வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 7
✵பாடம் 01 – 08
✵பாடம் 09 – 18
கிறிஸ்து என்னும் நபர்
தம் தெய்வத்தன்மையில் கிறிஸ்து (1)
குறிக்கோள்: இயேசுகிறிஸ்து தேவனாக இருக்கிறார், தேவனாக இருந்தார், எப்போதும் தேவனாக இருப்பார் என்பதைப் புரிந்துகொள்வது.
பொருட்சுருக்கம்: கிறிஸ்து தேவனாக இருக்கிறார். அவருடைய தெய்வத்தன்மை நித்தியமானது, முழுமையானது. கடந்த நித்தியத்திலிருந்து வரப்போகிற நித்தியம்வரை, அவர் தேவனாகவே இருக்கிறார். அவர் முழுமையான தேவனாக இருக்கிறார், அதாவது, பிதாவாகவும், குமாரனாகவும், ஆவியானவராகவும் இருக்கிறார். தேவனுடைய குமாரன் என்ற முறையில், கிறிஸ்து தேவனுடைய வெளியாக்கமாகவும், தேவனுடைய மகிமையின் பிரகாசமாகவும், தேவனுடைய தன்மையின் சொரூபமாகவும் இருக்கும்படி, தேவனுடைய ஊனுருவாயிருக்கிறார்.
பின்புலம்: இயேசுகிறிஸ்து என்பவர் நீண்டகாலத்திற்குமுன்பு பூமியில் வாழ்ந்த ஒரு மனிதன் என்பதை ஒத்துக்கொள்வது மக்களுக்கு சுலபமாயிருக்கிறது. எனினும், கிறிஸ்து தேவனாக இருக்கிறார் என்ற விஷயத்திற்கும், கிறிஸ்து மூவொரு தேவ-மனிதனாக இருக்கிறார் என்ற விஷயத்திற்கும் வரும்போது, மிகப்பெரிய யுத்தம் எழும்புகிறது. கிறிஸ்து தேவனாக இருக்கிறார் என்பதை யெகோவாவின் சாட்சிகள் மறுக்கிறார்கள்; கிறிஸ்துவின் தெய்வத்தன்மைப்பற்றி அநேக உண்மையான விசுவாசிகளின் புரிந்துகொள்ளுதலும் மட்டுப்பட்டதாகவே இருக்கிறது. வாலிபர்கள் கிறிஸ்துவை அவருடைய தெய்வத்தன்மையில் பார்ப்பது, சத்தியத்தைப்பற்றிய அவர்களுடைய புரிந்துகொள்ளுதலிலும், அவர்களுடைய விசுவாசத்திலும், தவறான, துர் உபதேசங்களுக்குப் பதிலளிக்கக்கூடிய ஆற்றலிலும் அவர்களை பலப்படுத்தும்.
அதிகாரம்: யோவான் 1.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
இயேசு என்பவர், எப்படி ஒரு நேர்த்தியான, நீதிநெறியுள்ள வாழ்க்கை வாழ்வது என்று மனிதர்களுக்குப் போதித்த ஒரு மாபெரும் போதகர் என்றே பூமியிலுள்ள பெரும்பாலான மக்கள் நினைக்கிறார்கள்; அவர் பூமியில் மனிதர்களிடையே நடமாடிய தேவனாகவே இருந்தார் என்பதை அவர்கள் உணர்வதில்லை. இயேசு தம்மேல் மனுஷீகத்தை எடுத்துக்கொண்ட சாட்சாத்து தேவனாகவே இருந்தார், இன்னமும் இருக்கிறார் என்பதை கிறிஸ்தவர்கள் பலரும் ஏற்றுக்கொள்வதில்லை. கிறிஸ்து யார் என்பதை நாம் முழுவதுமாக உணர்ந்துகொள்ளாவிட்டால், அவரைப்பற்றிய அனுபவத்தில் நாம் குறைவுள்ளவர்களாயிருப்போம்.
