கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 10 – 18
தெய்வீக மகிமையில் உயிர்த்தெழுதல்
குறிக்கோள்: கிறிஸ்து தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகும், அதன் மூலமும் நமக்குள் வந்து, நம்முடன் ஒன்றாக இருப்பார் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: யோவான் சுவிசேஷத்தில் உள்ள முக்கியக் குறிப்பு, கிறிஸ்து தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகும், அதன் மூலமும் நமக்குள் வந்து, நம்முடன் ஒன்றாக இருப்பார் என்பதே. தேவன் தம் சிருஷ்டியாகிய மனிதனில் வெளிக்காட்டப்பட அல்லது மகிமைப்படுத்தப்பட விரும்புகிறார். இதனால்தான் தேவன் தாமே ஒரு மனிதன் ஆனார். எனினும், தேவன் இந்த மனிதனுக்குள் அவரது மனுஷீகத்தின் மாம்சத்தால் மறைத்துவைக்கப்பட்டார், இது மக்கள் அவருக்கு உள்ளிருக்கும் தேவனைப் பார்ப்பதைத் தடுக்கும் ஒரு முக்காடாகச் செயல்பட்டது. பாடம் 9 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, இயேசு சிலுவையில் மரித்தபோது, அவரது மனுஷீகத்தின் ஓடு உடைக்கப்பட்டு, அவருக்குள் மறைத்துவைக்கப்பட்டிருந்த தெய்வீக மகிமையின் ஐசுவரியங்களை விடுவித்தது. மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, இயேசுவுக்குள் இருந்த தெய்வீக ஜீவன் மறுஉற்பத்தி செய்யப்பட்டு, பெருக்கப்பட்டது, மேலும் கிறிஸ்துவின் மனுஷீகம் உட்பட, அவரது முழு ஆள்தத்துவமும் மகிமைக்குள் கொண்டுவரப்பட்டது. உயிர்த்தெழுதலில், கிறிஸ்து இந்த மகிமைப்படுத்தப்பட்ட தெய்வீக ஜீவனை விசுவாசிகளுக்குள் உட்பகிர்ந்து, பிதாவின் மகிமைப்படுத்தலுக்காக பல குமாரர்களை உற்பத்திசெய்தார். நாம், ஒரே கோதுமை மணியின் மகிமைப்படுத்துதல் மூலமாக உற்பத்திசெய்யப்பட்ட பல கோதுமை மணிகளாக இருக்கிறோம். கிறிஸ்துவின் சகோதரர்கள் அனைவருமே தேவனுடைய குமாரர்கள், தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் உடையவர்கள். யோவான் சுவிசேஷத்தில் நாம், எவ்வாறு இயேசுவின் உயிர்த்தெழுதல் பிதாவின் மகிமைப்படுத்தலையும் வெளியாக்கத்தையும் விளைவித்து, இவ்வாறு தேவனுடைய நித்திய குறிக்கோளை நிறைவேற்றுகின்றது என்பதைப் பார்க்கிறோம்.
பின்புலம்: கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது பல கிறிஸ்தவர்கள் ஒரு புறம்பான வழியில் அடையாளம் காணும் அதோடு ஈஸ்டர் (இது, நாம் கொண்டாட வேண்டிய ஒரு நாளாக வேதாகமத்தில் குறிப்பிடப்படவில்லை) போன்ற விடுமுறைகள் நாட்கள் மூலமாக அதைக் கொண்டாடும் வெறும் ஒரு புறம்சார்ந்த நிகழ்வு அல்ல. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது அவர் மகிமைக்குள் நுழைதலே ஆகும். இதன் மூலம், அவர் தேவனுடைய முதற்பேறான குமாரனாக ஆனார், ஜீவன்-தரும் ஆவியானாவராக ஆனார், மேலும் நம்மை அவரது பல விசுவாசிகளாக மறுபடிஜெநிப்பித்தார். இளம் வாலிபர்கள் உயிர்த்தெழுதலை ஒரு மேலோட்டமான விதத்தில் பார்க்கக்கூடாது, மாறாக வேதப்பூர்வமான வழியில் பார்க்க வேண்டும்.
