கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்
பகுதி 9
✵பாடம் 01 – 09
கெத்செமனேவில் அழுத்தப்படுதல்
குறிக்கோள்: பிதாவின் சித்தத்தை அறியவும், பெறவும் கர்த்தர் ஜெபத்தில் எப்படிப் போராடினார் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: கர்த்தர் தம் சிலுவைமரணத்திற்கு முன்பு தம் சீஷர்களுடன் ஒன்றுசேர்ந்து செலவிட்ட தம் இறுதிக் காலத்தில், ஜெபிக்கும்படி அவர்களை கெத்செமனே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கே இருக்கும்போது, அவர் விழித்திருந்து ஜெபிக்கும்படி தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார், மேலும் அவர் தாமே தனியாக ஜெபிக்கப் புறப்பட்டுச் சென்றார். அவர் பிதாவிடம் மூன்று முறை ஜெபித்தபோது, தமக்கு முன்பாக இருந்த தேவனுடைய சித்தத்தின் (சிலுவையின்) “பாத்திரத்தின்” கொடுந்துயரம் காரணமாக அவரிடமிருந்து இரத்தம் போன்ற பெரிய வியர்வைத் துளிகள் விழுந்தன. அந்த ஜெபத்தின் போது அவர் தாம் மனிதனின் பாவத்தையும், தேவனின் கோபாக்கினையையும் சுமத்தலின் ஒரு முன்நிழலாட்டத்தை அனுபவித்தார். அவர் தம் ஜெபத்தின் மூலமாக, சிலுவையே தேவனுடைய சித்தமாக இருந்தது என்பதை இறுதிநிலையுடன் பகுத்துணர்ந்து, அதன்பின் தம்மைப் பலப்படுத்தி, நம் மீட்பிற்காக தேவனுடைய சித்தத்திற்கும், வேதவாக்கியங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவதற்கும் தம்மையே முழுவதும் பணிந்தடங்கச் செய்தார்.
பின்புலம் : இக்காட்சியில் உள்ள கருத்துக்கள் ஆழமானவையாக இருந்தாலும், இளம்வாலிபர்கள் தங்கள் சார்பிலான கர்த்தரின் மாபெரும் பாடநுபவித்தலை வெறுமனே பார்ப்பதன் மூலம் அவருக்கான தங்கள் பாராட்டுதலில் வளர முடியும். இந்தப் பாடத்தின் பாரம் முதன்மையாக ரோம இலக்கம் இரண்டில் வழங்கப்பட்டுள்ளது.
அதிகாரம்: மத்தேயு 26.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
கெத்செமனேவில் கர்த்தராகிய இயேசு தாம் இந்தப் “பாத்திரத்தில்”பருகுவதே, அதாவது சிலுவையில் மரிப்பதே பிதாவின் சித்தமாக இருந்தது என்பதைத் தாம் அறியும் வரை ஜெபத்தில் போராடினார்.
I. அவர் தம் புதிய உடன்படிக்கையின் இராப்போஜனத்தை நிறுவிய பிறகு, இயேசு தம்மைக் காட்டிக்கொடுப்பவனையும், தம்மைக் கைதுசெய்யப் போகிறவவர்களையும் சந்திக்கத் தம் சீஷர்களுடன் கெத்செமனே தோட்டத்திற்குச் சென்றார்—மத். 26:30-31, 45-47
A. இது, அவர் தம் சிலுவைமரணத்திற்கு முன்பு தம் சீஷர்களுடன் ஒன்றுசேர்ந்து இருக்கப்போகும் கடைசி முறையாக இருந்தது—லூக்கா 22:15-18
பஸ்காவின் இரவில், இயேசு தம் பின்பற்றுகிறவர்களுடன் தம் இராப்போஜனத்தை நிறுவினார். அச்சமயத்தின் போது, சீஷர்களில் பலர் தங்களிடையே யார் மிகப்பெரியவனாக இருப்பான் என்பதுகுறித்து வாதிட்டனர் (லூக்கா 22:24). தலையாய சீஷனாகிய பேதுரு தான் கர்த்தருக்காகச் சிறைக்குச் செல்வான் அல்லது அவருக்காக மரிக்கவும்கூட போவதாக அறிவித்தான். அவர்கள் அவரைப் பாதுகாக்க தங்களிடம் இரண்டு பட்டயங்கள் இருந்ததை அவரிடம் காட்டியிருந்தனர் (லூக்கா 22:38). அவர்களது வார்த்தைகளும் செயல்களும் கிட்டத்தட்ட நகைப்புக்கிடமானவையாகவே (கோமாளித்தனமானவையாகவே) இருந்தன. இச்சமயத்தின் போது அவர்கள் நிச்சயமாகவே கர்த்தருக்கு எந்த ஆறுதலாகவும் இருக்கவில்லை. கர்த்தர் தம் இரத்தத்தின் மூலமாக நிறுவ இருந்த புதிய உடன்படிக்கையைச் சின்னமாகக் காட்டும் ஒரு நடைமுறைப் பயிற்சியாக இந்தப் பந்தியை அவர் நிறுவி முடித்த உடனேயே, அவர் அவர்களை ஒலிவ மலையில் உள்ள கெத்செமனே தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார், அங்கு அவர் அடிக்கடி தம் சீஷர்களுடன் சென்றார் (லூக்கா 22:39; யோவான் 18:2).சிலுவைக்குச் செல்வதற்கு முன் அவர் அவர்களுடன் இருக்கப்போகும் கடைசி முறையாக இதுவே இருந்தது.
