கிறிஸ்துவின் மரணம், உயிர்த்தெழுதல் மற்றும் பரமேறுதல்

பகுதி 9

✵பாடம் 01 – 09

கர்த்தரின் சிலுவைமரணம் (2)

குறிக்கோள்: தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக எவ்வாறு கர்த்தர் மனமுவந்து தம்மையே மரணத்திற்கென்று ஒப்புக்கொடுத்தார் என்பதைக் காண்பதற்கு.

பொருட்சுருக்கம்: சிலுவைக்குச் செல்வதைப் பற்றி துக்கமாகவோ அல்லது செயலற்றவராகவோ இருப்பதற்குப் பதிலாக, இயேசு தமக்கு முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தை உணர்ந்தறிந்து, தயக்கமின்றி முன்னோக்கிச் சென்றார். அவர் மரித்தாக வேண்டிய காலத்தையும் விதத்தையும் முன்னறிவித்த வேதவாக்கியங்களை நிறைவேற்ற அவர் மனமுவந்து புறப்பட்டுச் சென்றார். சிலுவை என்பது நம் சார்பில் ஒரு சாபமாக ஆக்கப்படுவதைப் பற்றிய ஒரு தீவிரமான விஷயமாக இருந்த போதிலும், சிலுவை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வோர் எதிர்மறையான காரியத்தையும் அகற்றும் என்பதையும், அவரது மனுஷீகத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் தெய்வீக ஜீவன் மரணத்தின் மூலமாக விடுவிக்கப்படும் என்பதையும் இயேசு உணர்ந்தறிந்தார். மேலும், அவரது மரணம் உட்கொணர்ந்த உயிர்த்தெழுதல், கூட்டாக அவரது நித்திய இணைபாதியாக ஆகப்போகும் தேவனுடைய பல குமாரர்களை உற்பத்திசெய்யும். இறுதியில் புதிய எருசலேம் உட்பட தேவனுடைய பொருளாட்சியின் இத்தனை அதிகமான அற்புதமான மற்றும் ஆச்சரியமான காரியங்களும் நிறைவேற்றப்படும் என்பது கர்த்தருடைய மரணத்தின் மூலமாகவே இருந்தது.

பின்புலம்: எபிரெயர் 12:2, இந்தப் பாடத்தின் கருப்பொருளைக் கொடுக்கிறது. இந்த வசனம், “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு…சிலுவையைச் சகித்து” என்று கூறுகிறது. கிறிஸ்து தமக்குமுன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் நிமித்தம் மனப்பூர்வமாய் சிலுவையைச் சகித்துக்கொண்டார். கிறிஸ்து நம்மை நேசித்ததால், அவர் நமக்காக மரித்தார். நாம் கிறிஸ்தவப் பந்தயத்தில் இனியும் தைரியமாகத் தொடர முடியாது என்று நாம் உணரும் போதெல்லாம் இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். நாம் பந்தயத்தை முடித்து, அவருடைய அன்பான மணவாட்டியின் ஒரு பகுதியாக இருக்கக்கூடுமாறு நமக்காக சிலுவையைச் சகித்துக்கொண்ட விசுவாசத்தின் மூலக்காரணராகிய இயேசுவை அப்படிப்பட்ட சமயங்களில் நாம் நோக்கிப் பார்க்க வேண்டும்.

அதிகாரம்: மாற்கு 15.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

அவர் மரிப்பதற்கான நேரம் வந்தபோது, நம் கர்த்தர் ஒரு துக்கமான, எதிர்க்கின்ற அல்லது செயலற்ற வழியில்  கூட சிலுவைக்குச் செல்லவில்லை. அவரது மரணத்தின் மூலமாக தெய்வீகப் பொருளாட்சியில் நிறைவேற்றப்படும் மாபெரும் காரியங்கள் அனைத்தையும் பற்றிய ஒரு முழு உணர்ந்தறிதல் அவருக்குள் இருந்தது. “கர்த்தர் தம்  சகலத்தையும்-உள்ளடக்கிய மரணத்திற்குள் நுழைந்து, அதை நிறைவேற்றுவதே பிரபஞ்சத்தில் உள்ள அதி மாபெரும் அதிசயமாக இருந்தது என்று நாம் கூறக்கூடும். எபிரேயர் 12இன் படி, கர்த்தர் தமக்கு முன்பாக இருந்ததில் மகிழ்ச்சியாக இருந்தார் (வ. 2). அவர் தமக்கு முன்னால் ஒரு சந்தோஷம் இருந்ததை அறிந்திருந்தார். எனவே, அவர் தம் மரணத்தின் மூலமாக தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றக்கூடுமாறு, அவர் எருசலேம் வரை சென்றார். தேவனுடைய பொருளாட்சியில் அது என்னே ஒரு மாபெரும் படியாக இருந்தது” (Life-study of Mark​​, Message 34, p. 303)! முந்தைய பாடம், கர்த்தருடைய மரணத்தின் காட்சியை முன்வைத்தது. இத்தகைய ஒரு மரணத்தை அனுபவிக்க கர்த்தர் ஏன் சித்தமாகவும் ஆர்வமாகவும்கூட இருந்தார் என்பதை இந்தப் பாடம் வெளிப்படுத்துகிறது.