அதிகாரங்கள்: யோவான் 12, 17, 20.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
சில சமயங்களில், ஒருவர் மகிமைப்படுத்தப்படுவதைப் பற்றி நாம் பேசும்போது, அவர்கள் போற்றப்படுகிறார்கள், உயர்த்தப்படுகிறார்கள் என்ற அர்த்தத்தில் அதை நாம் கூறுகிறோம். புதிய ஏற்பாட்டில் மகிமைப்படுத்தலின் பொருள் இது அல்ல. இந்தப் பாடத்தில் நாம், கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் அவரது மகிமைப்படுத்தலாக இருந்தது என்பதைக் காண்போம். கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலானது தேவன் அவரது மனுஷீகத்தின் மூலமாக முழுவதும் வெளிக்காட்டப்படுவதற்கும், மகிமைப்படுத்தப்பட்ட இயேசுவின் ஆவியானவராக அவர் வேறு பலருக்குள் பெருக்கமடைய முடிவதற்கும் அவசியமான வழிமுறையைப் பூர்த்தியாக்கியது.
I. மகிமையின் தேவன் இந்த தேவ–மனிதனாகிய இயேசு கிறிஸ்துவில் மறைத்துவைக்கப்பட்டார்
தேவன் இயேசு கிறிஸ்துவில் ஊனுருகொண்டார். மனிதனாகிய இயேசுவில், தெய்வீகம் மனுஷீகத்துடன் முழுவதும் கலந்திணைக்கப்பட்டு, இது (தயவு, பொறுமை ஆகியன போன்ற)கிறிஸ்துவின் மனித நற்பண்புகளில் வெளிக்காட்டப்படும்படி (அன்பு, ஒளி, பரிசுத்தம், நீதி போன்ற) தேவனுடைய தெய்வீக குணாம்சங்கள் அனைத்திற்கும் திறனளித்தது. இந்த அர்த்தத்தில், ஒரு மனிதனாக இயேசு தம் மனித வாழ்க்கை (வாழ்நாள்) முழுவதும், இன்னும் அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலுக்கு முன்பேகூட தேவனை வெளிக்காட்டினார். இது நிச்சயமாக தேவனை மகிழ்வித்தது, ஏனெனில் கிறிஸ்துவில் அவர் இறுதியாக மனிதனில் வெளிக்காட்டப்பட்டுக் கொண்டிருந்தார். இருப்பினும், தேவனுடைய மகிமையின் பிரகாசத்தின் முழு வெளியாக்கமும் கிறிஸ்துவின் மனுஷீகத்தின் “ஓட்டிற்குள்” மறைத்துவைக்கப்பட்டது. இயேசு மலையில் உருமாற்றப்பட்ட போது பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரால் இது சுருக்கமாக சிறிது கணநேரம் தரிசிக்கப்பட்டது, ஆனால் இல்லையெனில் அது அவரது மனுஷீகத்தின் மாம்சத்தின் “போர்வையால் (மேலுடையால்)” இயேசுவிற்குள் மறைத்துவைக்கப்பட்டது.
II. உயிர்த்தெழுதலின் மூலமாக, இயேசு பிதாவின் மகிமைக்காக மகிமைப்படுத்தப்பட்டார்—யோவான் 17:1
யோவான் 17இல், கர்த்தர் ஓர் அற்புதமான ஜெபத்தை ஜெபித்தார். அது, “பிதாவே, வேளை வந்தது,…உம்முடைய குமாரன் உம்மை மகிமைப்படுத்தும்படிக்கு நீர் உம்முடைய குமாரனை மகிமைப்படுத்தும்…..” என்று ஆரம்பித்தது (யோவான் 17:1). மகிமைப்படுத்துதலே, யோவான் 17இல் உள்ள கர்த்தருடைய ஜெபத்தின் கருப்பொருள். அவர் ஜெபித்து முடித்த உடனேயே, தம் ஜெபத்திற்குப் பதில் கிடைக்கும் விதமாக சிலுவையில் அறையப்படும்படி அவர் கைதுசெய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்டார். குமாரன் பிதாவை மகிமைப்படுத்தும்படிக்கு பிதா குமாரனை மகிமைப்படுத்துவது என்றால் இயேசு மரணம் மற்றும் உயிர்த்தெழுதலினூடாய்க் கடந்துசெல்ல வேண்டியிருந்தது என்பது அர்த்தம்.
