வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

Jump to section

தேவனுடைய பொருளாட்சியில் கிறிஸ்து

குறிக்கோள்: தேவனுடைய பொருளாட்சியில் கிறிஸ்துவே எல்லாமுமாயிருக்கிறார் என்பதைப் பார்க்க வாலிபர்களுக்கு உதவுவது.

பொருட்சுருக்கம்: எளிமையாகச் சொல்வதானால், சபையை உற்பத்திசெய்வதற்காக தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் தம்மை பகிர்ந்தளிக்கவேண்டுமென்ற அவருடைய திட்டமே தேவனுடைய பொருளாட்சியாகும். இப்படிப்பட்ட பொருளாட்சியில், கிறிஸ்துவே எல்லாவற்றையும் செய்கிறார், அவரே எல்லாமுமாக இருக்கிறார். இந்த பாடத்தில், கிறிஸ்து தேவனுடைய பொருளாட்சியில் நான்கு காரியங்களாக இருக்கிறார் என்று நாம் பார்ப்போம்: அவரே தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றுகிற அபிஷேகம்பண்ணப்பட்டவராக இருக்கிறார்; அவரே தேவனுடைய பொருளாட்சியில் முதலிடம் வகிக்கிற முதன்மையானவராக இருக்கிறார்; அவரே தேவனுடைய பொருளாட்சியில் எல்லாவற்றிற்கும் தலையாக இருக்கிறார்; அவரே தேவனுடைய பொருளாட்சியின் மையமாக இருக்கிறார். கிறிஸ்துவைத்தவிர வேறு யாராலும் தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றமுடியாது. கிறிஸ்துவைத்தவிர வேறு யாருக்கும் தேவனுடைய பொருளாட்சியில் முதன்மை இல்லை. கிறிஸ்துவைத்தவிர வேறு யாரும் பிரபஞ்சத்திலுள்ள எல்லாவற்றையும் தன் தலைமையில் கூட்டிச்சேர்ப்பதில்லை; அவர் மட்டுமே தேவனுடைய திட்டத்தின் மையமாக இருக்கிறார். இந்த காரணத்தினால்தான், தேவனுடைய பொருளாட்சியில், கிறிஸ்துவே எல்லாமுமாயிருக்கிறார். தேவனுடைய பொருளாட்சியில் சகலத்தையும் உள்ளடக்கிய, மேன்மையான கிறிஸ்துவையே அறிந்து, அனுபமாக்கும்படி தீர்மானித்த அப்போஸ்தலனாகிய பவுலைப்போலவே நாமெல்லாரும் இருப்போமாக (1 கொரி. 2:2; பிலி. 3:8-11).

பின்புலம்: நம்முடைய தேவன் குறிக்கோளுள்ள தேவனாக இருக்கிறார். இந்த குறிக்கோளை நிறைவேற்ற, சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவாக அவர் தம்மையே நமக்குள் பகிர்ந்தளிக்கிறார். நம்மில்நாமே ஏழ்மையாயிருக்கிறோம், தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றமுடியாதவர்களாக இருக்கிறோம், இடிபாட்டுக் குவியலில் இருக்கிறோம், அநேக காரியங்களால் திசைதிருப்பப்பட்டிருக்கிறோம். கிறிஸ்துவில் நாம் தேவனுடைய ஐசுவரியங்களைப் பெறுகிறோம், தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றக்கூடியவருடன் இணைக்கப்பட்டுமிருக்கிறோம். இதன் விளைவாக, நாம் அவருடைய தலைமையில் கூட்டிச்சேர்க்கப்படுகிறோம், சக்கர மையமாகிய அவரில் ஒன்றாகத் தாங்கிப்பிடிக்கப்படுகிறோம். அவரே நமக்குத் தேவையான எல்லாமாகவும் இருக்கிறார், அவரே தேவனுடைய பொருளாட்சியிலும் எல்லாமுமாக இருக்கிறார்.

