வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 8
✵பாடம் 01 – 09
✵பாடம் 10 – 18
கிறிஸ்துவின் ஊழியம்
சுவிசேஷத்தைப் பறைசாற்றுதலும், சத்தியத்தைப் போதித்தலும்
குறிக்கோள்: எவ்வாறு கர்த்தர் தம் ஊழியத்தில், மனந்திரும்பி சுவிசேஷத்தில் விசுவாசிக்கும்படி மக்களுக்குச் சொல்லி சுவிசேஷத்தைப் பறைசாற்றி, தேவனைப் பற்றிய அறியாமையின் இருளிலிருந்து மக்களை விடுதலையாக்குவதற்காக சத்தியத்தைப் போதித்தார் என்பதைக் காட்டுவதற்கு.
பொருட்சுருக்கம்: கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தில் தேவனுடைய சுவிசேஷத்தைப் பறைசாற்றி, தெய்வீக சத்தியத்தைப் போதித்தார். அவரது பறைசாற்றுதல், அடிமைத்தனக்கட்டிலுள்ள பரிதாபகரமான மக்களுக்கு தேவனுடைய மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவிப்பதற்காக இருந்தது, மேலும் அவரது போதனை, இருளில் அறியாமையுள்ளவர்களை சத்தியத்தின் ஒளியைக் கொண்டு பிரகாசிப்பிப்பதற்காக இருந்தது. கர்த்தராகிய இயேசு தம் பிரசங்கத்தில், மனந்திரும்பி சுவிசேஷத்தில் விசுவாசிக்கும்படி மக்களிடம் சொன்னார். மனந்திரும்புவது என்பது பிரதானமாக மனதில் இருக்கிறது; விசுவாசிப்பது என்பது பிரதானமாக இருதயத்தில் இருக்கிறது. மனந்திரும்புவதென்றால், கடந்தகாலத்திற்காக மனம் வருந்துதலுடனும் வருங்காலத்திற்காக ஒரு திருப்பத்துடன் ஒரு மனமாற்றம் கொள்வதாகும். ஒன்றில் விசுவாசிப்பதென்றால், நாம் விசுவாசிக்கும் விஷயத்திற்குள் விசுவாசிப்பதாகும். கிறிஸ்துவில் விசுவாசிப்பதென்றால், அவருக்குள் விசுவாசிப்பதும், அவரை நமக்குள் பெற்றுக்கொள்வதும் ஆகும். கர்த்தரும் இந்தச் சத்தியத்தைப் போதித்தார். மரண இருளில் இருந்தவர்கள் ஜீவ ஒளியைப் பெறுமாறு, கர்த்தராகிய இயேசு தம் போதனையில் அவர்களைப் பிரகாசிப்பிக்கும்படி ஒளியின் வார்த்தையை விடுவித்தார். அவரது போதனை மக்களைச் சாத்தானிய இருளிலிருந்து தெய்வீக ஒளிக்குள் கொண்டுவருகிறது (அப். 26:18). முதலில், நாம் சுவிசேஷத்தில் விசுவாசித்து, கர்த்தருடைய போதனையை ஏற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், நாம் சுவிசேஷத்தைப் பறைசாற்றவும், சத்தியத்தை மற்றவர்களுக்குப் போதிக்கவும் வேண்டும்.