A. தம் உயிர்த்தெழுதல் மூலமாக, கிறிஸ்துவின் மனுஷீகம் உட்பட அவரது முழு ஆள்தத்துவமும் மகிமைக்குள் கொண்டுவரப்பட்டது
“இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வந்தபோது, அவர் அந்தச் சிறிய கார்னேஷன் விதை போன்று இருந்தார். அவரில், அதாவது அவரது மனித வடிவில், அவரது மனித ஓட்டில் தெய்வீக ஜீவனின் அழகு மற்றும் வடிவம் யாவும் இருந்தன. தெய்வீக ஜீவனின் அனைத்து வண்ணமயமான அம்சங்களும் அந்தச் சிறிய நாசரேத்தானில் மறைத்துவைக்கப்பட்டு அடைத்துவைக்கப்பட்டு இருந்தன. ஒரு நாள், அவர் பூமிக்குள் விதைக்கப்பட்டார். அவர் மரித்த பிறகு, அவர் வளர்ந்து, தம் உயிர்த்தெழுதலில் மலர்ந்தார். அவரது உயிர்த்தெழுதலில், ஜீவனின் அழகு, வடிவம், நடை (பாணி), நிறம் மற்றும் ஐசுவரியங்கள் விடுவிக்கப்பட்டு வெளிக்காட்டப்பட்டன. அதுவே குமாரனின் மகிமைப்படுத்தலாக இருந்தது. பிதாவாகிய தேவன் என்னவாக இருக்கிறாரோ அது யாவும் குமாரனில் ஊனுருவெடுத்திருப்பதால், குமாரன் மகிமைப்படுத்தப்படும்போது, குமாரனின் மகிமைப்படுத்தலில் பிதாவும் மகிமைப்படுத்தப்படுகிறார்” (Life-study of John, Message 38, pp. 458–459). “”அவரது தெய்வீகம், மனுஷீகம் ஆகிய இரண்டுமாகிய அவரது முழு ஆள்தத்துவமும் மகிமைப்படுத்தப்படக்கூடுமாறு, அவர் தம் மனுஷீகத்தை தெய்வீக மூலக்கூறுக்குள் உயர்த்தக்கூடுமாறும், அவரது தெய்வீக மூலக்கூறு வெளிக்காட்டப்படக்கூடுமாறும், அவர் உயிர்த்தெழுப்பப்பட வேண்டியி்ருந்தது. இந்த வழியில், பிதா அவரில் மகிமைப்படுத்தப்படுவார்….அவரது உயிர்த்தெழுதலில், கர்த்தருடைய தெய்வீக ஜீவன் அவரது மனுஷீகத்திற்குள்ளிருந்து விடுவிக்கப்பட்டு, அவரது பல விசுவாசிகளுக்குள் உட்பகிரப்பட்டது….மேலும் அவரது மனுஷீகம் உட்பட அவரது முழு ஆள்தத்துவமும் மகிமைக்குள் கொண்டுவரப்பட்டது (லூக். 24:26), மேலும், அதில் பிதாவின் தெய்வீக மூலக்கூறு வெளிக்காட்டப்பட்டது. கர்த்தரின் உயிர்த்தெழுதலில் தேவன், [யோவான் 17:1 இல் உள்ள கர்த்தரின் ஜெபத்திற்கு] முதலாவதாக பதிலளித்து, அதை நிறைவேற்றினார் (அப். 3:13-15)” (Life- study of John, Message 38, pp. 459–460).
B. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாக, பிதாவின் மகிமைப்படுத்தலுக்காக பல குமாரர்கள் உற்பத்தி செய்யப்பட்டனர்—யோவான் 20:17; ரோ. 8:29.