அதிகாரம்: யோவான் 1.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

அறுபத்தாறு புத்தகங்களைக்கொண்ட வேதாகமம் பல்வேறு காரியங்களைக்குறித்து அதிகமாய் பேசுகிறது. நியாயப்பிரமாணம், வரலாறு, யுத்தங்கள், வம்சவரலாறுகள், உவமைகள், கதைகள், ஒழுக்கம் ஆகியவைகளைக்குறித்து அது பேசுகிறது. ஆனால், உண்மையில், வேதாகமம் ஒரேவொரு காரியத்தை மட்டுமே வலியுறுத்துகிறது, அது தேவனுடைய நித்திய பொருளாட்சியாகும். சபையின் வரலாறுதோறும், அநேக விசுவாசிகள் தேவனுடைய வார்த்தையிலுள்ள இந்த மையப்புள்ளியை குறிதவறவிட்டு, வேறு காரியங்களைப் போதித்திருக்கிறார்கள் (1 தீமோ. 1:4-6). ஆனால், தேவனுடைய பொருளாட்சியே வேதாகமத்திலுள்ள போதனையின் குவிமையம். மேலும், சகலத்தையும் உள்ளடக்கிய, மேன்மையான கிறிஸ்துவே இந்த பொருளாட்சியின் மையமாகவும், நிஜமாகவும், இலக்காகவும் இருக்கிறார் என்று வேதாகமம் தெளிவாக காண்பிக்கிறது. கிறிஸ்துவே தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றுகிறார், கிறிஸ்துவே தேவனுடைய பொருளாட்சியில் முதன்மையாயிருக்கிறார், கிறிஸ்துவே தேவனுடைய பொருளாட்சியில் தலைமைதாங்குகிறார், கிறிஸ்துவே தேவனுடைய பொருளாட்சியின் மையமாக இருக்கிறார். தேவனுடைய பொருளாட்சியில் சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவிடம் நம் கவனத்தை திருப்புவதுதான் இந்த பாடத்தின் இலக்கு.

I. தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் தம்மையே பகிர்ந்தளிக்கவேண்டுமென்ற தேவனுடைய திட்டம்தான் தேவனுடைய பொருளாட்சி—1 தீமோ. 1:3-4

“வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கும், விசுவாசத்தினால் விளங்கும் தெய்வீக பக்திவிருத்திக்கு ஏதுவாயிராமல், தர்க்கங்களுக்கு ஏதுவாயிருக்கிற கட்டுக்கதைகளையும், முடிவில்லாத வம்சவரலாறுகளையும் கவனியாதபடிக்கும், நீ சிலருக்குக் கட்டளையிடு” என்று 1 தீமோத்தேயு 1:3-ல் பவுல் தீமோத்தேயுவுக்கு சொன்னான். இங்கு, முழு வேதாகமத்திலும் மிக முக்கியமான விஷயத்தைப்பற்றி பவுல் பேசுகிறான், அதுதான் தேவனுடைய பொருளாட்சி. கடந்த நித்தியத்தில், தேவன் எதையும் சிருஷ்டிப்பதற்குமுன்பு, தம் இருதயத்தின் தயவுள்ள சித்தத்தின்படி தேவனுக்கு ஒரு நித்திய குறிக்கோள் இருந்தது. தம் கூட்டு வெளியாக்கமாக தம் சரீரமாகிய சபையை அடைவதே இந்த நித்திய குறிக்கோள். தேவன் இந்த குறிக்கோளை நிறைவேற்றுகிற வழிதான் தேவனுடைய பொருளாட்சி. எளிமையாகச் சொல்வதானால், தேவன் தம்மை நமக்குள் பகிர்ந்தளிப்பதுதான் தேவனுடைய பொருளாட்சி அல்லது தம் குறிக்கோளை நிறைவேற்றுவதற்கான தேவனுடைய வழி. ஆதியாகமம்முதல் வெளிப்படுத்தல்வரை, தேவன் தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் தம்மையே பகிர்ந்தளிப்பதின்மூலம் தம் குறிக்கோளை நிறைவேற்றுகிறார். முழு வேதாகமமும் இந்த ஒரு காரியத்தைப்பற்றி மட்டுமே பேசுகிறது.

