கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 01 – 09
கர்த்தரின் சிலுவைமரணம் (8)
குறிக்கோள்: சிலுவையில் கிறிஸ்து எவ்வாறு மனிதர்களின் துன்புறுத்தலையும், பாவத்திற்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பையும் அநுபவித்தார் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: கர்த்தரின் சிலுவைமரணம், காலை ஒன்பது மணி முதல் பிற்பகல் மூன்று மணி வரை நீடித்தது. அவர் முதல் மூன்று மணிநேரம் சிலுவையில் இருந்தபோது, கர்த்தர் தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்கான ஓர் உண்மையான இரத்தசாட்சியாக மனிதர்களின் துன்புறுத்தலை அநுபவித்தார். இரண்டாவது மற்றும் கடைசி மூன்று மணிநேரங்களில், கர்த்தர் தேவனுடைய பார்வையில் பாவமாக்கப்பட்டார், மேலும் நம் பதிலீடாக நம் நியாயத்தீர்ப்பைச் சுமப்பதன் மூலம் நம் மீட்பராக மரித்தார்.
பின்புலம்: இளம்வாலிபர்கள் தாங்கள் கர்த்தருடைய மரணத்தைப் பற்றி கேள்விப்படும் போது, அவர்கள் கேட்கக்கூடிய சில கடினமான கேள்விகளுக்குப் பதிலளிக்க இந்தப் பாடம் உதவுகிறது. ஒரு கேள்வி, “இரட்சகரைக் கொன்றது யார்?” என்பதே. மற்றொரு கேள்வி, “ஏன் கர்த்தர் கூக்குரலிட்டு, “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்” என்று கேட்டார். தேவன் கர்த்தரைக் கைவிட்டாரா? மேலும் கிறிஸ்து தேவன் தாமே என்று நாம் அறிந்திருக்கும்போது, தேவன் அவரை எப்படி கைவிட்டார்?” என்பதே. இந்தப் பாடத்தில் உள்ள சத்தியம் இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது மட்டுமல்லாமல், கிறிஸ்து தேவன், மனிதன் ஆகிய இருவரின் கைகளாலும் மரித்தார் என்பதையும், கிறிஸ்து சாராம்சரீதியாக சாட்சாத்து தேவனாக இருந்தபோதிலும், தேவன் பொருளாட்சிரீதியாக அவரைக் கைவிட்டு, பிரபஞ்சத்தில் உள்ள ஒப்பற்ற பாவியாக அவரை நம் இடத்தில் (நமக்குப் பதிலாக) நியாயந்தீர்த்தார் என்பதையும் பார்க்க நமக்கு உதவுகிறது..
அதிகாரம்: லூக்கா 23.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இந்தப் பாடம் சிலுவையில் கர்த்தருடைய அனுபவத்தின் இரண்டு பகுதிகளைக் குவிமையமாகக் கொண்டுள்ளது. இந்தப் பாடத்தை வழங்குவதற்கு முன், சேவிப்பவர்கள் லூக்காவின் ஜீவ-ஆய்வின் செய்தி 52 ஐ கவனமாக வாசிக்க வேண்டும்.
I. சிலுவையில் முதல் மூன்று மணி நேரம், கர்த்தராகிய இயேசு மனிதர்களின் துன்புறுத்தலை அநுபவித்தார்—லூக்கா 23:26-43
அவர் சிலுவையில் தொங்கிய முதல் மூன்று மணி நேரத்தில், அதாவது காலை ஒன்பது மணி முதல் நண்பகல் வரை, கர்த்தர் தேவனுடைய சித்தத்தைச் செய்வதற்காக மனிதர்களால் துன்புறுத்தப்பட்ட ஓர் இரத்தசாட்சியாகப் (தியாகியாகப்) பாடநுபவித்தார்.