I. தேவனுடைய அடிமையாக இந்த அடிமைஇரட்சகர் மரிக்கத் தயாராக இருந்தார் அதோடு தேவனுடைய மீட்பை நிறைவேற்ற தேவனுடைய சித்தத்திற்கு மனமுவந்துப் பணிந்தடங்கினார்—மாற்கு 14:34-36

“இந்த அடிமை-இரட்சகர் தேவனுடைய ஓர் அடிமையாக இருந்தார், மேலும் இத்தகையவராக அவருக்குத் தம் மரணத்தின் இடம் மற்றும் காலத்தைப் பொறுத்தவரை வேறு எந்தத் தேர்வும் இருக்கவில்லை. இந்த இடம், இந்தக் காலம் ஆகிய இரண்டும் அவரது எஜமானரால் தீர்மானிக்கப்பட்டன. மேலும், இந்த அடிமை-இரட்சகர் யூதத் தலைவர்களிடம் ஒப்படைக்கப்படுவார் என்றும், அவர்களால் நிராகரிக்கப்படுவார் என்றும் தேவத்துவத்தின் திரியேகத்துவத்தின் ஓர் ஆலோசனைக்கூட்டத்தால் தீர்மானிக்கப்பட்டது (அப் 2:23” (Life-study of Mark​​, Message 30, p. 269). இந்த அடிமை-இரட்சகராக, கர்த்தர் இந்த தெய்வீகப் பொருளாட்சியில் தமக்கு நிர்ணயிக்கப்பட்ட பங்கை மனப்பூர்வமாகவும் கீழ்ப்படிதலுடனும் நிறைவேற்றினார், மனுக்குலத்திற்கான ஒப்பற்ற பலியாக மரிப்பதே இந்தப் பங்காக இருந்தது. கர்த்தர் தம் பிதாவின் சித்தத்தைச் செய்வதே தம் போஜனமாக இருந்தது என்றும்கூட கருதினார் (யோவான் 4:34).

A. கர்த்தர் சிலுவையில் அறையப்படுவதற்காக கலிலேயாவிலிருந்து யூதேயாவுக்கு வேண்டுமென்றே வந்தார்—லூக்கா 9:51; மாற்கு 10:1 மற்றும் footnote 1; மாற்கு 10:32