A. “பொருளாட்சி” என்றால் வீட்டு சட்டம், அதாவது, வீட்டு மேலாண்மை என்று அர்த்தம்

“பொருளாட்சி” என்ற வார்த்தை பலவேளைகளில் வாலிபர்களைக் குழப்புகிறது. கிரேக்க மொழியில் அதின் மூலத்தைத் தேடிப்பார்க்கும்போது, அதின் வரையறை எளிமையாக இருக்கிறது. “இகோனோமியா” என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து அது வருகிறது, இது “இகோஸ்” (வீடு) மற்றும் “னோமோஸ்” (சட்டம்) ஆகியவைகளின் தொகுப்பாகும். இவைகளை ஒன்றாகச் சேர்க்கும்போது, வீட்டு சட்டம் அல்லது வீட்டு மேலாண்மை என்பது அந்த வார்த்தையின் அர்த்தம். நாம் ஒவ்வொருவரும் ஒரு வீட்டில் வாழ்கிறோம், அது ஒருவிதமான வீட்டு மேலாண்மையின்கீழ் அல்லது வீட்டு ஏற்பாட்டின்கீழ் இயங்குகிறது. நம் வீட்டில் இப்படிப்பட்ட ஏற்பாடு இல்லையென்றால், எதுவும் செய்துமுடிக்கப்படாது, யாரும் போஷிக்கப்படமாட்டார்கள்.

B. “பொருளாட்சி” என்பது ஐசுவரியம்நிறைந்த ஒரு வீட்டின் செல்வம் விநியோகிக்கப்படுவதைக் குறிக்கிறது

வீட்டு மேலாண்மை என்ற அர்த்தமுடைய “பொருளாட்சி” என்னும் வார்த்தை, ஐசுவரியம்நிறைந்த ஒரு வீட்டின் செல்வம் மேலாண்மைசெய்யப்படுவதையும், விநியோகிக்கப்படுவதையும் குறிக்கிறது. பழைய ஏற்பாட்டில் யோசேப்பு, உணவுவிநியோகத்தை மேலாண்மைசெய்ததற்கு ஓர் உதாரணமாக இருக்கிறான். பார்வோனின் வீடு மிகுந்த செல்வம்நிறைந்ததாக இருந்தது, மற்ற தேசங்களுக்கு வழங்க போதுமான அளவு தானியங்களை அது வைத்திருந்தது (ஆதி. 41:46-57), பஞ்சத்தின்போது யோசேப்பு இந்த உணவை மேலாண்மைசெய்து, அதை தேசங்களுக்கு விநியோகித்தான். இந்த செல்வத்தின் விநியோகத்திற்கு நேர்த்தியான மேலாண்மையும், ஏற்பாடும் தேவைப்பட்டது. செல்வம்நிறைந்த ஒரு வீட்டின் ஐசுவரியங்களை விநியோகிப்பதற்கான வீட்டு மேலாண்மையே பொருளாட்சி என்பதைப் பார்க்க இந்த எடுத்துக்காட்டு நமக்கு உதவுகிறது. கிறிஸ்துவின் ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியங்களின் பரந்தகன்ற சேமிப்பைக்கொண்டுள்ள ஒரு மாபெரும் வீடு நம் பிதாவுக்கு இருக்கிறது. கிறிஸ்துவின் கூட்டு வெளியாக்கமாக சபை உற்பத்திசெய்யப்படுவதற்காக தேவனுடைய மக்களுக்குள் இந்த ஐசுவரியங்களைப் பகிர்ந்தளிக்க, இந்த மாபெரும் வீட்டிற்கு ஒருவித நிர்வாகம் தேவைப்படுகிறது.