A. கர்த்தராகிய இயேசு மனிதர்களால் சிலுவையில் அறையப்பட்டார்—லூக்கா 23:25, 33
“[இரட்சகரைக்] கொன்றது யார் என்ற கேள்விக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்? சிலர், நாம் அவரைக் கொன்றோம் என்றும், மற்றவர்கள் தேவன் அவரைக் கொன்றார் என்றும் கூறக்கூடும். வேறு சிலர், கர்த்தர் மதத்தாலும் அரசியலாலும் மரணத்திற்குள்ளாக்கப்பட்டார் அல்லது அவர் நம் பாவத்தால் கொல்லப்பட்டார் என்று கூறக்கூடும். நாம் இந்தக் கேள்விக்கு நம் கற்பனையால் பதில் சொல்ல முயற்சிக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நாம் வேதவாக்கியங்களின் நேர்மையான மற்றும் துல்லியமான பதிவுக்கு, குறிப்பாக லூக்கா சுவிசேஷத்தில் உள்ள பதிவுக்க வர வேண்டும்….நாம் இந்த சுவிசேஷத்தில் உள்ள பதிவை வாசிக்கும்போது, கர்த்தராகிய இயேசு மனிதனால் சிலுவையில் அறையப்பட்டார் என்பதை நாம் காண்கிறோம். அவர் மதத் தலைவர்களால் குற்றம் சாட்டப்பட்டார், ரோம ஆட்சியாளர்களால், குறிப்பாக பிலாத்துவால் மரண தண்டனை விதிக்கப்பட்டார்,, அதன்பின் ரோம படைவீரர்களால் சிலுவையில் அறையப்பட்டார்” (Life-study of Luke, Message 52, p. 451).
B. கர்த்தர் யூதத் தலைவர்களாலும், ரோமப் படைவீரர்களாலும் பரியாசத்திற்கும், கேலிக்கும், ஏளனத்திற்கும் ஆளானார்—லூக்கா 23:35-39
அவர் சிலுவையில் தொங்கியபோது, பிரதான ஆசாரியர்களும், வேதபாரகர்களும், மூப்பர்களும், “மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம். தன்னைத் தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும்” என்று கூறுவதன் மூலம் அவரை ஏளனம்செய்தனர் (மத். 27:42–43). எனினும், கர்த்தர் தம்மையே இரட்சித்திருந்தால், அவர் நம்மை இரட்சித்திருக்க முடியாது! அவருக்கு எதிரான தங்கள் சொந்தப் பாவங்கள் தங்களுக்கு மன்னிக்கப்படக்கூடுமாறு, அவர் மரித்துக்கொண்டிருந்தார் என்பதை அவர்கள் உணர்ந்தறியவில்லை. அவருடைய இருபுறமும் சிலுவையில் அறையப்பட்டுக்கொண்டிருந்த திருடர்கள் கூட அவரை நிந்தித்தனர் (மத். 27:44). படைவீரர்கள் ஏளனமாக அவருக்குக் குடிக்கக் காடியைக் கொடுத்து, “நீ யூதரின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள்” என்று கூறினார்கள் (லூக்கா 23:36-37). சாலையில் கர்த்தரைக் கடந்து சென்ற அனைவரும்கூட அவரை தூஷித்து, அவரை நோக்கி தங்கள் தலையை ஆட்டினர். சங்கீதம் 22இன் படி, கர்த்தர் தாம் சீறிப்பாயும் காளைகளால் சூழப்பட்டிருப்பது போல் உணர்ந்தார் (சங். 22:12). இங்கு சேவிப்பவர் சங்கீதம் 22:1, 7-8, மற்றும் 12-18ஐ இளம்வாலிபர்களுக்கு வாசித்துக்காட்ட வேண்டும். (இன்றைய அவிசுவாசிகளின் பார்வையில், கர்த்தருடைய சிலுவை இன்னும் ஏளனத்திற்குரிய ஒரு பொருளாகவே இருக்கிறது—1 கொரி. 1:18, 23.)