I. கிறிஸ்து தேவனாக இருக்கிறார்
கிறிஸ்து தேவனாக இருக்கிறார் என்று சொல்ல, பல கிறிஸ்தவர்கள் சடங்கடப்படுகிறார்கள். அதற்குப்பதிலாக, அவர் தேவனுடைய குமாரனாக இருக்கிறார், அதாவது, திரியேகத்துவத்தின் இரண்டாமவராக இருக்கிறார் என்றே அவர்கள் சொல்ல விரும்புகிறார்கள். எனினும், நாம் வேதாகமத்தை அறிந்திருந்தால், கிறிஸ்து தேவனாக இருக்கிறார் என்று நாம் தைரியமாய் அறிக்கைசெய்வோம். அவர் தேவனுக்குச் சமமானவர் மட்டுமல்ல (பிலி. 2:6); தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவையெல்லாவற்றின் ஊனுருவாகவும் அவர் இருக்கிறார் (கொலோ. 2:9). தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவை யாவும் கிறிஸ்துவில் இருக்கின்றன. தேவன் என்னவாக இருக்கிறார் என்பதை, கிறிஸ்து என்னவாக இருக்கிறார் என்பதைவிட்டுப் பிரிக்கமுடியாது என்பதுதான் இதன் அர்த்தம், ஏனென்றால், தேவன் கிறிஸ்துவில் ஊனுருகொண்டிருக்கிறார்.
A. கிறிஸ்து முழுமையான தேவனாக இருக்கிறார்—கொலோ. 2:9
முதலில், தேவத்துவத்தில் நம்முடைய கிறிஸ்து முழுமையான தேவனாக இருக்கிறார். கிறிஸ்து முழுமையான தேவனாக இருப்பதென்றால், அவர் மூவொரு தேவனாக இருக்கிறார், அதாவது, பிதா, குமாரன், ஆவியானவராக இருக்கிறார் என்று அர்த்தமாகும். இதோடு வாக்குவாதம்செய்து, கிறிஸ்து குமாரன் மட்டும்தான் என்று சொல்லுகிறவர்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஒருபக்கம், கிறிஸ்து குமாரனாக இருக்கிறார் என்று புதிய ஏற்பாடு வெளிப்படுத்துகிறது; மறுபக்கம், கிறிஸ்து தேவனாக இருக்கிறார், இன்னும் சொல்லப்போனால், அவர் முழுமையான தேவனாக இருக்கிறார் என்று புதிய ஏற்பாடு வெளிப்படுத்துகிறது. கிறிஸ்து ஒரு பகுதி தேவன் மட்டும்தான் என்று நாம் சொல்லக்கூடாது. அதற்கு மாறாக, அவர் முழுமையான தேவனாக, அதாவது, மூவொரு தேவனாக இருக்கிறார்.
- கிறிஸ்து பிதாவாக இருக்கிறார்—ஏசா 9:6; யோவா. 14:9
ஏசாயா 9:6-ல், குமாரன் நித்திய பிதா என்று அழைக்கப்படுகிறார். பாலகனை (இயேசுவை) வல்லமையுள்ள தேவன் என்று அழைப்பது சரிதான் என நாம் ஒத்துக்கொள்வோமானால், அவரை நித்திய பிதா என்று அழைப்பதும் சரிதான் என நாம் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். பாலகன் வல்லமையுள்ள தேவனாக இருந்தார், எனவே குமாரனும் நித்திய பிதாவாகத்தான் இருக்கவேண்டும். மேலும், “நானும் பிதாவும் ஒன்றாயிருக்கிறோம்,” என்று யோவான் 10:30-ல் கர்த்தர் கூறுகிறார். அவர்கள் இருவர் அல்ல, ஒருவர். என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டிருக்கிறான் என்றுகூட கர்த்தர் பிலிப்புவிடம் கூறினார் (யோவான் 14:9). கிறிஸ்துவும் பிதாவும் இரண்டு தனித்தனி நபர்கள் என்று நாம் நினைக்கக்கூடாது, ஏனென்றால், அவர்கள் ஒருவர்தான்.
- கிறிஸ்து குமாரனாக இருக்கிறார்—மாற்கு 1:1; யோவான் 20:31
தேவனுடைய குமாரன் என்ற முறையில் கிறிஸ்து, பிதா என்னவாக இருக்கிறாரோ, பிதாவிடம் என்ன இருக்கிறதோ, அவையெல்லாவற்றின் ஊனுருவாகவும் வெளியாக்கமாகவும் இருக்கிறார் (யோவான் 16:15). குமாரன் என்ற முறையில் கிறிஸ்து, கீழ்ப்படிதலுடன் தேவனுடைய பொருளாட்சியை நிறைவேற்றுகிறவராக இருக்கிறார் (யோவான் 1:14, 18; 3:16; 5:19, 22, 25).