இயேசு மரித்தோரிலிருந்து உயிரோடு எழுந்ததும், உயிர்த்தெழுதலில் தம்மைச் சந்தித்த முதல் நபராகிய மகதலேனா மரியாளிடம், “நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு” என்று சொன்னார் (யோவான். 20:17). கர்த்தருடைய உயிர்த்தெழுதலின் சமயத்திற்கு முன், அவர் தம் சீஷர்களை தம் சகோதரர்கள் என்று அல்ல, மாறாக தம் நண்பர்கள் என்றுதான் அழைக்க முடிந்தது (யோவான் 15:15). இருப்பினும், அவரது உயிர்த்தெழுதலின் நாளில், கர்த்தருக்கு திடீரென்று பல சகோதரர்கள் இருந்தனர்! “நாம் பார்த்திருக்கிறபடி, முழு யோவான் சுவிசேஷமும் இந்தத் திசையில்—தேவனுடைய ஒரே பேறான குமாரனின் மறுஉற்பத்தி மற்றும் பெருக்கத்தை நோக்கிச் சுட்டிக்காட்டுகிறது. இந்த வழியில், இந்த ஒரே பேறான குமாரன் பல குமாரர்களாக ஆகிவிடுகிறார் (ரோ. 8:29). தேவன் தம் கூட்டு வெளியாக்கத்தைப் பெற, அவருக்குப் பல குமாரர்கள் தேவை. இந்தக் குறிக்கோளுக்காக, தேவனுடைய இந்த ஒரே பேறான குமாரன் மரணத்தின் மூலமாக விடுவிக்கப்பட்டு, உயிர்த்தெழுதல் மூலம் நமக்குள் உட்பகிரப்பட வேண்டியிருந்தது” (Life-study of John, Message 44, p. 532).
- நாம், இந்த ஒரே கோதுமை மணியின் மகிமைப்படுத்துதல் மூலமாக உற்பத்திசெய்யப்பட்ட பல கோதுமை மணிகள்—யோவான் 12:24
“கர்த்தருடைய மரணம் அவருடைய உயிர்த்தெழுதலுக்காக இருந்தது. 12:24 ல் அவர் கோதுமை தானியம் என்று கூறினார், அது தரையில் விழுந்து இறந்துவிடும், அது மற்ற பல தானியங்களுக்குள் தனது உயிரைக் கொடுக்க விடுவிக்கப்படும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அவர் எழுந்து பல தானியங்களாக மாற அவர் இறக்க வேண்டியிருந்தது.மரணம் இல்லாமல், அவருடைய சரீரத்தின் அவயவங்களாக இருக்க அவர் ஒருபோதும் நம்மை மறுபடிஜெநிப்பித்திருக்க முடியாது….கர்த்தருடைய உயிர்த்தெழுதல் தொடர்பாக யோவான் சுவிசேஷத்தில் உள்ள பதிவு, மற்ற மூன்று சுவிசேஷங்களிலும் உள்ள பதிவிலிருந்து வேறுபட்டது….யோவான் சுவிசேஷத்திற்கு எப்போதும் ஜீவனின் கண்ணோட்டம் உள்ளது. யோவானின் சுவிசேஷத்தின்படி, கர்த்தர் நம்மால் ஜீவனாகப் பெறப்பட தேவனுடைய வெளியாக்கமாக வந்திருக்கிறார், மேலும் அவர் தம்மையே நமக்குள் ஜீவனாக உட்பகிர்வதற்கு மரித்து உயிர்த்தெழுந்தார்….தேவனுடைய ஒரே பேறான குமாரன் மறுஉற்பத்திசெய்யப்பட்டு பெருக்கப்பட முடிவதற்கான ஒரே வழி மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம்தான். எடுத்துக்காட்டாக, ஒரு கோதுமை மணியானது பல மணிகளுக்குள் மறுஉற்பத்திசெய்யப்பட்டு பெருக்கப்பட முடிவதற்கான ஒரே வழி மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம்தான் பெருக்குவதற்கான ஒரே சாத்தியமான வழி மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் வழியே ஆகும் (Life-study of John, Message 44, pp. 531–532).
- நாம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் மூலமாக மறுபடிஜெநிப்பிக்கப்பட்டோம்—1 பேது. 1:3-4
1 பேதுரு 1:3-4 வேதாகமத்தில் ஒரு மிக முக்கியமான வசனம், ஏனென்றால் நாம் அனைவரும் கர்த்தருடைய உயிர்த்தெழுதல் மூலமாக மறுபடிஜெநிப்பிக்கப்பட்டோம் என்று அது நமக்குச் சொல்கிறது. நாம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மீண்டும் பிறந்தோம்! ரோமர் 8:29, இயேசு பல சகோதரர்களுக்குள் முதற்பேறானவராக ஆகியிருக்கிறார் என்று அறிவிக்கிறது. அவரது உயிர்த்தெழுதலின் போதுதான், அவர் தேவனுடைய முதற்பேறான குமாரனாக இருக்கப் பிறந்தார் (அப். 13:33; யோவான் 16:21 மற்றும் அடிக்குறிப்புகள்), அந்த நேரத்தில் நாம் அவருடன் “உடன் பிறந்தோம்.”
