வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 08
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
மனிதத் தேவைக்காகக் கரிசனைப்படுதல்—மரித்தோரை உயிரோடெழுப்புதல்
குறிக்கோள்: கிறிஸ்து தம் ஊழியத்தில், மரித்தோரை உயிரோடெழுப்புவதன் மூலம் தாமே உயிர்த்தெழுதலும் ஜீவனும் என்ற உண்மையை நிரூபித்தார் என்பதைப் புரிந்துகொள்வதற்கு.
பொருட்சுருக்கம்: குறிப்பிட்ட சில சந்தர்ப்பங்களில் கர்த்தராகிய இயேசு மரித்தோரை உயிரோடெழுப்பும் மாபெரும் அற்புதத்தை நிகழ்த்தினார். மரித்தோர் என்பது பாவங்களில் மரித்தவர்களை (எபே. 2:1, 5), மேலும் இவ்வாறு தேவனைத் தொடர்புகொள்ள இயலாதவர்களை அடையாளப்படுத்துகின்றனர். மறுபடி ஜெநிப்பிக்கப்பட்ட பிறகு, தங்கள் மறுபடி ஜெநிப்பிக்கப்பட ஆவி எனும் வழிவகையின் மூலம் அவர்கள் தேவனோடு ஐக்கியப்பட முடியும். யோவான் 11:25 இல், கர்த்தராகிய இயேசு கூறினார்: “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.” கிறிஸ்து உயிர்த்தெழுதல் என்பதால், அவர் இருக்கும்போதெல்லாம், உயிர்த்தெழுதல் அங்கே இருக்கிறது. இன்று நம் கிறிஸ்து, நம்மைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், நமக்கு ஜீவனைத் தருவதற்கும், நம் மரித்துபோன நிலைமையிலிருந்து நம்மை உயிர்த்தெழுப்புவதற்கும்கூட விரும்பும் ஜீவன்-தருகிறவராக இருக்கிறார்.
பின்புலம்: மரணம் பல வடிவங்களில் இளம் வாலிபர்களிடம் வருகிறது: பலவீனம், வெறுமை, இருள், அமைதியின்மை, சலிப்பு மற்றும் மனச்சோர்வு. கர்த்தர் இந்த பூமியில் தம் ஊழியத்தில் மக்களை மரித்தோரிலிருந்து உயிரொடெழுப்பினார், மேலும் இன்று நம் ஆவியில் உள்ள உயிர்த்தெழுப்பப்பட்டவராக அவரால் நம் மரணத்தை ஜீவனாக மாற்ற இயல்கிறது. யோவான் 5 இல், அவர் தம் வார்த்தையால் நமக்கு ஜீவனைக் கொடுக்க இயல்கிறார் என்பதை நாம் பார்க்கிறோம் (III. B.). ஓர் இளம் வாலிபன் மரணத்தை உணரும்போதெல்லாம், அவர்கள் கர்த்தருடைய குரலைக் கேட்கும்படி கர்த்தருடைய வார்த்தையிடம் வர வேண்டும், இதனால் அவர்கள் வாழவும், எந்தவொரு மரண உணர்விலிருந்தும் மீட்டுத்திருப்பப்படவும் கூடும்.
அதிகாரங்கள்: மாற்கு 5, லூக்கா 7, யோவான் 11.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
I. இயேசு தம் பூமிக்குரிய ஊழியத்தில், மரித்தோருக்கு ஜீவனைக் கொடுக்க இயன்றது
A. கப்பர்நகூமில், கிறிஸ்து ஒரு ஜெபஆலயத்தின் தலைவனாகிய யவீரு என்பவனின் பன்னிரண்டு வயது மகளை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினார்—மாற்கு 5:22–43; மத். 9:18–26
B. நாயீனில், கிறிஸ்து ஒரு விதவையின் ஒரே மகனை மரித்தோரிலிருந்து உயிரோடெழுப்பினார்—லூக். 7:11-17
C. பெத்தானியாவுக்கு அருகில், கிறிஸ்து மார்த்தாள் மற்றும் மரியாளின் சகோதரனாகிய மரித்துப்போன லாசருவை உயிரோடெழுப்பினார்—யோவான் 11:11–44
II. மரித்தோர், பாவங்களில் மரித்தவர்களையும், தேவனைத் தொடர்புகொள்ள இயலாதவர்களையும் அடையாளப்படுத்துகின்றனர்—எபே. 2:1
A. பாவத்தின் காரணமாக மரணம் மனிதனிடம் வந்து, மனிதனை ஆளுகிறது—ஆதி. 3:19; ரோ. 5:12, 17
B. மனிதன் முதலில் ஆவிக்குரிய ரீதியிலும், அதன்பின் பௌதிக ரீதியிலும் மரணத்தை அநுபவிக்கிறான்—ஆதி. 2:17; மத். 8:22; எபே. 2:1
- ஆவிக்குரிய மரணம் என்றால் ஆவியானவராக உள்ள தேவனிடமிருந்து பிரித்தெடுக்கப்படுதல் என்பது அர்த்தம்.
