வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 08
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
உவமைகளில் கிறிஸ்துவின் போதனை (2)
குறிக்கோள்: சபை வாழ்க்கையில் நாம் தேவனை நோக்கிய ஒரு நேர்த்தியான இருதயத்தைக் கொண்டிருக்கவும், தேவனுடைய ஆவியானவரால் நிரப்பப்படவும், தேவனுக்கான நம் சேவையில் உண்மையுள்ளவர்களாக இருக்கவும் வேண்டும் என்பதைக் கற்பதற்கு.
பொருட்சுருக்கம்: இந்தப் பாடத்தில் நாம் மத்தேயு சுவிசேஷத்திலிருந்து மூன்று உவமைகளைப் பற்றி பேசுவோம்—விதைக்கிறவன் பற்றிய உவமை (மத். 13:3–9, 18–23), விழித்திருத்தலுக்கான உவமை (மத். 25:1–13), உண்மைத்தன்மைக்கான உவமை (மத். 25:14–30). விதைக்கிறவன் பற்றிய உவமையில் கர்த்தராகிய இயேசு, தேவனுடைய வார்த்தை நம்மில் கனிக்கொடுக்கக்கூடுமாறு அதைப் பெற்றுக்கொள்ள நமக்கு நல்ல மண்ணாகிய (நிலம்) ஒரு நேர்த்தியான இருதயம் தேவை என்பதை நமக்குக் காட்டுகிறார். விழித்திருத்தலுக்கான உவமையில் அவர், நம் முழு ஆள்தத்துவத்திலும் தேவனுடைய ஆவியானவரைக் கொண்டு எப்போதும் நிரப்பப்படுவதன் மூலம் அவரது வருகைக்குத் தயாராக இருக்கும்படி நமக்குப் போதிக்கிறார். உண்மைத்தன்மைக்கான உவமையில் கர்த்தராகிய இயேசு, அவரது வருகையில் அவரால் வெகுமதியளிக்கப்படுவதற்கு நாம் அவருக்கான நம் சேவையில் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று நமக்குப் போதிக்கிறார். இந்த மூன்று உவமைகளும் நம் இருதயத்தையும், நம் வாழ்க்கையையும், நம் சேவையையும் தொடுகின்றன, இவை அனைத்தும் நாம் சபை வாழ்க்கையில் கிறிஸ்துவை வாழும் நம் வாழ்க்கையின் உயிர்நாடி அம்சங்களாக உள்ளன.
பின்புலம்: எவ்வளவு அதிகமாக ஒருவன் மனித வாழ்க்கையிலும், கிறிஸ்தவ வாழ்க்கையிலும் முன்னேறுகிறானோ, நம் கணம்தோறுமான தினசரி வாழ்க்கையில் நாம் எதிர்கொள்ளும் இரண்டு மறைவான போர்க்களங்கள் உள்ளன என்பதை அவ்வளவு அதிகமாக ஒருவன் உணர்ந்தறிகிறான். ஒரு போர்க்களம் நம் இருதயம் என்னும் போர்க்களம், மற்றொரு போர்க்களம் நம் நேரம் என்னும் போர்க்களம். நம் இருதயம் கர்த்தருக்கு மிக முக்கியமானது, நம் நேரமும் அவருக்கு மிக முக்கியமானது, ஆனால் நாம் பயிற்சிசெய்யாமலும், விழித்திருக்காமலும் இருந்தால் இந்த இரண்டும் எதிரியால் பாழாக்கப்பட்டு விரயமாக்கப்படலாம். நாம், “கர்த்தாவே என் இருதயத்தை உம்மை நோக்கி மென்மையாகக் காத்துக்கொள்ளும், என் நேரத்தை உமக்காகக் கிடைக்கக்கூடியதாக்கும்” என்று ஜெபிக்கலாம். மத்தேயு 13 இல் (இருதயத்தைப் பற்றியும்) மற்றும் மத்தேயு 25 இல் (நேரத்தை மீட்டுக்கொள்வதற்கான ஒரு புத்தியுள்ள கன்னிகையாக இருப்பதைப் பற்றியும்) உள்ள உவமைகளின் விவரணங்கள் ஒவ்வோர் இளம் வாலிபரின் இருதயமும் நேரமும் கர்த்தருக்குப் படிப்படியாகக் கிடைக்காதபடி பண்ணும் காரணிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்கான வலுவான ஆற்றலைக் கொண்டுள்ளன.
