வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 09
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
பிதாவோடு வேலைசெய்தல்
குறிக்கோள்: கர்த்தராகிய இயேசு தம்மாலோ, தமக்காகவோ ஒன்றும் செய்யவில்லை, மாறாக பிதாவின் வேலையைச் செய்தார், பிதாவின் வார்த்தையைப் பேசினார், பிதாவின் சித்தத்தை நாடினார் என்பதை இளம் வாலிபர்களுக்குக் காட்டுவதற்கு.
பொருட்சுருக்கம்: தேவ குமாரனாக, கர்த்தராகிய இயேசு பிதாவால் வாழ்ந்து, பிதாவை வெளிக்காட்டினார். அவர் முற்றிலும் பிதாவோடு ஒன்றாக இருந்தார். இவ்வாறு, கர்த்தர் தம் ஊழியத்தில் எப்போதும் பிதாவின் வேலையை நிறைவேற்றினார், பிதாவின் வார்த்தையைப் பேசினார், பிதாவின் சித்தத்தைச் செய்தார். குமாரனாக, அவர் எல்லாவற்றிலும் பிதாவுக்குப் பணிந்தடங்கினார், மேலும் இவ்வாறு தேவனுடைய நித்தியக் குறிக்கோளை நிறைவேற்றும் ஒரு வாழ்க்கையின் முன்னுருமாதிரியை நிறுவினார். இன்று பிதாவின் குமாரர்களாக ஆகியிருப்பவர்களாகிய நாமும் பிதாவுடன் வேலைசெய்து, பிதாவின் வார்த்தையைப் பேசி, பிதாவின் சித்தத்தை நிறைவேற்றலாம்.
பின்புலம்: எல்லோரும் தங்களுக்காகவே இருக்கும் அதோடு ஒரு நபரின் வார்த்தைகள் முதன்மையாக தனிப்பட்ட நலன்களாலும், சுய-மகிமைப்படுத்தலாலும் ஆளப்படும் ஒரு நாளிலும், ஒரு யுகத்திலும் நாம் வாழ்கிறோம். நாம் பேசும் வார்த்தைகள் இருப்பது போலவே நாம் எவ்வளவு அதிகமாய் நமக்காகவே இருக்கிறோம் என்பதை ஒரு சில விஷயங்கள் வெளிக்காட்டுகின்றன. ஆனால் இங்கே, யோவான் சுவிசேஷத்தில், தமக்காகப் பேசாத ஓர் அற்புதமான நபரை நாம் (குறிப்பாக ரோம இலக்கம் எண் III இல்) காண்கிறோம். மாறாக கூறவேண்டியது இன்னதென்றும், பேசவேண்டியது இன்னதென்றும் பிதாவே குமானுக்குக் கட்டளையிட்டார். குமாரன் ஒருபோதும் தம் சொந்த வார்த்தையைப் பேசவில்லை, மாறாக பிதாவின் வார்த்தையை நம்மிடம் கொண்டு வந்தான்; இதற்காக நாம் அனைவரும் நன்றியுள்ளவர்களாய் இருந்தாக வேண்டும். (பிதாவின் காரணமாக வாழ்ந்த) குமாரன், பிதாவிடமிருந்து வந்ததை மட்டுமே, முற்றிலும் அதை மட்டுமே உண்மையுடன் பேசியதால், மனுக்குலத்திற்கு எவ்வளவு நன்மை கிடைத்திருக்கிறது என்பதைப் பரிசீலியுங்கள்.
அதிகாரங்கள்: யோவான் 4–12.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
I. தேவ குமாரனாக, கர்த்தராகிய இயேசு பிதாவால் வாழ்ந்து, பிதாவை வெளிக்காட்டினார்.
கர்த்தர் தம் சீஷர்களிடம், “நான் பிதாவினால் வாழ்கிறதுபோலவும்” என்று சொன்னார் (யோவான் 6:57). அவர் கணம் தோறும் வாழ்ந்த வாழ்க்கை பிதாவைச் சார்ந்ததாக இருந்தது. அவரது வாழ்க்கை பிதாவின் வாழ்க்கையாக இருந்த அளவிற்கு அவர் பிதாவுடன் அவ்வளவாய் முற்றிலும் ஒன்றாக இருந்தார்; அவர் பிதாவை வாழ்ந்தார். “அவர் தம்மையே வெளிக்காட்டவில்லை. அவர் பிதாவை மட்டுமே வெளிக்காட்டினார். அவர் குமாரனாக இருந்தார், ஆயினும் அவர் பிதாவை வெளிக்காட்டினார்” (The Divine Dispensing of the Divine Trinity, Chapter 12, p. 123). இவ்வாறு, கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தில் பிதாவின் வேலையை நிறைவேற்றினார், பிதாவின் வார்த்தையைப் பேசினார், பிதாவின் சித்தத்தைச் செய்தார்.
