உயிர்த்தெழுந்து, பரமேறிய கிறிஸ்துவின் பரப்புதல்
பகுதி 10
✵பாடம் 10 – 18
தேவனால் நீதிமானாக எண்ணப்படுதல்
குறிக்கோள்: நாம் இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால் நீதிப்படுத்தப்படுகிறோம் என்பதைக் காண்பதற்கு.
பொருட்சுருக்கம்: தேவனுடைய நீதி முற்றுமுழுதானது; அவரால் அதைச் சமரசம் செய்யவும் முடியாது அல்லது அதைச் சுற்றி தாண்டி வருவதற்கான ஒரு வழியை நம்மால் கண்டுபிடிக்கவும் முடியாது. பாவிகளுக்கு, தேவனுடைய நீதி ஒரு பயங்கரமான விஷயம், ஏனெனில் தேவன் தம் நீதியின் தரநிலையின்படி ஒவ்வொருவரோடும் இடைபட்டாக வேண்டும். எனினும், நம் பாவங்களுக்கான தண்டனையைச் செலுத்த இயேசு நம் இடத்தில் மரித்தபோது, தேவனின் நீதி திருப்திப்படுத்தப்பட்டது. இப்போது தேவன், இயேசுவுக்குள் விசுவாசிக்கும் ஒவ்வொருவரையும் நீதிப்படுத்த தம் நீதியால் கட்டுண்டு இருக்கிறார். எனவே, நம்மை ஆக்கினைக்குள்ளாகத் தீர்த்த அதே நீதி இப்போது நம்மை நீதிப்படுத்துகிறது, ஏனெனில் நம்மை இரட்சிக்கும்படி தேவன் தம் நீதியால் கட்டுண்டு இருக்கிறார். அவருடைய நீதியே நம் இரட்சிப்பின் நித்திய பாதுகாப்பாக ஆகியிருக்கிறது. மேலும், நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கும்போது, நாம் அவருக்குள் இடம் மாற்றப்படுகிறோம், மேலும் தேவன் கிறிஸ்துவில் நம்மைப் பார்க்கிறார். ஆகையால், தேவனைப் பொறுத்த வரையில், கிறிஸ்துவைப் போலவே நாமும் நீதிமான்கள்! கிறிஸ்துவிலுள்ள நம் மீட்பின் அடிப்படையில், கிறிஸ்துவைப் போலவே நாமும் தைரியத்துடன் தேவனிடமாய் முன்நோக்கி வரமுடியும். மேலும், இந்த நீதியின் அடிப்படையில்தான் நாம் தேவனை ஜீவனாகப் பெறுவதற்குத் தகுதிபெறுகிறோம், இது நாம் தாமே தேவன் இருக்கும் வண்ணமாக ஆகிவிடும் வரை நம் நீதியாகிய தேவனைக் கொண்டு நம்மைக் கட்டமைக்கின்றது.
பின்புலம்: சத்தியத்திற்கான தங்கள் அஸ்திபாரத்திற்கும், தங்கள் அனுபவத்திற்கும் தேவனுடைய நீதியைப் பற்றிய ஒரு தெளிவான முன்வைப்பு (முன்வைத்தல்) அவசியம்.
அதிகாரங்கள்: ரோமர் 3-5.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
முன்பு, பாவத்தின் காரணமாக, தேவன் மனிதனை ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தம் நீதியால் கட்டுண்டு இருந்தார். இப்போது, கிறிஸ்துவின் மீட்பின் காரணமாக, இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தைச் சேர்ந்த அனைவரையும் நீதிப்படுத்த தேவன் தம் நீதியால் கட்டுடண்டு இருக்கிறார்.
