வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 7
✵பாடம் 01 – 08
✵பாடம் 09 – 18
கிறிஸ்து என்னும் நபர்
இராஜ-இரட்சகராகிய கிறிஸ்து
குறிக்கோள்: மத்தேயுவின் சுவிசேஷத்தில், கிறிஸ்து பாவிகளை இரட்சித்து, அவர்களை தம் இராஜ்யத்திற்குள் கொண்டுவரும்படி வருகிற இராஜ-இரட்சகராக இருக்கிறார் என்பதைப் பார்க்க வாலிபர்களுக்கு உதவுவது.
பொருட்சுருக்கம்: கிறிஸ்துவைப்பற்றி மத்தேயு எழுதிய வாழ்க்கைவரலாறு ஒரு குறிப்பிட்ட கண்ணோட்டத்திலிருந்து எழுதப்பட்டிருக்கிறது; கிறிஸ்து இராஜாவாக இருக்கிறார், அதாவது, பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட தேவனுடைய கிறிஸ்துவாக இருக்கிறார், அவர் பரலோக இராஜ்யத்தை பூமிக்கு கொண்டுவருகிறார் என்று அது காண்பிக்கிறது. கிறிஸ்து இராஜ வம்சாவளியைச் சேர்ந்தவர் என்றும், அவர் சிங்காசனத்திற்கு சட்டப்பூர்வமான வாரிசாக இருக்கிறார் என்றும் அவருடைய வம்சவரலாறு நிரூபிக்கிறது. கிறிஸ்து தம் சிறுவயதிலேயே இராஜாவாக ஞானிகளால் ஆராதிக்கப்பட்டார் என்றும், இராஜா என்ற முறையில் அவர் ஏரோதினால் வேட்டையாடப்பட்டார் என்றும் அவருடைய பிறப்பும் இளமைப்பருவமும் காண்பிக்கின்றன. கிறிஸ்து பூமியில் செய்த ஊழியம் மனிதனை தம் இராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்காக இருந்தது; நாமெல்லாரும் அவருடைய இராஜ்ய மக்களாக மாறும்படி கிறிஸ்துவின் மரணமும் உயிர்த்தெழுதலும் வழியை சரிசெய்தது. அவர் இராஜ-இரட்சகராக இருக்கிறார்; கிறிஸ்து தம் பிறப்பிலிருந்து தம் உயிர்த்தெழுதல்வரை, பூமியில் தம் இராஜ்யத்தை ஸ்தாபிக்க வேலைசெய்கிறார். இப்படிப்பட்ட இராஜாவின் வருகையுடன் மத்தேயு முழு புதிய ஏற்பாட்டையும் ஆரம்பிக்கிறது, இவருடைய இரட்சிப்பு நம் விழுந்துபோன நிலைமையிலிருந்து நம்மை வெளியே கொண்டுவந்து, நம்மை இராஜ்ய வாழ்க்கையை உடைய இராஜ்ய மக்களாக்குகிறது.
பின்புலம்: இராஜா என்னும் கிறிஸ்துவின் அம்சத்தை வாலிபர்கள் பரிசீலிக்கும்போது, இராஜாக்களையும் இராஜ்யங்களையும்பற்றிய வரலாற்றுரீதியான அல்லது பிரபலமான புரிந்துகொள்ளுதல்களினிமித்தம், மிகவும் புறம்பான, சர்வாதிகார கண்ணோட்டம் அவர்களுக்கு இருக்கக்கூடும். மேலும், தாங்கள்தான் தங்கள் வாழ்க்கையின் “இராஜாக்கள்” என்றும், “தங்கள் விதியின் தலைவர்கள்” என்றும் வாலிபர்கள் நினைக்கக்கூடும். கிறிஸ்துவே ஒப்பற்ற இராஜா என்றும், அவர் நம் ஆள்தத்துவத்திற்குள் தெய்வீக ஜீவனால் ஆளுகைசெய்யக்கூடிய ஒரு மண்டலமாகிய தம் இராஜ்யத்தை ஸ்தாபிக்கும்படி வந்திருக்கிறார் என்றும் அவர்கள் பார்க்கவேண்டும். “கிறிஸ்து இராஜா மட்டுமல்ல, கிறிஸ்து என் இராஜாவாகவும் இருக்கிறார்,” என்று இந்த பாடத்தின் முடிவில் நாமெல்லாரும் பிரபஞ்சத்திற்கு அறிக்கையிடுவோமாக.