II. கர்த்தர் தம் ஊழியத்தில் பிதாவின் வேலையை நிறைவேற்றினார்—யோவான் 4:34; 5:17
அவரது வாழ்க்கையிலும் ஊழியத்திலும் கர்த்தராகிய இயேசுவும், பிதாவும் ஒன்றாக ஒன்றுசேர்ந்து வேலைசெய்தனர். கர்த்தர் பிதாவுக்காக வெறுமனே ஒன்றைச் செய்ய நாடவில்லை; அவரது வேலைசெய்தலே பிதாவின் வேலைசெய்தலாக இருந்தது. தேவனை ஊனுருகொண்டவராகவும் (கொலோ. 2:9) பிதாவுடனேகூட இருந்து வந்தவராகவும் (யோவான் 8:29), கர்த்தர் செய்ததெல்லாம் பிதாவின் வேலையாக இருந்தது.
A. தேவனுடைய ஓய்வு நாளின் ஓய்வுக்குள் மக்களைக் கொண்டுவருவதற்காகக் கர்த்தர் பிதாவோடு வேலைசெய்தார்—யோவான் 5:2–21
யோவான் 5 இல், திராணியற்ற மனிதனை குணப்படுத்துவதன் மூலமும், உயிர்ப்பிப்பதன் மூலமும் அவனை ஓய்வுக்குள் கொண்டுவரக் குமாரன் பிதாவோடு வேலைசெய்தார். தம் பொருளாட்சியில் தம் வேலை நிறைவேற்றப்படும்போது தேவனும், அவரது மக்களும் நுழையும் உண்மையான ஓய்வின் ஒரு மாதிரியாக தேவன் நிறுவியிருந்த ஓய்வு நாளில் கர்த்தர் இதைச் செய்தார். “மதரீதியான யூதர்கள் இயேசுவைத் துன்புறுத்தினார்கள், ஏனெனில் அவர்களது ஓய்வுநாளில் அவர் இந்தத் திராணியற்ற மனிதனை உயிர்ப்பிக்க வேலை செய்தார். இயேசு அவர்க்ளை நோக்கி, ‘என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்துவருகிறார். நானும் கிரியைசெய்துவருகிறேன்’ என்றார் (யோவான் 5:17). அவர்கள் தங்கள் மதரீதியான கருத்தில், தங்கள் ஓய்வுநாளை அநுசரிப்பதில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால் தரித்திரமான பாவிகள் இரட்சிக்கப்படாதவரை பிதாவுக்கும் குமாரனுக்கும் ஓய்வு இல்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை. அவர்கள் தங்கள் ஓய்வுநாளை அநுசரிப்பதில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கையில், பிதாவும் குமாரனும் பாவிகள் ஜீவனைப் பெற்றுக்கொண்டு, ஓய்வு பெறக்கூடுமாறு இன்னும் வேலைசெய்து கொண்டிருந்தனர்” (Life-study of John, Message 14,p. 172).பிதாவின் வேலை முடிக்கப்படாத வரை, இயேசு ஓய்வுநாளின் போது ஓய்வெடுக்க முடியவில்லை. தெய்வீக ஜீவனை மனிதனுக்குள் பகிர்ந்தளிப்பதற்காகக் கர்த்தர் தம் ஊழியம் முழுவதும் பிதாவுடன் வேலைசெய்தார். ஓய்வுநாள் என்பது தேவன் தம் சிருஷ்டிப்பின் வேலையை முடித்தபின் உள்ள அவரது ஓய்வைச் சுட்டிக்காட்டியது, ஆனால் பழைய சிருஷ்டிப்பு முடிந்தவுடன் தேவனுடைய வேலை முடிந்துவிடவில்லை! தேவனுடைய குறிக்கோள் நிறைவேறப்பட முடிவதற்கு முன்பு, அவர் இன்னும் நிறைய செய்ய வேண்டியிருந்தது. இயேசு, பிதாவின் இந்த வேலையை முன்னெடு்க்க வந்தார்.
