வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 8

பாடம் 01 – 09

பாடம் 10 – 18

கிறிஸ்துவின் ஊழியம்

Jump to section

பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரை கிறிஸ்துவின் மௌனம்

குறிக்கோள்: கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தைத் தொடங்க முடிவதற்கு முன், அவர் ஒரு மௌன காலத்தினூடாய் முதிர்ச்சிக்கென்று வளர வேண்டியிருந்தது என்பதைக் காட்டுவதற்கு.

பொருட்சுருக்கம்: கர்த்தராகிய இயேசுவே முதல் தேவ-மனிதனாக இருந்தார், மேலும் முதல் தேவ-மனிதனாக தம் வாழ்க்கையில் அவர் இன்று நாம் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தினார். இந்த முன்மாதிரியின் ஓர் அம்சம், பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையிலான மௌனக் காலமாகும். கர்த்தர் தாம் பன்னிரெண்டு வயதில் இருந்தபோதே தேவனுடைய வீட்டிற்காக அக்கறைப்பட்ட போதிலும், அவர் முப்பது வயதை அடைந்திருந்த வரை தம் ஊழியத்தை நிறைவேற்ற அவருக்கு தேவன் ஆணை கொடுக்கவில்லை. இது, பூமியில் தேவனுடைய நலன்களைக் கவனித்துக்கொள்வதற்கான நிஜமான ஊழியத்திற்கு ஜீவனின் முதிர்ச்சி தேவை என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. கர்த்தராகிய இயேசு தம் ஊழியத்தை நிறைவேற்ற முடிவதற்கு முன்பு அவர் தாமே கூட  ஒரு குறிப்பிட்ட அளவு மனித முதிர்ச்சியை அடைய வேண்டியிருந்தது. இந்தப் பதினெட்டு ஆண்டுகால மௌனத்தின்போது, கர்த்தராகிய இயேசு வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற ஒரு வேரைப்போல இருந்தார் (ஏசா. 53:2), அதாவது அவர் ஓர் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தார். அவருக்கு எந்தக் கௌரவமோ, ஈர்ப்போ, விரும்பத்தக்க தோற்றமோ இருக்கவில்லை; அவர் மனிதர்களால் இழிவாகக் கருதப்பட்டு, நிராகரிக்கப்பட்டார்; மேலும் அவர் சோதிக்கப்பட்டார், ஆயினும் அவரிடம் பாவம் இருக்கவில்லை. நாம் இத்தகைய ஒருவராக அவரை அறிந்துகொள்ளவும், அவரைப் பாராட்டவும் வேண்டும். இப்போது தங்கள் “மௌன” ஆண்டுகளில் இருக்கும் இளம் வாலிபர்களுக்கு, கிறிஸ்துவின் தேவ-மனித வாழ்க்கையின் இந்த அம்சத்தை அறிவதற்கும் அனுபவிப்பதற்குமான ஒரு பொன்னான வாய்ப்பு உள்ளது.

பின்புலம்: பன்னிரண்டு வயது முதல் முப்பது வயது வரையிலான இந்த மௌன காலம் குறிப்பாக, இந்த “மௌன” ஆண்டுகளில் வாழ்கின்ற இளைஞர்களுக்குப்  பொருத்தமானது. இந்த ஆண்டுகளின் போது, கிறிஸ்துவின் தேவ-மனித வாழ்க்கையின் இந்த அம்சத்தை அறிவதற்கும் அனுபவிப்பதற்குமான ஒரு பொன்னான வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது. இளம் வாலிபர்கள் விரைவாக விஷயங்களை விரும்புகிற அதோடு தங்கள் ஜீவனிலுள்ள வளர்ச்சியைத் துரிதப்படுத்த விரும்பும் போக்கைக் கொண்டிருக்க முடிகிற ஒரு யுகத்தில் நாம் வாழ்கிறோம் என்பதால், இந்தச் செய்தி மெதுவான, ஆயினும் மதிப்புமிக்க, வாழ்க்கை முறையை எடுத்துக்கொள்ளவும், கர்த்தருடைய குறிக்கோளுக்காக ஜீவனில் முதிர்ச்சியடையத் தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளவும் அவர்களை உற்சாகப்படுத்துகிறது.