- கிறிஸ்துவின் சகோதரர்கள் அனைவரும் தேவனுடைய குமாரர்கள், தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் உடையவர்களாய், பூமியில் பிதாவின் அதிகரிக்கப்பட்ட வெளியாக்கமாக ஆகுகின்றார்கள்—கலா. 3:26
கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் பிதாவின் மகிமைப்படுத்தலை விளைவித்தது, ஏனெனில் பிதாவின் ஜீவனும் சுபாவமும் அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாகப் பெருக்கப்பட்டன. இன்று, கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலின் ஒரு விளைவாக, தேவன் தம் உண்மையான குமாரர்களாகிய இத்தனை பல விசுவாசிகள் மூலமாக வெளிக்காட்டப்படுகின்றார். வெளிப்படுத்தலில் பிரகாசிக்கும் விளக்குத்தண்டுகளாக தேவனுடைய மகிமையை வெளிக்காட்டும் சபைகள் இந்தக் குமாரர்களால் ஆனதாகும். இறுதியில் தலைமுறைகள் முழுவதிலும் உள்ள தேவனுடைய குமாரர்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து நித்தியத்திற்கும் புதிய எருசலேமாக தேவனை இந்தப் பிரபஞ்சத்திற்கு வெளிக்காட்டுவார்கள். தேவனுடைய இந்த வெளியாக்கம் கிறிஸ்துவின் உயிர்த்தெழுதலில் இருந்து உற்பத்திசெய்யப்பட்டது.
III. அவரது மகிமைப்படுத்தலுக்குப் பிறகு, கிறிஸ்து நம்மை தம்முடன் ஒன்றாக்குவதற்கு ஆவியானவராக விசுவாசிகளுக்குள் வருகிறார்—யோவான் 20:22; 1 கொரி. 6:17
யோவான் 7:39 இல், இயேசு மகிமைப்படுத்தப்பட்ட (அதாவது உயிர்த்தெழுந்த) பிறகு, ஆவியானவர் விசுவாசிகளில் வாழ இயல்வார் என்று நமக்குச் சொல்லப்படுகிறது. அவரது உயிர்த்தெழுதலுக்குப் பிறகு, கிறிஸ்து விசுவாசிகளிடம் வந்து, அவர்களுக்குள் சுவாசித்து ஊதி, “பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ளுங்கள்” என்று கூறினார் (யோவான் 20:22). யோவான் சுவிசேஷத்தில் உள்ள முக்கியக் குறிப்பு, என்னவெனில், கிறிஸ்து தம் உயிர்த்தெழுதலுக்குப் பிறகும், அதன் மூலமும் நமக்குள் வந்து, நம்முடன் ஒன்றாக இருப்பார் என்பதே. கிறிஸ்துவின் உயிர்த்தெழுதல் என்பது அவர் தேவனை நமக்குள் ஜீவனாக உட்பகிர்வதற்காகவும், அவரது குடியிருப்புக்காகவும் இருக்கிறது. இன்று, இந்த உயிர்த்தெழுந்த கர்த்தர் ஆவியானவராக இருக்கிறார் (1 கொரி. 15:45; 2 கொரி. 