B. பிதாவின் வேலையைத் தவிர வேறு எந்த வேலையும் கர்த்தர் செய்யவில்லை—யோவான் 5:19
“…பிதா இல்லாமல் இயேசு ஒருபோதும் எந்த வேலையும் செய்யவில்லை. அவர் எப்போதும் பிதாவுடன் வேலைசெய்தார் (யோவான் 14:10; 5:17, 19). பிதாவுடன் வேலைசெய்வதற்கு, சுயத்தை முற்றிலுமாக மறுதலித்தல் தேவைப்படுகிறது. பிதாவுடன் வேலைசெய்ய கிறிஸ்து தம்மையே மறுதலித்தார்” (God’s New Testament Economy, Chapter 2, pp. 33–34). இயேசுவுக்குத் தம் பிதாவின் செயல்திட்டத்தைத் தவிர வேறு எந்த செயல்திட்டமும் இல்லை, மேலும் அவருக்குத் தம் பிதாவின் வேலையைத் தவிர வேறு எந்த வேலையையும் கவனித்துக் கொள்ள அவருக்கு எந்த “ஓய்வு நேரமும்” இருக்கவில்லை. அவர் தமக்காக எதுவுமே செய்யாமல், தம் பிதாவானவர் செய்யத் தாம் காண்கிறதெதுவோ, அதை மட்டுமே செய்தார் (யோவான் 5:19). அவரை ஆக்கிரமித்த ஒரே விஷயமாகப் பிதாவின் வேலையே (கிரியை) இருந்தது (யோவான் 4:34).
C. கர்த்தர் பிதாவின் நாமத்திலே வேலைசெய்தார்—யோவான் 10:25
“பிதாவின் நாமத்திலே வேலைசெய்வது என்றால் வேலைசெய்வது நான் அல்ல, மாறாக நான் பிதாவாக வேலைசெய்கிறேன் என்பது அர்த்தம்” (God’s New Testament Economy, Chapter 2, p. 34). கர்த்தருடைய வேலை பிதாவின் வேலையோடு ஒன்றாய் இருந்தது அதோடு பிதாவின் வேலையாக இருந்தது என்பதால், கர்த்தர் தாம் பிதாவின் நாமத்திலே வேலைசெய்தார் என்று கூற முடிந்தது.
III. கர்த்தர் தம் ஊழியத்தில் பிதாவின் வார்த்தையைப் பேசினார்—யோவான் 7:16, 18; 12:49–50;14:10
பிதாவுடனான குமாரனின் வேலையின் பெரும்பாலான பகுதி அவரது பேசுதல் மூலம் நிறைவேற்றப்பட்டது. குமாரன் பேசிக் கொண்டிருக்கையில், பிதா வேலை செய்துகொண்டிருந்தார். இது, இருவரும் ஒரே நேரத்தில் தனித்தனியாக ஒரே விஷயத்தில் வேலைசெய்வது அல்ல, மாறாக இருவரும் ஒன்றாக வேலைசெய்வதே ஆகும். குமாரன் இந்த வார்த்தையைப் பேசியபோது, பிதா இந்த வேலையைச் செய்து கொண்டிருந்தார். குமாரனின் பேசுதலே பிதாவின் வேலைசெய்தலாக இருந்தது” (The Divine Dispensing of the Divine Trinity, Chapter 12, p. 122). “யோவான் 14:10 மற்றும் 11 இல் கர்த்தராகிய இயேசு, ‘நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்’ என்று கூறுகிறார். பிதா குமாரனில் வாழ்வதையும் வேலைசெய்வதையும் இங்கே நாம் காண்கிறோம்” (The Fulfillment of the Tabernacle and the Offerings in the Writings of John, Chapter 42, p. 396). கர்த்தருடைய ஊழியத்தில் அவரது முதன்மையான பயிற்சியாக பேய்களை விரட்டுவதோ, நோயுற்றவர்களை குணப்படுத்துவதோ இருக்கவில்லை; அவரது ஊழியத்தில் அவரது முதன்மையான பயிற்சியாக, பிதாவின் வார்த்தையை மக்களுக்குள் பேசுவதே இருந்தது.
A. பல குமாரர்களை உற்பத்திசெய்வதற்காக தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்ற பிதாவின் வார்த்தையைக் கர்த்தர் பேசினார்—யோவான் 12:49–50; ரோ. 8:14–30
“தேவன் எண்ணற்ற குமாரர்களைப் பெற்றெடுக்க உத்தேசிக்கும் பிதாவாக, ஜீவனின் ஊற்றாக இருக்கிறார் என்பதைக் கர்த்தர் தம் சீஷர்களுக்கு வெளிப்படுத்த வந்தார். ஆகவே, கர்த்தர் தேவனுடைய வார்த்தையை தம் சீஷர்களிடம் கொண்டுவந்தார், இவர்கள் இந்த வார்த்தையைப் பெற்றுக்கொள்வதன் மூலம் தேவனுடைய மறுபடி-பிறந்த குமாரர்களாக ஆனார்கள். அவர்கள் தேவனுடைய குமாரர்களாக ஆனார்கள், மேலும் தேவன் அவர்களது பிதாவாக ஆனார்” (Life-study of John, Message 39, p. 476). கர்த்தர் பேசிய ஜீவன்-தரும் வார்த்தைகள் (யோவான் 6:63), பிதாவின் மகிமைப்படுத்தலுக்காக அவரை வெளிக்காட்டுவதற்கு பல குமாரர்களைப் பெற்றெடுப்பதற்கான பிதாவின் வாஞ்சையை நிறைவேற்றியது (யோவான் 15:8; ரோ. 8:29-30). தேவ-மனிதர்களாகிய இந்தக் குமாரர்கள் பலர் மூவொரு தேவனுடைய வேலையின் இலக்காகவும் விளைபயனாகவும் உள்ளனர்.