- கிறிஸ்து ஆவியானவராக இருக்கிறார்—1 கொரி. 15:45; 2 கொரி. 3:17
கிறிஸ்து குமாரனும் பிதாவும் மட்டுமல்ல; அவர் ஆவியானவராகவும் இருக்கிறார். கடைசி ஆதாமாகிய கிறிஸ்து ஜீவன்தரும் ஆவியானவராக மாறினார் என்று 1 கொரிந்தியர் 15:45 கூறுகிறது. எனவே, கிறிஸ்து பரிசுத்த ஆவியானவராக இருக்கிறார், ஏனென்றால், இரண்டு தெய்வீக ஆவியானவர்கள் இல்லையே. மேலும், கர்த்தரே ஆவியானவர் என்று 2 கொரிந்தியர் 3:17 ஆணித்தரமாகக் கூறுகிறது. இதனால்தான், வேதத்தின் பிற பகுதிகளில், ஆவியானவர் “இயேசுவின் ஆவி” என்றும் (அப். 16:7), “கிறிஸ்துவின் ஆவி” என்றும் (ரோ. 8:9; 1 பேதுரு 1:11), “இயேசுகிறிஸ்துவின் ஆவி” என்றும் (பிலி. 1:19) அழைக்கப்படுகிறார்.
- தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக கிறிஸ்துவுக்குள் வாசமாயிருக்கிறது—கொலோ. 2:9
தேவத்துவத்தில் பிதாவும் குமாரனும் ஆவியானவரும் அடங்கியிருப்பதால், தேவத்துவத்தின் பரிபூரணம் என்பது, பிதா, குமாரன், ஆவியானவர் ஆகியவர்களின் பரிபூரணமாகத்தான் இருக்கவேண்டும். தேவத்துவ பரிபூரணத்தின் ஊனுரு என்ற முறையில், கிறிஸ்து தேவனுடைய குமாரன் மட்டுமல்ல, அவர் முழு தேவனாகவும் இருக்கிறார்.
B. கிறிஸ்து நித்திய தேவனாக இருக்கிறார்—எபி. 1:8-10
-
- கிறிஸ்து கடந்த நித்தியத்தில் தேவனாக இருந்தார்—யோவான் 1:1
மாம்சமாக மாறிய வார்த்தை தேவனிடத்தில் இருந்தது என்றும், அது தேவனாயிருந்தது என்றும் யோவான் தெளிவாக சொல்லுகிறான். வார்த்தையாகிய கிறிஸ்து ஆதியில், அதாவது, கடந்த நித்தியத்தில் தேவனாக இருந்தார். கிறிஸ்து எப்போதுமே தேவனுடைய ஊனுருவாக இருந்திருக்கிறார் என்பதே இதன் அர்த்தம். கிறிஸ்து தேவன் என்பதை (இன்று யெகோவாவின் சாட்சிகள் மறுப்பதுபோல) யோவானின் நாட்களில் சிலர் மறுத்தார்கள். கிறிஸ்து நித்தியத்திலிருந்தே தேவனாக இருக்கிறார் என்று யோவான் தெளிவாக கூறுகிறான்.