திகாரங்கள்: லூக்கா 2–3; ஏசாயா 53.

கற்பிப்பதற்கான உண்மைகள் கொண்ட செய்திக்குறிப்பு

கடைசி அலகில் நாம் கிறிஸ்துவின் நபரைப் பற்றி பேசினோம். இந்த அலகில் நாம் கிறிஸ்துவின் ஊழியத்தைப் பற்றி பார்ப்போம், இதுவே அவரது வேலையின் முதல் அம்சம். கிறிஸ்துவை முழுமையாக அனுபவிக்கவும் அனுபவித்துமகிழவும், நமக்கு இந்த இரண்டு விஷயங்களைப் பற்றிய ஒரு வெளிப்பாடு தேவை: அவரது நபர் மற்றும் அவரது வேலை (எபே. 1:17–23; 4:11; கொலோ. 2:2). கடைசி அலகில் கிறிஸ்துவின் நபரைப் பற்றி பேசியிருப்பதால், நாம் இந்த அலகில் கிறிஸ்துவின் ஊழியத்தைப் பற்றி தொடர்ந்து பார்ப்போம். இந்தப் பாடத்தில், கிறிஸ்து தம் ஊழியத்தை உடனடியாக ஆரம்பிக்கவில்லை என்பதைப் பார்ப்பது பிரகாசிப்பிப்பதாக உள்ளது. மாறாக, அவர் ஒரு பதினெட்டு வருட மௌன காலத்தினூடாய் முதிர்ச்சியடைந்தார், அந்தச் சமயத்தின் போது அவர் தேவனுக்கு முன்பாகத் தம் ஊழியத்தை ஆயத்தப்படுத்துவதற்காக ஒரு நேர்த்தியான தேவ-மனித வாழ்க்கையை வாழ்ந்தார்.

I. கர்த்தர் தம் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன், அவர் ஒரு மௌன காலத்தினூடாய் முதிர்ச்சியடைந்தார்—லூக். 3:23

கர்த்தருடைய ஊழியத்தின்போது அவர் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார், சத்தியத்தைப் போதித்தார், பாவிகளை மன்னித்தார், பிணியாளிகளைக் குணப்படுத்தினார், பேய்களை விரட்டினார், குருடர்களின் கண்களைத் திறந்தார். கிறிஸ்து தம் ஊழியத்தைத் தொடங்குவதற்கு முன்பு, அவர் ஒரு மௌனக் காலத்தினூடாய்க் கடந்துசென்றார், அந்தக் காலத்தில் அவர் தேவனுக்கு முன்பாக ஒரு வேலையையும் நிறைவேற்றவில்லை. இந்த மௌனக் காலம் என்பது கர்த்தர் முதிர்ச்சிக்கென்று வளர்ந்த ஒரு காலமாக இருந்தது.

A. பன்னிரெண்டாவது வயதில், கர்த்தருக்கு தேவனுடைய வீட்டின் மீது அக்கறை இருந்தது, ஆனால் தம் ஊழியத்தை தேவனால் இன்னும் ஆணை கொடுக்கப்படவில்லை—லூக். 2:49