B. கெத்செமனேவுக்குச் செல்லும் வழியில், இயேசு தம் சீஷர்களுக்கு தேவனுடைய பொருளாட்சியைப் பற்றிய பல அற்புதமான விஷயங்களை வெளிப்படுத்தினார்—யோவான் 14-17
இந்தத் தோட்டத்திற்குச் செல்லும் வழியில், இயேசு இந்தப் பிதாவின் வீட்டில் தங்குமிடங்களாகவும், மூவொரு தேவனின் தெய்வீக உயிரியில் கிளைகளாகவும், ஆவியானவரின் பிள்ளையாகவும் இருத்தலையும், அதேபோல் யோவான் 14–16 இல் உள்ள மற்ற உயர்வான மற்றும் ஆழமான விஷயங்கள் பலவற்றையும் பற்றிய மாபெரும் வெளிப்பாடுகளை திரைநீக்கினார். பின்னர் அவர் யோவான் 17 இல் பதிவுசெய்யப்பட்ட அற்புதமான ஜெபத்தை ஜெபித்தார். அவர் தம் மரணத்திற்கு முன் அவர்களுடன் இந்த விஷயங்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தம் கடைசி வாய்ப்பாக இது இருந்தது என்பதை அறிந்திருந்தார். அவர்களது நடத்தையின் வெளிச்சத்தில், அந்த நேரத்தில் அவர் பேசியதை அவர்களால் அதிகம் புரிந்துகொள்ள இயன்றதாகத் தெரியவில்லை.
II. இந்தத் தோட்டத்தில், இயேசு மரணம் வரை கூட உள்ளான ரீதியில் அழுத்தப்பட்டார், மேலும் தம்முடன் விழித்திருந்து ஜெபிக்கும்படி பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார்—மத். 26:36-46
அவர்கள் தோட்டத்திற்கு வந்துசேர்ந்த போது, இயேசு ஜெபிக்கும்படி பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோரை அழைத்துச் சென்றார்.
A. இயேசு பின்வாங்கி, தம் முகங்குப்புற விழுந்து, அவர் பிதாவின் சித்தத்தைக் கீழ்ப்படிதலுடன் நிறைவேற்றக்கூடுமாறு ஜெபித்தார்—மத். 26:39
அவர்கள் ஒரு வெகுதூரம் சென்றிருந்ததும், இயேசு ஜெபிக்கும்படி மூன்று சீஷர்களுக்கும் கட்டளையிட்டு, அதன்பின் தனியாக ஜெபிக்க அவர்களை விட்டுசென்றார்.
-
மிகுந்தத் துன்பத்திலும் வேதனையிலும் இருந்த அவர் ஜெபத்தில் தம் பிதாவுக்கு முன்பாக மூன்று முறை சென்றார்—மத். 26:39, 42, 44
“கெத்செமனே” என்றால் எண்ணெய் ஆலை என்று பொருள். கெத்செமனேயில் இயேசுவின் அனுபவம், அவர் தம் சிலுவைமரணம் நெருங்கிவருவதை எதிர்கொண்டபோது தம் ஆத்துமாவில் அழுத்தப்படும் ஓர் அனுபவமாக இருந்தது. இயேசு எதை அனுபவித்துக்கொண்டிருந்தார் என்பதை நாம் புரிந்துகொள்வது கடினம். ஒரு வரவிருக்கும் இறுதித் தேர்வு அல்லது மேடை நிகழ்ச்சியால் அழுத்தப்படுவது எப்படி இருக்கும் என்பதை நாம் அறிந்திருக்கக்கூடும், ஆனால் இவை, இயேசு அனுபவித்துக்கொண்டிருந்தவற்றிற்கு நிகராகாது. அவர் தம்மையே இந்தச் சகலத்தையும்-உள்ளடக்கிய பாவநிவாரண காணிக்கையாக தேவனுக்குச் செலுத்தப் போய்க்கொண்டிருந்தார். அவர் எல்லாவற்றின் சார்பாகவும் மரணத்தை ருசிபார்க்க