கர்த்தர் ஜீவ விருட்சத்தைக் குறித்து, “அதை நீ புசிக்கும் நாளில் சாகவே சாவாய்” என்று கூறினார் (ஆதி. 2:17). எனினும், ஆதாம் தான் தேவனுக்குக் கீழ்ப்படியாமற்போன நாளிலே பௌதிக ரீதியாக மரிக்கவில்லை, ஏனெனில் கர்த்தர் எந்த மரணம் பற்றி பேசினாரோ அது முதலில் ஓர் ஆவிக்குரிய மரணமாக இருந்தது. ஆதாம் அறிவு விருட்சத்தைப் புசித்த நாளிலே, அவனது ஆவி மரித்துப்போனது. அவன் அந்தக் காலம் வரை தேவனுடன் தொடர்ச்சியான ஐக்கியத்தை அனுபவித்துமகிழ்ந்திருந்தான், ஆனால் தன் கீழ்ப்படியாமைக்குப் பிறகு அவன் தன் ஆவியின் மூலமாக தேவனை அறிந்துகொள்வதற்கான திறனை இழந்தான்; வேறு வார்த்தைகளில், அவன் தேவனை நோக்கி மரித்தவனாக ஆனான். (மரணத்தின் பொருள் என்னவெனில், ஒன்றுடனான தொடர்புகொள்ளுதலை இழப்பது, ஒரு மண்டலம் அல்லது ஒரு நபருடனான தொடர்பை இழப்பது ஆகும். மனிதன் தேவனுடனான தொடர்பை, ஆதாமின் வீழ்ச்சியின் மூலமாக இழந்தான்.) என்னே ஒரு மாபெரும் சோகம்! பாவத்தின் காரணமாக, தேவன் தம்மை மனிதனிடமிருந்து பிரித்தெடுக்க வேண்டியிருந்தது, மேலும் மனிதனால் இனியும் தன் ஆவியின் மூலம் தேவனை அறிய இயலவில்லை. இவ்வாறு மனிதனின் உள்ளான பகுதி இருண்டதாக ஆயிற்று, ஏனெனில் மனிதனின் “ரிசீவர்” (அவனது ஆவி) “மரித்துப்போனது.”
- பௌதிக மரணம் என்றால் பௌதிக சரீரத்திலிருந்து பிரித்தெடுக்கப்படுதல் என்பது அர்த்தம்.
இறுதியில், எல்லா மனிதர்களும் பௌதிக ரீதியாக மரித்துப் போகின்றனர், ஏனெனில் ஆதாமின் பாவம் காரணமாக மரணம் எல்லா மனிதர்களுக்கும் கடந்துசென்றது (ரோ. 5:12). ஆதாம் 930 ஆண்டுகள் வாழ்ந்த போதிலும், இறுதியில் அவன் மரணத்திற்கு ஆளானான் அதோடு பௌதிக உலகில் தன் இடத்தை இழந்தான். அவனது சந்ததியினர் அனைவரும் ஒரே விதியை (தலையெழுத்தை) அநுபவிக்கிறார்கள்.