அதிகாரங்கள்: மத்தேயு 1–28.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
அற்புதமான நபராகிய கிறிஸ்துவுக்கு, புதிய ஏற்பாட்டின் முதல் நான்கு புத்தகங்களாகிய மத்தேயு, மாற்கு, லூக்கா, யோவான் ஆகியவைகளில் பதிவுசெய்யப்பட்டுள்ள நான்கு வாழ்க்கைவரலாறுகள் இருக்கின்றன. மனிதனை பரலோக இராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்கான இராஜ-இரட்சகராக மத்தேயு அவரைக் காண்பிக்கிறது. மனிதனை சேவிப்பதற்கான அடிமை-இரட்சகராக மாற்கு அவரைக் காண்பிக்கிறது. மனிதனுக்கு இரட்சிப்பைக் கொண்டுவருவதற்கான மனித-இரட்சகராக லூக்கா அவரைக் காண்பிக்கிறது. மனிதனுக்கு ஜீவனாக இருக்கக்கூடிய தேவ-இரட்சகராக யோவான் அவரைக் காண்பிக்கிறது. இந்த அற்புதமான, சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவைப்பற்றிய முழுமையான சித்திரத்தை நமக்கு வழங்கும்படி ஒவ்வொரு புத்தகமும் கிறிஸ்துவின் வெவ்வேறு கோணத்தைக் காண்பிக்கிறது.
I. மத்தேயுவில், கிறிஸ்து இராஜ்யத்தை ஸ்தாபிக்கும்படி இராஜ-இரட்சகராக வந்தார்
மத்தேயுவின் சுவிசேஷத்தில், கிறிஸ்து மிகவும் குறிப்பான விதத்தில் காண்பிக்கப்படுகிறார். அவர் தம் இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக இராஜ-இரட்சகராக காண்பிக்கப்படுகிறார். ஆகவே, மத்தேயுவில் உள்ள ஒவ்வொரு வசனத்தையும், ஒவ்வொரு அதிகாரத்தையும் இந்த கண்ணோட்டத்திலிருந்தே நாம் பார்க்கவேண்டும். மத்தேயு கிறிஸ்துவின் வம்சவரலாறைப்பற்றி பேசும்போது, கிறிஸ்து தம் இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக இராஜ-இரட்சகராக இருக்கிறார் என்ற கண்ணோட்டத்திலேயே அவன் அதைப் பேசுகிறான். அவன் கிறிஸ்துவின் பிறப்பையும், இளமைப்பருவத்தையும், ஊழியத்தையும், மரணத்தையும், உயிர்த்தெழுதலையும் பேசும்போதுகூட, கிறிஸ்து தம் இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்காக இராஜ-இரட்சகராக இருக்கிறார் என்ற ஒரு குறிப்பிட்ட கோணத்திலிருந்தே அதைப் பேசுகிறான். கிறிஸ்து இராஜ-இரட்சகராக இருக்கிறார்; அவர் நம் இருதயத்திற்குள் தம் சிங்காசனத்தை நிறுவும்படி தம் இராஜரீக ஜீவனுடன் நமக்குள் வர விரும்புகிறார். அவருடைய இரட்சிப்பு பாவிகளை அவர்களுடைய பாவத்திலிருந்து இரட்சிப்பது மட்டுமல்ல, அதைவிட அதிகமாக, பாவிகளை அவருடைய தெய்வீக ஜீவனில் இராஜாக்களாக ஒவ்வொரு எதிர்மறையாக காரியத்தின்மேலும் ஆளுகைசெய்கிற, தம் இராஜ்யத்தின் ஆக்கக்கூறுகளாக்குவதும் ஆகும் (ரோ. 5:17). அவர் இந்த அளவுக்கு நம்மை இரட்சிக்க விரும்புகிறார். வேறு யாராலும் நம்மை ஆளுகைசெய்யவோ அல்லது கட்டுப்படுத்தவோ முடியாதபோது, இந்த இராஜ-இரட்சகர் நம்மை இரட்சித்து, நமக்குள் ஆளுகைசெய்து, ஓர் இராஜரீக வாழ்க்கை வாழ நம்மை வழிநடத்தும்படி தம் இராஜரீக ஜீவனுடன் நமக்குள் வருவதை நாம் காண்கிறோம்.