வேண்டியிருக்கும். இதைச் செய்ய, அவர் தாம் வெறுத்த அதோடு தம் சுபாவத்திற்கு முற்றிலும் முரணாக இருந்த இரண்டு விஷயங்களுடன் தொடர்புடையவராக ஆகுவதற்கு வேண்டியிருக்கும்—பாவம் மற்றும் மரணம். சிலுவையில் இயேசு தேவனுடைய பார்வையில் பாவமாக ஆக்கப்பட வேண்டியிருந்தது. நாம் இதுவரை செய்த ஒவ்வொரு பாவத்திற்குமான தண்டனையை அவர் தம் சரீரத்தில் சுமக்கப் போய்கொண்டிருந்தார். என்னே வகையான ஆழமான அனுபவமாக இது இருந்தது! ஒவ்வொரு மனிதனும் இதுவரை செய்திருக்கும் ஒவ்வொரு பாவத்திற்குமான மரண தண்டனையை இயேசு அனுபவித்தார். பாவநிவாரண பலியாக, இயேசு பாவத்துடன் முழுவதுமாக ஒன்றித்துக் காணப்படுவார் அதோடு முழு மூச்சுடனான பிதாவின் நியாயத்தீர்ப்பைச் சுமப்பார். அவர் தம் சிலுவைமரணத்தின் சாராம்சரீதியில் தொடர்ந்து தேவனாக இருப்பார் என்றாலும், பொருளாட்சிரீதியில் அவர் தேவனால் கைவிடப்படுவதை அனுபவிப்பார். இவ்வாறு சிலுவையில், அவர் தாம் இதற்கு முன் ஒருபோதும் அனுபவித்திராத ஒன்றை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்: தம் பிதாவாகிய தேவனிடமிருந்து பிரிவு.
-
அவர் ஜெபித்தபோது அவரது வியர்வை, தரையிலே விழும் இரத்தத்தின் பெருந்துளிகளைப் போன்று ஆகிவிட்டது—லூக்கா 22:44
இயேசு ஜெபித்தபோது, தமக்கு முன்பாக இருந்தவற்றின் வியாகுலம், அவர் இரத்த வியர்வை சிந்திக்கொண்டிருந்த வரை அவர் மீது கணமாக அவரை அமிழ்த்தியது. எவ்வளவு மாபெரிதாய் அவர் உள்ளுக்குள் அழுத்தப்பட்டுக்கொண்டிருந்தார்! “கர்த்தர் ‘தமக்குமுன் இருக்கும், நிகழப்போகும் பயங்கரத்தின் முன்னிலையில், நடுக்கம் ஏற்படுத்துகிற ஒரு திகிலின் பிடியில்’ இருந்தார்” (Life-study of Mark, Message 45, p. 390; cf. Mark 14:33). அவர் பிடிபடும் (கைப்பற்றப்படும்) குறிக்கோளுடன் கெத்செமனே தோட்டத்திற்கு வந்த போதிலும்கூட, இந்த தெய்வீகத் திட்டத்தில் மூவொரு தேவனால் தமக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த பணியின் அற்புதமான கணத்தைக் கர்த்தர் உணர்ந்தார். “சிலுவையின் நிழல் கிறிஸ்துவின் மேல் அச்சமயத்தின் போது முழுமையாக வந்தது. அந்தத் தருணத்தின் போது அவர் உலகின் அனைத்து பாவங்களையும் தீமைகளையும், தேவனுடைய கோபாக்கினையின் பிரம்மாண்டமானத்தன்மையையும், அவை இரண்டிற்கும் நடுவில் தம்மையும் பார்த்தது போல் இருந்தது. இது, அவர் மனிதனின் பாவத்தையும், தேவனின் கோபாக்கினையையும் சுமத்தலின் ஒரு முன்நிழலாட்டமாக இருந்தது. இதனால் அவர் இத்தகைய வலியால் பாடநுபவித்தார். ஆயினும் இவை அவரது வரும் சிலுவைமரணத்தின் நிழல்களாக மட்டுமே இருந்தன (Collected Works of Watchman Nee, Volume 6, p. 673).