கர்த்தருக்குப் பன்னிரண்டு வயதாக இருந்தபோது, அவரது பெற்றோர் பஸ்கா பண்டிகையின் காலத்தில் எருசலேமுக்குச் சென்றனர். அவர்கள் அங்கே தங்கி முடித்ததும், இயேசு அவர்களுடன் உள்ள கூட்டத்தில் இருந்தார் என்று எண்ணிக்கொண்டு அவர்கள் வீடு திரும்பினர். அவர்கள் அவரைக் கண்டுபிடிக்காதபோது, அவர்கள் எருசலேமுக்குத் திரும்பி, ஞானமுள்ள போதகர்களுடன் ஆலயத்தில் அவரைக் கண்டார்கள். கர்த்தர் தம் பெற்றோரை நோக்கி, “நான் என் பிதாவின் காரியங்களில் இருந்தாக வேண்டும் என்பதை நீங்கள் அறியீர்களா?” (கிரே.) என்று கூறினார் (அல்லது “நான் என் பிதாவின் வீட்டில் இருந்தாக வேண்டும் என்பதை நீங்கள் அறியீர்களா” என்று அது மொழிபெயர்க்கப்படலாம்—லூக். 2:49, அடிக்குறிப்பு 2). இது, பன்னிரெண்டாவது வயதில் கர்த்தருக்குப் பிதாவின் வீட்டின் மீது ஓர் அக்கறை இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது, இது புதிய எருசலேமில் உச்சநிலையாக முழுநிறைவேற்றமடையப் போகும் கிறிஸ்துவின் சரீரத்தை விளைவிக்கின்ற சபையே ஆகும். முதல் தேவ-மனிதனாக, அவர் இதற்காக வாழ்ந்து கொண்டிருந்தார். தேவனுடைய வீடாகிய சபைக்காக நம் இளமைப் பருவத்தில் ஓர் அக்கறையைக் கொண்டிருப்பதற்கான அவரது முன்மாதிரியை நாமும் பின்பற்ற வேண்டும். வசனங்கள் 51 மற்றும் 52, “பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்…இயேசுவானவர் ஞானத்திலும், வளர்த்தியிலும், தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாகத்  தம்மில் வெளியரங்கமாக்கப்பட்ட கிருபையிலும்  அதிகமதிகமாய் விருத்தியடைந்தார்” என்று தொடர்ந்து கூறுகின்றன (கிரே.). அதைத் தொடர்ந்து, சுவிசேஷத்தின் பதிவு, கர்த்தருக்குப் பன்னிரெண்டு வயதில் தேவனுடைய நலன்களுக்கான ஓர் அக்கறை இருந்த போதிலும், தம் ஊழியத்தை நிறைவேற்றுபடி அப்போது அவருக்கு தேவன் ஆணை கொடுக்கவில்லை என்பதை நமக்குக் காட்டுகிறது. மாறாக, கர்த்தர் முதிர் வயதாகிய முப்பதை அடைந்திருந்த வரை தேவன் இன்னொரு பதினெட்டு ஆண்டுகள் காத்திருந்தார். இது மனிதனின் வழி அல்ல. மனிதன் விரைவாகக் காரியங்களைச் செய்ய விரும்புகிறான், ஆனால் தேவன் பொறுமையாகக் காத்திருக்கிறார், ஏனெனில் உண்மையான ஊழியத்திற்கு ஜீவனின் முதிர்ச்சி தேவை என்பதை அவர் உணர்ந்தறிகிறார்.

B. பன்னிரண்டு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடையில், ஒரு மௌனக் காலம் இருந்தது

இந்த மௌனக் காலத்தின் போது, கர்த்தர் ஓர் இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேரைப்போலவும் வளர்ந்தார் (ஏசா. 53:2). அவருக்கு ஈர்க்கும் ரூபமும் இல்லை, கம்பீரமும் இல்லை, அழகான தோற்றமும் இல்லை (ஏசா. 53:2). அவர் அசட்டைபண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாக இருந்தார் (ஏசா. 53:3). அவரது தோற்றம் எந்த மனிதனையும் விட இவ்வளவு அதிக அந்தக்கேடு அடைந்ததாக இருந்தது (ஏசா. 52:14). அவர் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருந்தார் (எபி. 4:15; 2:18). இந்த நிலைகள் மற்றும் நிலைமைகள் அனைத்தும் ஒரு நபரை சமூக தோற்றத்தில் மௌனமாகவும் செயலற்றவனாகவும் ஆக்குகின்றன. நாம் இந்த நிலைகளிலும் நிலைமைகளிலும் இருந்தோம் எனில், யாரும் நம்மைப் பாராட்டவோ, போற்றவோ, மதிக்கவோ மாட்டார்கள் என்பதால் நாமும் மௌனமாகவும் செயலற்றவர்களாகவும் இருப்போம். கர்த்தருடைய வாழ்க்கையில் இந்த மௌனக் காலம் ஒரு முக்கியமான காலமாக இருந்தது, ஏனெனில் இந்த சமயத்தில்தான் அவர் மனித ஜீவனில் முதிர்ச்சியடைந்தார். பின்வரும் குறிப்புகள், கர்த்தர் இந்த மௌன ஆண்டுகளில் வாழ்ந்துகொண்டிருக்கையில் எந்த நிலையிலும் நிலைமையிலும் வாழ்ந்தார் என்பதை நமக்குக் காட்டுகின்றன.