II. கிறிஸ்துவின் வம்சவரலாறு, பிறப்பு, இளமைப்பருவம் ஆகியவைகளைப்பற்றிய மத்தேயுவின் பதிவு, அவர் இராஜா என்பதை வெளிப்படுத்துகிறது
நான்கு சுவிசேஷங்களில், மத்தேயுவும் லூக்காவும் மட்டுமே கிறிஸ்துவின் வம்சவரலாறையும், பிறப்பையும், இளமைப்பருவத்தையும்பற்றிய பதிவைக் கொண்டிருக்கிறது. மாற்குவின் சுவிசேஷம் கிறிஸ்துவை ஓர் அடிமையாக காண்பிப்பதால், மாற்குவில் இவைகளைப்பற்றிய எந்தப் பதிவும் இல்லை. ஓர் அடிமையின் வம்சவரலாற்றையோ, பிறப்பையோ அல்லது இளமைப்பருவத்தையோபற்றி யாருக்கும் ஆர்வம் இருப்பதில்லை. தேவனைப்பற்றிய யோவானின் சுவிசேஷத்திலும் இவைகளைப்பற்றி எந்தப் பதிவும் இல்லை, ஏனென்றால், தேவனுக்கு வம்சவரலாறோ, பிறப்போ அல்லது இளமைப்பருவமோ இல்லை. அவருக்கு ஆயுள்நாட்களின் ஆரம்பமும் இல்லை, ஆயுளின் முடிவும் இல்லை, மூதாதையர் யாரும் இல்லாமல் அவர் நித்தியமாய் இருக்கிறார். மறுபக்கம், லூக்காவின் சுவிசேஷம், ஒரு நேர்த்தியான வம்சவரலாறையும், பிறப்பையும், இளமைப்பருவத்தையும் உடைய ஓர் உண்மையான மனிதனாக கிறிஸ்துவைக் காண்பிக்கிறது. மத்தேயுகூட கிறிஸ்துவின் வம்சவரலாறையும், பிறப்பையும், இளமைப்பருவத்தையும் பதிவுசெய்கிறது, ஆனால், கிறிஸ்து இராஜ-இரட்சகராக இருக்கிறார் என்ற கண்ணோட்டத்திலிருந்து அது காண்பிக்கிறது.
A. இராஜாவின் வம்சவரலாறு அவருடைய இராஜரீக அந்தஸ்தை நிரூபிக்கிறது—மத். 1:1-17
இராஜாவாகிய கிறிஸ்துவுக்கு தகுந்த வம்சாவளியை வழங்குவதில் உள்ள தேவனுடைய இறையாண்மைக்கான மறுக்கமுடியாத நிரூபணத்தை மத்தேயுவிலுள்ள கிறிஸ்துவைப்பற்றிய வம்சவரலாறு அளிக்கிறது. தாவீதின் சிங்காசனத்திற்கு தகுந்த வாரிசாக இருப்பதற்கு, கிறிஸ்து தாவீதின் சந்ததியாக இருந்தாகவேண்டும். மரியாள், யோசேப்பு ஆகிய இருவருமே தாவீதின் சந்ததியினராக இருந்தார்கள், சிங்காசனத்தை சுதந்தரித்துக்கொள்வதற்கு தகுந்த வம்சாவளியை அவர்கள் கிறிஸ்துவுக்கு அளித்தார்கள். மேலும், கிறிஸ்துவின் வம்சவரலாற்றில் ஐந்து பெண்களின் பெயர்கள் அடங்கியிருப்பதை கவனிப்பதும் மதிப்புவாய்ந்ததாகும்: முறைதவறிய உறவுகொண்ட தாமார், வேசியாக இருந்த ராகாப், மோவாபியளாக இருந்த ரூத், விபச்சாரம்செய்த பத்சேபாள், மற்றும் தூய கன்னிகையாக இருந்த மரியாள். இவர்களில் சிலர் புறவினத்தார், சிலர் மறுமணம்செய்துகொண்டவர்கள், மூன்றுபேர் பாவிகள்.கிறிஸ்து யூதர்களோடு மட்டுமல்ல, புறவினத்தாரோடும், இன்னும் சொல்லப்போனால், பாவிகளோடும்கூட தொடர்புடையவராக இருக்கிறார் என்றும், அவர் பாவிகளின் இராஜ-இரட்சகர் என்றும் இது சுட்டிக்காட்டுகிறது (Matthew 1:3, footnote 2).