-
கர்த்தர் தாம், பிதாவின் சித்தத்தில் தமக்காக ஏற்பாடு செய்யப்பட்ட “பாத்திரத்தில்” “பானம்பண்ணக்” கூடுமாறு ஜெபித்தார்—மத். 26:39, 42; லூக். 22:42
ஓர் உணர்ச்சியற்ற எந்திரனைப் போன்று இயேசு பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார் என்று நாம் நினைக்கக்கூடாது. இந்த வசனங்கள், குமாரன் தமக்கு முன்னால் இருப்பதைக் கருத்தில்கொள்கையில் குமாரனுக்குப் பிதாவுடன் இருந்த ஐக்கியத்தைப் பற்றிய ஒன்றை நமக்கு வெளிப்படுத்துகின்றன. இப்போது இந்தத் தருணம் வந்திருந்ததால், இயேசு பிதாவுடன் தொடர்ச்சியாக ஒன்றாயிருக்கும் தம் தற்போதைய நிலையில் நிலைத்திருப்பதற்கான தம் வாஞ்சையை வெளிக்காட்ட அவருக்கு ஒரு கடைசி வாய்ப்பு இருந்தது. எனினும், இறுதியில் இயேசு பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிதலில் இந்த அதி உயர்ந்த பலியில் தமக்காக ஆயத்தப்படுத்தப்பட்ட இந்தப் “பாத்திரம்” மரணமாக, ஓர் அவமான சிலுவையில் தேவனுடைய நியாயத்தீர்ப்புக்குக் கீழான ஒரு மரணமாகக் கூட இருந்த போதிலும்கூட, அவர் இந்தப் பாத்திரத்தை ஏற்றுக்கொண்டார். இவ்வாறு ஜெபித்தப் பிறகு, அவர் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் பாத்திரத்தை எடுத்து (ஒப். ஏசா. 51:17, 22), அதை முழுவதுமாக பானம்பண்ணவும், அதாவது மண்டிவரைக் கூட பானம்பண்ணவும் அவர் பலப்படுத்தப்பட்டார். இதற்காகத்தான் இயேசு தம் மேல் ஒரு மாம்ச சரீரத்தைப் பூண்டார் (எபி. 10:4–10). மத்தேயு 26:39 இல் கர்த்தருடைய ஜெபத்தில் அவரது வசனிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது, “என் பிதாவே, இந்தப் பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிச் செய்யும்; ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படி ஆகக்கடவது.” கர்த்தர் எப்போதும் பிதாவின் சித்தத்திற்குப் பணிந்தடங்குகிறவராக இருந்தார், மேலும் அவர் பாத்திரத்தில் பானம்பண்ணுவது—அதாவது சிலுவையில் மரணத்தை அநுபவிப்பது—பிதாவின் சித்தமாக இருந்தால் மட்டுமே அவர் அவ்வாறு செய்வார். தேவனுடைய சித்தமே அவரது கவனத்தின் குவிமையமாக இருந்தது, மேலும் அவர் தேவனுடைய சித்தத்தை அறிய ஆவலுடன் நாடினார். வாட்ச்மேன் நீ’யின்படி, “கெத்செமனேவில் கர்த்தருடைய ஜெபமே, தேவனுடைய அதிகாரத்திற்குப் பணிந்தடங்குதலின் அதி உயர்ந்த வெளியாக்கம் ஆகும். தேவனுடைய அதிகாரத்திற்கு நம் கர்த்தரின் பணிந்தடங்குதல், சிலுவையில் அவரது பலியை வெகுவாய் விஞ்சுகிறது” (Collected Works of Watchman Nee, Volume 47, p. 113). வேறு வார்த்தைகளில், கர்த்தர் சிலுவையைச் சகித்துக்கொள்வதை விட, அவர் தேவனுக்குப் பணிந்தடங்கி, பிதாவின் சித்தத்தின் பாத்திரத்தை எடுக்க ஒப்புக்கொள்வது ஒரு மாபெரும் விஷயமாக இருந்தது. இந்தப் பாத்திரமே, அதாவது சிலுவையே பிதாவின் சித்தமாக இருந்தது என்பதை அவர் தம் ஜெபத்தின் மூலமாக நிச்சயத்துடன் அறிந்திருந்தார், மேலும் அது பிதாவின் சித்தமாக இருந்தது என்பதால் அவர் அந்தப் பாத்திரத்தில் பானம்பண்ணத் தயாராக இருந்தார். “அவர் இந்தப் பாத்திரத்திற்குப் பயப்படவில்லை, மாறாக அவரது பரிசுத்த சுபாவம் பாவத்தைச் சுமப்பது குறித்து அஞ்சியது. அவர் இந்தப் பாத்திரத்தையும், தேவனுடைய சித்தத்தையும் ஒன்றாக வைப்பதற்கு முன்பு, ‘இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படிசெய்யும்’ என்று அவரால் இன்னும் கூற இயன்றது. ஆனால் இதைத் தொடர்ந்து உடனடியாக அவர், ‘ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது’ என்று கூறினார். எனவே, கெத்செமனே தோட்டத்தில் நாம், அவர் ஒற்றை-இருதயத்துடன் தேவனுடைய சித்தத்தைத் தேர்ந்தெடுத்ததையும், தேவனுடைய சித்தமாக இருக்காத அனைத்தையும் ஒற்றை-இருதயத்துடன் நிராகரித்ததையும் காண்கிறோம் (Collected Works of Watchman Nee, Volume 17, p. 119).