பின்புலம்: இளம் வாலிபர்கள் தாங்கள் தங்கள் பள்ளிகளில் சுவிசேஷத்தின் “விதைகளாக” இருப்பதை உணர்ந்தறிய வேண்டும். இதன் அர்த்தம், அவர்கள் தங்கள் வகுப்பு தோழர்களிடையே இந்தப் பூமியில் மனுஷகுமாரனால் விதைக்கப்பட்ட ஜீவன் நிறைந்தவர்கள் என்பதே (மத். 13:38). சுவிசேஷ “விதைகளாக” இளம் வாலிபர்கள் தெய்வீக விஷயங்களில் தரித்திரராக இருப்பவர்களுக்கு சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், இருளில் இருப்பவர்களுக்கு சத்தியத்தைப் போதிக்கவும் முடியும். கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ்வதற்கான அதி சிறந்த வழி, அதைத் தற்காப்புடன் வாழ்வதல்ல (இது உலகத்திலிருந்து பாதுகாக்கப்பட மட்டுமே செய்யப்படும் ஒரு வாழ்க்கையைத் தக்கவைத்துக்கொள்வது ஆகும்), மாறாக தாக்குதலுடன் வாழ்வதாகும், இது சுவிசேஷத்தில் சுறுசுறுப்பாக உள்ள ஒரு வாழ்க்கையை வாழ்வதும், நற்செய்தியை வெளியே பேசுவதும், வாழ்க்கையில் எந்தக் குறிக்கோளும் அல்லது திசையும் இல்லாதவர்களுக்குச் சத்தியத்தை வழங்குவதும் ஆகும். ஒரு வலுவான தாக்குதலே, நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் உள்ள அதி சிறந்த தற்காப்பு.
அதிகாரம்: மாற்கு 1.
கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு
கர்த்தர் தம் மௌனக் காலத்தில் முதிர்ச்சிக்கென்று வளர்ந்த பிறகு அதோடு அவர் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, அபிஷேகம் பண்ணப்பட்டு, சோதிக்கப்பட்ட பிறகு அவர் தம் ஊழியத்தை நிறைவேற்ற முன்வந்தார். கர்த்தர் தம் ஊழியத்தில் செய்த முதல் விஷயம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும், சத்தியத்தைப் போதிப்பதுமாக இருந்தது. இந்த இரண்டு விஷயங்கள்தான் அவரது சுவிசேஷ சேவையின் சகலத்தையும்-தழுவிய வடிவமைப்பாக இருந்தன. மனிதனுக்கு இன்று கர்த்தருடைய ஊழியத்தின் இந்த இரண்டு உருப்படிகளும் தேவை. மனிதன் அடிமைத்தனக்கட்டில் இருப்பதால், அவன் சுவிசேஷத்தின் மகிழ்ச்சிகரமான செய்தியை அதன் அற்புதமான உள்ளடக்கங்கள் எல்லாவற்றோடும் கேள்விப்பட வேண்டும். மனிதன் இருளிலும், தேவனைப் பற்றி அறியாமையுள்ளனாகவும் இருப்பதால், தேவன் மற்றும் அவரது குறிக்கோள் தொடர்பாக தன்னைப் பிரகாசிப்பிக்கும்படி தனக்கு சத்தியத்தின் போதனை தேவை. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதன் மூலமும், சத்தியத்தைப் போதிப்பதன் மூலமும், கர்த்தர் நற்செய்தியை மக்களிடம் கொண்டு வந்து, சத்தியத்தின் ஒளியால் அவர்களைப் பிரகாசிப்பித்தார்.
I. கர்த்தர், அடிமைத்தனக்கட்டிலுள்ள பரிதாபகரமான மக்களுக்கு தேவனுடைய மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவிப்பதற்காக சுவிசேஷத்தைப் பறைசாற்றினார்—மாற்கு 1:14; லூக்கா 4:18
லூக்கா 4:18 இல் கர்த்தர், “கர்த்தருடைய ஆவியானவர் என்மேலிருக்கிறார்; தரித்திரருக்குச் சுவிசேஷத்தை அறிவிக்கும்படி என்னை அபிஷேகம்பண்ணினார்” என்று கூறினார் (கிரே.). மேசியாவாக கர்த்தர் செய்யும்படி அவருக்கு ஆணையிடப்பட்ட முதல் விஷயமாக, தரித்திரருக்குச் சுவிசேஷத்தை அறிவிப்பதே இருந்தது. “சுவிசேஷத்தை அறிவி” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தையின் அர்த்தம், நற்செய்தியை அறிவிப்பதும், மகிழ்ச்சிகரமான செய்தியை பிரகடனப்படுத்துவதும், சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதும் என்பதே. கர்த்தர் இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை “தரித்திரருக்கு” கொண்டு வந்தார். “தரித்திரர்” என்பது பரலோக, ஆவிக்குரிய மற்றும் தெய்வீக விஷயங்களில் தரித்திரமாக இருந்தவர்களைக் குறிக்கிறது (லூக். 12:21; வெளி. 3:17). இன்றைய சீர்கெடுக்கப்பட்ட யுகத்தில், பல இளம் வாலிபர்கள் தெய்வீக விஷயங்களில் தரித்திரராக இருக்கிறார்கள் அதோடு அவர்களுக்குச் சுவிசேஷத்தின் மகிழ்ச்சிகரமான செய்தி தேவை. அடிமைத்தனக்கட்டில் உள்ள இந்தப் பரிதாபகரமான மக்களுக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதன் மூலம் கிறிஸ்து மகிழ்ச்சிகரமான செய்தியை அறிவிப்பதற்கு வந்தார்.