கர்த்தராகிய இயேசு தாம் மரித்தாக வேண்டிய காலத்தையும் விதத்தையும் முன்னறிவித்த வேதவாக்கியங்களை நிறைவேற்ற மனமுவந்து புறப்பட்டுச் சென்றார். “அவர் கலிலேயாவில் சுமார் மூன்று வருடங்கள் ஊழியம் செய்துக்கொண்டு வந்திருந்த பிறகு, இந்த அடிமை-இரட்சகர் திடீரென எழுந்து, தெற்கே, யூதேயாவின் மாகாணத்திற்கும், யோர்தானுக்கு அப்பாலும் சென்றது ஏன் என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும். அவருடைய மரணத்தின் காலம் நெருங்கிக்கொண்டிருந்ததால் அவர் இதைச் செய்தார். தானியல் மூலம் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட ஆண்டில் அவர் மரிக்க வேண்டியிருந்தது. மேலும், பாஸ்கா ஆட்டுக்குட்டியின் மாதிரியின்படி, அவர் பஸ்கா அன்று, அதாவது யூத நாட்காட்டியின் முதல் மாதத்தின் பதினான்காம் நாளில் மரிக்க வேண்டியிருந்தது” (Life-study of Mark​, Message 30, p. 269). கர்த்தர் தம்மைப் பற்றிய மாதிரிகளையும் தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்ற வேண்டியிருந்தது. இதற்கு அவர் ஒரு கண்டிப்பான அட்டவணையைக் கைக்கொண்டு, பற்பல விஷயங்களை ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது. “அவர் இன்ன ஆண்டு, மாதம், நாள் ஆகியவற்றை அறிந்திருந்தார். அவர் தாம் பஸ்கா அன்று மரணத்திற்குட்படுத்தப்படுவார் என்பதை அறிந்திருந்தார்….இதை அறிந்த அவர், தாமதிக்கப்பட விரும்பாமல், தைரியமாக யூதேயாவுக்குச் சென்றார். பஸ்காவுக்கு நான்கு நாட்களுக்கு முன்பு அவர் தாம் எருசலேமில் இருப்பது அவசியமானதாக இருந்தது என்பதை அறிந்திருந்தார். அதுவே பஸ்கா ஆட்டுக்குட்டி பரிசோதிக்கப்பட்ட கால அளவாக இருந்தது. கர்த்தராகிய இயேசு தம் மரணத்தைப் பற்றிய எல்லா தீர்க்கதரிசனங்களையும் மாதிரிகளையும் நிச்சயமாகவே அறிந்திருந்தார். குறிப்பாக, அவர் தாம் சீயோன் மலைக்கான மற்றொரு பெயராகிய மோரியா மலையில் சிலுவையிலறையப்படுவார் என்பதை அறிந்திருந்தார். அவர் கலிலேயாவில் சிலுவையில் அறையப்படக்கூடாது என்பதைக் கர்த்தர் அறிந்திருந்தார். அவர் மோரியா மலையில், அதாவது ஆபிரகாம் ஈசாக்கைக் காணிக்கையிட்டு தேவனுடைய வழங்கீட்டைப் பெற்ற சாட்சாத்து இடத்திலேயே சிலுவையில் அறையப்படுவது அவசியமானதாக இருந்தது. கர்த்தர் தாம் சிலுவையில் அறையப்படுவதன் மூலம், அதாவது எண்ணாகமம் 21:8-9இல் உள்ள வெண்கல சர்ப்பத்தால் மாதிரியாகக் காட்டப்பட்டபடி ஒரு கம்பத்தின் மீது உயர்த்தப்படுவதன் மூலம் மரணத்திற்குட்படுத்தப்படுவார் என்பதையும் அறிந்திருந்தார்  (Life-study of Mark, Message 30, pp. 270–271). கர்த்தர் வேதவாக்கியங்களை நிறைவேற்றுவதற்கு இத்தனை அதிகமான விவரங்களை ஒருங்கிணைப்பதைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

B. சிலுவையில் அறையப்படுவதற்கான தேவனுடைய சித்தத்தின் பாத்திரத்தைக் கர்த்தர் ஏற்றுக்கொண்டார்—மாற்கு 14:36

சிலுவை என்பது  நம் சார்பில் ஒரு சாபமாக ஆக்கப்படுவதைப் பற்றிய ஒரு தீவிரமான காரியமாக இருந்தது என்றாலும், அது தமக்கான தேவனுடைய சித்தமாக இருந்தது என்பதை இயேசு உணர்ந்தறிந்தார். கெத்செமனே தோட்டத்தில் கர்த்தர் தாம், பிதாவின் சித்தத்தில் தமக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் “பாத்திரத்தில்” பானம்பண்ணக்கூடுமாறு ஜெபித்தார் (மத். 26:39, 42; லூக்கா 22:42). கர்த்தர் பாடநுபவித்து மரிக்க சிலுவைக்குச் செல்ல விரும்பவில்லை, ஆயினும் அவர் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிந்து, தமக்காக ஆயத்தப்படுத்தப்பட்ட இந்தப் பாத்திரத்தைப் பெற்றார். கர்த்தர் எப்போதும் பிதாவின் சித்தத்திற்குப் பணிந்தடங்குகிறவராக இருந்தார், மேலும் அவர் பாத்திரத்தில் பானம்பண்ணுவது—சிலுவையில் மரணத்தை அநுபவிப்பது—பிதாவின் சித்தமாக இருந்தால் மட்டுமே அவர் அவ்வாறு செய்வார். தம் ஜெபத்திற்குப் பிறகு, இயேசு தம்மையே நம் பாவங்களுக்கான ஒப்பற்ற பலியாகக் காணிக்கையாக்குவதன் மூலம் பிதாவின் சித்தத்தை நிறைவேற்ற புறப்பட்டுச் சென்றார் (எபி. 10:5-7; லூக்கா 22:37). (இந்தக் குறிப்பைப் பற்றிய அதிகமான விவரங்களுக்கு பாடம் 2ஐப் பார்க்கவும்.)