B. கர்த்தர் பிதாவின் வார்த்தைகளைத் தவிர வேறு எந்த வார்த்தைகளையும் பேசவில்லை
“குமாரன் ஒருபோதும் தம் சொந்த வார்த்தையைப் பேசவில்லை. குமாரன் பேசிய அனைத்தும் பிதாவின் பேசுதலாக இருந்தது (யோவான் 14:24; 7:16–17; 12:49–50)” (God’s New Testament Economy, Chapter 2, p. 34).
IV. கர்த்தர் தம் ஊழியத்தில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றினார்—யோவான் 4:34; 5:30; 6:38, 40
பிதாவின் சித்தத்தைச் செய்வதே தம் போஜனமாக இருந்தது என்று கர்த்தர் பறைசாற்றினார் (யோவான் 4:34). அவர் தம் சொந்த சித்தத்தைச் செய்வதற்காக அல்ல, மாறாக தம்மை அனுப்பிய பிதாவின் சித்தத்தைச் செய்வதற்கே பரலோகத்திலிருந்து இறங்கி வந்தார் (யோவான் 6:38). ஆகவே, அவர் ஒருபோதும் தம் சொந்த சித்தத்தை நாடவில்லை, மாறாக பிதாவின் சித்தத்தை மட்டுமே நாடினார் (யோவான் 5:30). கர்த்தராகிய இயேசு ஒரு ரோபோவைப் போன்று ஒரு தன்னியக்க முறையில் பிதாவின் சித்தத்தை நிறைவேற்றவில்லை. அவர் தம் சொந்த சித்தத்தைப் பயிற்சிசெய்வதன் மூலம் பிதாவின் சித்தத்தைத் தேடவும் செய்யவும் தேர்வுசெய்தார். இயேசு தேவனுடைய ஊனுருவாக இருந்தபோதிலும், அவர் இன்னும் தேவனுடைய சித்தத்தைச் செய்ய தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. இது ஒரு பரம்புதிர், ஆயினும் அது அவ்வாறு இருக்கவில்லை எனில், தேவனுக்குக் கீழ்ப்படிவதிலும் பணிந்தடங்குவதிலும் நம் முன்மாதிரியாக அவர் ஒருபோதும் ஆகியிருக்க முடியாது (பிலி. 2:5–8).
A. ஒரு கூட்டு வெளியாக்கத்திற்காகப் பல குமாரர்களை ஆதாயம்பண்ணும்படி ஒரு தெரிந்தெடுக்கப்பட்ட ஜனத்திற்குள் தம்மையே பகிர்ந்தளிப்பதாகிய, பிதாவின் சித்தத்தைக் கர்த்தர் நிறைவேற்றினார்—எபே 1:6
பிதாவின் சித்தம் என்பது தம் புதிய சிருஷ்டிப்பில் தம்மை வெளிக்காட்டும் பல குமாரர்களைப் பெறுவதே ஆகும் (எபே. 1:6). இதற்காக தேவனுடைய ஒரேபேறான குமாரன் ஒரு மனிதனாக ஆனார், மேலும் இதற்காக அவர் மரித்து உயிர்த்தெழுந்தார்.
B. கர்த்தர் பிதாவின் சித்தத்தைத் தவிர, வேறு எந்தச் சித்தத்தையும் நாடவில்லை—யோவான் 6:38
“குமாரன் தம் சித்தத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, பிதாவின் சித்தத்தை எடுத்துக் கொண்டார், எனவே அவர் பிதாவின் சித்தத்தைச் செய்தார் (யோவான் 5:30; 6:38). யோவான் 6:38 இல் கர்த்தர், ‘என் சித்தத்தின்படியல்ல, என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்யவே நான் வானத்திலிருந்திறங்கி வந்தேன்’ என்று கூறுகிறார்” (God’s New Testament Economy, Chapter 2, p. 34). கர்த்தர் பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிவதற்காக அவர் என்ன என்ன காரியத்தினூடாய் கடந்துசெல்ல வேண்டியிருந்தது என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல் கீழ்ப்படிந்தார்.