C. மரணத்திற்குப் பிறகு நியாயத்தீர்ப்பு வருகிறது—எபி. 9:27
ஒரு நபர் மரித்தப் பிறகு, அதைத் தொடர்ந்து தேவனுடைய நியாயத்தீர்ப்பு வருகிறது. பௌதிக மரணம் ஒரு முடிவு அல்ல. (எனவே தற்கொலை செய்வது என்பது “அனைத்தையும் முடிவுக்குக் கொண்டுவருவது” அல்ல. ) பெரும்பாலான மக்கள் இதை உணர்ந்தறிந்து, அவர்கள் “தங்கள் படைப்பாளரைச் சந்திக்க” வேண்டியிருக்கும் அதோடு அவர்கள் தங்கள் சரீரங்களில் வாழ்ந்துகொண்டிருந்தபோது செய்த காரியங்களுக்காக அவருக்குக் கணக்குக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை அறிந்திருந்து, இவ்வாறு மரணத்திற்கு அஞ்சுகிறார்கள் (யோவான் 5:28-29; 2 கொரி. 5:10). இறுதியில், மரித்து தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பின் கீழ் வருபவர்கள் நித்தியத்திற்கும் அக்கினிக் கடலுக்குள் தள்ளப்படுவார்கள், இது “இரண்டாம் மரணம்” என்று அழைக்கப்படும் ஒரு விதியாகும் (வெளி. 20:14).
D. எல்லா மனிதர்களும் மரணத்தால் ஒடுக்கப்பட்டு, அதன் அடிமைத்தனத்தில் பிடித்துவைக்கப்படுகிறார்கள்—எபி. 2:15
மேற்கூறிய குறிப்புகள் காரணமாக, எல்லா மனிதர்களும் மரணத்திற்கு அடிமைத்தனக்கட்டில் உள்ளனர், மரணத்திற்குப் பயப்படுகின்றனர். மரண பயம் என்பது சங்கிலி மூலம் நம்முடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு கணமான உலோகப் பந்து போன்றது, இதை ஒவ்வொரு நபரும் அறியாமலேயே தன்னுடன் நாளுக்கு நாள் இழுத்துச் செல்கிறான். அவர்கள் இன்னும் மரிக்கவில்லை என்றாலும்கூட, மக்கள் மரணத்தின் நிழலில் இருக்கிறார்கள், மேலும் இவ்வாறு அவர்கள் உயிரை உடைமையாக வைத்திருக்கும்போதும்கூட அதை முழுமையாக அனுபவித்துமகிழ முடிவதில்லை.
III. இன்று நம் கிறிஸ்து, நம்மைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், நமக்கு ஜீவனைத் தருவதற்கும், நம் மரித்துபோன நிலைமையிலிருந்து நம்மை உயிர்த்தெழுப்புவதற்கும்கூட விரும்பும் ஜீவன்-தருகிறவராக இருக்கிறார்—யோவான் 10:10
A. மரண நிழலில் அமர்ந்திருக்கும் மக்களிடம் இயேசு உயிர்த்தெழுதலாகவும் ஜீவனாகவும் வந்தார்—மத் 4:15; யோவான் 11:25
- தேவனுடைய ஊனுருவாக, இயேசு கிறிஸ்து சிருஷ்டிக்கப்படாத மற்றும் அழிக்க-முடியாத தெய்வீக ஜீவனை உடைமையாக வைத்திருக்கிறார்—எபி. 7:17; அப். 2:24
இயேசு ஒரு மனித ஜீவனை உடைமையாக வைத்திருந்த ஒரு மனிதனாக இருந்தபோதிலும், அவர் தேவனாகவும் இருந்தார், மேலும் தேவனுடைய ஒப்பற்ற, நித்திய, சிருஷ்டிக்கப்படாத ஜீவனை உடைமையாகக் கொண்டிருந்தார். தேவனுடைய ஜீவன்தான் நிஜமாகவே ஜீவனாக இருக்கும் ஜீவன் (1 தீமோ. 6:19)! மரணத்திற்கு நிச்சயமாக தேவன் மீது வல்லமை இல்லை; ஆனால் மரித்தோரை மீண்டும் உயிர்ப்பிக்க தேவனுக்கு மரணத்தின் மீது வல்லமை உண்டு.
- தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றுபவராக இயேசு, மனிதன் தேவனை ஜீவனாகப் பெறக்கூடுமாறு வந்தார்—யோவான் 10:10
மரித்துப்போன மக்கள் கிறிஸ்துவை தங்கள் ஜீவனாகப் பெறுவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டார்கள்! ஆகையால், பௌதிக மரணம் தேவனுக்கு ஓர் எதிரியாக உள்ளது (1 கொரி. 15:26), ஏனெனில் அவரது பொருளாட்சியில் பங்கேற்பதிலிருந்து மனிதர்களை அது தடுக்கிறது. உண்மையில், தேவன் தாம் பாவத்தை வெறுப்பதை விட அதிகமாக மரணத்தை வெறுக்கிறார். இயேசு மக்களை மீண்டும் உயிர்ப்பித்த சங்கதிகள் தேவனுடைய வல்லமையைச் சித்தரிக்கின்றன அதோடு தெய்வீக ஜீவனை நம் மரித்துப்போன ஆவிக்குரிய சூழ்நிலைக்குப் பிரயோகித்தலை மாதிரியாகக் காட்டுகின்றன.
B. மரித்திருந்தும்கூட தேவகுமாரனின் சத்தத்தைக் கேட்பவர்கள் வாழ்வார்கள்—யோவான் 5:25
தம் வார்த்தையால் மரித்தோரை உயிரோடெழுப்பும் திறன் கிறிஸ்துவுக்கு உண்டு. சுவிசேஷங்களில் மரித்தோரிலிருந்து ஒருவரை அவர் எழுப்பிய ஒவ்வொரு சங்கதியிலும், அவர் தம் கட்டளை வார்த்தையால் அவ்வாறு செய்தார். யோவான் 5:25 இல் உள்ள மரித்தோர் பௌதிக ரீதியில் மரித்தவர்களை அல்ல, மாறாகப் பாவங்களில் மரித்தவர்களை அடையாளப்படுத்துகின்றனர் (எபே. 2:1, 5). ஆவிக்குரிய ரீதியில் மரித்தவர்கள் தேவகுமாரனின் சத்தத்தைக் கேட்டு பதிலளிக்கும்போது, அவர்கள் தெய்வீக ஜீவனைப் பெறுகிறார்கள்! சுவிசேஷம் ஒரு பாவியிடம் வரும்போது, அந்த சுவிசேஷம் அவனுக்கு ஜீவ வார்த்தையாக ஆகிவிட வேண்டும். குமாரனின் ஜீவ வார்த்தைகளால், நம் ஆவி மறுபடிஜெநிப்பித்தல் மூலமாக உயிரூட்டப்பட்டதாக ஆகிவிடுகிறது, மேலும் நாம் மீண்டும் தேவனுடன் சுதந்திரமாகத் தொடர்புகொள்ள இயல்கிறது! இதுவே நிஜமாகவே உயிருள்ளவர்களாக ஆக்கப்படுவதாகும். தேவனுடைய ஜீவனால் உயிரூட்டப்படுபவர்கள், “மேல் வானம் மென்மையான நீலமும்,/ சுற்றியுள்ள பூமி இனிமையான பச்சையும்;/ ஒவ்வொரு வண்ணச்சாயலிலும் ஒன்று வாழ்கிறது/ கிறிஸ்துவற்ற கண்கள் ஒருபோதும் கண்டதில்லை” என்றும் சாட்சிப்பகிர முடியும் (பாடல்கள், #284). தேவனுடைய சொந்த ஜீவனால் உயிரூட்டப்பட்டவர்களாக ஆகிவிடும் நபர் மிகவும் உயிருள்ளவனாக ஆகிவிடுகிறான்!