A. மனந்திரும்பும்படி மக்களிடம் அவர் சொன்னார்—மாற்கு 1:15
மாற்கு 1:14-15, “இயேசு கலிலேயாவிலே வந்து, தேவனுடைய ராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து: காலம் நிறைவேறிற்று, தேவனுடைய ராஜ்யம் சமீபமாயிற்று; மனந்திரும்பி, சுவிசேஷத்தை விசுவாசியுங்கள் என்றார்” என்று கூறுகிறது. கர்த்தர் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில், இரண்டு விஷயங்களைச் செய்யும்படி பாவிகளிடம் அவர் சொன்னார்: மனந்திரும்புங்கள் மற்றும் விசுவாசியுங்கள். “மனந்திரும்புவதென்றால், கடந்தகாலத்திற்காக மனம் வருந்துதலுடனும் வருங்காலத்திற்காக ஒரு திருப்பத்துடன் ஒரு மனமாற்றம் கொள்வதாகும். எதிர்மறையான பக்கத்தில், தேவனுக்கு முன்பாக மனந்திரும்புவது பாவங்களிலிருந்தும் தவறானசெயல்களிலிருந்தும் மட்டுமல்ல, மாறாக தேவன் தமக்காக சிருஷ்டித்த மக்களை ஆக்கிரமித்து கறைபடுத்தும் உலகத்திலிருந்தும், அதின் கறைபடுத்துதலிலிருந்தும் மனந்-திரும்ப வேண்டும், மேலும் கடந்த காலத்தில் தேவனை நிராகரித்து நம் வாழ்க்கையிலிருந்தும் மனந்திரும்ப வேண்டும். நேர்மறையான பக்கத்தில், மனந்திரும்புதல் என்றால் தேவன் மனித இனத்தை உண்டாக்கியதில் அவரது குறிக்கோளை நிறைவேற்ற எல்லா வழிகளிலும் எல்லாவற்றிலும் தேவனிடம் திரும்புவதாகும். இது, ‘தேவனுக்கென்று மனந்திரும்புதல்’; இது, ‘மனந்திரும்பி, தேவனிடம் திரும்புதல்’ (அப். 20:21; 26:20)” (Life-study of Mark, Message 5, p. 49).