II. கர்த்தர் தமக்கு முன்பாக வைக்கப்பட்ட சந்தோஷத்தின் நிமித்தம் சிலுவையைச் சகித்துக்கொண்டு, அவமானத்தை அற்பமாய் எண்ணினார்—எபி. 12:2.

சிலுவையில் பாவமாக்கப்படுவதும் (2 கொரி. 5:21), எல்லாவற்றின் சார்பாகவும் மரணத்தை ருசிபார்ப்பதும் (எபி. 2:9) சந்தோஷமான காரியங்களாக இருக்கவில்லை. இருப்பினும், வெறும் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் கீழான அவரது பாடநுபவிக்கும் மரணத்தைத் தவிர வேறு ஒன்று அவருக்கு முன்பாக இருந்தது என்பதை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும். கர்த்தராகிய இயேசுவுக்கு, தம் சிலுவை சொல்லமுடியாத மகிமையான ஒன்றைச் சாதிக்கவும் செய்யும் என்ற சந்தோஷமான எதிர்பார்ப்பு இருந்தது. சிலுவை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வோர் எதிர்மறையான காரியத்தையும் அகற்றும் என்பதையும், தம் மனுஷீகத்தில் மறைத்துவைக்கப்பட்டிருக்கும் தெய்வீக ஜீவன் மரணத்தின் மூலமாக விடுவிக்கப்படும் என்பதையும் இயேசு உணர்ந்தறிந்தார். மேலும், அவர் தம் மரணம் தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றுவதற்காக தேவனுடைய சித்தத்தைச் சாதிக்கும் என்பதை உணர்ந்தறிந்தார்.

A. கர்த்தர், பிரபஞ்சத்தில் உள்ள எல்லா எதிர்மறையான காரியங்களும் தம் மரணத்தின் மூலமாக அழிக்கப்பட்டு அகற்றப்படும் என்பதை உணர்ந்தறிந்தார்—எபி. 2:14; யோவான் 1:29; ரோ. 8:3; 1 கொரி. 15:45; எபே. 2:14-16

பாவம், பாவங்கள், சாத்தான், உலகம், பழைய, விழுந்துபோன சிருஷ்டிப்பு உட்பட பிரபஞ்சத்தில் உள்ள எல்லா எதிர்மறையான பிரச்சினைகளையும் அவரது மரணம் அகற்றும் என்பதைக் கர்த்தர் உணர்ந்தறிந்தார். சிலுவையில் கிறிஸ்துவின் மரணத்தால் என்னே ஒரு மாபெரும் சுத்திகரிப்பு நிறைவேற்றப்பட்டது! மக்களைப் பிளவுபடுத்திய பிரிவினையின் நடுச்சுவர் கூட அவரது சிலுவையின் மூலமாக அழிக்கப்பட்டது.

B. கர்த்தர் தம் தெய்வீக ஜீவனும் மகிமையும் தம் மரணத்தின் மூலமாக விடுவிக்கப்படும் என்பதை உணர்ந்தறிந்தார்—யோவான் 12:23; 17:1

“கர்த்தர் தாம் கடந்துசென்ற ஞானஸ்நானமாக இருந்த அவரது சிலுவைமரணம் மூலமாகக் கர்த்தருடைய மனுஷீகத்தின் ஓடு உடைக்கப்பட்ட போது, அவரது தெய்வீகத்தின் மூலக்கூறுகள் அனைத்தும்—அவரது தெய்வீக ஜீவனும், அவரது தெய்வீக மகிமையும்—விடுவிக்கப்பட்டன. லூக்கா 12:50 இல் கர்த்தராகிய இயேசு, ‘நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்’ என்று கூறினார். கர்த்தரின் சிலுவைமரணமே அவரது ஞானஸ்நானமாக இருந்தது. அவர் விடுவிக்கப்படுவதற்காக ஞானஸ்நானம் பண்ணப்பட, சிலுவையில் அறையப்பட ஏங்கினார். அவர் தம் மாம்சத்தில் அழுத்தப்பட்டு, நெருக்கப்பட்டார், மேலும் அவர் தம் மரணத்தின் ஞானஸ்நானத்தால் விடுவிக்கப்பட வாஞ்சித்தார். அவரது மரணத்தால் அவரது மனுஷீகத்தின் ஓட்டை உடைத்ததன் மூலமாக, அவரது மகிமை விடுவிக்கப்பட்டது. அவர் விடுவிக்கப்படுதல் என்பது அவர் மகிமைப்படுத்தப்படுதலாக இருந்தது. அவரது மரணமே அவரது விடுவித்தலாக இருந்தது என்பதால் நாம் கிறிஸ்துவை அவரது மரணத்திற்காகத் துதிக்க வேண்டும் (​​The Issue of Christ being Glorified, Chapter 2, pp. 15–16).