  1. அவர் யெகோவாவுக்கு முன்பாக ஓர் இளங்கிளையைப்போலவும், வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற ஒரு வேரைப்போலவும் வளர்ந்தார்—ஏசா. 53:2.

கர்த்தர் வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற ஒரு வேரைப் போல இருப்பது என்றால் அவர் ஓர் ஏழைக் குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதே.

  1. அவருக்கு ஈர்க்கும் (விரும்பத்தக்க) ரூபமும் இல்லை, கம்பீரமும் இல்லை, அழகான தோற்றமும் இல்லை— ஏசா. 53:2

ஏசாயா 53:2, “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமும் இல்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை  விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது” என்று கூறுகிறது. கர்த்தருடை அந்தஸ்து அல்லது தோற்றத்தில், மற்றவர்களுக்கு விரும்பத்தக்கதாக எதுவுமே இருக்கவில்லை.

  1. அவர் இழிவாகக் கருதப்பட்டவரும் (அசட்டைப் பண்ணப்பட்டவரும்), மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவருமாக இருந்தார்—ஏசா. 53:3.

ஏசாயா 53:3, “அவர் அசட்டைபண்ணப்பட்டிருந்தார்; அவரை எண்ணாமற்போனோம்” என்று கூறுகிறது. யாரும் அவரை மதிக்கவில்லை.

  1. அவரது தோற்றம் எந்த மனிதனையும் விட இவ்வளவு அதிக அந்தக்கேடு அடைந்ததாக இருந்தது—ஏசா. 52:14.
  2. அவர் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருந்தார்—எபி. 4:15; 2:18.

C. முப்பது வயதில், கர்த்தர் தேவனுடைய நலன்களுக்காக தம் ஊழியத்தை நிறைவேற்றுவதற்கான ஒரு முதிர்ச்சியின் கட்டத்தை அடைந்தார்—லூக். 3:23

கர்த்தர் இந்தப் பிரபஞ்சத்தை சிருஷ்டிக்க, ஒரு சில நாட்கள் மட்டுமே ஆனது. அவர் ஒரு மனிதனாக மாம்சமாவதற்கு ஒன்பது மாதங்கள் ஆனது, ஆனால் அவர் ஒரு மனிதனாக முதிர்ச்சிக்கென்று வளர எடுத்துக்கொண்ட நேரம் முப்பது ஆண்டுகள் ஆனது. பன்னிரெண்டாவது வயதில், அவருக்கு தேவனுடைய வீட்டின் மீது அக்கறை இருந்த போதிலும், அவர் பிதாவின் வீட்டிற்கான தம் ஊழியத்தை நிறைவேற்ற முடியுமாறு, ஒரு குறிப்பிட்ட அளவு மனித முதிர்ச்சியை அடைய அவருக்கு இன்னொரு பதினெட்டு ஆண்டுகள் இன்னும் தேவைப்பட்டது. பிரபஞ்சத்தின் சிருஷ்டிப்பு ஒரு சில நாட்களுக்குள் நிறைவேற்றப்பட முடியும், ஆனால் தேவனுக்கு முன்பாக ஓர் உண்மையான ஊழியத்தை நிறைவேற்றுவதற்கு கர்த்தர் முப்பது வருட மனித வாழ்க்கை மூலமாக முதிர்ச்சியடைவது தேவைப்பட்டது. இதற்கான காரணம் அடுத்தக் குறிப்பில் காணப்படுகிறது.