B. சுவிசேஷத்தில் விசுவாசிக்கும்படி மக்களிடம் அவர் சொன்னார்—மாற்கு 1:15
மனந்திரும்புதல் பிரதானமாக மனதுடன் தொடர்புடையது, அப்படியிருக்க விசுவாசித்தல் பிரதானமாக இருதயத்துடன் தொடர்புடையது (ரோ. 10:9). ஒன்றில் விசுவாசிப்பதென்றால், நாம் விசுவாசிக்கும் விஷயத்திற்குள் விசுவாசிப்பதாகும். அது, நாம் விசுவாசிக்கும் விஷயங்களைர நமக்குள் பெறுவதும் ஆகும். சுவிசேஷத்தில் விசுவாசிப்பதென்றால் பிரதானமாக கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவில் விசுவாசிப்பதாகும் (அப். 16:31), அவரில் விசுவாசிப்பது, நாம் அவருடன் ஜீவாதாரமாக இணைக்கப்படுமாறு அவருக்குள் விசுவாசிப்பதும் (யோவான் 3:15-16), அவரை நமக்குள் பெற்றுக்கொள்வதுமாகும் (யோவான் 1:12). கிறிஸ்துவில் விசுவாசிக்கும் இப்படிப்பட்டதொரு விசுவாசம் (கலா. 3:22) சுவிசேஷத்தின் சத்திய வார்த்தையை நாம் கேட்பதன் மூலம் (ரோ. 10:17; எபே. 1:13) தேவனால் நமக்குக் கொடுக்கப்படுகிறது (எபே. 2:8). இந்த விசுவாசம் நம்மைச் சுவிசேஷத்தின் எல்லா ஆசீர்வாதங்களுக்குள்ளும் கொண்டுவருகிறது (கலா. 3:14). எனவே அது நமக்கு விலையேறப்பெற்றது (2 பேது. 1:1). விசுவாசிப்பது என்றால் கர்த்தராகிய இயேசுவைப் பாவ மன்னிப்புக்காக (அப். 10:43) மட்டுமல்லாமல், மறுபடிஜெநிப்பித்தலுக்காகவும் பெற்றுக்கொள்வதாகும் (1 பேது. 1:21, 23), இவ்வாறு விசுவாசிக்கிறவர்கள் மூவொரு தேவனுடனான ஒரு ஜீவாதார சேர்க்கையில் (மத். 28:19) தேவனுடைய பிள்ளைகளாகவும் (யோவான் 1:12-13) கிறிஸ்துவின் அவயவங்களாகவும் (எபே. 5:30) ஆகின்றனர்.” (The Conclusion of the New Testament, Message 65, p. 690). புதிய ஏற்பாட்டில், இந்தச் சுவிசேஷம் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷம் என்றும் (ஏனெனில் இயேசு கிறிஸ்து, தம் வழிமுறை எல்லாவற்றோடும், இந்த சுவிசேஷத்தின் உள்ளடக்கமாக இருக்கிறார்), தேவனுடைய சுவிசேஷம் என்றும் (ஏனெனில் தேவனே இந்த சுவிசேஷத்தைத் திட்டமிட்டார், வாக்குத்தத்தம் பண்ணினார், நிறைவேற்றினார்), ராஜ்யத்தின் சுவிசேஷம் என்றும் (ஏனெனில் இது, விசுவாசிகள் தெய்வீக ராஜ்யத்திலுள்ள தெய்வீக ஜீவனின் ஆசீர்வாதங்களில் பங்கேற்கும்படி அவர்களைப் பரலோக ஆளுகையின் மண்டலத்திற்குள் கொண்டுவருகிறது) அழைக்கப்படுகிறது. இவை அனைத்தையும் நாம் கருத்தில் கொள்ளும்போது, ஒரு நபர் சுவிசேஷத்தைக் கேள்விப்பட்டு, அதில் விசுவாசிப்பது எவ்வளவு அற்புதமானது என்பதை நாம் உணர்ந்தறிகிறோம்.
II. இருளிலுள்ள அறியாமையுள்ளவரகளை சத்தியத்தின் ஒளியால் பிரகாசிப்பிக்கும்படி கர்த்தர் சத்தியத்தைப் போதித்தார்—மாற்கு 1:21–22
கர்த்தர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தது மட்டுமல்லாமல், இருளிலுள்ள அறியாமையுள்ளவர்களுக்குச் சத்தியத்தைப் போதிக்கவும் செய்தார்.