C. கர்த்தர் தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, பிதாவை மகிமைப்படுத்த தேவனுடைய பல குமாரர்கள் உற்பத்திசெய்யப்படுவார்கள் என்பதை உணர்ந்தறிந்தார்—யோவான் 12:23-24

கர்த்தர் தம் மரணத்தின் மூலமாக, பல சகோதரர்களை உற்பத்திசெய்வதற்கான தம் தெய்வீக ஜீவன் விடுவிக்கப்படும் என்பதை உணர்ந்தறிந்தார் (யோவான் 12:23-24; ரோ. 8:29). தம் மரணத்திற்கு முன், இயேசு ஜீவனின் ஒரே “கோதுமை மணியாக” தனியாக தங்கியிருந்தார் (யோவான் 12:24). தனியாகவே இருந்துவிடக்கூடாது என்பதற்காக, இந்த ஒரே கோதுமை மணி மண்ணில் விழுந்து, மரிக்க வேண்டியிருந்தது. தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, கர்த்தர் பல சகோதரர்களுக்குள் முதற்பேறானவராக ஆனார். என்னே ஒரு சந்தோஷமான எதிர்பார்ப்பு!

D. கர்த்தர் தம் மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலமாக, அவரது மணவாட்டியாகிய சபை உற்பத்திசெய்யப்படும் என்பதை உணர்ந்தறிந்தார்—எபே. 5:25

ஏவாள் ஆதாமிலிருந்து உருவாக்கப்படும் மாதிரியில் இருப்பதைப் போலவே, அவர் சிலுவையில் “நித்திரைப்பண்ணுகையில்” சபை அவரிலிருந்து உருவாக்கப்படும் என்பதைக் கர்த்தர் உணர்ந்தறிந்தார். அவரது மரணத்தில், ஒரு படைவீரன் அவரது விலாவில் (பக்கத்தில்) துளைத்தான், அப்போது இரத்தமும் தண்ணீரும் புறப்பட்டது. இரத்தம் மீட்பிற்காக இருந்தது, மேலும் தண்ணீர் அவரது சாட்சாத்து ஜீவனை அடையாளப்படுத்தியது, இதைக் கொண்டுதான் சபை உற்பத்திசெய்யப்பட்டது. கர்த்தர் தாம் சிலுவையில் மரித்தபோது சபையைக் கண்ணோட்டத்தில் கொண்டிருந்தார். “கிறிஸ்து…சபையை நேசித்து, தம்மைத்தாமே அவளுக்காக ஒப்புக்கொடுத்ததுபோல” (5:25). சபையில் உள்ள உறுப்பினர்களாக நாம் இதைத் தனிப்பட்ட ரீதியில் நமக்கு நாமே பிரயோகிக்கவும் செய்யலாம். பவுல், “[கிறிஸ்து] என்னில் அன்புகூர்ந்து எனக்காகத் தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்[தார்]” என்றும் கூறினான் (கலா. 2:20). கிறிஸ்து தாம் சிலுவையில் மரித்தபோது நம் ஒவ்வொருவரையும் கண்ணோட்டத்தில் வைத்திருந்தார்.  நமக்காக மரிக்கும்படி தேவன் தம் ஒரேபேறான குமாரனை அனுப்புகிற அளவுக்கு அவர் நம்மை இவ்வளவு அதிகமாய் நேசித்தார் (யோவான் 3:16).

III. கர்த்தரின் மரணம், இறுதியில் புதிய எருசலேமை முழுநிறைவேற்றமடையச் செய்யப்போகும் தேவனுடைய பொருளாட்சியின் இத்தனை அதிகமான அற்புதமான மற்றும் ஆச்சரியமான காரியங்களை நிறைவேற்றியது.