B. சீஷர்கள் தூங்குவதைக் காண கர்த்தர் மூன்று முறை தம் ஜெபத்திலிருந்து திரும்பினார்—மத். 26:40
ஜெபத்தில் கர்த்தரின் தீவிர பயிற்சியின் போது, அவரது சீஷர்கள் அவருடன் விழித்திருக்க இயலவில்லை. “பேதுரு, யாக்கோபு, மற்றும் யோவானை அழைத்துக்கொண்டு, கர்த்தர் தனியாக ஜெபிக்கப் போனார். முதல்முறை ஜெபித்துவிட்டு அவர் திரும்பி வந்தபோது, சீஷர்கள் தூங்குவதைக் கண்டார் (வ. 40). கர்த்தராகிய இயேசு, தம் ஆத்துமா “மரிக்குமளவிற்கு மிகுந்த துக்கமடைகிறது” என்று மிகவும் தவிப்பானவிதத்தில் அவர்களிடம் சொல்லி, தம்முடன் விழிப்பாயிருக்க அவர்களிடம் கேட்டுக்கொண்டார் (வ. 38). ஆனால், ஒன்றும் நடக்கப்போவதில்லை, எல்லாம் சமாதானமாக இருக்கிறது என்பதுபோல அவர்களுக்குத் தோன்றியது. ஒருவேளை கர்த்தருடைய பிரசன்னத்தினால் அவர்கள் சோர்வுற்றதின் நிமித்தம் அவர்கள் தூங்கியிருக்கலாம். மற்ற சுவிசேஷங்களின்படி, பேதுருவும் யோவானும் பஸ்காவை அனுசரிப்பதற்கான அறையை ஆயத்தம்பண்ண முன்னதாகவே அனுப்பப்பட்டனர். ஒருவேளை அவர்கள் அந்த நாளின் அனைத்து சம்பவங்களால் சோர்வுற்றிருக்கலாம். பேதுரு தனக்குத்தானே, “நான் கொஞ்ச நேரம் இயேசுவைவிட்டு தனியே இருக்க விரும்புகிறேன். நான் அவரிடமிருந்து விலகிச் செல்ல முடியாது என்பதால், நான் கொஞ்சம் தூங்கட்டும். கர்த்தர் ஜெபிக்க வேண்டியிருக்கலாம், ஆனால் நான் தூங்க வேண்டும்” என்று கூறியிருக்கக்கூடும். இது, பேதுருவால் கர்த்தரைப் பின்பற்ற முடியவில்லை என்ற உண்மையை முழுவதும் அம்பலமாக்குவதாக இருந்தது. இது நம் சூழ்நிலையின் ஒரு சித்திரமும்கூட. நாம் கர்த்தரை நேசிக்கிறோம், ஆனால் பேதுருவைப்போல நாம் அவரது பிரசன்னத்தில் இருந்து சோர்வுற்றிருக்கக்கூடும். 40 மற்றும் 41ஆம் வசனங்களின்படி, கர்த்தர் சீஷர்களிடம் வந்து, அவர்கள் தூங்குவதைக் கண்டபோது, அவர் பேதுருவை நோக்கி, “ஆகவே, உங்களால் ஒரு மணிநேரம் என்னோடுகூட விழிப்பாயிருக்க முடியவில்லையா? நீங்கள் சோதனைக்குள்ளாகாதபடி விழிப்பாயிருந்து, ஜெபம்பண்ணுங்கள். ஆவி சித்தமாயிருக்கிறது, ஆனால் மாம்சம் பலவீனமாயிருக்கிறது” என்று கூறுகின்றன. ஆவிக்குரிய காரியங்களில் நம் ஆவி அநேகமுறை தயாராக அல்லது சித்தமுள்ளதாக இருக்கிறது, ஆனால் நம் மாம்சம் பலவீனமாக இருக்கிறது” (Life-study of Matthew, Message 69, pp. 796–797). சோதனை வேளை நம் மேல் வரும்போது, நாம் தயாராக இருக்குமாறு, நாம் நம் தினசரி வாழ்க்கைகளில் நம் ஆவியைப் பயிற்சிசெய்ய வேண்டும் என்பதையும் நாம் உணர்ந்தறிய வேண்டும். தம் ஜெபத்தின் காரணமாக, இயேசு, ஒரு மனிதனாக, தம் மேல் வந்துக்கொண்டிருந்த காரியங்களுக்குத் தயாராக இருந்தார். சீஷர்கள் தயாராக இருக்கவில்லை.