A. வீழ்ச்சியின் காரணமாக, மனிதன் தேவனைப் பற்றிய அறிவைக் குறித்து அறியாமையுள்ளவனாகி, இருளில் இருக்கிறான்—லூக். 1:78; அப். 26:18; எபே. 5:8
“பாவத்திற்குள் மனிதனின் வீழ்ச்சி, தேவனுடனான அவனது ஐக்கியத்தை முறித்தது. இதன் விளைவாக, மனிதன் தேவனைப் பற்றிய அறிவைக் குறித்து அறியாமையுள்ளவனாக ஆனான். இத்தகைய அறியாமை முதலில் இருளையும், அதன்பின் மரணத்தையும் விளைவித்தது” (Life-study of Mark, Message 6, p. 51). “தேவனைப் பற்றியும், தேவனுடைய விஷயங்களைப் பற்றியும் விழுந்துபோன மக்களிடையே என்னே பயங்கரமான அறியாமை இருக்கிறது! நம் சமுதாயம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாலும்கூட, மக்கள் இன்னும் தெய்வீக சத்தியத்தைக் குறித்து அறியாமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனைத் தெரியாது, அவர்களுக்கு மனித வாழ்க்கையின் அர்த்தம் தெரியாது, மேலும் அவர்களுக்குத் தாங்கள் எங்கிருந்து வந்தார்கள் அல்லது தாங்கள் எங்கு செல்கிறார்கள் என்பது தெரியாது. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் அறியாமையில் மாம்சத்தின் இச்சைகளுக்காகவும், உலகத்தின் இன்பங்களுக்காகவும் அக்கறைப்படுகிறார்கள். ஆகையால், இன்று மக்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் பற்றிய நேர்த்தியான போதனை, அதாவது அவர்களைப் பிரகாசிக்கப் போகும் போதனை தேவை” (Life-study of Mark, Message 5, p. 47).
B. கர்த்தருடைய போதனை மனிதனைப் பிரகாசிப்பிப்பதற்கான ஒளியின் வார்த்தையை விடுவித்தது—யோவான் 8:12; 12:46
“[கர்த்தர்], உலகத்திற்கு ஒளியாக (யோவான் 8:12; 9:5), மரண நிழலில் அமர்ந்திருந்த மக்கள் உள்ள இடமாகிய இருளின் தேசமாகிய கலிலேயாவுக்கு வந்தார், மேலும் அவர் அவர்கள் மீது பிரகாசிப்பதற்கான ஒரு மாபெரும் ஒளியாக வந்தார் (மத். 4:12–16). மரண இருளில் இருந்தவர்கள் ஜீவ ஒளியைப் பெறக்கூடுமாறு (யோவான் 1:4) அவரது போதனை அவர்களைப் பிரகாசிப்பிக்கும்படி ஒளியின் வார்த்தையை விடுவித்தது” (Life-study of Mark, Message 6, pp. 51–52). நாம் சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதற்கு மட்டுமல்லாமல், சத்தியத்தை மற்றவர்களுக்குப் போதிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.
III. நாம் நம் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கித்து, சத்தியத்தைப் போதிக்கலாம்—2 தீமோ. 4:2
நாம் அனைவரும் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்கவும், சத்தியத்தைப் போதிக்கவும் கற்றுக்கொள்ளலாம். இவ்விரண்டும் சேர்ந்தே செல்கின்றன. நிஜமான சுவிசேஷம் பிரசங்கித்தல், சத்தியத்தின் வீரியமுள்ள போதனையைச் சார்ந்துள்ளது (எபே. 1:13). நாம் சத்தியங்களை எடுத்துக்கொண்டு, அவற்றைக் கொண்டு கட்டமைக்கப்படுவோம் எனில், ஒரு நகை வியாபாரி ஒரு வைரத்தை வழங்கும் விதத்தில் நாம் அவற்றை மற்றவர்களுக்கு வழங்க இயல்வோம். எடுத்துக்காட்டாக, பள்ளியில் வகுப்புகளுக்கு இடையில் ஒரு குறுகிய இடைவேளையின் போது, நாம் ஆதியாகமம் 3:15 இல் உள்ள ஸ்திரீயின் வித்தைப் பற்றிய வாக்குத்தத்தத்தைக் குறித்து ஒருவரிடம் பேசலாம். கர்த்தரே இந்த வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றமாக இருந்ததையும், சிலுவையில் தேவனுடைய எதிரியை அழித்ததையும் நாம் அவர்களுக்குத் தெரியப்படுத்தலாம். இந்தச் சத்தியம், வார்த்தையில் உள்ள ஒரு வைரம் ஆகும் அதோடு கேள்விப்படுகிறவருக்கு தெய்வீக ஒளியை உட்கொணர்கிறது. இதன் விளைவாக, அவர்கள் கூடுதலாகக் கேள்விப்பட விரும்புவார்கள். பல இளம் வாலிபர்கள் இதைச் செய்வார்கள் எனில், இந்தப் பூமியில் ஒரு மாபெரும் தாக்கம் இருக்கும், மேலும் பலர் சாத்தானிய இருளிலிருந்து தெய்வீக ஒளிக்குள் விடுவிக்கப்படுவார்கள் (அப். 26:18).