II. சிலுவையில் இரண்டாவது மூன்று மணி நேரம், கர்த்தராகிய இயேசு பாவிகளுக்காக ஒரு பதிலீடான மரணத்தை நிறைவேற்றுவதற்காகப் பாவிகளுக்கான தேவனுடைய நியாயத்தீர்ப்பை அநுபவித்தார்—லூக்கா 23:44-49
“முதல் மூன்று மணிநேரம் மனிதனின் துன்புறுத்தலின் நேரமாக இருந்தது. அந்த மூன்று மணிநேரத்தில் கர்த்தராகிய இயேசு ஓர் இரத்தசாட்சியாக இருந்தார் என்று நாம் கூறக்கூடும். பின்னர் நண்பகலில், தேசம் முழுவதும் இருள் சூழ்ந்தபோது, தேவன் உள்ளே வந்தார். இந்த இருள், தேவன் பாவத்தை நியாயந்தீர்ப்பதன் ஓர் அடையாளமாக இருந்தது. மனிதன் [இரட்சகரை] அவரது சிலுவைமரணத்தின் முதல் மூன்று மணிநேரங்களில் துன்புறுத்தினர், அப்படியிருக்க தேவன் இரண்டாவது மூன்று மணிநேரத்தில் கிறிஸ்துவை நம் பதிலீடாக நியாயந்தீர்க்க உள்ளே வந்தார். இந்த மணிநேரங்களில்தான் தேவன் நம் பாவங்கள் அனைத்தையும் அவர் மீது வைத்து (சுமத்தி), அவரை நமக்கு பதிலீடான ஒரு பாவியாகக் கருதினார்…. இரண்டாவது மூன்று மணி நேரத்தில், அவர் மீட்பராக இருந்தார் (Life-study of Mark, Message 47, p. 407). “நண்பகல் முதல், மூன்று மணி வரையிலான மணிநேரங்களில், தேவன் நம் பாவங்கள் அனைத்தையும் கர்த்தராகிய இயேசுவின் மேல் வைத்தார். ஏசாயா 53:6 இன் வார்த்தைகளில், ‘கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார்.’ இந்த இருள், தேவன் நம் பாவங்களை அவர் மீது வைத்திருந்தார் என்பதை அடையாளப்படுத்துகிறது. மேலும், 2 கொரிந்தியர் 5:21 தேவன் அவரை நமக்காகப் பாவமாக்கினார் என்று கூறுகிறது. எனவே, தேவன் நம் பாவங்களை அவர் மீது வைத்தது மட்டுமல்லாமல்; இவர் நம் சார்பில் அவரைப் பாவமாக்கவும்கூட செய்தார். இது மூன்று மணி நேரத்தின் இரண்டாவது காலகட்டத்தில் நடந்தது” (Life-study of Luke, Message 52, p. 454). “[முதல் மூன்று மணிநேரத்தின் முடிவின்]…போது, மனிதர்கள் தங்கள் செயல்களை செய்துமுடித்துத் தீர்த்துவிட்டனர். மனிதர்கள் தங்கள் செயல்களை செய்துமுடித்துவிட்டனர். அவர்கள் தங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்திருந்தனர். அந்த நேரத்தில், இந்தச் சிலுவையிலறையப்பட்ட இரட்சகரை நியாயந்தீர்க்கவும் அவரைக் கைவிடவும் தேவன் உள்ளே வந்தார்” (Life-study of Matthew, Message 70, p. 811).
A. தேவன் முழு உலகத்தின் பாவங்களையும் அவர் மீது விழப்பண்ணியிருந்தார் என்பதால், முழு தேசமெங்கும் இருள் வந்தது—லூக்கா 23:44-45; மத். 27:45; ஏசா. 53:6
“சரியாக நண்பகல் வேளையில், முழு தேசமெங்கும் இருள் வந்தது, ஒன்பதாம் மணிநேரம் வரைக்கும், அதாவது பிற்பகல் மூன்று மணி வரைக்கும் தொடர்ந்து இருந்த. இந்த இருள் தேவனால் உண்டாக்கப்பட்டது, மேலும் அது சிலுவையில் தொங்கிக் கொண்டிருந்தவரை நியாயந்தீர்க்கும்படி தேவன் உள்ளே வந்திருந்தார் என்பதற்கு இது ஓர் அறிகுறியாக இருந்தது” (Life-study of Mark, Message 47, p. 407). “தேசமெங்கும் இருள் வந்தது, ஏனென்றால் நம் பாவமும், பாவங்களும், எல்லா எதிர்மறையான காரியங்களும் அங்கு கையாளப்பட்டனன… .”(Life-study of Matthew, Message 70, p. 811). இருள் வெறுமனே ஒரு பெரிய மேகம் போன்று கொல்கொதாவை அல்லது எருசலேம் நகரத்தை மூடியது என்று வார்த்தை கூறுவதில்லை, மாறாக அது, பகலின் பிரகாசமான வெளிச்சமுள்ள நேரமாக இருந்த போதிலும்கூட, முழு நல்ல தேசமும் இருளால் மூடப்பட்டிருந்தது என்றுதான் கூறுகிறது.