அதிகாரங்கள்: மத்தேயு 13, 25.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
பாடம் 15, லூக்கா சுவிசேஷத்தைச் சேர்ந்த உவமைகளைப் பற்றி பேசியது, அப்படியிருக்க இந்தப் பாடம் மத்தேயு சுவிசேஷத்தைச் சேர்ந்த உவமைகளைப் பற்றி பேசுகிறது. இந்தப் பாடத்தில் உள்ள மூன்று உவமைகளும் நம் இருதயத்தையும், நம் வாழ்க்கையையும், நம் சேவையையும் தொடுகின்றன, இவை அனைத்தும் நாம் சபை வாழ்க்கையில் கிறிஸ்துவை வாழும் நம் வாழ்க்கையின் உயிர்நாடி அம்சங்களாக உள்ளன. இந்தப் பாடத்தை இரண்டு வாரங்களாகப் (மத்தேயு 13 பற்றி ஒரு வாரமும், மத்தேயு 25 பற்றி இன்னொரு வாரமுமாக) பிரித்தல், இந்தப் பாடத்தில் செய்திக்குறிப்பாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட குறிப்புகளில் அதிக நேரம் செலவிட உங்களை அனுமதிக்குமா என்பதைப் பரிசீலிக்க நீங்கள் மீண்டும் விரும்பக்கூடும்.
I. விதைக்கிறவன் பற்றிய உவமையில் கர்த்தர், தேவனுடைய வார்த்தையைப் பெற ஒரு நேர்த்தியான இருதயத்தைக் கொண்டிருப்பதற்கான நம் தேவையைக் குறித்து போதித்தார்—மத். 13:3–9, 18–23
இந்த முதல் உவமையில், கர்த்தர் நம் இருதயத்தைத் தொடுகிறார். நம் ஆவியே கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்ளும் உறுப்பு, ஆனால் நம் இருதயம் கிறிஸ்துவை வளர்க்கும் மண். இந்த இருதயம் நம் மனம், உணர்ச்சி, சித்தம் மற்றும் மனச்சாட்சியால் தொகுக்கப்பட்டுள்ளது.
A. கர்த்தர் விதைப்பவராக தம்மையே ஜீவனின் விதையாக (வார்த்தை) விதைக்கிறார்—மத். 13:3, 19–23; யோவான் 10:10; மாற். 4:14; யோவான் 6:68
இங்கே, கர்த்தர் ஒரு போதகருக்கு அல்ல, மாறாக ஒரு விதைப்பவனுக்கு ஒப்பிடப்படுகிறார். விதைப்பவராக, அவரே ஜீவனை விநியோகிப்பவர் (யோவான் 10:10), தம்மையே ஜீவ-விதையாக நமக்குள் பகிர்ந்தளிிக்கின்றார். இந்த ஜீவ-விதை என்பது மண்ணாகிய நம் மனித இருதயத்திற்குள் விதைக்கப்படும் வார்த்தையே ஆகும் (மாற். 4:14). நாம் ஒரு செய்திக்குச் செவிசாய்க்கும்போது, வெளித்தோற்றத்தில் நாம் வெறுமனே போதனைக்குச் செவிசாய்க்கிறோம்; உண்மையில் கர்த்தர் தம் ஜீவனை நமக்குள் விதைக்கின்றார்.
B. இந்த விதை நான்கு வகையான மண்ணில் (இருதயங்களில்) விழுகிறது—மத். 13:4–8, 19–23
“ஒரே ஒரு வகையான விதை மட்டுமே உள்ளது; வித்தியாசம் மண்ணில் உள்ளது. நீங்கள் எந்த வகையான மண் என்பது உங்களால் தீர்மானிக்கப்படுகிறது; [நல்ல மண்ணாக] இருக்கும்படி உங்களை யாரும் வலுக்கட்டாயப்படுத்த முடியாது” (The Collected Works ofWatchman Nee, Volume 15, Chapter 13, p132). இந்த எளிய ஆயினும்கூட கருத்தாழமிக்க உவமையின் மூலம் நம் இருதயத்தின் நிஜமான சூழ்நிலையை அம்பலப்படுத்துகிறார்.