III. தம் ஜெபத்திற்குப் பிறகு, இயேசு தம்மையே நம் பாவங்களுக்கான ஒப்பற்ற பலியாக ஏறெடுப்பதன் மூலம், பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற புறப்பட்டுச் சென்றார்—எபி. 10:5-7; லூக்கா 22:37
A. இயேசு தாம் சிலுவையில் மரிப்பதே தேவனுடைய சித்தமாக இருந்தது என்ற நிச்சயம் இயேசுவுக்கு தம் ஜெபத்தின் மூலமாக இருந்தது—மாற்கு 14:36; லூக்கா 22:42
முதலில் இந்தப் “பாத்திரமும்,” தேவனுடைய சித்தமும் இரண்டு வெவ்வேறு விஷயங்களாக இருந்தன. ஆனால் இந்தப் “பாத்திரமே” பிதாவின் சித்தமாக இருந்தது என்பதை அவர் தம் ஜெபத்தின் மூலமாக நிச்சயத்துடன் அறிந்திருந்தார், மேலும் அது பிதாவின் சித்தமாக இருந்தது என்பதால் அவர் இந்தப் “பாத்திரத்தில்” பானம்பண்ணத் தயாராக இருந்தார். கர்த்தராகிய இயேசு நமக்காக சிலுவையில் மரிப்பது தேவனுடைய சித்தமாக இருந்தது, மேலும் கர்த்தர் தேவனுடைய சித்தத்திற்கு முழுவதும் பணிந்தடங்குகிறவராக இருந்தார். இவ்வாறு தம் ஜெபத்தால் பலப்படுத்தப்பட்டு இயேசு, தம்மைக் காட்டிக்கொடுத்தவனாகிய யூதாஸைச் சந்திக்கவும், தம்மைக் கைப்பற்றியவர்களிடம் தம்மையே ஒப்படைக்கவும் புறப்பட்டுச் சென்றார். “கெத்செமனேவில் தம் ஜெபத்திற்குப் பிறகு, கர்த்தராகிய இயேசு கைதுசெய்யப்படவும், விசாரிக்கப்படவும், தண்டனைக்குட்படுத்தப்படவும், மரணத்திற்குள்ளாக்கப்படவும் தயாராக இருந்தார். அனைத்தும், அனைவரும் ஆயத்தப்படுத்தப்பட்டிருந்தனர், மேலும் அவர் பிதாவிடம் முழுமையான ஜெபத்தை ஜெபித்திருந்தார். அந்த ஜெபத்தின் மூலம், எல்லா காணிக்கைகளையும் இடமாற்றுவதற்கான அவர் மரிப்பது தேவனுடைய சித்தமாக இருந்தது என்ற உறுதிப்படுத்துதல் அவருக்கு இருந்தது. ஆகையால், அந்த ஜெபத்திற்குப் பிறகு, அவர் பிரதான ஆசாரியர்களாலும், மூப்பர்களாலும், வேதபாரகர்களாலும் கைதுசெய்யப்படுவதற்குத் தயாராக இருந்தார் (Life-study of Mark, Message 46, p. 399).
B. தம் ஜெபத்திற்குப் பிறகு, கிறிஸ்து தேவனுடைய நித்தியக் குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக மீட்பைச் செய்துமுடிக்க புறப்பட்டுச் சென்றார்—எபி. 10:9-10
லூக்கா 22:42இல் கிறிஸ்து, பிதாவின் சித்தம் செய்யப்படுமாறு ஜெபித்தார். கடந்த நித்தியத்தில் தேவனால் திட்டமிடப்பட்டபடியே, தேவனுடைய முன்தீர்மானிக்கப்பட்ட சித்தத்தின்படி இயேசு ஏறெடுக்கப்பட்டார் (அப். 2:23). “தேவனுடைய நித்தியக் குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக அவரது நித்திய மீட்பை செய்துமுடிக்க தெய்வீகத் திரியேகத்துவத்தின் இரண்டாமவர் மாம்சமாகி, சிலுவையில் மரிக்க வேண்டும் என்பதை மூவொரு தேவன் கடந்த நித்தியத்திலுள்ள தம் தெய்வீகத் திட்டத்தில் தீர்மானித்தார் (எபே. 1:7-8, 10). எனவே, திரியேகத்துவத்தின் இரண்டாமவர் உலகத்தோற்றத்திற்கு முன்னே, அதாவது கடந்த நித்தியத்தில் (1 பேது. 1:19–20) தேவ ஆட்டுக்குட்டியாக இருக்க நியமிக்கப்பட்டார் (யோவான் 1:29)…மனிதனின் வீழ்ச்சிக்குப் பிறகு, செம்மறிக் குட்டிகள், செம்மறிகள், கன்றுக்குட்டிகள், காளைகள் ஆகியன தேவனால் முன்நியமிக்கப்பட்ட நிஜமான செம்மறிக் குட்டியாக வரவிருந்த அவரைச் சுட்டிக்காட்டி, தேவனுடைய தெரிந்தெடுக்கப்பட்ட மக்களுக்காக மாதிரிகளாகப் பயன்படுத்தப்பட்டன (ஆதி. 3:21; 4:4; 8:20; 22:13; யாத். 12:3-8; லேவி. 1:2)……இங்கு அவரது ஜெபத்தில், தம் சிலுவைமரணத்திற்கு சற்றே முன்பு, சிலுவை என்னும் பாத்திரத்தை எடுத்துக்கொள்ள அவர் தம்மையே ஆயத்தப்படுத்தினார். அவர் மூவொரு தேவனின் நித்தியத் திட்டத்தை நிறைவேற்றுவதற்காகப் பிதாவின் இந்த ஒப்பற்ற சித்தத்தைச் செய்யச் சித்தமாயிருந்தார் (Life-study of Luke, Message 50, pp. 436–437).