B. கர்த்தர் தேவனால் கைவிடப்பட்டு, ஒப்பற்ற பாவியாக நியாயந்தீர்க்கப்பட்டார்—மத். 27:46
“கர்த்தர் மனிதனின் துன்புறுத்துதலை அநுபவித்துக்கொண்டிருந்தபோது, தேவன் அவருடன் இருந்தார், அவரும் தேவனின் பிரசன்னத்தை அனுபவித்துமகிழ்ந்தார். ஆனால் முதல் மூன்று மணி நேரத்தின் முடிவில், தேவன் அவரைக் கைவிட்டார், அப்போது இருள் உண்டானது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், கர்த்தர், ‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்’ என்று உரத்த சத்தமாகக் கதறினார் (Life-study of Matthew, Message 70, pp. 811–812). “கர்த்தர் தேவனுடைய அன்பான குமாரனாக இருப்பதால், தேவன் எப்போதும் அவரில் பூரிப்படைந்தார். ஆனால், தேவன் அவரை நம் பதிலீடாக, அதாவது நம் பாவங்களைச் சுமந்தவராகவும், தேவனுடைய பார்வையில் நமக்காகப் பாவமாக்கப்பட்டவராகவும் கருதியதால், தேவன் அவரைக் கைவிட்டார். தேவனுடைய பார்வையில் அந்த மணிநேரங்களின் போது, கர்த்தர் பாவத்தின் ஒரு முழுமொத்தமாக இருந்தார்….நம் பாவங்கள் அனைத்தும் [இரட்சகர்] மீது வைக்கப்பட்டன. சாத்தானிடமிருந்து மனுக்குலத்திற்குள் வந்த பாவமே நம் பாவங்களின் வேர். இந்தப் பாவம் நம்மில் உள்வாழ்கிறது. நம் பாவங்கள் கர்த்தராகிய இயேசுவின் மீது வைக்கப்பட்டபோது, நம்மில் உள்வாழும் சாட்சாத்து பாவமாகவே அவர் ஆக்கப்பட்டார். ஆகவே, வேராகிய—உள்வாழ்கிற பாவமும்—கனியாகிய—நம் பாவங்களும்—அவர் மீது வைக்கப்பட்டன. இத்தகைய ஒருவராக, அவர் தேவனால் அவருடைய நீதியின்படி நியாயந்தீர்க்கப்பட்டார். 1 கொரிந்தியர் 15:3, “கிறிஸ்துவானவர்….நமது பாவங்களுக்காக மரித்தார்” என்று கூறுகிறது. 1 பேதுரு 2:24, ‘அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்’என்று நமக்குச் சொல்கிறது. இந்த வசனங்கள், கிறிஸ்து நம் பாவங்களைச் சுமந்து அவர்களுக்காக மரித்தார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன. எபிரெயர் 9:28, கிறிஸ்து ‘அநேகருடைய பாவங்களைச் சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரேதரம் பலியிடப்பட்டார்.’ என்று கூறுகிறது, மேலும் அதே அதிகாரத்தில் 26ஆம் வசனம், ‘அவர் தம்மைத்தாமே பலியிடுகிறதினாலே பாவங்களை நீக்கும்பொருட்டாக இந்தக் கடைசிக்காலத்தில் ஒரேதரம் வெளிப்பட்டார்.’ என்று கூறுகிறது. பாவம், பாவங்கள் ஆகிய இரண்டுமே அவருடைய மரணத்தால் ஒரேதரம் இடைபடுத்தப்பட்டன” (Life-study of Luke, Message 52, pp. 454–455). “தேவனுடைய பார்வையில், கிறிஸ்து ஒரு மாபெரும் பாவியானார். கிறிஸ்து நம் பதிலீடாக இருந்ததால் அதோடு நமக்காகப் பாவமாக்கப்படவும்கூட செய்யப்பட்டதால், தேவன் அவரை நியாயந்தீர்த்து, அவரைக் கைவிட்டார்” (The Conclusion of the New Testament, Message 37, p. 390).