C. கர்த்தர் பிதாவின் சித்தத்தை எடுத்துக்கொள்ளுதல் என்பது சிலுவையில் அவரது மரணத்தை விளைவித்தது—மத். 26:42; ஏசா. 53:10
கிறிஸ்து சிலுவையில் மரிக்க வேண்டும் என்பது பிதாவின் சித்தமாக இருந்தது (மத். 26:42). அவரை நம் பாவநிவாரணபலியாக ஆக்குவது பிதாவுக்குப் பிரியமாயிருந்தது (ஏசா. 53:10). ஆகையால், இந்த மகத்தான பணியை நிறைவேற்றக் கர்த்தர் தம் முகத்தைத் திருப்பினார் (லூக். 9:51; ஏசா. 50:7). கிறிஸ்து மரணபரியந்தமும் கூட பிதாவின் சித்தத்திற்குக் கீழ்ப்படிதலுள்ளவராக இருந்தார் (பிலி. 2:8). அவரது பரிபூரணமான கீழ்ப்படிதல் காரணமாக, அவர் எல்லாவற்றிற்கும் மேலாக உயர்த்தப்பட்டிருக்கிறார், மேலும் ஒரு மனிதனாக அவர் எல்லோருக்கும் கர்த்தராக ஆக்கப்பட்டிருக்கிறார் (பிலி. 2:9–11).
D. பிதாவை விட தாழ்வான ஓர் இடத்தை வகிப்பதில், கர்த்தர் பணிந்தடங்குதலையும், உண்மையான கீழ்ப்படிதலையும் உருவாக்கினார்—எபி. 5:7–9; பிலி. 2:8; ரோ. 5:19; ஏசா. 42:1–4
தேவத்துவத்தில் குமாரனின் அந்தஸ்து பிதாவின் அந்தஸ்துக்குச் சமமானதாக இருந்தது, ஆனால் தெய்வீகப் பொருளாட்சியை நிறைவேற்றுவதன் நிமித்தம் குமாரன் தம்மையே பிதாவுக்குப் பணிந்தடங்கும் ஓர் ஸ்தானத்தில் வைக்க ஒப்புக்கொண்டார் (பிலி. 2:6–8). பிதாவைத் தம் தலையாக எடுத்துக்கொள்வதன் மூலமும் (1 கொரி. 11:3), தம் சொந்த சித்தத்திற்குப் பதிலாக பிதாவின் சித்தத்தை ஏற்றுக்கொள்வதன் மூலமும், குமாரன் பரிபூரணமான பணிந்தடங்குதலின் ஒரு வாழ்க்கையை வாழ்ந்தார். இது பிரபஞ்சத்தில் இதற்குமுன் ஒருபோதும் எவரும் கண்டிராத ஒன்றாக இருந்தது, ஏனெனில் தேவதூதர்கள் மற்றும் மனிதன் உட்பட தேவனுடைய சிருஷ்டிப்பு அனைத்தும் கலகத்திற்குள் விழுந்துபோயிருந்தது. “தேவனுடைய முன்னறிவு தூதர்களின் கலகத்தையும், மனிதனின் தோல்வியையும் முன்னதாகவே கண்டது. தேவனுடைய அதிகாரம் தூதர்கள் மீது அல்லது ஆதாமின் சந்ததியினர் மீது கட்டியெழுப்பப்பட முடியாது. அதிகாரம் முதலில் தேவத்துவத்திற்குள் நிறுவப்படும் என்ற ஒரு இணக்கமான தீர்மானம் தேவத்துவத்தில் இருந்தது. அப்போதிருந்து, பிதா மற்றும் குமாரனின் கிரியையில் ஒரு வேறுபாடு இருந்தது. ஒருநாள் குமாரன், அதிகாரத்திற்குப் பணிந்தடங்குவதற்கான பிரதிநிதித்துவமாகிய ஒரு சிருஷ்டிக்கப்பட்ட மனிதனாக ஆகுவதற்கு மனப்பூர்வமாய்த் தம்மைத்தாமே வெறுமையாக்கினார்” (Authority and Submission, Chapter 5, p. 144). “[ப]ணிந்தடங்குதல் என்பது தேவனுடைய குமாரனால் உருவாக்கப்பட்ட ஒன்று….கர்த்தர் தம்மைத் தாமே தாழ்த்தி, கீழ்ப்படிதலுள்ளவராக ஆனார். தேவத்துவத்திலுள்ள கீழ்ப்படிதலே, முழு பிரபஞ்சத்திலும் அதி அற்புதமான விஷயமாக உள்ளது” (Authority and Submission, Chapter 5, p. 142). ஒரு மனிதனாக பரிபூரண கீழ்ப்படிதலுக்கும் கீழ்ப்படிதலுக்கும் இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்த பிறகு, அனைவருக்கும் இறைவனாக இருக்க இயேசு கடவுளால் உயர்த்தப்பட்டார். இன்று, கர்த்தராகிய இயேசுவால் தம் ஊழியத்தில் முன்னோடியாகவும் பரிபூரணமாகவும் ஆக்கப்பட்டிருக்கும் தேவனுக்கான பணிந்தடங்குதல் மற்றும் தேவனோடுள்ள ஒத்துழைப்பின் இந்த வாழ்க்கை தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதில் நாம் பங்கேற்பதற்காக ஆவியானவரில் நமக்குக் கிடைக்கக்கூடியதாக இருக்கிறது (பிலி. 2:5).