IV. பிதாவின் சித்தத்தின் பாத்திரம், நாம் எடுத்துக்கொள்வதற்காகவும் உள்ளது—மாற்கு 10:37–40; ரோ. 12:2
“தேவனுடைய சித்தம் பூரணமானது, நன்மையானது, ஏற்றுக்கொள்ளத்தக்கது. அது நமக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கது, மேலும் நாம் இந்தச் சித்தத்தால் மட்டுமே ஆக்கிரமிக்கப்பட்டால் அது அவ்வாறு தொடர்ந்து இருக்கும். ஏதோ ஒன்று நம்மில் இருக்கிறது, அதாவது தேவனுடைய சித்தத்திற்குக் குறைவான எதிலும் ஒருபோதும் திருப்தியடையாது தேவனுக்குரிய ஏதோ ஒன்று நம்மில் இருக்கிறது. இதன் மூலம் நாம் வாழ வேண்டும்” (Collected Works of Watchman Nee, Volume 46, Chapter 181, p. 1220). “கர்த்தர் தாமாகவே மரணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கவில்லை என்றால், நாம் மரிக்காமல் இருப்பதும், நம் ஜீவனை நேசிப்பதும் சாத்தியமானதாக இருக்கும். ஆனால் நாம் ஒரு விஷயத்திற்குக் கவனம் செலுத்துவோமாக: நமக்கு முன் வைக்கப்பட்டுள்ளதைத் தேர்வுசெய்வதற்கான திறன் நமக்கு இருக்கிறது…நம் சூழ்நிலைகள் நமக்கான தேர்வுகளைச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது” (Collected Works of Watchman Nee, Volume 17, p. 120). நாம் தேவனுடைய சித்தத்தைச் செய்ய மும்முரமாக நாடுகிறவர்களாக இருந்தாக வேண்டும்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: கெத்செமனே தோட்டத்தில் உள்ள காட்சியை சாத்தியமான வரை தெளிவாகச் சித்தரித்து, “ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது” (மத். 26:41) என்ற கர்த்தருடைய கருத்துரையைப் பெரிதாக்கிக் காட்டவும். பாவமுள்ள அல்லது உலகத்திற்குரிய விஷயங்களைச் செய்வதைப் பொறுத்தவரை, மாம்சம் எப்போதும் தயாராகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்பதை நாம் அங்கீகரிக்க வேண்டும். ஆனால் தேவனுடைய சித்தத்தைச் செய்வதைப் பொறுத்தவரை, நம் மாம்சம் பலவீனமாகவும், தயங்குகிறதாகவும் இருக்கிறது. எனவே, நாம் ஒரு பலமான மற்றும் உற்சாகமுள்ள ஆவியைக் கொண்டிருக்கப் பயிற்சிசெய்ய வேண்டும் (1 தீமோ. 4:7). நாம் நம் தினசரி வாழ்வில் ஜெபிக்க நம் ஆவியைப் பயிற்சிசெய்வதை நடைமுறைப்படுத்தினால், நாம் எந்தச் சூழ்நிலைக்கும் தயாராக இருப்போம், மேலும் நாம் கர்த்தருடன் ஒரே ஆவியாக இருப்பதை அனுபவிப்போம் (1 கொரி. 6:17). இருப்பினும், நாம் கூடுகைகளில் மட்டுமே கர்த்தரை அறிந்து, நம் தினசரி வாழ்க்கையில் அவரைப் புறக்கணித்தால், பூமியில் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்ற முடியக்கூடியவர்களாக இருக்க நாம் தயாராக இருக்க மாட்டோம். இயற்கையான சோர்வு மற்றும் “சலிப்பை” எதிர்த்துப் போராடுவதற்கு நம் ஆவியைப் பயிற்சிசெய்ய நாம் கற்றுக்கொள்ள வேண்டும் (see Life-study of Matthew, Message 69, pp. 796–797). எனவே, நாம் ஒரு தீவிரமான மற்றும் ஊக்கமான வழியில் ஜெபிக்க நேரம் செலவிட வேண்டும். நாம் இத்தகைய நபர்களாக இருந்தால், கர்த்தரைக் கைதுசெய்யும்படி யூதாஸ் படைவீரர்களுடன் வந்தபோது, சீஷர்களைப் போன்று ஓடிப்போகவோ அல்லது பேதுரு செய்ததைப் போன்று ஒரு பட்டயத்துடன் எதிர்த்துப் போராடவோ மாட்டோம். அதற்குப் பதிலாக, அந்தச் சூழ்நிலையின் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான தேவனுடைய நிரப்பீட்டை அனுபவித்துமகிழும் அதே வேளையில், கர்த்தர் தம் சித்தத்தில் நமக்காக ஆயத்தம்பண்ணியிருக்கும் அனைத்தையும் நாம் எதிர்கொள்ள இயல்வோம். மேலும், நம் பலவீனமான, உற்சாகமற்ற மாம்சத்தால் தோற்கடிக்கப்படுவதற்குப் பதிலாக ஜெபத்தின் மூலமாகக் கர்த்தரைத் தொடுவதற்கு நம் பலமான மற்றும் உற்சாகமுள்ள ஆவியைப் பயிற்சிசெய்ய நாம் கற்றிருப்பதால், நாம் எவ்வளவு சோர்வாக உணர்ந்தாலும்சரி கூடுகைகளில் நாம் ஜீவனை நிரப்பீடுசெய்ய இயல்வோம். இளம் வாலிபர்களின் “உற்சாகமுள்ள” ஆவியைக் குறித்து அவர்களுக்குக் கருத்துப்பதிவை ஏற்படுத்தி, அவர்களை ஊக்குவியுங்கள் (மத். 26:41).