C. தேவாலயத்தின் திரைச்சீலை மேல்தொடங்கிக் கீழ்வரைக்கும் நடுவில் இரண்டாகக் கிழிக்கப்பட்டது—மத். 27:51
“மத்தேயு 27:51, தேவாலயத்தின் திரைச்சீலை ‘மேல்தொடங்கிக் கீழ்வரை’ இரண்டாகக் கிழிக்கப்பட்டது என்று நமக்குச் சொல்கிறது. இந்தத் திரைச்சீலை கிழிக்கப்படுதல் என்பது கிறிஸ்து எடுத்திருந்த சாயலாகிய (திரைச்சீலையால் அடையாளப்படுத்தப்படும் மாம்சமாகிய) பாவ மாம்சம் (ரோ. 8:3) சிலுவையில் அறையப்பட்டிருந்ததால் (எபி. 10:20), தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள பிரிவு ஒழிக்கப்பட்டது என்பதை அடையாளப்படுத்துகிறது. ‘மேல்தொடங்கிக் கீழ்வரை’ என்பது திரைச்சீலைக் கிழிக்கப்படுதல் மேலிருந்து தேவன் செய்த செயலாக இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது (Life-study of Luke, Message 52, p. 454). இந்தத் திரைச்சீலை, தேவாலயத்தில் உள்ள மகா பரிசுத்த ஸ்தலத்திலிருந்து பரிசுத்த ஸ்தலத்தைப் பிரித்தெடுத்த உட்திரையாக இருந்தது. தேவன் தாம் இயேசுவின் காணிக்கையை நம் பதிலீடாக ஏற்றிருந்தார் என்பதையும், “நாம் மகா பரிசுத்த ஸ்தலத்தில் பிரவேசிப்பதற்கு இயேசுவானவர்….அவருடைய இரத்தத்திலே நமக்குத் தைரியம் உண்டாயிருக்கிறபடியினால்” நாம் அவரிடம் மீண்டும் விடுதலையுடன் வரக்கூடும் என்பதையும் சுட்டிக்காட்டுவதற்காக தேவன் இந்தத் திரைச்சீலையைக் கிழித்துத் திறந்தார் (எபி. 10:19-20, கிரே.).
III. அவர் நம் மீட்பிற்காக மரித்தபோது, கர்த்தர் சாராம்சரீதியில் தேவனாக மரித்தார், ஆனால் பொருளாட்சிரீதியில் தேவனால் கைவிடப்பட்டார்—அப். 20:28; மத். 27:46).
“[‘என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டுவிட்டீர்?’], என்ற கர்த்தரரின் கூக்குரலை நாம் பரிசீலிக்கையில், நாம் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்க வேண்டும்: தேவன் கிறிஸ்துவை விட்டுவிட்டாரா? கர்த்தர் தம்மை தேவன் கைவிட்டார் என்று கூறினார், மேலும் கைவிடுவது என்றால் விட்டுவிடுவது என்று பொருள். ஆகவே, ஏதோ ஒரு வகையில் தேவன் அவரை விட்டுப் போய்விட்டார்….ஆனால் எந்த அர்த்தத்தில் தேவன் கர்த்தராகிய இயேசுவை விட்டுவிட்டார்? திரியேகத்துவத்துடன் தொடர்புடைய ஒரு பெரிய பிரச்சினையை இது உள்ளடக்கியிருப்பதால், இந்தக் காரியத்தை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது? தேவன் கிறிஸ்துவைக் கைவிடுதல் என்றால் சிலுவையில் தொடர்ந்து இருந்தவர் வெறுமனே ஒரு மனிதனாக மட்டுமே இருந்தார், அவரிடம் இனியும் தெய்வீக சுபாவம் இருக்கவில்லை என்று அர்த்தமா? இதுவே சூழ்நிலையாக இருந்தது எனில், கர்த்தரின் மீட்கும் வல்லமை நித்தியமானதாக இருக்காது, ஏனெனில் அதில் இந்த தெய்வீக, நித்திய மூலக்கூறு இருக்காது. ஆகவே, இந்தச் சிலுவையில் அறையப்பட்ட கிறிஸ்துவை தேவன் கைவிட்டதன் அர்த்தம் என்ன என்ற கேள்விக்குப் பதிலளிப்பதில் நாம் மிகவும் கவனமாக இருந்தாக வேண்டும்” (Life-study of Mark, Message 48, pp. 413–414).