-
மனிதன் தேவனுக்குக் கீழ்ப்படியாமற் போனதால், மனிதன் தேவனுடைய நீதியான ஆக்கினைத்தீர்ப்பின் கீழ் வருகிறான்—ரோ. 1:18; 3:19-20
மனுக்குலத்திற்கு, இப்பிரபஞ்சத்தில் உள்ள அதி பயங்கரமான விஷயமாக தேவனுடைய நீதியே இருக்க வேண்டும் (ரோ. 1:32; 2:5). தேவன் நீதியுள்ளவர் என்பதால், அவர் எந்த நபருக்காகவும் அல்லது எந்த சங்கதிக்காகவும் தம் நீதியான தரநிலையை வளைக்க மாட்டார் மற்றும் வளைக்க முடியாது; பாவம் செய்யும் அனைவரும் அவருடைய நித்திய நியாயத்தீர்ப்பின் தண்டனையின் கீழ் வந்தாக வேண்டும். பாவத்தை ஆக்கினைக்குள்ளாகத்தீர்க்க தேவன் தம் நீதியால் கடமைப்பட்டிருக்கிறார். இந்த முடிவைப் பற்றி தேவன் யாருடனும் பேரம் பேசமாட்டார், அல்லது எந்த உணர்ச்சிகரமான முறையீட்டினாலும் அவர் அசைக்கப்படவும் முடியாது; பாவஞ்செய்யும் ஆத்துமா மரித்தாக வேண்டும் (எசே. 18:20). தேவன் இதில் சமரசம் செய்ய இருந்தார் எனில், அவரது நித்திய குறிக்கோள் சமரசம்செய்யப்பட்டு, அதன் அதி உயர்ந்த தரநிலையையும் மதிப்பையும் இழக்க நேரிடும். தேவனுடைய பொருளாட்சியில் அவரது நிர்வாகம் நீதியின் அடிப்படையில் உள்ளது (ஒப். சங். 89:14; எபி. 1:8).
-
நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சிப்பதன் மூலம் எந்த மனிதனும் தேவனுக்கு முன்பாக நீதிப்படுத்தப்பட முடியாது—ரோ. 3:20; அப். 13:39
தேவன் நீதியுள்ளவர் என்பதும், தேவன் அநீதியைத் தண்டிப்பார் என்பதும் மனிதனுக்குத் தெரியும். எனவே, மனிதன் (தான் ஒரு பாவியாகப் பிறந்து, பாவத்திற்கு ஆளாகியிருந்தாலும்கூட) தேவனுடைய இரட்சிப்பைச் சம்பாதிக்க எதிர்நோக்கிக்கொண்டு, தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி நடந்துகொள்ள முயற்சிக்கிறான். ஒரு நபர் தேவனுடைய நியாயப்பிரமாணத்தின்படி ஒரு பரிபூரண வாழ்க்கையை வாழ முடிந்தால், அவன் நித்தியமான ஜீவனைச் சம்பாதிப்பான் என்று ரோமரில் பவுல் கூறுகிறான் (ரோ. 2:7). எனினும், யாருமே நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முடியாது. அதற்குப் பதிலாக, ஒவ்வொருவரும் தொடர்ச்சியாக நியாயப்பிரமாணத்தை மீறுகிறார்கள், எனவே தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்பின் கீழ் இன்னும் அதிக ஆழமாக விழுகின்றனர். தேவனுடைய நன்மையான நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள முயற்சிப்பது, மனிதனை இன்னும் அதிகப் பாவம் செய்வதற்குக் கூட காரணமாகிறது (ரோ. 7:7–11)! மதம் என்ன கூறினாலும்சரி, தேவனுடைய நீதியின் தரநிலையின்படி நடந்துகொள்ள முயற்சிப்பதன் மூலம் நாம் இரட்சிப்பைச் சம்பாதிக்க முடியாது. மக்கள் தாங்கள் ஒரு தவிப்பான மற்றும் நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இருக்கின்றனர் அதோடு தங்களுக்கு ஓர் இரட்சகர் தேவை என்ற உணர்ந்தறிதலுக்குள் அவர்களைக் கொண்டுவருவதற்காக தேவன் நியாயப்பிரமாணத்தை வழங்கினார் (ரோ. 3:19-20)!
