மனிதன் பாவத்திலிருந்து விடுபடுவதற்காக தெய்வீக போஷாக்களிக்கிற ஜீவ நிரப்பீட்டை அவர் வழங்கியிருக்கமுடியாது. கர்த்தர் தம் இரண்டு அந்தஸ்துகளிலும், ஒரு பாவியின் தேவையை எப்படி கவனித்துக்கொண்டார் என்பதை யோவான் 8:3-11ல் நாம் பார்க்கிறோம். குற்றப்படுத்துகிற பரிசேயர்களால் விபச்சார செயலில் பிடிக்கப்பட்ட ஒரு பெண் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டாள், அங்கே கர்த்தர் போதித்துக்கொண்டிருந்தார். (அவள்மேல் குற்றஞ்சாட்டினவர்கள் பாவமற்றவர்கள் இல்லை என்பதால்) அவள்மேல் கல்லெறிவதற்கு அவர்கள் தகுதியற்றவர்கள் என்பதை (பாவமில்லாத) மனுஷகுமாரனாகிய கர்த்தர் அம்பலமாக்கினபிறகு, “நானும் உன்னை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கிறதில்லை,” என்று அவர் அந்த பெண்ணிடம் கூறினார் (யோவா. 8:11). இதன்மூலம் அவர் அவளை சீராட்டினார். அதன்பின், “நீ போ, இனிப் பாவஞ்செய்யாதே,” என்று தேவனுடைய குமாரனாகவும், மாபெரும் இருக்கிறேன் என்பவராகவும் அவர் கூறினார் (யோவான் 8:11). அவர் தம் தெய்வீகத்தைக்கொண்டு பாவத்திலிருந்து விடுதலையை அவளுக்கு வழங்கிபோஷித்து, அவள் இனி பாவஞ்செய்யாதபடியாக்கினார் (யோவான் 8:24, 34-36). தம் மனுஷீகத்தில் மனுஷகுமாரனும், தம் தெய்வீகத்தில் தேவனுடைய குமாரனுமாகிய இந்த அற்புதமான நபர் நம்மெல்லாருக்கும் தேவை. பாவமுள்ள, குற்றப்படுத்தப்பட்ட உங்களுடைய நிலைமையில் அவரால் மட்டுமே உங்களை சீராட்டமுடியும், பாவத்திலிருந்து விடுதலையை அவரால் மட்டுமே உங்களுக்கு வழங்கிபோஷிக்கமுடியும். நாம் பாவிகள் என்பதை அறிக்கைசெய்து, அவருடைய தெய்வீக ஜீவனை பெறும்படி அவருக்குள் விசுவாசிப்பதின்மூலம் நாம் அவருடைய சீராட்டுதலையும் போஷித்தலையும் பெற்றுக்கொள்ளமுடியும்.
முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்புக்காக: The Conclusion of the New Testament, Message 26.
REFERENCES: The Conclusion of the New Testament, Message 26; The Divine Economy, Chapter 6; Living In and With the Divine Trinity, Chapter 1, pp 10–11; Christ Revealed in the New Testament, Chapter 1, pp 10–14; Life-study of Matthew, Message 5, pp 57–60; Life-study of John, Message 3, pp 30–33; The All-Inclusive Spirit of Christ, pp 3–12; The Vital Groups, Message 9, pp 80–82; Message 10, p 100.