C. சபையை உற்பத்திசெய்ய தேவன் தம்மை நமக்குள் பகிர்ந்தளிப்பதே தேவனுடைய பொருளாட்சி

எனவே, தேவன் தம்மை வெளிக்காட்ட ஒரு வீட்டை, அதாவது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபை என்னும் வீட்டை அடையுமாறு, தம்மால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களுக்குள் கிறிஸ்துவில் தம்மைப் பகிர்ந்தளிப்பதற்கான தம் வீட்டு நிர்வாகமே தேவனுடைய பொருளாட்சி. “பகிர்ந்தளித்தல்” என்னும் இந்த சொல்லை பொக்கிஷமாய் கருத வாலிபர்களுக்கு உதவுங்கள். சமையலறையில் இருக்கும் ஒரு தாய்க்கு ஒரேவொரு விருப்பம்தான் இருக்கிறது, குடும்பத்தின் அங்கத்தினருக்குள் உணவைப் பகிர்ந்தளிக்கவேண்டும் என்பதுதான் அந்த விருப்பம். குடும்ப அங்கத்தினருக்குள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்ற ஒரு காரணத்திற்காகவே குளிர்சாதன பெட்டியிலுள்ள வளமான உணவு சமைக்கப்பட்டு, பந்தியில் வைக்கப்படுகிறது. உணவின் ஏற்பாடு எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் சரி, அது குடும்பத்திற்குள் பகிர்ந்தளிக்கப்படவில்லையென்றால், குடும்பம் பசியாகவே இருக்கிறது. வாலிபர்கள் வெறுமனே “பொருளாட்சி” என்ற வார்த்தையைப் புரிந்துகொண்டுவிட்டு, தங்களுடைய பசி தீர்வதற்காகவும், தேவனுடைய நித்திய குறிக்கோள் நிறைவேறுவதற்காகவும் தங்களுக்குள் தேவனுடைய பகிர்ந்தளித்தலை அனுபவித்துமகிழாமல் இருந்தால், அதுதான் எல்லாவற்றையும்விட மிகப்பெரிய சோகமாக இருக்கும். நாம் வேதம் வாசிப்பது, பரிசுத்தவான்களுடன் கூடிவருவது, சேர்ந்து பாடுவது, ஒருவரோடொருவர் ஐக்கியங்கொள்வது, சுவிசேஷம் பிரசங்கிப்பது, ஜெபிப்பது ஆகிய யாவும் தேவனுடைய பகிர்ந்தளித்தலை அனுபவித்துமகிழ்வதாக இருக்கவேண்டும்.

II. தேவனுடைய பொருளாட்சியில், கிறிஸ்து:

தேவன் தம் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக தம்மை நமக்குள் பகிர்ந்தளிப்பதே அவருடைய பொருளாட்சி என்பதை நாம் பார்த்திருப்பதால், இந்த பொருளாட்சியில் கிறிஸ்துவே எல்லாமுமாக இருக்கிறார் என்பதை நாம் உணரவேண்டும். அவரே தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற அபிஷேகம்பண்ணப்பட்டவராக இருக்கிறார். அவரே தேவனுடைய பொருளாட்சியில் முதலிடம்வகிக்கிற முதன்மையானவராக இருக்கிறார். அவரே தேவனுடைய பொருளாட்சியில் எல்லாவற்றிற்கும் தலையாக இருக்கிறார், அவரே தேவனுடைய பொருளாட்சியின் மையமாகவும் இருக்கிறார். தேவனுடைய பொருளாட்சியில் கிறிஸ்து மிகுந்த முக்கியத்துவம்வாய்ந்தவராக இருக்கிறார் என்று இதிலிருந்து நாம் பார்க்கிறோம். அவர் இல்லையென்றால், தேவன் தம் குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக தம்மையே நமக்குள் பகிர்ந்தளிக்க அவருக்கு எந்த வழியும் இருக்காது.