- வழியருகேயுள்ள இருதயம் உலகத்துக்குரிய போக்குவரத்தால் கடினமாக்கப்பட்டுள்ளது, இதனால் பறவைகள் வந்து, ஜீவ வார்த்தையைப் பறித்துக்கொள்கின்றன—மத். 13:4, 19
இந்த வகையான இருதயம் (கல்வி, வர்த்தகம், அரசியல், அறிவியல், வணிகம், நம்மை ஆக்கிரமித்து நம் மனம், உணர்ச்சி, சித்தம் ஆகியவற்றிற்குள் முன்னும் பின்னுமாகச் செல்லும் பிற வகையான போக்குவரத்து ஆகியவற்றை அடையாளப்படுத்தும்) உலகத்துக்குரிய போக்குவரத்தால் கடினமாக்கப்படும் அளவிற்கு சாலைக்கு மிக அருகாமையில் இருக்கும் மண்ணால் அடையாளப்படுத்தப்படுகிறது. இதன் விளைவாக, இந்த விதை (வார்த்தை) ஒருவரின் இருதயத்தை ஊடுருவ முடிவதில்லை. இந்த வகையான இருதயத்தைக் கொண்டவர்கள் ஆவியில் ஏழ்மையானவர்களாயும், இருதயத்தில் தூய்மையானவர்களாயும் இல்லை, மாறாக மற்ற விஷயங்களால் முன்-ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனர்.
- வேர்விடுவதிலிருந்து வார்த்தைக்கு இடையூறுசெய்யும் கற்பாறைகளாக மேலோட்டமான இருதயத்திடம் மறைவான பாவங்களும், தனிப்பட்ட ஆசைகளும், சுய-தேடுதலும், சுய- பரிதாபமும் இருக்கின்றன—மத். 13:5–6, 20–21
மேலோட்டமான இருதயத்திடம் மண்ணுக்கு அடியில் மறைந்திருக்கும் கற்பாறைகள் உள்ளன. இந்தக் கற்பாறைகள் (மறைவான பாவங்களும், தனிப்பட்ட ஆசைகளும், சுய-தேடுதலும், சுய- பரிதாபமும், கோபமும், இச்சைகளும், மாம்சமும், நம் இருதயத்தில் உள்ள மற்ற எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும்) ஜீவனின் வளர்ச்சிக்கு இடையூறுசெய்கின்றன. நமக்குள் இருக்கும் இவை எல்லாவற்றையும் கர்த்தர் தோண்டி எடுப்பாராக.
- முள்ளுள்ள இருதயத்திடம் இந்த யுகத்தின் கவலைகளும், செல்வங்களின் வஞ்சனையும் முட்களாக உள்ளன, இவை வார்த்தையை நெருக்கிப்போட்டு திணறடிக்கின்றன, அதைப் பலனற்றதாக ஆக்குகின்றது—மத். 13:7, 22
முட்கள் இயற்கையாகவே, விதைக்க வேண்டிய எந்த அவசியமும் இன்றி வளர்ந்து, ஜீவ விதையை நெருக்குகின்றன. இறுதியில் இந்த முட்கள் (கவலைகளும், செல்வங்களின் வஞ்சனையும்) வார்த்தையை நெருக்கிப்போட்டுத் திணறடிக்கின்றன. நாம் தேவனுடைய வார்த்தைக்கு நமக்குள் தளத்தைக் கொடுக்க வேண்டும் அதோடு அது நெருக்கிப்போட்டுத் திணறடிக்கப்பட அனுமதிக்கக்கூடாது. எதிர்காலத்தைப் பற்றிய கவலைகளும், செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற ஆவல்களும், நம் இருதயம் பல “முட்களால்” நெருக்கப்பட மட்டுமே அனுமதிக்கின்றன அதோடு தேவனுடைய வார்த்தை வளர்வதற்கான எந்தத் தளத்தையும் விட்டுவைப்பதில்லை. நாம் எதைக் குறித்தும் கவலைப்பட எந்தக் காரணமும் இல்லை (பிலி. 4:6–7; மத். 6:25–34) அதோடு செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற ஆவலின் கண்ணிக்குள் விழுந்துவிடக்கூடாது (1 தீமோ. 6:9–10). கர்த்தர் நம் தேவைகள் அனைத்தையும் பூர்த்திசெய்வார் (எபி. 13:5–6).