- கிறிஸ்து மனிதமாம்சமாகுதலில் தேவனாக இருந்தார்—யோவான் 1:14; ஏசா. 7:14; 9:6; பிலி. 2:5-7
மனிதமாம்சமாகுதலின்மூலம், நித்திய தேவன் காலத்திற்குள் அடியெடுத்துவைத்தார்! மனுஷீகத்திற்குள் பிறந்த தேவனே இயேசு என்பதை, குறைந்தபட்சம், மூன்று “பெயர்களாவது” சுட்டிக்காட்டுகின்றன. அவருக்கு “இயேசு” என்று பெயரிடும்படி தேவன் யோசேப்புக்கு அறிவுறுத்தினார் (மத். 1:21), “(நம்) இரட்சகராகிய யெகோவா” என்பது அதின் அர்த்தமாகும். அவர் “இம்மானுவேல்” என்று அழைக்கப்படுவார் என ஏசாயாவும் கூறுகிறான், “நம்மோடு இருக்கிற தேவன்” என்பது அதின் அர்த்தமாகும் (ஏசா. 7:14; மத். 1:23). மேலும், இந்த பாலகன் “வல்லமையுள்ள தேவன்” என அழைக்கப்படுவார் என்றும் ஏசாயா கூறுகிறான் (ஏசா. 9:6). கிறிஸ்து மனிதமாம்சமான தேவனாகவே இருந்தார் என்று இந்த பெயர்கள் யாவும் சுட்டிக்காட்டுகின்றன. வரம்பற்ற, நித்திய, எல்லையில்லா தேவன் தம்மை வரம்புள்ள மனுஷீகத்திற்குள் எல்லைக்குட்படுத்தப்பட்டு, மட்டுப்படுத்தப்படும்படி அனுமதித்தார். அவர் ஒன்பது மாதங்கள் மரியாளின் கர்ப்பத்தில் அடைபட்டிருந்தார்; அதன்பின், அவர் பிள்ளைப்பருவம்முதற்கொண்டு மனித வளர்ச்சியின் ஒவ்வொரு படியினூடாகவும் கடந்துசென்றார். அது அவருக்கு என்னே அனுபவமாக இருந்திருக்கவேண்டும்! கிறிஸ்து தம் மனுஷீகத்தில் எவ்வளவு தாழ்மையாகவும் மட்டுப்படுத்தப்பட்டவராகவும் இருந்தாலும் சரி, அவர் எப்போதுமே முழுவதும் தேவனாகவே இருந்தார்.
- கிறிஸ்து மரணத்திலும் உயிர்த்தெழுதலிலும் தேவனாக இருந்தார்—அப். 20:28; யோவான் 20:28
பொருளாட்சிரீதியாக, கிறிஸ்து சிலுவையில் பிதாவைவிட்டுப் பிரிக்கப்படுவதை அனுபவித்தாலுங்கூட, அவர் நமக்காக தம் இரத்தத்தை சிந்துகிற தேவனாகவே அங்கு மரித்துக்கொண்டிருந்தார் (அப். 20:28). கிறிஸ்துவில், தேவன் மரணத்தினூடாய் கடந்து உயிர்த்தெழுதலுக்குள் சென்றார்; கிறிஸ்து உயிர்த்தெழுதலுக்குள் நுழைந்தபோதும் அவர் தேவனாகவே இருந்தார் (யோவான் 20:28-29).
- கிறிஸ்து இப்போதும் என்றென்றும் தேவனாக இருக்கிறார்—ரோ. 9:5; எபி. 1:8
இன்று பரமேறுதலில், கிறிஸ்து இன்னும் தேவனாகவே இருக்கிறார். அவர் தேவனுடைய சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கிறார் (வெளி. 22:3), அது நித்தியத்திற்கும் அவருடைய சிங்காசனமாக இருக்கிறது (எபி. 1:8). அவர் என்றென்றைக்கும் ஸ்தோத்திரிக்கப்பட்ட சர்வத்திற்கும் மேலான தேவனாக இருக்கிறார் (ரோ. 9:5). தம் ஊனுருவாகிய கிறிஸ்துவுக்குள் சிங்காசனத்தில் அமர்ந்திருக்கிற தேவன் சகல நித்தியத்திற்கும் பிரகாசித்து, பாய்ந்தோடுவார்! (வெளி. 21:23; 22:1).
II. கிறிஸ்து தேவனுடைய குமாரனாக இருக்கிறார்
நம்முடைய மனம் கிரகித்துக்கொள்வதற்கு இது ஒரு கடினமான காரியமாகும். கிறிஸ்து எப்படி தேவனாகவும் இருக்கமுடியும், தேவனுடைய குமாரனாகவும் இருக்கமுடியும்? நபர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள் என்று நினைப்பது நம்முடைய பழக்கம். ஆயினும், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தேவனைவிட்டுப் பிரிந்திருக்கிற ஒரு நபர் அல்ல, மாறாக, தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவையெல்லாவற்றின் ஊனுருவாகவும் வெளியாக்கமாகவும் இருக்கிறார். யோவான் 1:1 சுட்டிக்காட்டுகிறபடி, வார்த்தையாகிய கிறிஸ்து தேவனாகவும் இருக்கிறார், தேவனோடும் இருக்கிறோர். திரியேகத்துவத்தின் மூவரும் “மூன்றில் ஒரு பங்குவகிப்பவர்கள்” அல்ல; மாறாக, அவர்களைப் பிரிக்கமுடியாத அளவுக்கு அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொருவருக்குரியவர்களாகவும், ஒருவருக்குள் ஒருவர் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் (யோவான் 14:11, 20; 17:21).