B.அவர் மெய்யாகவே இராஜாதான் என்பதை இராஜாவின் பிறப்பும் இளமைப்பருவமும் வெளிப்படுத்துகின்றன—மத். 2
மத்தேயுவின் பதிவை நாம் வாசிக்கும்போது, அவனுடைய புத்தகத்தின் ஒவ்வொரு அதிகாரமும் அர்த்தமுள்ளது, அதாவது, கிறிஸ்து மெய்யாகவே இராஜாதான் என்று அது காண்பிக்கிறது என்பதை நாம் உணர்கிறோம். பின்வரும் குறிப்புகளைப் பரிசீலித்துப்பாருங்கள்.
- பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட இராஜாவாக கிறிஸ்து பிறந்தார்—2 சாமு. 7:12-13; மத். 1:1, 20; லூக். 1:32-33
இந்த இராஜாவின் வருகையைக்குறித்து பழைய ஏற்பாடு தீர்க்கதரிசனம் உரைத்தது (2 சாமு. 7:12-13); மனிதனின் பிரச்சனைகளைத் தீர்க்கவும், மனிதனின் தேவையை நிறைவாக்கவும், மனிதனை தம் இராஜ்யத்திற்குள் கொண்டுவரவும் இப்போது அவர் வந்துவிட்டார். “…தாவீதின் குமாரனான இயேசுகிறிஸ்துவினுடைய வம்சவரலாறு,” என்று சொல்லி, மத்தேயுவின் பதிவு முழு புதிய ஏற்பாட்டையும் தொடங்கிவைக்கிறது (மத். 1:1). தாவீதின் குமாரன் என்ற முறையில் அவரே நிஜமான சாலொமோனாக இருக்கிறார், அதாவது, அவர் இராஜ்யத்தை சுதந்தரித்து, பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களை நிறைவேற்றுகிறார்.
- கிறிஸ்து ஞானிகளால் தேடப்பட்டு, ஆராதிக்கப்பட்டார்; அவர்கள் அவரை “யூதருக்கு இராஜா” என்று அழைத்தார்கள்—மத். 2:2
2-ஆம் அதிகாரத்தில் பதிவுசெய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் மத்தேயுவில் மட்டுமே இருக்கிறது. கிழக்கிலிருந்து வந்த ஞானிகள் அவரைத் தேடி, அவரைக் கண்டுபிடித்து, அவரை ஆராதித்தார்கள். அவருடைய இளமைப்பருவத்தைப்பற்றி இங்கு வழங்கப்பட்டுள்ள கண்ணோட்டம், கிறிஸ்து இராஜாவாக இருக்கிறார் என்று காண்பிக்கிறது.
- ஏரோது இராஜா, கிறிஸ்துவை அழிக்கும்படி நாடினான்—மத். 2:3, 13-18
யூதர்களின் இராஜாவாகிய கிறிஸ்து பிறந்தார் என்று ஏரோது கேள்விப்பட்டபோது, அவன் பொறாமைக்கொண்டு, அவரை அழிக்க நாடினான். கிறிஸ்து இராஜாவாக இருக்கிறார் என்பதை இங்குள்ள பதிவு மீண்டும் காண்பிக்கிறது. அவருடைய பிறப்பு, ஏரோது இராஜாவின் பொறாமையைத் தூண்டியது, புதிதாகப் பிறந்த இராஜாவை அழிக்கும் என்ற நம்பிக்கையில் அவன் பெத்லகேமில் இருந்த எல்லா சிறுவர்களையும் அழித்துப்போட்டான்.