புதிய எருசலேம் என்பது கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய எல்லாவற்றின் முழுநிறைவேற்றமாகும். அவரது மரணம் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எல்லா எதிர்மறையான காரியங்களையும் தீர்த்துக்கட்டி அகற்றியது. அவரது மரணம் அவரது தெய்வீக ஜீவனையும் மகிமையையும் விடுவித்து, பிதாவை மகிமைப்படுத்துவதற்கான தேவனுடைய பல குமாரர்களை உற்பத்திசெய்தது. மேலும், சிலுவையில் அவரது மரணம் அவரது மணவாட்டியாகிய சபையை உற்பத்திசெய்தது. இறுதியில் புதிய எருசலேம் கர்த்தருடைய மரணத்தின் உச்சநிலையான கனியாக உற்பத்திசெய்யப்படுகிறது.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இளம் வாலிபர்களுடன் சேர்ந்து மாற்கு 15 ஐ வாசித்து, சிலுவையில் அறையப்படுவதற்கான கர்த்தருடைய  சித்தமுள்ளத்தன்மையைச் (சித்தமுடைமையைச்) சுட்டிக்காட்டவும். மாற்கு 15:4-5 இல் எவ்வாறு கர்த்தர் தம்மையே தற்காத்துக் கொள்வதற்கான எதையும் பதிலளிக்கவில்லை என்பதைக் காட்டுங்கள். (வலி நிவாரணத்திற்காக) வெள்ளைப்போளம் கலந்த திராட்சைரசத்தை அவர்கள் அவருக்கு வழங்கியபோது, அவர் அதை எடுத்துக்கொள்ளவில்லை என்பதையும் காட்டுங்கள். கர்த்தர் தம் மரணத்தை எதிர்கொண்ட விதம், நாம் மரணத்தை எதிர்கொள்வது போன்று இருக்கவில்லை. அவரைப் பொறுத்தவரை, இது பூமிக்கு வருவதற்கான,, அதாவது மீட்பை நிறைவேற்றி, தம் ஜீவனை விடுவிப்பதற்கான அவரது குறிக்கோளின் உச்சக்கட்டமாக இருந்தது (மாற்கு 10:45; யோவான் 12:24). இந்தக் குறிக்கோள் அவரைச் சிலுவைக்குத் தள்ளியது. பாடநுபவித்தல் மற்றும் மரணம் என்னும் விலைக்கிரயத்தைச் செலுத்தியும்கூட அவர் தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றச் சித்தமாயிருந்த அளவிற்கு, அவர் தேவனுக்காகவும், தேவனுடைய குறிக்கோளுக்காகவும் மிகவும் அதிகமாக இருந்தார். அதனால்தான் வேதாகமம், “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு…சிலுவையைச் சகித்து” என்று கூறுகிறது (எபி. 12:2). இந்தப் பாடத்தில் நாம், கர்த்தர் எளிதான வழியைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதை இளம் வாலிபர்களுக்குக் காட்ட விரும்புகிறோம். அவர் தப்பிக்கத் தேர்வுசெய்யவில்லை, மேலும் அவர் தம்மையே தற்காத்துக்கொள்வதற்கான எதையும் பதிலளிக்கவில்லை. மாறாக, தேவனுடைய குறிக்கோளுக்காக, அவர் தேவனுடைய சித்தத்தைச் செய்யத் தெரிந்துக்கொண்டார். இன்று பெரும்பாலும் அடிக்கடி, இளம் வாலிபர்கள் பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான அதி எளிதான வழியைத் தேடுகிறார்கள். சிலர் அவற்றிலிருந்து தப்பிக்க பொய் சொல்லும் அளவிற்கும்கூட வரம்புமீறிச் செல்கிறார்கள். இது கர்த்தருடைய வழியாக இருக்கவில்லை. நமக்காக சிலுவைக்குச் சென்று, மரணத்தை அநுபவிப்பதற்கான முழுப் பொறுப்பையும் அவர் தைரியமாகவும் மனப்பூர்வமாகவும் ஏற்றுக்கொண்டார். இத்தகைய ஒருவர்தான் தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்ற ஆவியானவராக இப்போது நம்மில் வாழ்ந்தும், வேலைசெய்தும் வருகிறார். இது பெரும்பாலும், நாம் கடினமான பாதையை எடுக்கும்படி நம்மிடம் கோருகிறது. தேவனுடைய சித்தம் கடினமானதாக இருந்தாலும்கூட, நாம் அதைச் செய்ய சித்தமாய் இருக்கிறோமா? தேவனுக்காகவும், அவரது குறிக்கோளுக்காகவும் கடினமான வழியைத் தேர்ந்தெடுக்க நாம் சித்தமாய் இருக்கிறோமா? வேதாகமம், “தேவனே தம் நல்லின்பத்திற்காக விருப்பத்தையும் செய்கையையும் உங்களில் கிரியைசெய்கிறவராயிருக்கிறார்” என்று நமக்குச் சொல்கிறது (பிலி. 2:13, கிரே.). எந்த விலைக்கிரயம் செலுத்தியும் தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றச் சித்தமாயிருப்பதற்குக் கர்த்தரிடமிருந்து கற்றுக்கொள்ளும்படி இளம் வாலிபர்களை உற்சாகப்படுத்தவும். நாம் இவ்வாறு ஜெபிக்கலாம், “கர்த்தாவே, உம் சித்தத்தைச் (விருப்பத்தைச்) செய்ய நீர் என்னில் கிரியைசெய்கின்றீர். கர்த்தாவே, எனக்கு உம் பலப்படுத்துதல் தேவை. ஆமென்.”