A. சாராம்சரீதியில், கிறிஸ்து தாம் சிலுவையில் மரித்த போது தேவனாக இருந்தார்—அப். 20:28
“சாராம்சரீதியில், சிலுவையில் கிறிஸ்து தேவனாக இருந்தார்….இயேசு சிலுவையில் மரித்துக்கொண்டிருந்த போது, தேவன் அங்கே மரித்துக்கொண்டிருந்தார். சார்லஸ் வெஸ்லியால் இயற்றப்பட்ட ஒரு புகழ்பெற்ற பாடலின் ஒரு வரி இவ்வாறு கூறுகிறது, “அற்புதமான aifjd! என் தேவன் நீர் எனக்காக மரிக்க வேண்டியது எப்படி?” (See Hymns 296). இயேசு தேவனாக இருந்தார், மேலும் அவர் சிலுவையில் ஒரு மனிதனாக மட்டுமல்லாமல், தேவனாகவும் மரித்தார். ஆகவே, அவர் சிலுவையில் இருந்தபோதும்கூட அவர் இன்னும் குமாரனாகவும், பிதாவோடும், ஆவியானவராலும் இருந்தார்” (God’s New Testament Economy, Chapter 3, pp. 48–49). “கிறிஸ்து சாராம்சரீதியில் பரிசுத்த ஆவியானவரால் கருத்தரிக்கப்பட்டு, பிறந்தார் என்பதை நாம் பார்த்திருக்கிறோம். பரிசுத்த ஆவியானவர், அவருடைய ஆள்தத்துவத்தின் சாராம்சங்களில் ஒன்றாக இருந்தார். கர்த்தராகிய இயேசு பூமியில் வளர்ந்து, வாழ்ந்தபோது, அவரிடம் தமக்குள் சாராம்சரீதியில் பரிசுத்த ஆவியானவர் இருந்தார்” (Life- study of Luke, Message 52, p. 455).
B. பொருளாட்சிரீதியில், கிறிஸ்து தாம் சிலுவையில் மரித்த போது தேவனால் கைவிடப்பட்டார்—மத். 27:46.
“அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, அவரிடம் தம் ஆள்தத்துவத்தின் ஒரு சாராம்சரீதியான பகுதியாக பரிசுத்த ஆவியானவர் இருந்தார். எனினும், அவர் ஞானஸ்நானம் பெற்றபோது, பரிசுத்த ஆவியானவர் பொருளாட்சி ரீதியாக அவர்மேல் இறங்கினார். இதன் அர்த்தம், கர்த்தராகிய இயேசுவிடம் சாராம்சரீதியாக தம் ஆள்தத்துவத்தின் சாராம்சங்களில் ஒரு பகுதியாக பரிசுத்த ஆவியானவர் இருந்தார் என்பதும், பரிசுத்த ஆவியானவர் பொருளாட்சி ரீதியாக அவர்மேல் இறங்கினார் என்பதும்கூட ஆகும். நிச்சயமாகவே இதன் அர்த்தம், இரண்டு பரிசுத்த ஆவியானவர்கள் இருக்கிறார்கள் என்பது அல்ல. இதன் அர்த்தம், ஒரே பரிசுத்த ஆவியானவருக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன—சாராம்சரீதியான மற்றும் பொருளாட்சிரீதியான என்பதே. சாராம்சரீதியான அம்சம், கர்த்தராகிய இயேசுவின் இருப்புக்காக, இருத்தலுக்காக இருந்தது, மேலும் பொருளாட்சிரீதியான அம்சம் அவரது வேலைக்காக, அவரது ஊழியத்திற்காக இருந்தது. கர்த்தராகிய இயேசு நம் பாவங்களுக்காக மரித்துக்கொண்டு சிலுவையில் இருந்தபோது, தேவன் சாராம்சரீதியாக அவரில் இருந்தார் என்பதை நாம் இப்போது பார்க்க வேண்டும். ஆகவே, நம் பாவத்திற்காக மரித்தவர் இந்த