-
கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் காரணமாக ஒரு மனிதனை நீதிமான் என்று தேவன் இலவசமாய் (தாராளமாக) எண்ணுகிறார்—ரோ. 3:21–22
-
ஆபிரகாம் விசுவாசத்தால் நீதிப்படுத்தப்பட்டது போலவே, நாமும் கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தின் காரணமாக நீதிப்படுத்தப்படுகிறோம்—ரோ. 4:3, 8–9; 5:1
விசுவாசத்தின் தந்தையாகிய ஆபிரகாம், நியாயப்பிரமாணம் கொடுக்கப்படுவதற்கு முன்பே விசுவாசத்தால் நீதிப்படுத்தப்பட்டான் (ரோ. 4:1–3, 13–16). “ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது” (ரோ. 4:3). நாம் நியாயப்பிரமாணத்தைக் கைக்கொள்ள நம்மால் முடிந்த அனைத்தையும் செய்தாக வேண்டும், ஏனெனில் நாம் அதைக் கைக்கொள்வதற்காகதான் தேவன் அதை நமக்குக் கொடுத்தார் என்று பலர் வாதிடுகிறார்கள். மனிதன் கைக்கொள்வதற்காகதான் தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார் என்பது உண்மைதான், ஆனால் மனிதன் அதன் மூலமாக இரட்சிக்கப்படக்கூடும் என்பது உண்மையல்ல. மனிதன் கிறிஸ்துவை இரட்சகராகப் பெற தயாராக இருக்கக்கூடுமாறு, மனிதனை அம்பலப்படுத்தவும், மனிதனை பாவத்தின் கீழ் அடைக்கவும் தேவன் நியாயப்பிரமாணத்தைக் கொடுத்தார் (கலா. 3:22-23). தேவன் தாம் நியாயப்பிரமாணத்தைக் கொடுப்பதற்கு முன்பே ஆபிரகாமின் விசுவாசத்தை நீதியாக எண்ணினார் (ரோ. 4:10-13). ஆபிரகாம் நியாயப்பிரமாணத்தின்படியான எந்தக் கிரியைகளாலும் நீதிப்படுத்தப்படவில்லை. இரட்சிப்பு விசுவாசத்தின் மூலமாக வருகிறது, அதற்கும் நியாயப்பிரமாணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதை அவனுடைய அனுபவம் நிரூபிக்கிறது. நியாயப்பிரமாணத்தின் கிரியைகளினால் அல்ல, மாறாக இயேசு கிறிஸ்துவில் உள்ள விசுவாசத்தால்தான் நாமும் நீதிப்படுத்தப்படுகிறோம் (ரோ. 4:5; 5:1).
-
இயேசுகிறிஸ்துவைத் தன் கர்த்தராக ஏற்றுக்கொள்ளும் மனிதனை நீதிப்படுத்த தேவன் தம் சொந்த நீதியால் நடத்தப்படுகிறார்—ரோ. 3:24-26; 1:17; 4:25
தேவன் தாம் எப்படி உணர்ந்தாலும்சரி, பாவஞ்செய்யும் ஒவ்வொரு நபரின் மீதும் தம் நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற தம் நீதியால் கட்டுண்டு இருக்கிறார் என்பதால், விழுந்துபோன மனுக்குலத்திற்கு நீதி திகிலூட்டுவதாக இருக்கிறது. இந்தச் சர்வ வல்லமையுள்ளவர் கூட நீதியால் கட்டுண்டு இருக்கிறார்! அது எவ்வளவு வலுவானது மற்றும் முற்றும்முழுதானது! ஆயினும், அது அவ்வளவு வலுவானதாக இருப்பதால், தேவனுடைய சாட்சாத்து நீதி கிறிஸ்துவில் விசுவாசிக்கும் அனைவருக்கும் நம்பிக்கையாகவும் பாதுகாப்பாகவும் ஆகிவிடுகிறது, ஏனெனில் கிறிஸ்து தாம் மனுக்குலத்தின் பாவங்களுக்காக சிலுவையில் மரித்தபோது தேவனுடைய நீதியின் அனைத்து நீதியான கோரிக்கைகளையும் கிறிஸ்து பூர்த்திசெய்தார் (திருப்திப்படுத்தினார்). நம் பாவங்களுக்கான கட்டணத்தை தேவன் நம்மிடமிருந்து நீதியான விதத்தில் கோர முடியாது, ஏனெனில் கிறிஸ்து சிலுவையில் நம் பாவங்களுக்கான தண்டனையை செலுத்தியிருக்கிறார். இப்போது நாம் தேவனிடம், அவர் நம்மை இரட்சித்தாக வேண்டும் என்று தைரியமாக அறிவிக்க முடியும், ஏனெனில் அவர் அவ்வாறு செய்வதற்குத் தம் நீதியால் கட்டுண்டு இருக்கிறார்! இது தேவனை மிகவும் மகிழ்ச்சியடையச் செய்கிறது, ஏனெனில் எல்லா மனிதர்களும் கிறிஸ்துவில் இரட்சிக்கப்படுவதைக் காண்பதே அவருடைய விருப்பம் (1 தீமோ. 2:4). ஒரு காலத்தில் தேவனுடைய நீதியைக் கண்டு பயந்திருந்த நாம், இப்போது அதன் மூலம் நாம் நிச்சயத்தைப் பெற்று, ஆறுதல் அடைவதைக் காண்கிறோம், ஏனெனில் அதுவே நம் இரட்சிப்பின் நித்திய பாதுகாப்பாக, உத்தரவாதமாக ஆகியிருக்கிறது!