3:17), இவர் நமக்குள் வந்திருக்கிறவர், நம்மை தேவனுக்குள் கொண்டு வந்திருக்கிறவர் (யோவான் 14:17; 16:13).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: உயிர்த்தெழுதல் பற்றிய இந்தப் பாடம் ஓர் எளிமையான, புறம்சார்ந்த வழியில் முன்வைக்கப்பட வேண்டும். இந்தக் கட்டத்தில், குறிப்பு II.A இல் ஒரு கார்னேஷன் விதையின் உதாரணத்தால் பார்க்கப்படும் கர்த்தரின் உயிர்த்தெழுதல் பற்றிய உண்மைதான், அதை முன்வைப்பதற்கான அதி எளிதான வழியாக இருக்கக்கூடும். இந்தக் கார்னேஷன் விதைக்குள், கார்னேஷன் விதையின் சாராம்சம் உள்ளது. அதன் அழகு, வடிவம், அளவு, நிறம், நறுமணம் ஆகியவை அனைத்தும் இந்த விதையின் ஓட்டிற்குள் மறைந்திருக்கின்றன. இந்த விதை மண்ணுக்குள் விழும் போது, அது மரித்து, இந்த விதையின் ஓடு உடைந்து திறந்திருக்கும். பின்னர், உயிர்த்தெழுதலில், இந்தக் கார்னேஷன் செடி முளைக்கத் தொடங்குகிறது. இயல்பான வளர்ச்சியின் மூலமாக, அது மொட்டு இட்டு, இறுதியில் ஓர் அழகான கார்னேஷன் பூவாக மலர்கிறது. அந்தக் கார்னேஷன் மலர்தான் இந்த விதையின் மகிமைப்படுத்தல். இதே விதமாக, கர்த்தர் தம்மை ஒரு கோதுமை மணியோடு ஒப்பிட்டார் (யோவான் 12:24). கர்த்தர் சிலுவைக்குச் சென்றபோது, அவர் ஒரு சிறிய கோதுமை மணியாக இருந்தார், ஆனால் அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, அவர் இந்தப் பல மணிகளாக ஆனார். நாம் கர்த்தருடைய உயிர்த்தெழுதலில் உற்பத்திசெய்யப்பட்ட (விளைந்த) பல மணிகள். இறுதியில், கர்த்தருடனான தினசரி தொடர்புகொள்ளுதல் மூலம், கர்த்தர் தாம் இருக்கும் வண்ணமான அதே சாயலுக்குள் நாம் வளர்வோம். உயர்நிலைப்பள்ளி மாணவர்களிடம் வலியுறுத்த வேண்டிய முக்கியக் குறிப்பு என்னவெனில், அவர்களது மறுபடிஜெநிப்பித்தலின் மூலமாக, கிறிஸ்து அவர்களுக்குள் ஜீவ விதையாக வந்தார் என்பதும், அவர் முழு முதிர்ச்சிக்கென்று அவர்களில் ஓர் இயல்பான, தினசரி வழியில் வளர விரும்புகிறார் என்பதுமே. இதற்கு, நம் ஆவியில் கர்த்தருடனான இயல்பான தொடர்புகொள்ளுதலுக்கான தேவை உள்ளது. வார்த்தையை வாசிப்பதன் மூலமும், கர்த்தரைக் கூப்பிடுவதன் மூலமும், நமக்குள் இருக்கும் விதை போஷிக்கப்பட்டு, பலப்படுத்தப்படுகிறது. இது நமக்குள் இந்த விதையின் இயல்பான வளர்ச்சியையும், இறுதியில் மலர்தலையும் விளைவிக்கும்.