இடைநிலைபிரயோகம்: இந்தச் சீர்கெடுக்கப்பட்ட இருளின் யுகத்தில், நற்செய்தியைக் காண்பது கடினம். செய்தித்தாள்களும் பத்திரிகைகளும் மனுக்குலத்தின் ஆதரவற்ற நிலைமை (கொள்ளைகள், கொலைகள், விபச்சாரம், ஊழல்கள், வதந்திகள், விமான விபத்துக்கள், கார் விபத்துக்கள் போன்றவை) ஒரே மாதிரியாக அறிக்கையைத் தருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, சிறிதளவு நற்செய்தியே உள்ளது, மேலும் இப்போது நிலவும் நற்செய்தி ஒருபோதும் மனிதனை அவனது பரிதாப நிலையிலிருந்து மீட்பதாகத் தெரியவில்லை. எனினும் புதிய ஏற்பாடு, செவிக்கொடுக்கக்கூடிய அனைவருக்கும் நற்செய்தியையும், மகிழ்ச்சிகரமான செய்தியையும் அறிவிக்கிறது. இந்த நற்செய்தியே சுவிசேஷம். (ஓர் இடைநிலைப் பள்ளி மாணவனால்கூட பேச முடியக்கூடிய ஓர் எளிய வடிவத்தில் உள்ள) சுவிசேஷம் இதுதான்: “மனிதன் பாவத்திற்குள் விழுந்துபோய்விட்டான் அதோடு குற்றமுள்ளவனாக இருக்கிறான், மேலும் தன்னையே இரட்சித்துக்கொள்ள ஒன்றும் செய்ய முடியாது. அவன் அழிந்துபோவதற்கே விதி விதிக்கப்பட்டவன், ஆனால் கிறிஸ்து இயேசு பாவிகளை இரட்சிப்பதற்காக உலகத்திற்குள் வந்தார் (யோவான் 3:16; 1 தீமோ. 1:15). கிறிஸ்து மனிதனுடைய பாவங்களை மன்னிப்பதற்காகச் சிலுவையில் மரித்து, மனிதன் நித்திய ஜீவனைப் பெறக்கூடுமாறு உயிர்த்தெழுந்தார். மனந்திரும்பி, சுவிசேஷத்தில் விசுவாசிக்கிற எவனுக்கும் தன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, தேவனுடைய ஓர் உண்மையான பிள்ளையாக ஆகுவதற்கு தேவனுடைய நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்வான் (யோவான் 1:12–13).” இது மெய்யாகவே ஒரு நற்செய்திதான். யோவான் 3:16 ஐ மனப்பாடம் செய்வதற்கு இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு உதவும்படி நீங்கள் உணரக்கூடும்.