- நல்ல இருதயம் என்பது இந்த வார்த்தை வளர்ந்து, கனிகொடுக்கக்கூடுமாறு, இந்த வார்த்தையைப் பெற்றுக்கொள்வதற்காக அதன் தளத்தின் ஒவ்வோர் அங்குலத்தையும் தரும் இருதயம் ஆகும்—மத். 13:8, 23
நல்ல இருதயம் என்பது தேவனுக்காக தூய்மையாகவும், ஒற்றையாகவும், முற்றும்முடியதாகவும் இருக்கும் ஓர் இருதயம் ஆகும். இதற்கு எந்த உலகப் போக்குவரத்தும், மறைவான பாவங்களும், தனிப்பட்ட ஆசைகளும், சுய-தேடுதலும், சுய- பரிதாபமும், இந்த யுகத்தின் கவலைகள் மற்றும் செல்வங்களின் வஞ்சனையால் ஜீவ-விதையை நெருக்கிப்போட்டு திணறடித்தலும் இல்லை. இந்த எதிர்மறையான உருப்படிகள் அனைத்தும் ஒரு நபரின் இருதயத்தை தேவனுடைய குறிக்கோளுக்காகக் கிடைக்கக்கூடாதபடி பண்ணும் அவனுக்குள் சாத்தானின் வேலையின் விளைவாக உள்ளன. எனினும், நல்ல மண்ணாகிய (நிலம்) நல்ல இருதயம் தன் தளத்தின் ஒவ்வோர் அங்குலத்தையும் ஜீவனின் வார்த்தைக்குக் கொடுக்கிறது. இதன் விளைவாக, இந்த வார்த்தை வேரூன்றி, வளர்ந்து, விசுவாசிக்குள் கனிக்கொடுக்கிறது. கர்த்தரால் இந்த இருதயத்தில் நன்றாக வளர மட்டுமே முடியும். கர்த்தருடைய உவமை, நம் ஆள்தத்துவத்தின் ஒவ்வோர் அங்குலத்தையும் ஜீவனுடைய வார்த்தையின் பகிர்ந்தளித்தலுக்குக் கொடுக்கும்படி நம்மை ஏவுவதாக.
II. பத்துக் கன்னிகைகள் பற்றிய உவமையில், நாம் கர்த்தருடைய வருகைக்குத் தயாராக இருக்குமாறு விழித்திருத்தலைப் பற்றி கர்த்தர் போதித்தார்—மத். 25:1-13
விழித்திருத்தலுக்கான உவமையில் கர்த்தர், நம் முழு ஆள்தத்துவத்திலும் தேவனுடைய ஆவியானவரைக் கொண்டு எப்போதும் நிரப்பப்படுவதன் மூலம் (மத். 25:4) அவரது வருகைக்குத் தயாராக இருக்கும்படி நமக்குப் போதிக்கிறார் (மத். 25:10). இந்த உவமையில் உள்ள மணவாளன் அதி இனிமையான மற்றும் கவரக்கூடிய நபராகிய கிறிஸ்துவே (யோவான் 3:29; மத். 9:15), மேலும் இந்தக் கன்னிகைகள் கிறிஸ்துவுக்கு நிச்சயிக்கப்பட்டவர்களாக உள்ளனர் (2 கொரி. 11:2). கன்னிகைகளில் பத்து பேரும் தங்கள் விளக்குகளில் (தங்கள் ஆவி—நீதி. 20:27) எண்ணெய் (ஆவியானவர்—ரோ. 8:16) வைத்திருக்கின்றனர், ஆகவே மறுபடிஜெநிப்பிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்களில் அனைவருமே கர்த்தருடைய வருகைக்குத் தயாராக இல்லை. தங்கள் பாத்திரத்தில் (தங்கள் ஆத்துமா) கூடுதலான பங்கு எண்ணெய் வைத்திருக்கும் புத்தியுள்ள கன்னிகைகள் ஐந்து பேர் மட்டுமே மணவாளனைச் சந்திக்கத் தயாராக உள்ளனர்.
A. புத்தியல்லாத கன்னிகைகள் ஐந்து பேர் தங்கள் ஆத்துமாவில் (பாத்திரம்) ஆவியானவரின் (எண்ணெய்) கூடுதலான நிரப்புதலைப் பெற விலைக்கிரயம் செலுத்தவில்லை அதோடு கல்யாண விருந்தைத் தவறவிட்டனர்—மத். 25:3, 10–12
“புத்தியில்லாதவர்கள் விளக்கில் மட்டுமே எண்ணெய் வைத்திருந்தனர், ஆனால் பாத்திரத்தில் எண்ணெயின் கூடுதலான பங்கை வைத்திருக்கவில்லை என்பதால்தான் அவர்கள் புத்தியில்லாதவர்களாக இருந்தனர். மறுபடிஜெநிப்பிக்கும் ஆவியானவருக்குக் கூடு்தலாக அவர்கள் உள்நிரப்பும் ஆவியானவரை, அதாவது பரிசுத்த ஆவியின் கூடுதலான பங்கை வைத்திருக்கவில்லை” (Life-study of Matthew, Message 64, p750). இதன் விளைவாக, அவர்கள் கல்யாண விருந்தைத் தவறவிட்டனர் (மத். 25:3, 10-12; வெளி. 19:9).