III. கிறிஸ்து பாவிகளை தம் இராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்காக வந்தார் என்பதை கிறிஸ்துவின் ஊழியத்தைப்பற்றிய மத்தேயுவின் பதிவு வெளிப்படுத்துகிறது
A. இராஜ்யம் என்பது தேவனுடைய ஆளுகையின் மண்டலமாகவும், தேவனுடைய ஜீவனின் மண்டலமாகவும் இருக்கிறது—யோவான் 3:5
தேவனுடைய இராஜ்யம் என்பது, நாம் இயற்கையான கருத்தின்படி நினைக்கிற ஒரு நிர்வாக அமைப்பு அல்ல, மாறாக, அது தேவனுடைய பரலோக ஆளுகையின் மண்டலமாகவும், ஜீவனின் மண்டலமாகவும் இருக்கிறது. மக்கள் கர்த்தருடைய தெய்வீக ஜீவனில் பங்குபெற்று, அவருடைய பரலோக ஆளுகையின்கீழ் வருமாறு, அவர் இராஜ-இரட்சகர் என்ற முறையில், இராஜ்யத்தின் சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். “இயேசு பிரதியுத்தரமாக: ஒருவன் ஜலத்தினாலும் ஆவியினாலும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிக்கமாட்டான் என்று மெய்யாகவே மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்,” என்று யோவான் 3:5 கூறுகிறது. நாம் ஆவியானவரால் பிறந்து மறுபடிஜெநிப்பிக்கப்பட்டபோது, தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழைந்தோம். ஒரு விலங்கு, விலங்காகப் பிறப்பதின்மூலம் விலங்கின் இராஜ்யத்திற்குள் நுழைவதுபோல, நாம் தேவனால் பிறப்பதினால் மட்டுமே தேவனுடைய இராஜ்யத்திற்குள் நுழையமுடியும்.
B. இராஜ்யத்திற்காக மனந்திரும்புதல் என்பதுடன் இராஜாவின் பிரசங்கம் தொடங்கியது—மத். 4:17
யோவான் ஸ்நானன் (மத். 3:2), கிறிஸ்து (மத். 4:17) ஆகிய இருவரின் ஊழியமும் “மனந்திரும்புங்கள், பரலோ ராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்று சொல்லி ஆரம்பித்தது. மனந்திரும்புவதென்றால், மனதில் ஒரு மாற்றங்கொண்டு, தேவனிடமும் அவருடைய இராஜ்யத்திடமும் திரும்புவதாகும். நாம் பாவமுள்ளவர்கள் என்று நாம் நினைக்கிறோமோ இல்லையோ, நாமெல்லாரும் கலகத்தனத்தில்தான் பிறந்தோம், நாமெல்லாரும் அவருடைய இராஜ்யத்திற்குள் கொண்டுவரப்பட அவருடைய ஆளுகையின்கீழ் வரவேண்டும். நாம் மனந்திரும்பும்போதெல்லாம், அவரை இராஜாவாக ஆதாயப்படுத்திக்கொள்கிறோம், அவர் நம்மை தம் மக்களாக ஆதாயப்படுத்திக்கொள்கிறார். இதுவே இராஜ்யம். கிறிஸ்து நம்மை ஆதாயப்படுத்திக்கொண்டு, நாமும் அவரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்போது, நம்மிடம் இராஜ்யம் இருக்கிறது.
C. இராஜாவின் போதனை இராஜ்யத்தை மையமாகக்கொண்டிருந்தது—மத். 5—7, 13, 24—25
மத்தேயு 5—7, 13, 24—25 ஆகிய அதிகாரங்களில், பரலோக இராஜ்யத்தைக்குறித்து கர்த்தர் போதித்தார். எப்போதுமே ஓர் இராஜாவின் வார்த்தைகள் குறிப்பிடத்தக்கவை தான், ஆனால், மத்தேயுவில் உள்ள கிறிஸ்துவின் வார்த்தைகளைப்போல, அவ்வளவு ஆவிக்குரிய, தூய்மையான, வெளிச்சம்தருகிற, அதிகாரமுள்ள, ஞானமுள்ள, ஒழுக்கத்தில் உயர்ந்த வார்த்தைகள் வேறெதுவும் இல்லை. அவருடைய போதனை மனிதனின் புறம்பான செயல்களை மட்டுமல்ல, அதைவிட அதிகமாக, அவனுடைய உள்ளான ஆள்தத்துவத்தையும் தொடுகிறது; உதாரணமாக, மத்தேயு 5:3, “ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோக ராஜ்யம் அவர்களுடையது.” மத்தேயு 5 முதல் 7 வரை, இராஜ்யத்தின் சட்டத்தைப்பற்றிய அவருடைய கட்டளையை நாம் பார்க்கிறோம், அது பிதாவின் தெய்வீக ஜீவனை உடையவர்களால் மட்டுமே நிறைவேற்றப்படக்கூடிய கட்டளையாகும் (மத். 5:48).