-
விசுவாசிக்கிற மனிதனை தேவன், கிறிஸ்துவைப் போல் நீதிமான்களாகப் பார்க்கிறார்—ரோ. 4:3-5; 22-24
நாம் நம் இரட்சகராகிய இயேசுவில் விசுவாசிக்கும் போது, நம் விசுவாசம் நம்மை கிறிஸ்துவுடன் இணைக்கிறது, மேலும் தேவன் நம்மைக் கிறிஸ்துவில் பார்க்கிறார். நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசிக்கும்போது, நாம் கிறிஸ்துவை ஓர் ஆடையாக அணிகிறோம். தேவனைப் பொறுத்தவரை, நாம் கிறிஸ்து இருக்கும் வண்ணமாகவே இருக்கிறோம். அவருடைய வாழ்க்கை எல்லா வகையிலும் தேவனுடைய தரநிலையுடன் பொருந்தக்கூடிய ஒரு வாழ்க்கையாகும். (இதனால்தான் அவர் நமக்காக சிலுவையில் மரிக்க முடிந்தது.) தேவன் இப்போது தாம் இருப்பது போலவே நீதிமான்களாக நம்மைப் பார்க்கிறார்! தேவன் நம்மைக் கிறிஸ்துவில் ஏற்றுக்கொள்கிறார் என்பதால் , நாம் எந்த நேரத்திலும் கிறிஸ்துவின் மூலமாக தேவனிடம் தைரியமாய் முன்வர முடியும். கிறிஸ்துவின் சட்டரீதியான மீட்புதான், தேவனுடன் ஐக்கியம்கொள்வதற்கான உரிமையை நமக்கு வழங்குகிறது.
-
நீதிப்படுத்துதலே தேவனுடைய ஜீவாதார இரட்சிப்பில் நாம் பங்குகொள்வதற்கான அஸ்திபாரம்—ரோம். 5:1–2, 10; 1:17
கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றியது, தேவனுடைய நீதியின் கோரிக்கைகளை பூர்த்திசெய்திருப்பதால் (திருப்திப்படுத்தியிருப்பதால்), மனிதன் தேவனை ஜீவனாகப் பெறுவதற்கான வழி தடையற்றதாக தெளிவாக்கப்பட்டுள்ளது. பாவத்தின் காரணமாக, மனிதன் தேவனை ஜீவனாக அனுபவித்துமகிழும் உரிமையை இழந்தான். கிறிஸ்துவின் மீட்பின் காரணமாக, நம் மறுபடிஜெநிப்பித்தல் சாத்தியமானதாக உள்ளது. நீதியின் காரணமாக, நம் ஆவி ஜீவனாக உள்ளது. இறுதியில் நம் முழு ஆள்தத்துவமும் ஜீவனாகிய தேவனைக் கொண்டு கட்டமைக்கப்படும். கிறிஸ்துவின் நீதியான செயல்தான், தேவனுடைய முழுமையான இரட்சிப்பின் ஒவ்வொரு நிலைக்கும் (கட்டத்திற்கும்) அஸ்திபாரமாக உள்ளது. ஒருபுறம், கிறிஸ்துவின் மீட்பின் மூலமான தேவனுடைய நீதியே, நாம் தேவனை நித்தியத்திற்கும் அனுபவித்துமகிழ்வதற்கான உறுதியான அஸ்திபாரமாக நிலைத்திருக்கும்; மறுபுறம், இந்த நீதியின் அடிப்படையில் தேவனை துய்க்கும் நம் அனுபவமகிழ்ச்சியின் மூலமாக, நாம் அவர் இருக்கும் வண்ணமாகவே நீதியுள்ளவர்களாக இருக்கும் வரை, நாம் இந்த நீதியுள்ள தேவனால் கட்டமைக்கப்படுவோம். நித்தியத்தில், நாம் அவருடன் பொருந்துவோம். இந்த வழிமுறைக்கான அஸ்திபாரம், தேவனுடைய நீதியை திருப்திப்படுத்திய, நாம் கிறிஸ்துவில் அனுபவித்துமகிழும் இந்தச் சட்டரீதியான மீட்புதான், நாம் தேவன் இருக்கும் வண்ணமாகவே இருக்கும் வரை, தேவன் நம்மை முற்றும்முடிய இரட்சிக்க தம் நீதியால் கட்டுண்டு இருக்கிறார்!