V. இன்று பிதாவின் வேலை கிறிஸ்துவின் கூட்டாளிகளாகிய (தோழர்) பல குமாரர்களால் நிறைவேற்றப்படுகின்றது—எபி. 1:9
வேறொருவரின் வேலையைச் செய்வதற்கும், வார்த்தையைப் பேசுவதற்கும், சித்தத்தை நிறைவேற்றுவதற்கும் நாம் நம் சொந்த சித்தத்தையும், வேலையையும், வார்த்தைகளையும் ஒதுக்கிவைப்பது அவசியம். நாம் தேவனுடைய சித்தத்தையும், வேலையையும், வார்த்தைகளையும் எடுத்துக்கொள்வதற்குப் பதிலாக நம் சொந்த சித்தத்தை நிறைவேற்றவோ, நம் சொந்த வார்த்தைகளைப் பேசவோ, நம் சொந்த வேலையைச் செய்யவோ தேர்வுசெய்தால் நம் நோக்கங்கள், நம் வார்த்தைகள் அல்லது நம் வேலைகள் எவ்வளவு நல்லவையாக இருந்தாலும்சரி, நாம் கலகத்தில் இருக்கிறோம். நாம் தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றாதபோது, நாம் சாத்தானின் அதிகாரத்தின் கீழ் இருக்கிறோம் அதோடு ஏதோ ஒரு வகையில் சாத்தானின் சித்தத்தை நிறைவேற்றுவதில் ஈடுபடுகிறோம் என்பதை நாம் உணர்ந்தறிய வேண்டும். நாம் தேவனுடைய சித்தத்தையும், வேலையையும், வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டால், நாம் நம் இருத்தலின் குறிக்கோளை நிறைவேற்றி, உண்மையான மகிழ்ச்சியை அனுபவிக்கிறோம் (1 பேது. 1:8), ஏனெனில் நாம் தேவனுடைய ஜீவனையும் சுபாவத்தையும் நிலையாகப் பெற்றுக்கொள்வதன் மூலமாக தேவனை வெளிக்காட்டி, வாழ்ந்துக்காட்டுகிறோம். ஒரு மனிதனாக இந்த வகையான வாழ்க்கையில் முன்னோடியாகத் திகழ்வதில் இயேசு வெற்றிபெற்றார், மேலும் பிதாவுடனான அவரது ஒருமையும், பிதாவுக்கான அவரது பணிந்தடங்குதலும் இன்று நம் ஆவியில் நமக்குக் கிடைக்கப்பெறுகின்றன.
இடைநிலைபிரயோகம்: தேவன் சிருஷ்டிகராக இருப்பதால், எல்லாமும் அவருக்கே உரியது, மேலும் அவர் தாம் எல்லாவற்றையும் எந்தக் குறிக்கோளுக்காக சிருஷ்டித்தாரோ அதற்காகப் பயன்படுத்த அவருக்கு உரிமை உண்டு. (நாம், தேவனுக்குக் கடன்பட்டிருக்கும் நம் இருத்தலைக் கொண்ட சிருஷ்டிகள் என்று நினைவூட்டப்படுவது நல்லது!) எனினும், கலகம் (ஒரு விசித்திரமான மற்றும் அந்நிய விஷயம்!) தம் சிருஷ்டிகளில் ஒன்றாகிய சாத்தான் மூலமாக தேவனுடைய சிருஷ்டிப்புக்குள் வந்தது. இந்தக் கலகம் மற்றத் தூதர்களுக்கும், பூமியில் வாழும் சிருஷ்டிகளுக்கும் (உயிரினங்களுக்கும்) பரவியது, இவை இறுதியில் பேய்களாக ஆகிவிட்டன. (நீங்கள் ஆசைப்பட்ட ஒன்றை உற்பத்தி செய்ய நீங்கள் ஒரு தொழிற்சாலையை வடிவமைத்து, அதன்பின் எல்லா எந்திரங்களும் தொழிலாளர்களும் வித்தியாசமாக ஒன்றைச் செய்ய முடிவுசெய்தால் நீங்கள் எவ்வளவு விரக்தியடைவீர்கள் என்று கற்பனைசெய்து