II. இது, பூமியில் தேவனுடைய நலன்களைக் கவனித்துக்கொள்வதற்கான நிஜமான ஊழியத்திற்கு ஜீவனின் முதிர்ச்சி தேவை—எண். 4:3

“தேவனுடைய ஊழியர்கள் பலர் இத்தகைய ஒரு மௌனக் காலத்தைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை; மாறாக, அவர்கள் தேவனால் வரும் அத்தகைய ஒரு சோதனையில் தோல்வியடைந்தனர். கிறிஸ்துவின் சரீரத்தில் விளைவுபெறும், தேவனுடைய வீட்டைக் கவனித்துக்கொள்வதற்கான நிஜமான ஊழியத்திற்கு ஜீவனின் [வயது] முதிர்ச்சி தேவை (எண். 4:3). எவ்வளவு அதிகமாக உங்களிடம் முதிர்ச்சி இருக்கிறதோ, அவ்வளவு புத்திசாலியாக நீங்கள் இருப்பீர்கள். மூப்பர்கள், முதிர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வளர்ந்திருக்கும் சகோதரர்களாக இருக்க வேண்டும். அப்போது அவர்கள் மூப்பர்களாக இருக்க தகுதியுடையவர்கள். இளம் வாலிபர்கள் அனைவரும் முன்னுருமாதிரியாகிய முதல் தேவ-மனிதனின் முன்மாதிரியின்படி வளரத் தொடர்ந்து முன்செல்லப் பயிற்றுவிக்கப்படுவார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன்” (The God-man Living, Message 3, p28).

III. நம் இளமைப் பருவத்தின் “மௌன” ஆண்டுகளில், கிறிஸ்துவின் தேவ-மனித வாழ்க்கையின் இந்த அம்சத்தை அறிந்து அனுபவிப்பதற்கான வாய்ப்பு நமக்கு உள்ளது.

தேவனுக்கு முன்பான உண்மையான ஊழியம் என்பது வரங்கள், தாலந்து, பேச்சாற்றல், அற்புதங்கள் அல்லது உபதேசப் போதனைகள் மூலமாக முன்னெடுக்கப்பட முடியாது. புதிய ஏற்பாட்டின் நிஜமான ஊழியத்திற்கு ஜீவனில் வளர்ச்சியும் முதிர்ச்சியும் தேவை. இந்தக் காரணத்திற்காக, நாம் தேவனுக்கு முன்பாக ஒரு வேலையைச் செய்வதற்கான நம் வாஞ்சையில் மனஉளைச்சலாகவோ விரைவாகவோ இருக்கக்கூடாது. மாறாக, தேவனுக்கும் மனிதர்களுக்கும் முன்பாக தினமும் கிருபையில் முன்னேறுவதன் மூலம் ஓர் இயல்பான தேவ-மனித வாழ்க்கையை வாழ நாம் சமாதானத்தில் இருக்க வேண்டும். முதல் தேவ-மனிதனாகக் கர்த்தர் தம் மௌன ஆண்டுகளின் போது இந்தப் பாதையை எடுத்துக்கொண்டார் (லூக். 2:52). மேலும் பல தேவ-மனிதர்களாக நாம் இந்த அம்சத்தில் அவரை அனுபவித்து, முதிர்ச்சிக்கென்று வளரும்படி அவரது மாதிரியைப் பின்பற்ற வேண்டும். இடைநிலை அல்லது உயர்நிலைப் பள்ளியில் இருப்பதை ஒருபோதும் இழிவாகக் கருத வேண்டாம். இந்த ஆண்டுகள், தேவனுக்கு முன்பாக ஒரு நேர்த்தியான ஊழியத்தை முன்னெடுப்பதற்காக நாம் முதிர்ச்சிக்கென்று வளர்ந்து வரும் மதிப்புமிக்க ஆண்டுகளாக உள்ளன. உயர்நிலைப் பள்ளி, கல்லூரி மற்றும் முழுநேரப் பயிற்சி முழுவதும் ஒரு தேவ-மனிதனின் வாழ்க்கையை வாழ்வதன் மூலம், நாம் முதிர்ச்சிக்கென்று வளர்ந்து ஓர் உறுதியான அடித்தளத்தைக் கட்டியெழுப்புவோம், அதிலிருந்து நாம் அவரது சரீரத்தின் கட்டியெழுப்புதலுக்காக கிறிஸ்துவின் நிஜமான ஊழியக்காரர்களாக இருக்க முடியும் (எபே. 4:12).