சுவிசேஷப் பிரயோகம்: “பாவத்திற்குள் மனிதனின் வீழ்ச்சி தேவனுடனான அவனது ஐக்கியத்தை முறித்தது. இதன் விளைவாக, மனிதன் தேவனைப் பற்றிய அறிவைக் குறித்து அறியாமையுள்ளவனாக ஆனான். இத்தகைய அறியாமை முதலில் இருளையும், அதன்பின் மரணத்தையும் விளைவித்தது” ( Life-study of Mark, Message 6, p. 51). “தேவனைப் பற்றியும், தேவனுடைய விஷயங்களைப் பற்றியும் விழுந்துபோன மக்களிடையே என்னே பயங்கரமான அறியாமை இருக்கிறது! நம் சமுதாயம் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினாலும்கூட, மக்கள் இன்னும் தெய்வீக சத்தியத்தைக் குறித்து அறியாமையுள்ளவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவனைத் தெரியாது, அவர்களுக்கு வாழ்க்கையின் அர்த்தம் தெரியாது, மேலும் அவர்களுக்குத் தாங்கள் எங்கிருந்து வந்தார்கள் அல்லது தாங்கள் எங்கு செல்கிறார்கள் என்பது தெரியாது. அதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் அறியாமையில் மாம்சத்தின் இச்சைகளுக்காகவும், உலகத்தின் இன்பங்களுக்காகவும் அக்கறைப்படுகிறார்கள். ஆகையால், இன்று மக்களுக்கு தேவனுடைய வார்த்தையைப் பற்றிய நேர்த்தியான போதனை, அதாவது அவர்களைப் பிரகாசிக்கப் போகும் போதனை தேவை” ( Life-study of Mark, Message 5, p. 47). ஒரு மதச்சார்பற்ற கல்வி உலகத்திற்குரிய அறிவில் ஐசுவரியமானதாக இருந்தாலும், சுவிசேஷமாக கிறிஸ்துவின் ஆராய்ந்தறிய முடியாத ஐசுவரியங்களின் செல்வத்தோடு உள்ள தொடர்பில் இது வறுமையில் உள்ளது (எபே. 3:8). மகிழ்ச்சிகரமான செய்தியாக சுவிசேஷம் தரித்திரருக்குப் பிரசங்கிக்கப்பட வேண்டும் என்பதை லூக்கா 4 இல் நாம் காண்கிறோம். இந்தச் சுவிசேஷச் செய்திக்கு நீங்கள் செவிகொடுத்துக் கொண்டிருக்கையில், உங்கள் கழிபெரு வறுமையின் நிஜமான சூழ்நிலையை நீங்கள் காணக்கூடுமாறு, கர்த்தரால் உங்கள் கண்கள் தொடப்பட அனுமதியுங்கள். நீங்கள் அறிவிலும், ஒழுக்கத்திலும், நெறிமுறைகளிலும், கலாச்சாரத்திலும், மத தத்துவங்களிலும் நடைமுறைப்பயிற்சிகளிலும் கூட ஐசுவரியவானாக இருக்கக்கூடும், ஆனால் பிரபஞ்சத்தில் உள்ள நிஜமான, நித்திய ஐசுவரியங்கள் தொடர்பாக ஒட்டுமொத்தமாக வறிய ஏழ்மையாக்கப்பட்ட நிலையில் இருக்கக்கூடும். இன்று, நற்செய்தி உங்களிடம் முன்வைக்கப்படுகின்றது. அதற்குத் திறந்துக்கொடுத்து, உங்களை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கவும் (2 தீமோ. 3:15), உங்களை விலையேறப்பெற்ற விசுவாசத்தால் நிரப்பவும் (2 பேது. 1:1), ஆராய்ந்தறியமுடியாத ஐசுவரியமான கிறிஸ்துவைப் பெற வைக்கவும் (எபே. 3:8) செய்ய முடியக்கூடிய அறிவைப் பெற்று, சுவிசேஷத்தின் மூலமாக தெய்வீக, நித்திய, அழிவில்லாத ஜீவனால் மறுபடிஜெநிப்பிக்கப்படுங்கள் (1 பேது. 1:23; 2 தீமோ. 1:10).
மிக முக்கியக் காரியங்கள்: வேதாகமத்தில் உள்ள நிகழ்வுகளின் வரலாற்றுக்குரிய நிகழ்ச்சிக் கோவையை் அறிதல் (I.C.) ; நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.)
பின்னணி வாசிப்பு: Life-study of Mark, Message 5.
REFERENCES: Life-study of Mark, Message 5; Message 6, pp51–52; Luke 4:18, footnote 3; 4:43, footnote 1; The Conclusion of the New Testament, Message 65, pp689–691; Truth Lessons, Level 1, Volume 2, Lesson 18, pp90–91; Lesson 20.