A. தேவனுடைய குமாரன் என்ற முறையில், கிறிஸ்து பிதாவாகிய தேவனின் வெளியாக்கமாக இருக்கிறார்—யோவான் 1:18; 14:9
மனித ஜீவனில்கூட, ஒரு மகன் தோற்றத்திலும் நடத்தையிலும் பெருமளவு தன் தந்தையை வெளிக்காட்டுகிறான். தேவனுடைய குமாரன் என்ற முறையில் கிறிஸ்து, எல்லா விதத்திலும் பிதாவை முழுவதுமாக வெளிக்காட்டுகிறார். கிறிஸ்துவைப் பார்க்கிற எவனும் பிதாவைப் பார்க்கிறான் (யோவான் 14:9). இது ஏனென்றால், குமாரனாகிய கிறிஸ்து பிதாவின் ஊனுருவாயிருக்கிறார். குமாரன் வந்தபோது, பிதாவும் வந்தார். குமாரன் எங்கேயிருந்தாலும், அங்கே பிதாவும் இருந்தார் (யோவான் 8:16, 29; 16:32). தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து செய்வதெல்லாம் பிதாவை வெளிக்காட்டுகின்றன, அவை பிதாவிலிருந்தே உண்டாகின்றன.
B. தேவனுடைய குமாரன் என்ற முறையில் கிறிஸ்து, பிதாவினுடைய மகிமையின் பிரகாசமாகவும், அவருடைய தன்மையின் சொரூபமாகவும் இருக்கிறார்—எபி. 1:3
பிதாவாகிய தேவனுக்கும், அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கும் இடையே உள்ள உறவை இவ்விரண்டு சொற்றொடர்கள் விளக்கிக்காட்டுகின்றன. தேவனுடைய மகிமையின் பிரகாசம் சூரியனுடைய வெளிச்சத்தின் ஜொலித்தலைப்போன்றது அல்லது ஒளிர்வைப்போன்றது. குமாரன் பிதாவினுடைய மகிமையின் ஜொலித்தலாக, ஒளிர்வாக இருக்கிறார். இது தேவனுடைய மகிமையைக் குறிக்கிறது. தேவனுடைய தன்மையின் சொரூபம் என்பது ஒரு முத்திரையின் சொரூபத்தைப்போன்றது. குமாரன், பிதாவாகிய தேவன் என்னவாக இருக்கிறாரோ, அதின் வெளியாக்கமாக இருக்கிறார். இது தேவனுடைய தன்மையைக் குறிக்கிறது. வெளிச்சத்திலிருந்து வெளிச்சத்தின் பிரகாசித்தலை உங்களால் பிரிக்கமுடியுமா? ஒரு சாரப்பொருளிலிருந்து அதின் வடிவத்தை உங்களால் பிரிக்கமுடியுமா? சாத்தியமேயில்லை! குமாரனாகிய தேவனும், பிதாவாகிய தேவனும் இரண்டு தனித்தனி நபர்கள் என நினைப்பது எவ்வளவு பொருத்தமற்றது என்றும், தவறானது என்றும் எபிரேயர் 1:3 மேலும் காண்பிக்கிறது.
C. தேவனுடைய குமாரன் என்ற முறையில் கிறிஸ்து, காணப்படாத தேவனுடைய சாயலாக இருக்கிறார்—கொலோ. 1:13, 15
தேவனுடைய ஊனுருவானவர் என்ற முறையில், கிறிஸ்து தேவனுடைய சாயலாகவே இருக்கிறார். சாயல் என்பது வெளியாக்கத்திற்காக இருக்கிறது. தேவனுடைய சாயலாக கிறிஸ்து, தேவனுடைய எல்லா குணாம்சங்களிலும் நற்பண்புகளிலும் அவருடைய ஆள்தத்துவத்தின் வெளியாக்கமாக இருக்கிறார். தேவனைக் காணமுடியாது, ஆனால் தேவன் கிறிஸ்துவில் எல்லா விதத்திலும் முழுவதுமாக வெளிக்காட்டப்படுகிறார். மனிதன் தேவனுடைய சாயலில் சிருஷ்டிக்கப்பட்டான் (ஆதி. 1:26), நிஜமாகவே நாம் கிறிஸ்துவுக்கேற்றபடி சிருஷ்டிக்கப்பட்டோம் என்பதுதான் இதன் அர்த்தம்! (கொலோ. 1:15-16).