சுவிசேஷ செயலாக்கம்: கர்த்தராகிய இயேசு சிலுவையில் மரித்தபோது, தேவனுடைய நியாயப்பிரமாணத்தின் நீதியான கோரிக்கையை திருப்திப்படுத்துவதற்கும், பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து மனிதனை விடுவிப்பதற்குமான இந்தச் சட்டப்பூர்வ அவசியத்தால் அவர் ஊக்கப்படுத்தப்பட்டது மட்டுமல்லாமல். தம் மணவாட்டியாக இருப்பதற்கான சபையை உற்பத்திசெய்வதற்கும், விலைக்குவாங்குவதற்கும், பரிசுத்தப்படுத்துவதற்கும் தம்மையே ஒப்புக்கொடுக்க அவர் அன்பாலும் ஊக்கப்படுத்தப்பட்டார் (மத். 5:17; ரோ. 7:22-24; 8:1–4; அப். 20:28; எபே. 5:25–27, 32). ஆம், அவர் உங்களை இரட்சிக்கவும், உங்களை தம்மிடமே திரும்ப மீட்டுக்கொள்ளவும், உங்களை ஜீவனால் நிரப்பவும் அவர் உங்களுக்காக மரித்தார், ஆனால் அவர் உங்களை நேசிப்பதாலும் அவர் உங்களுக்காக மரித்தார். அவரது சந்தோஷம், அவரது வாஞ்சை (விருப்பம்), தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட ஒரு மணவாட்டியைப்போல (மணவாட்டியாக) உற்பத்திசெய்யப்பட்டு, ஆயத்தமாக்கப்பட சபையைப் பெறுவதே ஆகும் (வெளி. 21:2).  “ஆகையால் [நாம்]….பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கி நிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்” (எபி. 12:1–2). இன்றைய நற்செய்தி என்னவெனில், நமக்காக மரணத்தை அநுபவிப்பதற்கான கர்த்தருடைய சித்தமுள்ளத்தன்மை (சித்தமுடைமை) காரணமாக, நீங்கள் பாரமான யாவற்றையும், பாவத்தையும் அகற்றிப்போடுவது மட்டுமல்லாமல், உங்களை நேசித்து, உங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்த இத்தகைய ஒரு வசீகரமானவரை நீங்கள் நோக்கிப் பார்க்கவும் முடியும் (கலா. 2:20). அவரைப் பெறுவதற்குத் திறந்துக்கொடுத்து, பிரபஞ்சத்தில் உள்ள மிகப் பெரிய காதல் கதையில் சேருங்கள்.

மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் பற்றிய ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.).

பின்புல வாசிப்பு: Life-study of Mark, Messages 32, 46–49; Life-study of Luke, Message 42, p. 362.

REFERENCES: Life-study of Mark, Messages 30, 32, 34, 46–49; Life-study of Luke, Message 42, p. 362; Mark 10:1, footnote 1; The Issue of Christ Being Glorified, Chapter 2, pp. 15–16.