B. புத்தியுள்ள கன்னிகைகள் ஐந்து பேர் தங்கள் ஆத்துமாவில் (பாத்திரம்) ஆவியானவரின் (எண்ணெய்) கூடுதலான நிரப்புதலைப் பெற விலைக்கிரயம் செலுத்தி, கல்யாண விருந்துக்குள் சென்றனர்—மத். 25:3, 10–12
புத்தியில்லாத கன்னிகைகள் புத்தியுள்ள கன்னிகைககளிடம் அவர்களது எண்ணெயிலிருந்து கொஞ்சத்தைத் தங்களுக்குக் கொடுக்கும்படி கேட்டபோது, புத்தியுள்ள கன்னிகைகள், “நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறினார்கள் (மத். 25:9). “வாங்கிக்கொள்ளுங்கள்” என்பது ஒரு விலைக்கிரயம் செலுத்தப்பட்டாக வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. உலகத்தைக் கைவிடுதல், சுயத்துடன் இடைபடுதல், எல்லாவற்றுக்கும் மேலாகக் கர்த்தரை நேசித்தல், எல்லாக் காரியங்களையும் கிறிஸ்துவுக்காக நஷ்டமென்று எண்ணுதல் போன்று, பரிசுத்த ஆவியின் நிரப்புதலைப் பெறுவதற்கான ஒரு விலைக்கிரயம் இருக்கிறது. நாம் இன்று இந்த விலைக்கியத்தைச் செலுத்தாவிட்டால், நாம் உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு நாம் இந்த விலைக்கிரயத்தைச் செலுத்த வேண்டியிருக்கும்” (Matt25:9, footnote 3).
- புத்தியுள்ள கன்னிகைகள் நேரத்தை மீட்டுக்கொண்டனர்—எபே. 5:16–17
புத்தியுள்ள கன்னிகைகள் பரிசுத்த ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கான வாய்ப்பைப் பற்றிக்கொள்வதன் மூலம் நேரத்தை மீட்டுக்கொண்டனர். இதன் விளைவாக, மணவாளன் வந்தபோது அவர்கள் தயாராக இருந்தனர். புத்தியில்லாத கன்னிகைகள் இறுதியில் விலைக்கிரயத்தைச் செலுத்தினர், ஆனால் அதைச் செய்வதில் தாமதித்தனர். அவர்கள் பின்னர் வந்தபோது, கதவு அவர்களுக்கு அடைக்கப்பட்டது (மத். 25:10, 11). இந்த உவமையில், நேரம் என்பது மிகவும் முக்கியத்துவம்வாய்ந்தது. ஆவியானவரால் நிரப்பப்படுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பற்றிக்கொள்வதன் மூலம் நாம் இந்தப் பொல்லாத நாட்களில் நேரத்தை மீட்டுக்கொண்டாக வேண்டும் (see Eph5:16, footnotes 1–2). நாம் காலை வேளையில் கர்த்தரைத் தொடர்புகொள்ளும், மாலை வேளைகளில் கூட்டங்களில் கலந்துகொள்ளும், தொலைபேசியில் ஒரு நண்பருடன் ஜெபிக்கும், வேதாகமத்தை வாசிக்கும் ஒவ்வொரு முறையும் நாம் நேரத்தை மீட்டுக்கொண்டு, அதிகமாக ஆவியானவரை ஆதாயப்படுத்துகிறோம்.
- புத்தியுள்ள கன்னிகைகள் கர்த்தரைச் சந்திக்க விழித்திருப்பவர்களாகவும் தயாராகவும் இருந்தனர்—மத். 25:10, 13
இந்த உவமை கர்த்தருடைய பின்வரும் கட்டளையுடன் முடிவடைகிறது: “நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்” (மத். 25:13). நாம் ஆவியானவரால் நிரப்பப்படுவதன் மூலம் விழித்திருந்தாக வேண்டும்.