D. பாவிகளை இராஜா இரட்சிப்பது, அவர்களை இராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்கே ஆகும்—மத். 8—9
மத்தேயுவில் இராஜாவின் இரட்சிப்பு, மக்களை இராஜ்யத்திற்குள் கொண்டுவருவதற்காகவே இருந்தது. குஷ்டரோகிகளுக்கும் (கலகக்காரருக்கும்—மத். 8:3), வாதநோய்ப்பட்டவர்களுக்கும் (பாவத்தன்மையால் செயல்பாட்டில் மரித்தவர்களுக்கும்—மத். 8:13), காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் (மத். 8:14-15), வியாதிகள் உள்ளவர்களுக்கும் (மத். 8:16), அற்பமாய் எண்ணப்பட்ட ஆயக்காரருக்கும் பாவிகளுக்கும் (மத். 9:9-11) அவர் அக்கறைசெலுத்தினார். அவர் அவர்களைக் குற்றப்படுத்தும்படி நீதிபதியாக அவர்களிடம் வரவில்லை, மாறாக, அவர்களை தம் இராஜ்யத்தின் பரலோக ஆக்கக்கூறுகளாக்கும்படி வைத்தியராக வந்தார் (மத். 9:12). (Matt. 9:12, footnote 1).
IV. கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும்பற்றிய மத்தேயுவின் பதிவுகூட, கிறிஸ்துவின் இராஜ்யத்தை ஸ்தாபிப்பதற்கான இராஜாவாக கிறிஸ்துவை சித்தரிக்கிறது—மத். 27—28
மத்தேயு 27 முதல் 28 வரையுள்ள, கிறிஸ்துவின் மரணத்தையும் உயிர்த்தெழுதலையும்பற்றிய பதிவுகூட, இராஜ்யம் என்ற கண்ணோட்டத்தின்படியே இருக்கிறது. கிறிஸ்துவின் இராஜ்யம் நீதியை அடிப்படையாகக்கொண்டிருக்கிறது; கிறிஸ்துவின் மரணத்தைப்பற்றிய மத்தேயுவின் பதிவு, நீதி என்ற விஷயத்தோடு அதிகமாக இடைபடுவதை நாம் பார்க்கமுடியும். கிறிஸ்து அநீதியானமுறையில் யூதாஸினால் காட்டிக்கொடுக்கப்பட்டார் (மத். 26:47-48); அவர் அநீதியானமுறையில் யூத தலைவர்களால் கைதுசெய்யப்பட்டார் (மத். 26:59, 65); பிலாத்து அநீதியானமுறையில் அவருக்குத் தீர்ப்புவழங்கி, அவரை வாரினால் அடித்தான் (மத். 27:26); தேசாதிபதியின் போர்ச்சேவகர் அநீதியானமுறையில் அவருடைய ஆடைகளைக் கழற்றி, அவர்மேல் துப்பி, அவரை அடித்தார்கள் (மத். 27:27-31); அநீதியானமுறையில் அவரை சிலுவையில் அறைந்தார்கள் (மத். 27:34). அதன்பின், “இவன் யூதருடைய ராஜாவாகிய இயேசு,” என்று அவருடைய ஆக்கினைக்கான காரணத்தை எழுதி, சிலுவையில் அவருடைய தலைக்குமேல் வைத்தார்கள் (மத். 27:37). எனினும், அவர் சிலுவையில் இருந்தபோது, தேவன் வந்து, நமக்காக நீதியாய் அவரை நியாயந்தீர்த்து, மனுகுலத்தின் சகல பாவங்களையும் அவர்மேல் வைத்து, நமக்குபதிலாக அவரை பாவமாக்கினார் (மத். 27:45-50; 2 கொரி. 