பாருங்கள்.) பின்னர் தேவன் தம்மையே வெளிக்காட்டுவதற்கும் பிரதிநிதித்துவப்படுத்துவதற்குமான தம் குறிக்கோளுக்காகக் குறிப்பாக மனிதனை உண்டாக்கினார், மேலும் சூழ்நிலை மீண்டும் நம்பிக்கையுடன் நல்லபடியாக ஆகியிருப்பதாகத் தோன்றியது. ஆனால் மனிதனும் கலகம்செய்து, தேவனிடமிருந்து சுயாதீனமுள்ளவனாக ஆனான். ஆகவே இன்று கலகக்காரர்களாகவும், தேவனுக்குப் பணிந்தடங்காதவர்களாகவும் உள்ள மக்களால் உலகம் நிரம்பியுள்ளது. தேவன் நாடுவது என்னவென்று அறிவதில் நிஜமான அக்கறை எதுவும் இல்லாமல் அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழ்கிறார்கள். (தேவனோடு நிற்கவும், தேவனைத் தவிர வேறு யாருக்காகவும் வாழாமல் இருக்கவும் தீர்மானித்திருக்கும் யாரையாவது இளம் வாலிபர்கள் எவராவது தங்கள் பள்ளிகளில் சந்தித்திருக்கிறார்களா?) ஆயினும், தேவனுடைய சிருஷ்டிப்பு அவரது திட்டத்திற்காக அவருடன் ஒத்துழைக்க இயல மாட்டாது என்பதை அவர் முன்னமே பார்த்தார். ஆகையால், கடந்த நித்தியத்தில் கூட, குமாரன் பிதாவின் சித்தத்தை அல்லது குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக பிதாவுக்குப் பணிந்தடங்கும் ஒரு ஸ்தானத்தை எடுக்க ஒப்புக்கொண்டார். குமாரன் பிதாவுடன் சமமான அந்தஸ்தைக் கொண்ட ஒரு ஸ்தானத்தில் வகித்தார், ஆனால் தேவனுடைய குறிக்கோளை நிறைவேற்றுவதற்காக, அவர் தம்மையே வெறுமையாக்கி, ஓர் அடிமையின் ரூபமெடுத்தார். அவர் தம் சொந்த ஜீவனை அனுபவித்துமகிழவோ, தம் சொந்த திட்டங்களை நிறைவேற்றவோ வரவில்லை. அவர் பிதாவைத் தம் தலையாக எடுத்துக்கொண்டு, பிதா வாஞ்சித்தவற்றிற்காக மட்டுமே அக்கறைப்பட்டார். பிதாவின் சித்தத்தை நிறைவேற்றுவதற்காகதான் அவர் வாழ்ந்தார். இவ்வாறு, பிரபஞ்சத்தின் வரலாற்றில் முதல்முறையாக, பணிந்தடங்குதல் தேவனுடைய சிருஷ்டிப்பில் முழுமையாகக் காணப்பட்டது. பிதாவுக்குப் பணிந்தடங்குவதில் கிறிஸ்து நிறைவேற்றியவற்றின் காரணமாக, தேவனுடைய சித்தம் இறுதியாகச் செயல்படுத்தப்பட்டது. என்னே ஒரு மாபெரும் விஷயம்! இன்று நம்மில் வாழும் இத்தகைய ஒரு கிறிஸ்து நமக்கு இருக்கிறார். அவர் கீழ்ப்படிதலைப் பூரணப்படுத்தினார், மேலும் இப்போது அவர் இந்தக் கீழ்ப்படிதலை நமக்குள்ளும் செயல்படுத்துகின்றார். எவ்வளவு அதிகமாக நாம் அவரை அனுபவித்துமகிழ்கிறோமோ, அவ்வளவு அதிகமாக நாம் அவர் இருக்கும் வண்ணமாகவே ஆகிவிடுகிறோம். நாம் அனைவரும் நம் பிதாவுக்கு இத்தகைய குமாரர்களாகி, நமக்கு எல்லாமுமாயிருப்பவராக தேவனை அறிந்துகொண்டு, தேவனுடைய சித்தம் நம்மில் செயல்படுத்தப்படுவதற்கு அனுமதிக்கின்றோம்.