A. அபிஷேகம்பண்ணப்பட்டவராக இருக்கிறார், அதாவது, அவர் தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டவராக இருக்கிறார்—யோவான் 1:41

“அவன் முதலாவது தன் சகோதரனாகிய சீமோனைக் கண்டு: மேசியாவைக் கண்டோம் என்று சொன்னான்; மேசியா என்பதற்குக் கிறிஸ்து என்று அர்த்தமாம்,” என்று யோவான் 1:41 கூறுகிறது. மேசியா என்பது ஓர் எபிரேய வார்த்தை (தானி. 9:26), கிறிஸ்து என்பது அதின் கிரேக்க மொழிபெயர்ப்பாகும் (மத். 16:16); “அபிஷேகம்பண்ணப்பட்டவர்” என்பதுதான் இவ்விரண்டு வார்த்தைகளுக்குமான அர்த்தம். கிறிஸ்துவே அபிஷேகம்பண்ணப்பட்டவர். அவர் தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றும்படி தேவனால் அபிஷேகம்பண்ணப்பட்டு, நியமிக்கப்பட்டிருக்கிறார். பழைய ஏற்பாட்டில், தேவனுடைய நிர்வாகத்தை நிறைவேற்றும்படி தேவனால் பயன்படுத்தப்பட்ட எவரும் அபிஷேகம்பண்ணப்படவேண்டியிருந்தது. இதனால்தான், இராஜாக்களும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும் தேவனுக்குமுன்பாக தங்கள் செயல்பாட்டை நிறைவேற்ற அபிஷேகம்பண்ணப்பட்டார்கள். கிறிஸ்து, தேவனை நமக்குள் பகிர்ந்தளிக்கவேண்டுமென்ற அவருடைய பொருளாட்சியை நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டுள்ள அபிஷேகம்பண்ணப்பட்டவராக இருக்கிறார். சபையை உற்பத்திசெய்வதற்காக மூவொரு தேவனை நமக்குள் பகிர்ந்தளிக்கும்படி அவர் தேவனிடமிருந்து கட்டளைபெற்றிருக்கிறார். தேவன் நமக்குள் பகிர்ந்தளிக்கப்படுமாறு, கிறிஸ்து தம் சிலுவைமரணம், உயிர்த்தெழுதல், பரமேறுதல் ஆகியவைகளின்மூலம் தம் கட்டளையை நிறைவேற்றினார். யோவான் 4-ல், சமாரிய ஸ்திரீக்கு ஜீவத் தண்ணீரைப் பகிர்ந்தளிப்பதின்மூலம் கர்த்தர் இந்த கட்டளையை நிறைவேற்றினார். அபிஷேகம்பண்ணப்பட்டவராகிய கிறிஸ்து என்ற முறையில் அவர், ஒழுக்கமில்லாத ஸ்திரீயின் தாகத்தைத் தீர்க்கவேண்டுமென்ற தேவனுடைய சித்தத்தை செய்துமுடித்தார் (யோவான் 4:24-26, 34). கிறிஸ்துவைப்பற்றிய ஒரு புதிதான பாராட்டுதலை இது நம்மிடம் உண்டாக்கவேண்டும். தேவனை நமக்குள் பகிர்ந்தளிப்பதுதான் அவர் பெற்ற கட்டளை, அதாவது, அவருடைய “வேலை.”

B. முதன்மையானவராக இருக்கிறார், அதாவது, அவர் எல்லாவற்றிலும் முதலிடம்வகிக்கிறார்—கொலோ. 1:18

கிறிஸ்து தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றும்படி நியமிக்கப்பட்டவர் மட்டுமல்ல, அவர் தேவனுடைய பொருளாட்சியில் முதன்மையானவராகவும் இருக்கிறார். கிறிஸ்து எல்லாவற்றிலும் முதலிடம்வகிக்கிறார் என்று கொலோசெயர் 1:18 கூறுகிறது. கிறிஸ்துவே முதன்மைவகிக்கிறார், அதாவது, எல்லாவற்றிலும் முதலிடம்வகிக்கிறார் என்பதை நாம் பார்ப்போமானால், நம் வாழ்க்கை புரட்சியடையும். நம் வீட்டு வாழ்க்கையிலும், நம் பள்ளி வாழ்க்கையிலும், நம் உடையிலும், நம் தலைமுடியின் பாணியிலும், நம் தீர்மானங்களிலும், நம் எதிர்காலத் திட்டங்களிலும் அவரே முதலிடம்வகிக்கவேண்டும். கிறிஸ்துவைத்தவிர வேறு யாரும், வேறு எதுவும் நம் வாழ்க்கையில் முதன்மையான இடம்வகிக்கக்கூடாது. எப்போதெல்லாம் நாம் கர்த்தரிடம் திரும்பிவந்து, எல்லாவற்றிலும் அவருக்கு முதலிடம் தருகிறோமோ, அப்போதெல்லாம் நம் ஆதி அன்பாகிய அவரிடம் திரும்பக்கொண்டுவரப்படுகிறோம் (வெளி. 2:4).