III. கிறிஸ்து என்னவாக இருக்கிறாரோ அது, தேவன் நமக்குள் பகிர்ந்தளிக்கப்படுவதற்கே ஆகும்
A. தேவன் மனிதனுக்குள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவே கிறிஸ்துவில் இருக்கிறார்
தேவன் தம்மையே நமக்குள் பகிர்ந்தளிக்கிறார் என்று நாம் சொல்லும்போது, தம் பொருளாட்சியில் பகிர்ந்தளிக்கிற இந்த தேவன் கிறிஸ்துவே என்பதை நாம் உணரவேண்டும். தேவன் கிறிஸ்துவாக இல்லாமல், தம்மையே நமக்குள் பகிர்ந்தளிக்கமுடியாது. தேவன் தம் பகிர்ந்தளிப்பின் நோக்கத்திற்காகவே கிறிஸ்துவாக இருக்கிறார். யெகோவாவின் சாட்சிகள் சொல்லுவதுபோல, கிறிஸ்து வெறுமனே ஒரு தூதராக இருந்தாரானால், தேவனுடைய பொருளாட்சி நிறைவேற்றப்படமுடியாது. தேவதூதருக்குரிய ஏதோவொன்று நமக்குள் பகிர்ந்தளிக்கப்படுவதைப் பார்க்க தேவன் விரும்பவில்லை; அவர் தாமே நமக்குள் பகிர்ந்தளிக்கப்படவேண்டுமென்று அவர் விரும்புகிறார்! தேவன் தாமே தம் பொருளாட்சியில் நமக்கு எல்லாமாகவேண்டும் என்பதற்காக தேவன் கிறிஸ்துவில் இருக்கிறார்.
B. இந்த பகிர்ந்தளித்தலுக்காகவே கிறிஸ்து முழுமையான தேவனாகவும், தேவனுடைய குமாரனாகவும் இருக்கிறார்
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்கள் அவருடைய கூட்டு வெளியாக்கமாக இருக்குமாறு, தேவன் அவர்களுக்குள் பகிர்ந்தளிக்கப்படுவதற்காகவே கிறிஸ்து முழுமையான தேவனாகவும், தேவனுடைய குமாரனாகவும், அதாவது, ஒரேபேறான குமாரனாகவும் முதற்பேறான குமாரனாகவும் இருக்கிறார். குமாரனாகிய கிறிஸ்து, பிதா என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவையெல்லாவற்றிற்கும் ஊனுருவாக இருப்பதாலும், இன்று அவர் ஆவியானவராக இருப்பதாலும், முழு மூவொரு தேவனும் முப்பகுதி மனிதனுக்குள் பகிர்ந்தளிக்கப்படமுடியும். தேவனுடைய குமாரன் என்ற முறையில் கிறிஸ்து, பிதா தீர்மானித்த எல்லாவற்றையும் நிறைவேற்றினார், நாம் தேவனை ஜீவனாகப் பெற்றுக்கொள்ளாதபடி தடுத்த எல்லா தடைகளையும் அவர் நீக்கிப்போட்டார். தேவனுடைய சாயல் என்ற முறையில், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து தேவனுடைய மற்ற எல்லா குமாரர்களுக்கும் மூலப்படிவமாகவும் இருக்கிறார் (ரோ. 8:29). இது ஒரு பரம இரகசியமாக இருக்கிறது, ஆனால், நாம் இன்று தேவனுடைய அநேக குமாரர்களாக தேவனை அனுபவித்துமகிழ்வதற்காக, கிறிஸ்து தேவனாகவும் இருக்கிறார், தேவனுடைய குமாரனாகவும் இருக்கிறார்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: முழு மூவொரு தேவனும் கிறிஸ்துவுக்குள் வசிக்கிறார் என்பதை, செய்திக்குறிப்பில் I.A.1. முதல் 3 வரையுள்ள வசனங்களைப் பயன்படுத்திக் காண்பியுங்கள். முழு மூவொரு தேவனும் கிறிஸ்துவுக்குள் வசிப்பதற்கான காரணம், முழு மூவொரு தேவனும் நமக்குள் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான். இது, நம் மனதைக்கொண்டு நாம் புரிந்துகொள்ளமுடியாத ஒரு பரம இரகசியமாகும், ஆனால் நாம் தேவனைத் தொடர்புகொள்வதின்மூலம் அனுபவித்துமகிழமுடியும்.