D. ஜீவனின் அனுபவத்தில் தொடர்ச்சியாக இருப்பதற்கு நாம் இன்று கிறிஸ்துவை உயிர்த்தெழுதலாக அனுபவித்துமகிழ்ந்தாக வேண்டும்—யோவான் 11:25
கிறிஸ்துவே உயிர்த்தெழுதலும் ஜீவனும் என்பதால், நாம் அவரை அனுபவித்துமகிழும்போது, நாம் நம் ஆள்தத்துவத்தில் உள்ள எந்த மரணத்திலிருந்தும் உயிர்த்தெழுப்பப்படுகிறோம். இன்று நம் கிறிஸ்து, நம்மைக் குணப்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், நமக்கு ஜீவனைக் கொடுத்து, நம் மரித்துபோன நிலைமையைவிட்டு நம்மை உயிர்த்தெழுப்பவும் விரும்பும் ஜீவன்-தருகிறவராக இருக்கிறார். நாம் இனிமேலும் மரணத்தைப் பொறுத்துக்கொள்ளக்கூடாது! நம் புறம்பான மனிதன் சிதைந்துகொண்டும் மரித்துக்கொண்டும் இருக்கிறான் என்பது உண்மைதான், ஆனால் உயிர்த்தெழுதலில் உள்ள புதிய சிருஷ்டிப்பின் ஒரு பகுதியாகிய நம் உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாக்கப்படுகின்றான் (2 கொரி. 4:16).
IV. கிறிஸ்துவின் ஊழியத்தின் விளைவாகப் புதிய எருசலேம் இருக்கும், அங்கு இனிமேலும் மரணம் இருக்காது—வெளி. 20:14
தெய்வீக ஜீவனால் உயிரூட்டப்பட்ட விசுவாசிகளாக, நாம் மரணத்தை முகமுகமாய் எதிர்கொள்ளும்போது நாம் களிகூர்ந்து, “மரணமே!…உன் ஜெயம் எங்கே?” என்று கூறலாம் (1 கொரி. 15:55). “மரணம் ஜெயமாக விழுங்கப்பட்டது” (1 கொரி. 15:54). புதிய எருசலேமில், தேவன் ஜீவனாக தம் தெரிந்தெடுக்கப்பட்ட மற்றும் மீட்கப்பட்டோர் அனைவராலும் முழுமையாக அனுபவித்துமகிழப்படுவார். மரண நிழல் இனிமேலும் இருக்காது, மேலும் (வெளிப்படுத்தல் 4:3 இல் வச்சிரக்கல்லால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் [அடிக்குறிப்பு 1] மற்றும் 21:11 ஐக் காண்க) தேவனுடைய ஜீவன் மட்டுமே, அதன் ஐசுவரியங்கள் அனைத்தோடும் வெளிக்காட்டப்படும்.
இடைநிலைபிரயோகம்: ஒரு நபர் எவ்வளவு இளமையாக இருக்கிறானோ, மரணத்தின் நிழல் தன் மேல் இருப்பதை அவன் அவ்வளவு குறைவாக உணர்கிறான். ஒரு நபருக்கு எவ்வளவு வயதாகிறதோ, அவன் மரணத்தின் காரியத்தைக் குறித்து அவ்வளவு அதிக உணர்வுள்ளவனாக ஆகிவிடுகிறான். அவனது சரீரத்தின் வேகம் குறைகிறது, மேலும் இறுதியில் ஒரு நாள் மரணம் அவனை உரிமைக் கோரும் என்பதை அவன் உணர்ந்தறியத் தொடங்குகிறான். மக்கள் மரிக்கவில்லை எனில் எவ்வளவு வித்தியாசமாக எல்லா விஷயங்களும் இருக்கும்! (ஒரு விதத்தில் தேவன், பாவத்தின் மேலும் மேலும் மோசமான ஒரு வாழ்க்கையை வாழ்வதிலிருந்து மக்களைக் காத்துக்கொள்ள மரணத்தைப் பயன்படுத்துகிறார்.) எனினும் இளம் வாலிபர்கள் மனச்சோர்வு, அடக்குமுறை, இருள் போன்ற வடிவங்களில் மரணத்தை எல்லா நேரமும் அனுபவிக்கிறார்கள். மரணத்தின் இந்த அனுபவத்திற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கொடுங்கள் அதோடு மரண உணர்வு ஓர் ஆரோக்கியமான உணர்வுதான் என்பதை உணர்ந்தறியும்படி இளம் வாலிபர்களுக்கு உதவுங்கள். இந்த மரண உணர்வு, நம்மை மரணத்திலிருந்து ஜீவனுக்கு திரும்ப வைக்க வேண்டும். மரணத்தைக் கொண்டுவரும் விஷயங்களைப் பற்றி