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: இந்தப் பாடத்தில் நாம் தேவனுடைய நீதியின் நேர்மறையான அம்சத்தில் கவனம்செலுத்த விரும்புகிறோம். தேவனுடைய நீதி என்பது அஞ்சப்பட வேண்டிய ஒன்று என்று மட்டுமே அறிந்திருக்கும் இளம் வாலிபர்களுக்கு இது ஒரு மாபெரும் விடுவிப்பாக இருக்கலாம். எனினும், நாம் கிறிஸ்துவுக்குள் விசுவாசித்த பிறகு, நாம் கிறிஸ்துவில் தேவநீதியாக ஆக்கப்பட்டோம் என்பதை நாம் பார்க்க வேண்டும் (2 கொரி. 5:21). தேவன் ஒருபோதும் நம்மைக் கிறிஸ்துவுக்கு வெளியே ஏற்றுக்கொள்ள முடியாதது போலவே, இப்போது நாம் கிறிஸ்துவில் மறைந்திருப்பதால், தேவனால் ஒருபோதும் நம்மை விலக்கிவைக்கவோ அல்லது நம்மை மறுக்கவோ முடியாது (கொலோ. 3:3; யோவான் 6:37). நாம் இப்போது கிறிஸ்துவுக்குள் நீதிமான்களாக்கப்பட்டிருக்கிறோம் (ரோ. 3:25). ஆகவே, தேவனிடமிருந்து நம்மை விலக்கிவைத்த இந்தச் சாட்சாத்து நீதியே, நாம் தேவனிடம் வந்து, அவரை அனுபவித்துமகிழ்வதற்கான வழியை இப்போது நமக்குத் திறக்கிறது (வெளி. 22:14; எபி. 10:19-20). நாம் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு, பாவத்தில் உள்ள அனைவரையும் ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கும்படி தேவன் தம் நீதியால் கட்டுண்டு இருந்தார் (எசே. 18:20; ரோ. 6:23). ஆயினும்கூட, இப்போது அவர் கிறிஸ்துவில் உள்ள அனைவரையும் ஏற்றுக்கொள்வதற்கும், அவர்களுக்குத் தம்மையே கொடுப்பதற்கும் அதே நீதியால் கட்டுண்டு இருக்கிறார். தேவனை அவரது நீதிக்காக துதியுங்கள்! கிறிஸ்துவில் இருக்கும் நமக்கு, தேவனுடைய நீதியின் மேல் மிகவும் உறுதியாக நிற்பதே, கர்த்தரை கனப்படுத்துவதும், மதிப்பதும் ஆகும். நாம் அவரிடம் இவ்வாறு சொல்வது போல் தோன்றுகிறது, “கர்த்தாவே, நான் என் உணர்வுகளை விட உம்மிலும், உம் வார்த்தையிலும் அதிகமாக நம்புகிறேன். நான் தேவனிடம் வர தகுதியற்றவனாகவும் தகுதியில்லாதவனாகவும் உணரக்கூடும், ஆனால் நீர் எனக்காக மரித்ததால், நீர் நீதியுள்ளவராக இருக்கும் வண்ணமாகவே நானும் நீதியுள்ளவனாக ஆக்கப்பட்டிருக்கிறேன். கர்த்தாவே, உம்மைத் துதிக்கிறேன்! ஆகவே, நிரப்பீட்டைப் பெற நான் இப்போதே கிருபாசனத்திடமாய் முன்நோக்கி வருகிறேன். இத்தகைய ஒரு நிலைப்பாடு கர்த்தரைக் கனப்படுத்தி, எதிரியை அவமானப்படுத்துகிறது. இவ்விதமாய் தேவனுடைய நீதியை இளம் வாலிபர்களுக்கு முன்வைப்பது என்பது, அவர்கள் தங்கள் உணர்வுகளைப் பொருட்படுத்தாமல் தைரியமாய்க் கிருபாசனத்திடமாய் முன்நோக்கி வருவதற்கு அவர்களைப் பலப்படுத்துவதோடு, ஒரு திடமான அஸ்திபாரத்தையும் அவர்களுக்கு அளிக்கிறது (எபி. 4:16).