டைநிலைபிரயோகம்: கர்த்தருடைய இளமைப் பருவம் குறித்து இளம் வாலிபர்களிடம் பேசுங்கள், மேலும் அவர் தாம் செய்த எல்லாவற்றிலும் ஒரு தேவ-மனிதராக—தம்மில் தேவனைக் கொண்ட ஒரு மனிதராக இருந்தார் என்பதை வலியுறுத்தவும். அதேபோல், நாம் கர்த்தருக்குள் விசுவாசித்த போது, நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொண்டு, தேவனால் பிறந்த தேவ-மனிதர்களாக ஆனோம் (யோவான் 1:12-13, 3:6). இப்போது நாம் செய்யும் அனைத்தும், நம்மில் உள்ள தேவனோடு உள்ளது. நாம் லூக்கா சுவிசேஷத்தில் கர்த்தருடைய வாழ்க்கையை உற்றுக் கவனிக்கும்போது, அவருடைய வாழ்க்கை நாம் அனைவரும் பின்பற்றுவதற்கான ஒரு முன்மாதிரியாக, தம்மில் தேவனோடு வாழ்ந்த ஒரு மனிதனின் முன்மாதிரியாக இருந்தது என்பதை நாம் காண்கிறோம். அவர் பன்னிரண்டு வயதாயிருந்த போது, தேவனுடைய காரியங்களில் அவருக்கு ஓர் ஆர்வம் இருந்தது (லூக். 2:49). இடைநிலையில், நாமும் தேவனுடைய காரியங்களில் ஆர்வம் காட்டமுடியும். தம் இளமைப் பருவத்தில், கிறிஸ்து பிதாவின் வீட்டிற்காக, சபைக்காக அக்கறைப்பட்டார் (லூக். 2:49, அடிக்குறிப்புகள் 1 மற்றும் 2). நம் இளமை பருவத்தில், நாமும் சபைக்கான ஓர் இருதயத்தைக் கொண்டிருக்க முடியக்கூடிய பல தேவ-மனிதர்களாக இருக்கிறோம். தம் இளமைப் பருவத்தில், கிறிஸ்து தம் பெற்றோருக்குக் கீழ்ப்பட்டு இருந்தார் (லூக். 2:51). நம் தகப்பனையும் தாயையும் கனப்படுத்தும் மற்றும் அவர்களுக்குக் கீழ்ப்பட்டிருக்கும் ஒரு வாழ்க்கையை நாமும் வாழ முடியும். தம் இளமைப் பருவத்தில், கிறிஸ்து (தேவனுடைய வெளியாக்கத்தில்) தேவனோடும், (மனிதருக்குக் கிருபையுள்ளவையாகிய மனித நற்பண்புகளில்) மனிதர்களோடும் கிருபையில் வளர்ந்தார் (லூக். 2:52, அடிக்குறிப்பு 2). பல தேவ-மனிதர்களாக, நாம் ஒரே மாதிரியாக இருக்க முடியும். பின்னர், தம் மௌன ஆண்டுகளின் போது, கிறிஸ்து தச்சுத் தொழிலின் நுட்பமான மற்றும் கவனமான வேலையைச் செய்யும் ஒரு தச்சனாக வாழ்ந்தார். நாமும் ஒரு நுட்பமான மற்றும் விடாமுயற்சியுள்ள முறையில் நம் மனிதப் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும். இந்த விவரங்கள் அனைத்திலும், நம்மில் வாழும் தேவனைக் கொண்ட தேவ-மனிதர்களாக நாம் இருக்கிறோம் என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. நாம் கிறிஸ்துவில் முழு-வளர்ச்சியடைந்தவர்களாக இருக்கும் வரை நாம் தேவனுக்கு முன்பாகவும், மனிதர்களுக்கு முன்பாகவும் ஆவிக்குரிய ரீதியிலும், மனித ரீதியிலும் வளர்கின்றோம் (கொலோ. 1:28).