III. அடிமைகளைப் பற்றிய உவமையில், கர்த்தர் உண்மையுள்ளத்தன்மையைப் பற்றி போதித்தார், இதனால் அவரது வருகையில் அவரால் நமக்கு வெகுமதியளிக்கப்படும்—மத். 25:14-30
கிறிஸ்தவ வாழ்க்கைக்கு இரண்டு அம்சங்கள் உள்ளன: ஜீவனின் அம்சம், சேவையின் அம்சம். நாம் இரு அம்சங்களையும் கவனித்துக் கொள்ள வேண்டும். கன்னிகைகள் பற்றிய உவமை ஜீவனின் அம்சத்தில் உள்ளது, மேலும் மணாளனின் வருகைக்காக நாம் ஆவியானவரால் நிரப்பப்படுவதன் மூலம் எவ்வாறு விழித்திருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. அடிமைகளைப் பற்றிய இந்த அடுத்த உவமை சேவையின் அம்சத்தில் உள்ளது, மேலும் கர்த்தர் நமக்குக் கொடுத்திருக்கும் தாலந்தைப் பயன்படுத்த நாம் எவ்வாறு உண்மையுள்ளவர்களாய் இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. கன்னிகைகளாக நாம், கர்த்தர் நம் மணாளனாகத் தோன்றுவதற்காக விழித்திருக்கிறோம் (மத். 25:6). நம்முடன் கணக்குகளைத் தீர்ப்பதற்குக் கர்த்தர் நம் எஜமானராக வரும் வரை, அடிமைகளாக நாம் உண்மையுள்ள ரீதியில் சேவிக்கின்றோம் (மத். 25:19). (See Matthew 25:14, footnote3.)
A. ஐந்து தாலந்துள்ள அடிமை தன் தாலந்துகளுடன் உண்மையுள்ளவனாக இருந்தான் அதோடு அவனுக்குக் கர்த்தரால் வெகுமதியளிக்கப்பட்டது—மத். 25:16, 20–21
இந்த உவமையில், கர்த்தர் புறத்தேசத்துக்குச் (பரலோகங்களுக்கு) செல்வதற்கு முன், தம் உடைமைகளை தம் அடிமைகளிடம் ஒப்புக்கொடுக்கிறார். இந்த உடைமைகள் சுவிசேஷத்தையும், சத்தியத்தையும், விசுவாசிகளையும், சபையையும் அடையாளப்படுத்துகின்றன. கர்த்தர் இவற்றை நம்மிடம் ஒப்புக்கொடுக்கும் போது, இவை நம் தாலந்தாக ஆகிவிடுகின்றன. “தாலந்துகள்” ஆவிக்குரிய வரங்களைக் குறிக்கின்றன (ரோ. 12:6; 1 கொரி. 12:4; 1 பேது. 4:10; 2 தீமோ. 1:6). நம் வாழ்க்கையைப் பொறுத்தவரை, கன்னிகைகளாகக் கர்த்தருக்கு வாழ நமக்கு எண்ணெய் (ஆவியானவர்) தேவை. நம் சேவையைப் பொறுத்தவரை, அடிமைகளாகக் கர்த்தருக்காக வேலைசெய்ய நமக்கு தாலந்துகள் (ஆவிக்குரிய வரங்கள்) தேவை. கர்த்தர் இந்த அடிமைகளுக்கு, “தேவனின் சிருஷ்டிப்பாலும், நம் கற்றுக்கொள்ளுதலாலும் கட்டமைக்கப்பட்டுள்ள” அவர்களது திறனுக்கேற்ப இந்தத் தாலந்துகளை ஒப்புக்கொடுத்தார் (Matt25:15, footnote 2). ஐந்து-தாலந்துள்ள அடிமை தன் தாலந்துகளை உண்மையுள்ளவனாக வியாபாரம் செய்து, வேறு ஐந்து தாலந்துகளைச் சம்பாதித்தான். அவன் தன் ஆவிக்குரிய வரத்தை முழுமையாகப் பயன்படுத்தினான், இதன் விளைவாக, “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள அடிமையே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின் மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று கூறின கர்த்தரால் அவனுக்கு வெகுமதியளிக்கப்பட்டது (மத். 25:21, கிரே.).
B. இரண்டு-தாலந்துள்ள அடிமை தன் தாலந்துகளுடன் உண்மையுள்ளவனாக இருந்தான் அதோடு அவனுக்குக் கர்த்தரால் வெகுமதியளிக்கப்பட்டது—மத். 25:17, 22–23
இரண்டு-தாலந்துள்ள அடிமையும், கர்த்தர் தனக்குக் கொடுத்திருந்தவற்றில் உண்மையுள்ளவனாக இருந்து, ஐந்து-தாலந்துள்ள அடிமைக்குக் கிடைத்த அதே வெகுமதியைப் பெற்றான். கர்த்தருடைய வெகுமதி நம் வேலையின் அளவு மற்றும் எண்ணிக்கைக்கு ஏற்ப அல்ல, மாறாக அதிமுழுமையான அளவுக்கு அவரது வரத்தைப் பயன்படுத்துவதில் உள்ள நம் உண்மைத்தன்மைக்கு ஏற்ப உள்ளது என்பதை இது காட்டுகிறது. ஒரு-தாலந்துள்ள அடிமை உண்மையுள்ளவனாக இருந்திருந்தால், அவனுக்கும் அதேபோல் வெகுமதி அளிக்கப்பட்டிருப்பான்.