தேவ-மனிதனாக இருந்தார். ஆனால் ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இந்த நீதியுள்ள தேவன், இந்த தேவ-மனிதனை நியாயந்தீர்க்கையில், பொருளாட்சி ரீதியாக அவரை விட்டுவிட்டார். தேவன் கிறிஸ்துவைக் கைவிடுவது, தேவனுடைய நியாயத்தீர்ப்பை நிறைவேற்றுவது தொடர்பான ஒரு பொருளாட்சி ரீதியான காரியமாக இருந்தது” (Life-study of Luke, Message 52, pp. 455–456). “அவர் பாவிகளுக்கான தம் பதிலீடான மரணத்தை அநுபவித்துக்கொண்டிருந்த போது, பொருளாட்சி ரீதியாக தேவன் அவரை விட்டுவிட்டார் (மத். 27:45–46)” (God’s New Testament Economy, Chapter 3, p. 48). கர்த்தர் சிலுவையில் இருந்த கடைசி மூன்று மணி நேரத்தில்தான் தேவன் அவரைக் கைவிட்டார், பொருளாட்சி ரீதியாக அவரை விட்டுவிட்டார்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: லூக்கா 23ஐ இளம் வாலிபர்களுடன் வாசித்து, கர்த்தருடைய சிலுவைமரணம் ஆறு மணிநேரம் நீடித்தது, இதில் ஒவ்வொன்றும் மூன்று மணிநேரம் கொண்ட இரண்டு பிரிவுகளாக இருந்தன என்பதைச் சுட்டிக்காட்டவும். முதல் மூன்று மணி நேரத்தில், அதாவது காலை 9 மணி முதல் நண்பகல் வரை, அவர் மனிதர்களின் துன்புறுத்தலை அநுபவித்துக்கொண்டிருந்தார் (லூக்கா 23:26-43). கடைசி மூன்று மணி நேரத்தில், அதாவது நண்பகல் முதல் மதியம் 3 மணி வரை, அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பை அநுபவித்துக்கொண்டிருந்தார் (23:44-49). கர்த்தருடைய மரணம் தொடர்பான இந்தப் புறம்சார்ந்த உண்மைகளைச் சுட்டிக்காட்ட இந்த உரைவிளக்கப் பாடத்தின் குறிப்புகளைப் பயன்படுத்தவும். “அவர் நம் மீட்பிற்காக மரித்தபோது, கர்த்தர் சாராம்சரீதியில் தேவனாக மரித்தார், ஆனால் பொருளாட்சிரீதியில் தேவனால் கைவிடப்பட்டார்” என்ற குறிப்பு III-க்குள் உயர்நிலைப்பள்ளி மாணவர்களுடன் நுழைய வேண்டிய அவசியமில்லை. மாறாக, கர்த்தராகிய இயேசு மனிதர்கள், தேவன் ஆகிய இருவரின் கைகளாலும் பாடுபட்டார் என்பதைக் காட்டுவதற்காக, I. மற்றும் II இல் உள்ள குறிப்புகளை வலியுறுத்துங்கள். இது தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவதற்காக இருந்தது என்றும், கர்த்தர் நம் பாவங்களுக்காக மரிக்க சிலுவைக்கு மனமுவந்து சென்றார் என்றும் அவர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தவும். இளம் வாலிபர்கள் தங்கள் பாவங்களை அறிக்கையிடுவதற்காக தனிப்பட்ட ஜெபத்தில் ஒரு சில நிமிடங்கள் செலவிட்டு, நம் அனைவருக்காகவும் மரித்ததற்காகக் கர்த்தருக்கு நன்றி செலுத்துவதன் மூலம் இந்தப் பாடத்தை முடிப்பது நலமாயிருக்கும்.