சுவிசேஷப் பிரயோகம்: தேவன் தங்களிடமிருந்து வெகு தொலைவில் இருப்பதோடு மட்டுமல்லாமல், தங்களைப் பற்றி அக்கறையற்றும், தங்கள் மீது அனுதாபம்கொள்ள இயலாமலும் அல்லது தாங்கள் தினமும் எதற்கு ஆளாகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ள இயலாமலும் இருப்பதாகப் பலர் கருதுகின்றனர். எனினும், நம் தேவன் மதத்தின் உணர்ச்சியற்ற, தொலைதூர, கருணையற்ற தேவன் அல்ல. அவர் ஒரு மனிதனாக மனித வாழ்க்கையினூடாய்க் கடந்துசென்றிருக்கும் ஒரு தனிப்பட்ட, பாசமுள்ள, புரிந்துகொள்ளும் தேவனாக இருக்கிறார். மாம்சமாகுதலில் வரம்பற்ற தேவன் ஒரு வரம்புள்ள மனிதனாக ஆனார், இவர் ஒரு தாழ்த்தப்பட்ட விதத்தில் ஓர் ஏழைக் குடும்பத்தில் பிறந்தும், ஓர் இழிவாகக் கருதப்பட்ட பிராந்தியத்தில் வளர்க்கப்பட்டும், தேவனுக்கும் மனிதனுக்கும் முன்பாக தயவில் வளர்ந்தார். அவர் தம் குழந்தைப் பருவத்தில் கவனிக்கப்படாதவராயும், புறம்பார்ந்த புகழ் அல்லது அங்கீகாரம் இல்லாதவராயும் வாழ்ந்தார். அவரது பிதாவாகிய தேவனுடைய காரியங்களில் இருப்பதற்கான வாஞ்சை பன்னிரெண்டு வயதிலிருந்தே அவரில் இருந்தபோதிலும், அவர் மெதுவான வழிமுறையாலும், இயல்பான மனித வளர்ச்சியின் அன்றாட அனுபவத்தாலும் வரம்புக்குட்படுத்தப்பட்டார்: ஒரு குழந்தையிலிருந்து, ஓர் இளம் வாலிபன் வரை, ஒரு வயதுவந்தோர் வரை. அவர் முப்பது வயது வரை கவனிக்கப்படாத மற்றும் அடையாளம் காணப்படாத ஓர் இயல்பான மனித வாழ்க்கையை வாழ்ந்தார். மனித வாழ்க்கையின் இயற்கையான வழிப்பாதையினூடாய்க் கடந்துசென்றிருக்கையில், அவர் நம்மைப் போன்று எல்லாவிதத்திலும் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருந்தார் என்பதால் அவர் நம் பலவீனங்களின் உணர்வால் எளிதில் தொடப்பட முடியும் (எபி. 4:15). நீங்கள் எப்போதாவது எதிர்கொள்ள வேண்டிய ஒவ்வொரு அனுபவத்தையும் சோதனையையும் அவர் கடந்துசென்றார். இப்போது, அவர் “தமது மூலமாய் தேவனிடத்தில் சேருகிறவர்க…ளை முற்றுமுடிய இரட்சிக்க வல்லவராயுமிருக்கிறார்” (எபி. 7:25).

மிக முக்கியக் காரியங்கள்: வேதாகமத்தில் உள்ள நிகழ்வுகளின் வரலாற்றுக்குரிய நிகழ்ச்சிக் கோவையை் அறிதல் (I.C.)      ; நம் முழு இரட்சிப்புக்காகப் பல அம்சங்களில் கிறிஸ்துவையும், அவரது நபரையும் வேலையையும் பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.); கர்த்தருக்கு அவரது பொருளாட்சியில் ஒருவர் இறுதியில் பயன்படுவதற்கான அடிப்படையாக ஒரு நேர்த்தியான மனிதப் பாத்திரத்தை (குணத்தை) உருவாக்குதல் (IV.).

பின்னணி வாசிப்பு: The God-man Living, Message 3.

REFERENCES: Luke 2:49, footnote 1; Luke 2:52, footnote 2; The Conclusion of the New Testament, Message 64, pp683–687; The Experience of Christ as Life for the Building Up of the Church, Chapter 15; The God-man Living, Message 3; The Secret of Experiencing Christ, Chapter 3, p28; Chapter 4, p41; Truth Lessons, Level 1, Volume 2, Lesson 18, p90.

 

Jump to section