C. தலையாக இருக்கிறார், அதாவது, அவரே தேவனுடைய பொருளாட்சியில் எல்லாவற்றையும் தலைமையில் கூட்டிச்சேர்க்கிறார்—எபே. 1:9, 23

தேவனுடைய பொருளாட்சியில், கிறிஸ்து அபிஷேகம்பண்ணப்பட்டவரும், முதன்மையானவரும் மட்டுமல்ல, அவர் எல்லாவற்றிற்கும் தலையாகவும் இருக்கிறார் (எபே. 1:23). “பரலோகத்திலிருக்கிறவைகளும் பூலோகத்திலிருக்கிறவைகளுமாகிய சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டும்” என்பதே தேவனுடைய பொருளாட்சி என்று எபேசியர் 1:9 காண்பிக்கிறது. மனிதன் சாத்தானால் வஞ்சிக்கப்பட்டு விழுந்துபோனபோது, சாத்தான் மரண காரணியாக மனிதனுக்குள் புகுத்தப்பட்டு, மனிதனையும் முழு பிரபஞ்சத்தையும் ஓர் இடிபாட்டுக் குவியலாக விழுந்துபோகும்படிச்செய்தான். இதன் விளைவாக, இன்று நேர்த்தியான தலைமையில்லை, நிஜமான இசைவு இல்லை, நிஜமான சமாதானமும் இல்லை. தேசங்கள் தேசங்களுக்கு எதிராக சண்டைபோடுகின்றன, மாணவர்கள் ஆசிரியர்களுக்கு எதிராக சண்டைபோடுகிறார்கள், குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு எதிராக ஒருவர் சண்டைபோடுகிறார்கள். மனித இனத்திற்குள் புகுத்தப்பட்டுள்ள மரண காரணியினிமித்தம், பிரபஞ்சம் இடிபாட்டுக் குவியலாகக் கிடக்கிறது. சபையின் அங்கத்தினர் எல்லாரும் மரண சூழ்நிலையைவிட்டு எழும்பி, சரீரத்தோடு இணைக்கப்படுமாறு, அவர்களுக்குள் ஜீவ காரணியாக மூவொரு தேவனின் அபரிமிதமான ஜீவ நிரப்பீட்டை பகிர்ந்தளிப்பதின்மூலம் எல்லாவற்றையும் கிறிஸ்துவின் தலைமையில் கூட்டிச்சேர்ப்பதே தேவனுடைய பொருளாட்சி. எசே. 37:4-10-ல், உலர்ந்த எலும்புகளுக்குள் ஜீவன் சுவாசமாக ஊதப்படுவதின்மூலம் இஸ்ரவேலின் சேனை எழுப்பப்படுவது, ஜீவ நிரப்பீட்டினால் எல்லா அவயவங்களும் தலைமையில் கூட்டிச்சேர்க்கப்படுவதை விளக்கிக்காட்டுகிறது.