C. ஒரு-தாலந்துள்ள அடிமை சோம்பேறித்தனமாக இருந்து, தன் தாலந்தை பூமியில் புதைத்துவைத்து, புறம்பான இருளுக்குள் தள்ளப்பட்டான்—மத். 25:18, 24–30
“இந்த உவமையிலுள்ள முக்கியமான வலியுறுத்துதல், எல்லோரையும்விட அதி சிறிய வரத்தைப் பெற்றவனாகிய ஒரு-தாலந்துள்ளவன் மீது இருக்கிறது. சிறுவரம் பெற்றவர் தங்கள் வரத்தைத் தவறாக நடத்துவது அல்லது புறக்கணிப்பது மிக எளிது” (Matt25:18,footnote 1). தன் தாலந்தைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, இந்த அடிமை “போய், பூமியைத் தோண்டி, தன் எஜமானுடைய பணத்தைப் புதைத்து வைத்தான்” (மத். 25:18, கிரே.). “பூமி” என்பது உலகத்தை அடையாளப்படுத்துகிறது, எனவே பூமியில் தாலந்தைப் புதைப்பது என்றால் உலகத்திற்குள் நுழைவது ஆகும். இது நமக்கான கர்த்தருடைய வரத்தைப் புதைக்கிறது. ஒரு தாலந்துள்ள-அடிமை எஜமானரை அணுகியபோது, அவரிடம் அளிப்பதற்காக அவனிடம் தன் ஒரு தாலந்தைத் தவிர வேறு ஒன்றும் இருக்கவில்லை. இதன் விளைவாக, கர்த்தர் அவனை ஒரு சோம்பேறித்தனமான அடிமை என்று அழைத்து, அவனைப் புறம்பான இருளிலே தள்ளினார். இதேபோல், நாம் ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்பட்டு, கர்த்தரிடம் கணக்குகளை ஒப்புவிப்போம். கர்த்தர் தாம் நமக்குக் கொடுத்தவற்றிற்கு நாம் எவ்வளவு உண்மையுள்ளவர்களாக இருந்தோம் என்பதை அறிய விரும்புவார். சோம்பலான அடிமையை போல் அல்லாமல், நாம் ஒரு நேர்மறையான மனப்பாங்கைக் கொண்டிருந்து, நம் தாலந்தை உண்மையுள்ளவர்களாகப் பயன்படுத்த வேண்டும். கர்த்தரைப் பற்றிய ஏதாவது ஒன்றை நம் நண்பர்களிடம் பேசுவதன் மூலமும், நம்மை விட இளையவர்களை மேய்த்துப்பேணுவதன் மூலமும் நாம் இதைச் செய்யலாம். நம் இருதயத்தைப் பொறுத்தவரை, நாம் கர்த்தருக்காக முற்றும்முழுமையாக இருந்தாக வேண்டும். கன்னிகைகளாக நம் வாழ்க்கையைப் பொறுத்தவரை, நாம் ஆவியானவரால் நிரப்பப்பட்டாக வேண்டும். மேலும் அடிமைகளாக நம் சேவையைப் பொறுத்தவரை, நாம் உண்மையுள்ளவர்களாக இருந்தாக வேண்டும். அப்போது நமக்கு வெகுமதி அளிக்கப்பட்டு கர்த்தர் நம்மிடம், “நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள அடிமையே,….உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று சொல்வதைக் கேட்போம் (மத். 25:21, கிரே.).
இடைநிலைபிரயோகம்: மேற்கண்ட உவமைகளை இளம் வாலிபர்களிடம் பேசுவதன் மூலம் நாம், கர்த்தருடைய இரண்டாம் வருகையைக் கண்ணோட்டத்தில் கொண்டு எவ்வளவாய் நாம் இந்தக் கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற கருத்துப்பதிவை அவர்களுக்கு ஏற்படுத்த முடியும். ஒவ்வோர் உவமையிலும், நாம் ஓர் எளிய குறிப்பைச் சொல்லலாம். முதலாவது உவமை, நமக்குக் கர்த்தருக்கான ஒரு மென்மையான, திறந்த, கிடைக்கக்கூடிய இருதயம் தேவை என்பதைக் காட்டுகிறது. இரண்டாவது உவமை, கன்னிகைகளாக நாம் கர்த்தரை எவ்வளவாய் நேசித்து, ஆவியானவரின் கூடுதல் பகுதியால் நிரப்பப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது. மூன்றாவது உவமை, நம்மிடம் ஒப்புவிக்கப்பட்ட (வேதாகமம், கூடுகைகள், ஆகியன போன்ற) சில விஷயங்களில் எவ்வளவாய் நாம் உண்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது. கர்த்தர் மீண்டும் வருகின்றார். நம் இருதயத்தில் மென்மையானவர்களாயும், நம் பாத்திரத்தில் நிரப்பப்பட்டவர்களாயும், நம் சேவையில் உண்மையுள்ளவர்களாயும் நாம் அவருக்குக் காணப்படுவோமாக.