சுவிசேஷப் பிரயோகம்: இன்று உலகம் பொறாமை, பேராசை, தீய நோக்கங்கள், வெறுப்பு ஆகியவற்றால் நிறைந்துள்ளது, இவை அனைத்தும் சுய-மகிமைக்கான உந்துதலால் தூண்டப்படுகின்றன. (இத்தகைய சுயநலம் தொடர்பாக உலகின் சூழ்நிலையை உதாரணங்காட்டி விளக்குவதற்கு ஒரு சில எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தவும்.) நம் பயங்கரமான சுயத்திற்கு அதன் ஊற்று சாத்தானில் உள்ளது, இவன் தேவனுடைய ஒரு சிருஷ்டியாகிய ஒரு தேவதூதனாக இருந்தும், “நான் வானத்துக்கு ஏறுவேன், தேவனுடைய நட்சத்திரங்களுக்குமேலாக என் சிங்காசனத்தை உயர்த்துவேன்….நான் மேகங்களுக்கு மேலாக உன்னதங்களில் ஏறுவேன்; உன்னதமானவருக்கு ஒப்பாவேன் என்றும் நீ உன் இருதயத்தில் சொன்னாயே” என்று தன் இருதயத்தில் கூறினான் (ஏசா. 14:13–15). சாத்தான் தன்னையே தேவனுக்கு மேலாக உயர்த்தினான், அப்படியிருக்கக் கர்த்தராகிய இயேசு தாம் தேவனுக்கு சமமாயிருப்பதை கொள்ளையாடின பொருளாக எண்ணவில்லை. சாத்தான் சுய-மகிமையையும் சக்தியையும் நாடினான், அப்படியிருக்கக் கர்த்தராகிய இயேசு தம்மைத் தாமே தாழ்த்தி, மரணபரியந்தமும்—அதாவது ஓர் அவமானகரமான மரணமாகிய, ஒரு சிலுவையின் மரணபரியந்தமும்கூட கீழ்ப்படிதலுள்ளவராக ஆனார் (பிலி. 2:6-8). கர்த்தர் பிதாவினால் வாழ்ந்தார் (யோவான் 6:57). அவரது வேலை தம்மாலே அல்ல, மாறாக பிதாவோடு, பிதாவின் நாமத்தில் இருந்தது (யோவான் 5:17, 19, 30). அவரது போதனையும் வார்த்தைகளும் அவரது சொந்தமாக அல்ல, மாறாக பிதாவினுடையதாக இருந்தன (யோவான் 7:16; 12:49-50; 14:10). அவர் தம் சொந்த சித்தத்தைச் செய்யவோ, தம் சொந்த மகிமையை நாடவோ இல்லை, மாறாக பிதாவின் சித்தத்தைச் செய்து, அவரது மகிமையை நாடினார் (யோவான் 4:34; 5:30; 6:38, 40; 7:18).கர்த்தராகிய இயேசுவிடம் எந்தச் சுயமும், சுயநலத்துக்குரிய எந்த மூலக்கூறும் இருக்கவில்லை. அவரது ஆவி தாழ்மையாயும் தன்னலமற்றதாயும் இருந்தது. இதுவே தெய்வீகத் திரியேகத்துவத்தில் காணப்படும் நிஜமான அழகும் மேன்மையும் (see Living in and with the Divine Trinity, Chapter 5, pp. 45–46). இத்தகைய ஒரு தாழ்மையான மற்றும் தன்னலமற்ற ஒருவர் உங்களுக்காகச் சிலுவையில் மரித்து, அவர் உங்களை தேவனிடத்தில் சேர்க்கக்கூடுமாறு, அநீதியுள்ளவர்களுக்குப் பதிலாக நீதியுள்ளவராய் உங்கள் பாவங்களினிமித்தம் பாடுபட்டார் (1 பேது. 3:18). (செவிகொடுப்போரின் சுயநலத்தை அம்பலப்படுத்த எடுத்துக்காட்டுகளைப் பயன்படுத்தவும், எ.கா., உடன்பிறப்புகளுடன் பகிர்ந்து கொள்ளாதது, ஒருவரின் சொந்த நற்பெயரைக் கட்டியெழுப்ப மற்றவர்களைப் பற்றி கிசுகிசுத்தல், “எனக்கு அதில் என்ன இருக்கிறது?” என்று கேட்பது ஆகியன போன்றவை.) நீங்கள் உங்கள் சொந்த தனிப்பட்ட மற்றும் தற்காலிக மகிமையை அல்ல, மாறாக தேவனுடைய மகிமையைத் நாடக்கூடுமாறு, ஜீவனாக தம்மைக்கொண்டு உங்களை நிரப்புவதற்காகக் கிறிஸ்து சிலுவையில் உங்கள் பழைய, சுயத்தை-நாடும், விழுந்துபோன, சாத்தானிய ஜீவனைத் தீர்த்துக்கட்டினார்.
மிக முக்கியக் காரியங்கள்: நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைக் குறித்த ஒரு புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்னணி வாசிப்பு: The Conclusion of the New Testament, Message 69, pp. 742–746; Authority and Submission, Chapter 5.
REFERENCES: The Divine Dispensing of the Divine Trinity, Chapter 12, pp121–123; The Fulfillment of the Tabernacle and the Offerings in the Writings of John, Chapter 42, pp396, 400–401; Christ Revealed in the New Testament, Chapter 1, p13; Authority and Submission, Chapter 5; The Wonderful Christ, Chapter 8, p88–89; The God-man Living, Chapter 8, pp77–78; The Conclusion of the New Testament, Message 22, pp236–238; Message 69, pp742–746; Life Messages, Volume 1, Chapter 39, pp342–344; God’s New Testament Economy, Chapter 2, pp33–34.