D. மையமாக இருக்கிறார், அதாவது, அவரே தேவனுடைய பொருளாட்சியில் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கிறார்—கொலோ. 1:17

கிறிஸ்துவே தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றும்படி அபிஷேகம்பண்ணப்பட்டவராக இருக்கிறார், தேவனுடைய பொருளாட்சியில் முதன்மையானவராக இருக்கிறார், தேவனுடைய பொருளாட்சியில் எல்லாவற்றிற்கும் தலையாக இருக்கிறார், தேவனுடைய பொருளாட்சியில் எல்லாவற்றிற்கும் மையமாக இருக்கிறார். சகலமும் கிறிஸ்துவுக்குள் ஒருங்கே அமைந்திருக்கின்றன (ஒன்றாகத் தாங்கிப்பிடிக்கப்பட்டிருக்கின்றன); ஒரு “சக்கரத்தின் மையம்” சக்கரத்தின் எல்லாக் கம்பிகளையும் ஒன்றாகத் தாங்கிப்பிடித்திருப்பதுபோல, அவரே எல்லாவற்றையும் ஒன்றாகத் தாங்கிப்பிடித்திருக்கிற மையமாக இருக்கிறார். தேவனுடைய பொருளாட்சியில் கிறிஸ்துவே முழு பிரபஞ்சத்திற்கும் “சக்கர மையமாக” இருக்கிறார்! என்னே கிறிஸ்து நம்மிடம் இருக்கிறார்! நம்மை தம் கூட்டு வெளியாக்கமாக்கும்படி தம்மையே நமக்குள் பகிர்ந்தளிப்பதுதான் தேவனுடைய பொருளாட்சி. இப்படிப்பட்ட குறிக்கோளை நிறைவேற்ற, தேவனுடைய பொருளாட்சியில் கிறிஸ்துவே எல்லாமுமாக இருக்கிறார், அவரே எல்லாவற்றையும் செய்கிறார்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: “தேவனுடைய நித்திய குறிக்கோள்,” “தேவனுடைய தயவுள்ள சித்தம்,” “தேவனுடைய பொருளாட்சி” போன்ற பதங்களை வாலிபர்கள் கேள்விப்பட்டிருக்கலாம், ஆனால் இவைகளை வெறும் பதங்களாக மட்டுமே அவர்கள் அறிந்திருக்கக்கூடும். Salvation: A Lesson Book , Lesson 1, இந்த விஷயத்தைப்பற்றி ஒரு நல்ல கண்ணோட்டத்தைத் தருகிறது. தேவன் தனியாக இருந்தபோது, அவரிடம் ஒரு தயவுள்ள சித்தம் இருந்தது. அந்த நேரத்தில் ஏதோவொன்று தேவனை சந்தோஷப்படுத்தியது, ஏதோவொன்று தேவனுடைய முகத்தில் புன்னகையைக் கொண்டுவந்தது என்று நாம் சொல்லலாம். நம்மெல்லாருக்கும் ஒரு தயவுள்ள சித்தமும், இருதய பூரிப்பும் இருக்கிறது. இந்த தயவுள்ள சித்தத்தின்படி, தேவன் ஒரு நித்திய குறிக்கோளையும், இந்த குறிக்கோளை வந்தடைவதற்கான ஒரு பொருளாட்சியையும் (திட்டத்தையும்) உண்டாக்கினார். இதைக் கருத்தில்கொண்டு, அவர் தம் கூட்டு வெளியாக்கமாக சபையை அடையுமாறு மனிதனுக்குள் தம்மையே பகிர்ந்தளிக்கவேண்டுமென்ற நோக்கத்திற்காக மனிதனை மையமாகக்கொண்டு பிரபஞ்சத்திலுள்ள கோடிக்கணக்கான காரியங்களைச் சிருஷ்டித்தார்.