சுவிசேஷ செயலாக்கம்: எந்தவொரு தத்துவ ஞானியும், சந்நியாசியும் அல்லது மதத் தலைவரும் தன்னை தேவன் என்று துணிந்து சொல்லிக்கொண்டதேயில்லை. இயேசு மட்டுமே தம்மை தேவன் என்று சொன்னார் (யோவா. 10:30; 14:9). இந்த காரணத்தினால்தான், ஒன்று, இயேசு ஒரு பொய்யனாக இருக்கவேண்டும், அல்லது, அவர் பைத்தியக்காரனாக இருக்கவேண்டும், அல்லது, அவர் மெய்யாகவே தேவனாக இருக்கவேண்டும் என்ற முடிவுக்கு ஒருவன் வந்தாகவேண்டும். அவர் ஒரு பொய்யன் என்ற கருத்தை நாம் தள்ளிவிடுகிறோம், ஏனென்றால், எந்தவொரு பொய்யனும் தன் பொய்க்காக மரிக்கமாட்டான். இயேசு தம்மை தேவன் என்று சொல்லிக்கொண்டதினால்தான், அவர் யூத தலைவர்களாலும், ரோம தலைவர்களாலும் மரணத் தீர்ப்படைந்தார். அவர் தம் வாழ்வின் இறுதிவரை, தாம் தேவன்தான் என்ற கூற்றில் உறுதியாய் நின்று, மனிதனுக்காக நித்திய மீட்பை நிறைவேற்றின சகலத்தையும் உள்ளடக்கிய மரணத்தை மரித்தார் (அப். 20:28; எபி. 9:14). அவரை ஒரு பைத்தியக்காரன் என்றும் நாம் சொல்லமுடியாது, ஏனென்றால், அவருடைய வார்த்தைகள் தெளிவாகவும், ஞானத்தால் நிறைந்தவையாகவும், தேவனையும் மனித துன்பத்தையும்பற்றிய உள்ளான பார்வையில் வளமானவையாகவும் இருந்தன. அவர் ஒரு பொய்யனோ அல்லது பைத்தியக்காரனோ அல்ல என்பதால், அவர் தம்மை யாரென்று சொல்லுகிறாரோ, அதை நாம் விசுவாசிக்கத்தான் வேண்டும். மேலும், அவர் தேவன்தான் என்பதை அவருடைய அற்புத செயல்கள் நிரூபித்தன (மத். 8:26-27; யோவான் 11:43-44). அவரைக் கவனித்துப்பார்த்தவர்களின் வார்த்தைகள், அவர் தேவன்தான் என்பதை நிரூபித்தன (யோவான் 20:28). வேதாகமம் அவரை தேவன் என்று சொல்லுகிறது (ஏசா. 9:6; ரோ. 9:5). அவர் தேவன்தான் என்பதை, நூற்றாண்டுகள்தோறும் விசுவாசிகளின் அனுபவம் நிரூபிக்கிறது; அவர் தேவன்தான் என்பதை அவருடைய இரட்சிப்பின் வல்லமையும் நிரூபிக்கிறது. அவருக்குள் விசுவாசிப்பதினாலும், இயேசுவின் நாமத்தைநோக்கிக் கூப்பிடுவதினாலும், நாம் தேவனையே பெற்றுக்கொள்கிறோம் (Gospel Outlines, Subject 236, and the booklet, Christ is God).
முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
BACKGROUND READING: The Conclusion of the New Testament, Message 21; The All-Inclusive Spirit of Christ, pp 1–9.
REFERENCES: The Conclusion of the New Testament, Messages 21; 26, pp 287–288; The All-Inclusive Spirit of Christ, pp 1–9; Concerning the Triune God—the Father, the Son, and the Spirit; Concerning the Person of Christ, pp 1–27, 37–47; Life-study of John, Message 2, pp 21–22; The Economy of God, Chapter 1; God’s New Testament Economy, Chapters 1–4; 6; The Knowledge of Life, Chapters 1–2; Gospel Outlines, Subject 236; Christ is God (booklet).