சுவிசேஷ செயலாக்கம்: பலர் வைத்திருக்கும் மதக் கருத்துக்கு முரணாக, தேவன் வெகு தொலைவில் பரலோகங்களில் தொடர்ந்து தங்கியிருப்பதில் திருப்தியடையவில்லை, அல்லது மனிதனின் குளிர்ந்துபோன, தனிப்பட்டதல்லாத, புறம்பான, மத வழிபாட்டை அவர் நாடுவதும் இல்லை. மனிதனுடனான உறவில் தேவனுடைய இருதயத்தில் இருப்பதை நாம் பார்க்கும்போது, தேவனுக்கு மனிதனை நோக்கி இருக்கும் அறிந்துணரமுடியாத ஆழமான அன்பின் இருதயத்தை நாம் பாராட்டத் தொடங்குகிறோம். தேவன் மனிதனுடன் நெருக்கமாக இருக்க விரும்புவது மட்டுமல்லாமல், அவனுடன் ஒன்றாகவும்கூட இருக்க விரும்புகிறார் (1 கொரி. 6:17). சிருஷ்டிப்பின் தொடக்கத்திலிருந்தே நாம், தேவன் மனிதனுடனான ஓர் அற்புதமான, அந்நியோனியமான சேர்க்கையை நோக்கி விடாப்பிடியாக முன்னோக்கிச் செல்வதைக் காணலாம். சகரியா 12:1, தேவன் “பரலோகங்களை விரித்து, பூமியின் அஸ்திபாரம் போட்டு, மனிதனுடைய ஆவியை அவனுக்குள் உருவாக்கினார்” என்று கூறுகிறது. முக்கியத்துவத்தில் வானங்கள் மற்றும் பூமியுடன் சமமாக தரவரிசையில் பட்டியலிடப்படும் அளவிற்கு, தேவன் ஏன் மனிதனுக்குள் இத்தகைய ஓர் ஆவியை உருவாக்கினார்? தேவன் ஆவியாயிருக்கிறார். தேவன் மனிதனுடன் ஒன்றாயிருக்க முடியுமாறு, தேவனைப் பெறவும் உள்ளடக்கவும் மனிதனிடம் ஒரு ஆவி இருந்தாக வேண்டும் (யோவான் 4:24). இருப்பினும், மனிதன் ஏதேன் தோட்டத்தில் நன்மை தீமை அறியத்தக்க அறிவு விருட்சத்தின் கனியைப் புசித்தபோது, அவனது முழு ஆள்தத்துவமும் விழுந்துபோனது, மேலும் அவனுக்குள் இருக்கும் அவனது ஆவி மரித்துப்போனது. பாவத்தின் தடையானது, விழுந்துபோன மனிதனை அவனது பரிசுத்தமான, தூய, நீதியுள்ள தேவனிடமிருந்து பிரித்தெட்டுத்தது. அந்த இடைவெளியைக் குறைக்க மனிதனால் எதுவும் செய்யும் முடியவில்லை. இன்று நாம் முன்வைக்க வேண்டிய நற்செய்தி என்னவெனில், மனிதனுடன் ஒன்றாயிருப்பதற்கான தேவனின் இருதயம் இன்னும் இருக்கிறது! என்பதே. மேலும் மனிதனுக்கு தேவனை வந்தடைய எந்த வழியும் இருக்கவில்லை என்றாலும், தேவன் தம் ஐசுவரியமான இரக்கத்தில், நீதியாய் மனிதனை வந்தடைந்தார். அவர் ஒரு மனிதனாக ஆகுவதன் மூலம் இதைச் செய்தார். அவர் தேவ-மனிதனாகிய இயேசு (“யெகோவாவின் இரட்சிப்பு”) ஆனார், இவர் இம்மானுவேல் (“தேவன் நம்மோடு”) என்று மனிதர்களால் அழைக்கப்பட்டார் (மத். 1:20, 21–23). மாம்சமாகுதல் மூலமாக, இந்த வரம்பற்ற தேவன் ஒரு வரம்புள்ள மனிதராக ஆனார், ஒரு சகலத்தையும்-உள்ளடக்கிய சட்டரீதியான மீட்பை நிறைவேற்றினார், தமக்குள் விசுவாசித்த அனைவரையும் மறுபடிஜெநிப்பித்தார் (எபி. 2:9; 1 பேது. 1:3-4). தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள ஒவ்வொரு தடையும் அகற்றப்பட்டுள்ளன. நீங்கள் உங்கள் இருதயத்துடன் இயேசுவுக்குள் விசுவாசித்து; அவரது நாமத்தைக் கூப்பிட மட்டுமே செய்ய வேண்டும், அப்போது நீங்கள் அவருடனான ஒருமைக்குள் இரட்சிக்கப்படுவீர்கள் (ரோ. 10:9–13; 1 கொரி. 6:17).
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.); தேவனுடைய பொருளாட்சியின் இலக்கு, தேவனை மனிதனோடும், மனிதனை தேவனோடும் கலந்திணைப்பதே என்பதை அறிந்துகொள்ளுதல் (II.A.4.).
பின்புல வாசிப்பு: Life-study of John, Messages 38, 44.
REFERENCES: Life-study of John, Messages 37–38; Message 40, pp. 485–487; Message 41, pp. 493–497; Message 44; The Issue of Christ Being Glorified by the Father with the Divine Glory, Chapters 2–3.