சுவிசேஷ செயலாக்கம்: உங்கள் வாழ்வின் மையம் என்ன? ஒரு பொருளின் மையம் அந்தப் பொருளுக்கு பலத்தையும் ஸ்திரத்தன்மையையும் அளிக்கிறது. சகலமும் அதின் மையத்தைச் சுற்றியே வருகின்றன, அதின் மையத்தோடு இணைந்தே இருக்கின்றன. அது மட்டுமல்ல, ஒரு பொருளின் மையம் அந்தப் பொருளுக்கு அதின் வடிவத்தையும் வெளியாக்கத்தையும்கூட அளிக்கிறது. உங்கள் வாழ்வின் மையம் என்னவென்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இந்நாட்களில் அநேக வாலிபர்கள் கணினிகளை, காணொளி ஆட்டங்களை, விளையாட்டுகளை, உடைகளை, நண்பர்களை, அல்லது பள்ளியில் வெற்றியைக்கூட தங்கள் வாழ்வின் மையமாக எடுத்துக்கொள்கிறார்கள். இவை தற்காலிக உற்சாகத்தை அல்லது ஆதரவை அளிக்கக்கூடும் என்றாலும், இவை உங்களுடைய மையமாக இருக்கத் தகுதியானவையல்ல. இவைகள் அளிக்கக்கூடியதைவிட மிகுந்த உயர்வான நோக்கமும், வாழ்க்கையும், வெளியாக்கமும் உங்களுக்கு இருக்கவேண்டியது; இவைகளால் திருப்திப்படுத்தமுடியாத மிகப்பெரிய தேவையும் உங்களிடம் இருக்கிறது. இந்த மிகப்பெரிய தேவை என்ன? எல்லா மனிதர்களும் பாவஞ்செய்திருக்கிறார்கள் என்றும், பாவத்தின் சம்பளம் (அபராதம்) மரணம் என்றும் வேதாகமம் சொல்லுகிறது (ரோ. 3:23; 6:23). மரணம் என்ற பாவத்தின் அபராதம் செலுத்தப்படுவதே உங்களுடைய தேவை. உங்களால் இதைச் செலுத்தமுடியுமா? அல்லது, முன்பு நீங்கள் நம்பியிருந்த எதனாலும் இந்தக் கடனை உங்களுக்காக செலுத்தமுடியுமா? முடியாது, மிகச்சிறந்த கல்வியினால்கூட இந்தக் கோரிக்கையை நிறைவேற்றமுடியாது. எனினும், கர்த்தராகிய இயேசு மரணம் என்னும் விலைக்கிரயத்தை ஏற்கெனவே உங்களுக்காக செலுத்திவிட்டார் (கலா. 2:20). நீங்கள் மற்ற காரியங்களை உங்கள் மையமாகக் கொண்டிருப்பதிலிருந்து மனந்திரும்புகிறீர்கள் என்றும், நீங்கள் கர்த்தரை உங்கள் இரட்சகராகவும், உங்கள் மையமாகவும், உங்கள் ஜீவனாகவும், உங்கள் எல்லாமாகவும் பெற்றுக்கொள்கிறீர்கள் என்றும் கர்த்தரிடம் சொல்லி, நீங்கள் அவரையும், அவர் உங்களுக்காக செய்துமுடித்திருப்பதையும் பெற்றுக்கொள்வதை மட்டுமே நீங்கள் இப்போது செய்யவேண்டும். அவர் உங்கள் பாவங்களை மன்னித்து (1 யோ. 1:9), மரணத்திலிருந்து உங்களை இரட்சித்து (யோவான் 3:16; ரோ. 6:23; 8:2), தம்மைக்கொண்டே உங்களை நிரப்பி (கொலோ. 1:27; ரோ. 8:10), மிக உயர்ந்த அர்த்தமும் மிக உயர்ந்த வெளியாக்கமும் உடைய மிக உயர்ந்த ஜீவனை உங்களுக்குத் தர விரும்புகிறார் (கலா. 2:20; பிலி. 1:21). கிறிஸ்துவை உங்கள் மையமாகப் பெற்றுக்கொள்வதின்மூலம் நீங்கள் என்னே அற்புதமான இரட்சிப்பை அனுபவித்துமகிழமுடியும்!

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்புக்காக: The Conclusion of the New Testament, Message 24, pp. 257-262.

REFERENCES: Life-study of Ephesians, Message 8–10; Life-study of 1 & 2 Chronicles, Message 1, pp 1–2; Salvation, A Lesson Book, Lesson 1; The Centrality and Universality of Christ, Chapter 1; The Conclusion of the New Testament, Message 24, pp 257–262; The Divine Dispensing of the Divine Trinity, Chapter 5, pp 45–46; The Economy of God, Forward; Chapter 1, pp 7–9; The Overcomers, Chapter 2, pp 31–33.

 

Jump to section