சுவிசேஷ செயலாக்கம்: இந்த யுகத்தில், சாத்தான் தேவனுடைய சிங்காசனத்தின் அஸ்திபாரமாகிய: நீதிக்குக் (சங். 97:2) குழிபறித்து, அதைத் தாக்குவதற்கான ஒரு முயற்சியில் ஒரு தந்திரமான, தொலைநோக்கு வேலையைச் செய்திருக்கிறான். இந்த யுகத்தின் போக்கு (அலை), நீதியைக் கைவிடுவதே ஆகும். தேவனுக்கு முன்பாக சரியானதைச் செய்வதைப் பொறுத்தவரை, இந்த யுகத்தின் எண்ணம் என்னவெனில், நாம் நன்மைசெய்து, நல்லவர்களாக இருக்கும் வரை எல்லாம் சரியாகிவிடும் என்பதே. எனினும், நீதியின் இந்தச் சீரழிந்த தரநிலை, மனிதனின் விழுந்துபோன மனநிலையின்படி உள்ளது அதோடு தேவன் மனிதனிடம் கோரும் நீதியை விட மிகக் குறைவாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தேவனுடைய நீதியின் தரநிலையாகிய கிறிஸ்துவின்படி அங்கீகரிக்கப்பட்டாக வேண்டும் (1 கொரி. 1:30-31). தேவனுடைய பார்வையில், மனிதனின் நீதி அழுக்கான கந்தையைப் போல் இருக்கின்றது (ஏசா. 64:6). நம் நன்மைத் தன்மையும் கூட அநீதியாக எண்ணப்படுகிறது, ஏனெனில் அது கிறிஸ்துவுக்கு வெளியே உள்ளது, மேலும் அது ஒருபோதும் கர்த்தருடைய பிரசன்னத்திற்குள் நுழைவதற்கு நம்மைத் தகுதிப்படுத்த முடியாது. கிறிஸ்துவின் நீதி (மனிதனுக்குத் தேவையான நீதி) ஊதாரி மைந்தனை மூடுவதற்குத் தந்தையால் வழங்கப்பட்ட அங்கியால் மாதிரியாகக் காட்டப்படுகிறது (லூக். 15:22). நாம் கர்த்தராகிய இயேசுவுக்குள் விசுவாசிக்கும்போது, பிதா நம்மை கிறிஸ்துவால் மூடுகிறார், இதனால் நாம் தைரியமாக அவருடைய பிரசன்னத்திற்குள் வர முடியும். நாம் தேவனுடைய நீதியின் தரநிலையின்படி நீதிப்படுத்தப்பட்டு, நித்திய ஜீவனின் சந்தோஷத்திற்குள் பிரவேசிக்கக்கூடுமாறு, நம்மை மூடுவதற்கான தேவனை-திருப்திப்படுத்தும் நீதியாக இந்தக் குமாரனாகிய கிறிஸ்துவை நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் (Luke 15:22 and footnote 5).
மிக முக்கியக் காரியங்கள்: மீட்பை அதன் ஐந்து பிரதான அம்சங்களாகிய மன்னிப்பு, சுத்திகரித்தல், நீதிப்படுத்துதல், ஒப்புரவாக்குதல், நிலைரீதியான பரிசுத்தமாகுதல் ஆகியவற்றுடன் அனுபவித்தல் (III.A.2.).
பின்புல வாசிப்பு: Life-study of Romans, Message 57.
REFERENCES: Life-study of Romans, Messages 6, 57; Salvation: A Lesson Book, Lesson 13; The Gospel of God, Chapter 5.