சுவிசேஷ செயலாக்கம்: தேவனுடைய இந்த மாபெரும் அன்பின் காரணமாகதான், கர்த்தராகிய இயேசு நம் பாவங்களுக்காகச் சிலுவையில் மரிக்க வந்தார் (யோவான் 3:16). கர்த்தருடைய சிலுவைமரணத்தின் முதல் மூன்று மணி நேரத்தில், காலை 9 மணி முதல் நண்பகல் வரை, அவர் தேவனுடைய சித்தத்திற்கான தம் உத்தமத்தின் காரணமாக மனிதனின் கையால் துன்புறுத்தப்பட்டார். ஆனால் நண்பகல் தொடங்கி, தேவன் முழு மனுக்குலத்தின் பாவம் அனைத்தையும், எல்லா காலத்தையும் சேர்ந்த பாவம் அனைத்தையும் கர்த்தர் மீது வைத்தார். தேசமெங்கும் இருள் சூழ்ந்தது (மத். 27:45). இந்த பயங்கர காட்சி நண்பகல் முதல் மதியம் 3 மணி வரை நீடித்தது. இந்த நேரத்தில் ஒவ்வொரு பாவமும், அதாவது இதுவரை செய்யப்பட்ட ஒவ்வொரு பாவமும் கர்த்தராகிய இயேசுவின் மீது வைக்கப்பட்டது, அப்படியிருக்க அவர் நமக்குப் பதிலாக தேவனுடைய நீதியான நியாயத்தீர்ப்பைச் சுமந்தார். கர்த்தர் பாவிகளின் இடத்தை எடுத்துக்கொண்டு, நம் பாவங்களைச் சுமந்து, நமக்காகப் பாவமாக்கப்பட்டதால், தேவன் தம் அன்பான குமாரனைப் புறக்கணிக்க (தம் முதுகைத் திருப்ப) வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது (1 பேது. 3:18; 1 பேது. 2:24; ஏசா. 53:6; 2 கொரி. 5:21; மத். 27:46). அந்தச் சமயத்தில்தான் கர்த்தர், “என் தேவனே, என் தேவனே, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்று கூக்குரலிட்டார் (மத். 27:46). அவர் “இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” அதோடு ஒருவரும் “கெட்டுப்போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு” அவர் வாஞ்சிப்பதால், அவர் இத்தகைய ஒரு மரணத்தை அநுபவித்தார் (யோவான் 3:16). தேவனுடைய பக்கத்தில், இதைத்தான் அவர் செய்தார் அதோடு இதைத்தான் அவர் வாஞ்சிக்கிறார். நம் பக்கத்தில், நாம் அவரையும், அவர் அன்பில் நமக்காக சாதித்த (நிறைவேற்றிய) அனைத்தையும் பெற்றுக்கொள்வதன் மூலம் மாறுத்தரம் அளிக்க வேண்டும். நாம் விசுவாசிப்பதன் மூலம் இதை எளிமையாகச் செய்ய முடியும். நியாயத்தீர்ப்புக்குப் பதிலாக, அவர் நமக்கு மன்னிப்பை அருளுகிறார், மேலும் மரணத்திற்குப் பதிலாக நாம் நித்திய ஜீவனைப் பெற முடியும் (கொலோ. 1:14; யோவான் 3:16)!, நீங்கள் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சிக்கப்பட்டு, மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குள் கடந்துசெல்ல வேண்டும் என்று வாஞ்சித்து, உங்களுக்காக மரணத்தை அநுபவித்தவராகிய அவருக்குள் விசுவாசியுங்கள், அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள் (யோவான் 5:24)!
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்பு: Life-study of Luke, Message 52.
REFERENCES: Life-study of Luke, Message 52; Life-study of Mark, Message 47, pp. 407–408; Message 48; The Conclusion of the New Testament, Message 37; God’s New Testament Economy, Chapter 3, pp. 48–49; Life-study of Matthew, Message 70, pp. 811–812.