நமக்கு எந்த உணர்வும் இல்லை எனில், நாம் ஒரு தீவிரமான நிலையில் இருக்கிறோம். மரணம் உள்ளே வரும்போது, ஜீவனின் ஊற்றாகிய தேவனிடம் திரும்ப வேண்டிய நம் தேவையை நாம் உணர்ந்தறிந்தாக வேண்டும். நம்மில் வாழும் உயிர்த்தெழுதல் ஜீவனாகிய கிறிஸ்து நம்மிடம் இருப்பதால், நாம் எப்போதும் ஜீவனில் இருக்க முடியும்! நாம் ஒருபோதும் மரணத்தில் நிலைத்திருக்க வேண்டியதில்லை. தேவன் வெறுப்பது போலவேகூட நாமும் மரணத்தை வெறுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
சுவிசேஷப் பிரயோகம்: தேவனுடைய ஜீவன் இல்லாமல், எல்லா மனிதர்களும் ஆவிக்குரிய ரீதியில் மரித்துள்ளனர் அதோடு அவர்கள் கர்த்தருடைய ஜீவன்-தரும் வார்த்தையைக் கேட்க வேண்டிய அவசியம் உள்ளது. இன்று சுவிசேஷத்தின் சத்தம் என்பது, கேட்பவர்களுக்கு ஜீவனைக் கொடுக்கவும், மரணத்தின் கல்லறையின் ஆழ் குழியிலிருந்து அவர்களை விடுவிக்கவும், அவர்களது பிரேதச் சீலைகளின் அடிமைத்தனக்கட்டிலிருந்து அவர்களை விடுவிக்கவும் இயலும் கர்த்தருடைய சத்தமே ஆகும் (யோவான் 11:43–44; 5:25). கர்த்தருடைய நற்செய்தியை அறிவித்து, சுவிசேஷம் பிரசங்கித்தல் மூலமாக மரித்தோருக்கு ஜீவனைக் கொண்டுவாருங்கள். “இன்று நீங்கள் சுவிசேஷத்தைக் கேட்கும்போது, நீங்கள் கர்த்தருடைய வார்த்தைகளையும் கேட்டிருக்கிறீர்கள், மேலும் நீங்கள் ஜீவிக்கிறீர்கள். நீங்கள் ஜீவிக்கின்றீர்கள் என்பதால், நீங்கள் நிச்சயமாக திரையரங்குகளிலிருந்தும், பிற பாவக் குழிகளிலிருந்தும் வெளியே வருவீர்கள் [மேலும் அடிமைத்தனக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்].…புசித்தல், குடித்தல்,…சூதாட்டம் அனைத்துமே அடிமைத்தனக்கட்டுகள்தான். அவை உங்களை ஓர் அங்குலமும் கூட நகர இயலாதபடி ஆக்கிவிடுகின்றன. நீங்கள் ஜீவனைப் பெறும்போது, நீங்கள் அடிமைத்தனக்கட்டிலிருந்து விடுவிக்கப்படுவீர்கள்” (Gospel Outlines, Subject 107, p. 223). இந்த வழியில், இந்த பாடத்தின் உள்ளடக்கம் சுவிசேஷமாகத் திறம்பட வழங்கப்பட முடியும். (இந்தப் பாடத்தை சுவிசேஷம் பிரசங்கித்தலுக்குப் பிரயோகிப்பதில் கூடுதலான உதவிக்கும், எடுத்துக்காட்டிற்கும், Gospel Outlines, Subject 107, pp. 222–224 ஐ பார்க்கவும்.)
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்னணி வாசிப்பு: Life-study of Mark, Message 17, pp. 155–159.
REFERENCES: Life-study of Genesis, Message 18, pp239–240, 242; Message 21, pp275–276; Life-study of Numbers, Message 9; Life-study of Mark, Message 17, pp155–159; Life-study of Luke, Message 16, pp135–138; Life-study of John, Message 23, pp273–276, 282–284; Message 24; Life-study of Romans, Message 6, pp71–73; Message 10, pp116–125; Message 16, pp195–199; The Knowledge of Life, Chapter 1; The Collected Works of Watchman Nee, Volume 1, Chapter 1, pp11– 13; Gospel Outlines, Subject 107, pp222–223.