சுவிசேஷ செயலாக்கம்: கெத்செமனே தோட்டத்திலிருந்து சிலுவை வரை என்ன நடந்தது என்பதைப் பற்றிய ஒரு தெளிவான சித்திரத்தை முன்வைத்து, கர்த்தராகிய இயேசு நம் சார்பாகப் பாடுபடவும் மரிக்கவும் அவரை நிர்ப்பந்தித்த இந்த நம்பமுடியாத அன்பைத் திரைநீக்குங்கள். சங்கீதம் 22:11-18 இல் காணப்படும் சிலுவையிலுள்ள கர்த்தருடைய பாடுகளின் விவரங்களைப் பேசவும். “இந்த ஒரு சில வரிகளை வாசிக்கிறவர்கள் அனைவரும், கர்த்தராகிய இயேசுவின் சிலுவைமரணம் தங்கள் கண்களுக்கு முன்பாக ஒரு தெளிவான நிஜமாக ஆகிவிடும் வரை, வேதாகமத்திலிருந்து எடுக்கப்பட்ட இந்த வசனங்களைப் பற்றி ஆழ்ந்துச் சிந்திப்பார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். ஐயோ, அவரது மரணமே உலகத்தின் வரலாற்றில் அதி கொடூரமான மரணமாக இருந்தது. அவர் மரித்தது போல் இதுவரை யாரும் மரித்ததில்லை! அவர் எல்லா பாவிகளையும் மீட்பதற்கு மனதுருக்கம் நிறைந்தவராக இருந்ததால், அவர் இத்தகைய ஒரு மரணம் எய்தினார். வாசகர்களே, அக்கினிக் கடலின் தண்டனை உங்களுக்குப் பயத்தை ஏற்படுத்தவில்லை எனில், அவர் சிலுவையில் நிருபித்துக் காட்டிய இந்த அன்பைக் கண்டு நீங்கள் நெகிழ்ந்து, அவரைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” (The Christian (4), Message 3 of Gospel Messages, The Collected Works of Watchman Nee, Volume 6, pp. 678–679). இந்தக் காரியத்தைப் பற்றிய ஒரு முழுமையான சுவிசேஷச் செய்திக்கு, The Christian (4), Message 3 of Gospel Messages, The Collected Works of Watchman Nee, Volume 6, pp. 678–679 ஆகியவற்றையும் பார்க்கவும்.
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.); கர்த்தருடன் ஐக்கியம் கொள்ள ஜெபித்தல் மற்றும் நம் சொந்தத் தேவைகளுக்காவும், பிறரின் தேவைகளுக்காகவும் விண்ணப்பித்தல் (III.E.6.).
பின்புல வாசிப்புக்காக: Life-study of Matthew, Message 69, pp. 793–797; Life-study of Mark, Message 46, pp. 397–399; Life-study of Luke, Message 50, pp. 434–437.
REFERENCES: Life-study of Matthew, Message 69, pp. 793–798; Life-study of Mark, Messages 45–46; Life-study of Luke, Message 50, pp. 434–437; Message 51, p. 439; Life-study of John, Message 42, pp. 505–506; The Christian (4), Message 3 of Gospel Messages (Collected Works of Watchman Nee, Volume 6, pp. 671–679); Authority and Submission, Chapter 1 (Collected Works of Watchman Nee, Volume 47, pp. 109–116); Conferences, Messages, and Fellowship (6), Chapter 181 (Collected Works of Watchman Nee, Volume 46, pp. 1219–1220). Notes on Scriptural Messages (1), Issue No. 16 (Collected Works of Watchman Nee, Volume 17, pp. 111–120).