சுவிசேஷப் பிரயோகம்: கர்த்தராகிய இயேசு பூமியில் இருந்தபோது, பல முறை அவர் கூட்டத்தினருடன் உவமைகளில் பேசினார். அவர் உவமைகளில் பேசுதல் என்பது தேடாதவர்களிடமிருந்து சுவிசேஷ சத்தியங்களை மறைப்பதற்கும், தேடுபவர்களுக்குத் தம் இரட்சிப்பின் ஐசுவரியங்களையும், தம் இருதயத்தின் கரிசனையையும் திரைநீக்குவதற்கும் இருந்தது. இது ஏனெனில், உவமைகளின் வார்த்தைகளைப் பலர் கேட்டிருந்தாலும், சத்தியத்தைத் தேடியவர்கள் மட்டுமே அவற்றின் அற்புதமான, மறைவான உட்கருத்தைத் தேடுவார்கள் என்பதால்தான். மத்தேயு 13:15-16, “இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது; காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள் என்பதே. உங்கள் கண்கள் காண்கிறதினாலும், உங்கள் காதுகள் கேட்கிறதினாலும், அவைகள் பாக்கியமுள்ளவைகள்” என்று கூறுகிறது. உவமைகளில் உள்ள கர்த்தருடைய வார்த்தையைப் புரிந்துகொள்ள முடியக்கூடிய ஒரு நபராக இருப்பது என்னே ஓர் ஆசீர்வாதம்! இந்தப் பாடத்தில் உள்ள மூன்று உவமைகள், தேவனை நோக்கிய மனிதனுடைய இருதயத்தின் நிலைமையைப் பற்றியும், தேவனை எதிர்கொள்ள மனிதன் தன்னையே ஆயத்தப்படுத்த என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பேசுகின்றன. ஒவ்வொரு நபரும் தன் வாழ்க்கையைப் பற்றிய ஒரு விவரணத்தைக் கொடுக்க தன் சிருஷ்டிகருக்கு முன்பாக நின்றாக வேண்டும் (வெளி. 20:11–12). கர்த்தருடைய வருகையில் அவரைச் சந்திக்கத் தயாராக இருப்பதற்கும், அவரால் வெகுமதியளிக்கப்படுவதற்கும், நாம் முதலில் அவரது வார்த்தையைப் பெறுவதற்கான ஒரு மென்மையான மற்றும் திறந்த இருதயம் கொண்ட ஒரு நபராக இருந்தாக வேண்டும் (மத். 13:3–9, 18–23). அப்படியானால் நாம் அவரை நம் ஆதி மற்றும் அதி சிறந்த அன்பினால் நேசித்து, அவரால் நிரப்பப்படுவதற்கு ஆவியானவராக அவரைப் பெற்றாக வேண்டும் (மத். 25:1– 13). இறுதியாக, நாம் நம் வாழ்நாள் முழுவதும் உண்மையுள்ளவர்களாக அவரைச் சேவித்தாக வேண்டும் (மத். 25:14-30). கர்த்தருடைய வருகையில் அவரைப் பிரியப்படுத்தும் ஒருவராக உங்கள் வாழ்க்கையைத் தொடங்க இன்றே அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மிக முக்கியக் காரியங்கள்: கர்த்தருடைய திரும்பிவருதல் (II.E.5.).
பின்னணி வாசிப்பு: Life-study of Matthew, Messages 36, 64–66.
REFERENCES: Ephesians 5:16, footnotes 1–2; Life-study of Matthew, Message 35, pp433–435;Messages 36, 64–66; Matthew 25:9, footnote 3; 25:14, footnote 3; 25:15, footnote 2; 25:18, footnote 1; The Collected Works of Watchman Nee, Volume 15, Chapters 13, 26; The Conclusion of the New Testament, Message 46, pp496–498; Message 47, p509; The Constitution and the Building Up ofthe Body of Christ, Chapter 1; Chapter 2, pp21–29.