5:21). நாம் இரட்சிக்கப்படும்படி, மனிதனுடைய அநீதி அனைத்தும் கிறிஸ்துவின்மேல் குவிக்கப்பட்டு, நீதியான தேவனால் நியாயந்தீர்க்கப்பட்டது. தேவனுடைய நிறைவான இரட்சிப்பு நீதியை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது (ரோ. 1:16-17), தேவனுடைய சிங்காசனமும் நீதியையே அஸ்திபாரமாகக் கொண்டிருக்கிறது (சங். 89:14). கிறிஸ்துவின் நீதியான மரணத்தினால், நாம் இரட்சிக்கப்பட்டு, அவருடைய இராஜ்யத்திற்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறோம் (கொலோ. 1:13; அப். 26:18). கிறிஸ்து தேவனுடைய நீதியான கோரிக்கைகளை நமக்குபதிலாக நிறைவுசெய்து மரித்தபிறகு, அவர் நீதியானமுறையில் தேவனால் எழுப்பப்பட்டு, பிரபஞ்சத்தில் சகல அதிகாரமும் கொடுக்கப்பெற்றார். அதன்பின், புறப்பட்டுப்போய், சகல தேசங்களையும் சீஷராக்கி, மூவொரு தேவனுக்குள்ளாக அவர்களை ஞானஸ்நானம்பண்ணும்படி, நீதியான இராஜாவாக அவர் தம் சீடர்களுக்கு கட்டளையிட்டார். இவ்விதமாக, தேவனற்ற மக்கள் கிறிஸ்துவின் பரலோக இராஜ்யத்தின் ஆக்கக்கூறுகளாகும்படி, மூவொரு தேவனுடன் ஒரு ஜீவாதார சேர்க்கைக்குள்ளாகக் கொண்டுவரப்படுகிறார்கள். என்னே இராஜ-இரட்சகர்! கிறிஸ்து தம் பிறப்பிலிருந்து தம் உயிர்த்தெழுதல் மற்றும் உத்தரவுவரை, மெய்யாகவே இராஜ-இரட்சகராக இருக்கிறார். இன்று அவர் இராஜாவாக நமக்குள் இருந்து, தம் உள்ளான ஆளுகையினால் நமக்கு வழிகாட்டி, ஜீவனில் ஆளுகைசெய்ய நம்மை வழிநடத்திக்கொண்டிருக்கிறார் (ரோ. 5:17).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: கிறிஸ்து இராஜாவாகப் பிறந்து, இராஜாவாக ஊழியஞ்செய்து, இராஜாவாக மரித்து, இராஜாவாக உயிர்த்தெழுந்தபிறகு, கிறிஸ்து தம் இராஜ்யத்திற்காக இராஜாவாக ஆளுகைசெய்யும்படி நமக்குள் வந்தார். “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்,” என்பதே மத்தேயு புத்தகத்திலுள்ள அவருடைய கடைசி வார்த்தைகள் (மத். 28:20). இந்த வார்த்தை உட்கருத்துவாய்ந்தது, ஏனென்றால், இராஜாவாகிய கிறிஸ்து எந்நேரமும் நம்மோடு இருக்கிறார் என்று இது காண்பிக்கிறது. ஓர் இராஜாவை உடைய ஒவ்வொரு இராஜ்யத்திலும், இவ்வளவு ஏராளமான மக்களை எப்படி இராஜாவால் ஆளுகைசெய்யமுடியும் என்ற கேள்வி எப்போதுமே இருக்கிறது. அவருடைய சமஸ்தானத்தை அவர் ஆளுகைசெய்வது, பிரதானமாக, அவருடைய இராணுவத்தையும் அரசாங்கத்தையுமே சார்ந்திருக்கிறது. இருப்பினும், தன் இராஜ்யத்திலுள்ள ஒவ்வொரு குடிமக்களும் கீழ்ப்படிகிறார்களா என்பதைக் கண்காணிக்க அவருக்கு எந்த வழியும் இல்லை; தன் சட்டத்தின்படி வாழ தன் குடிமக்களுக்கு வேண்டியதை வழங்கும் திராணியும் அவருக்கு இல்லை. இராஜா தன் குடிமக்களுக்குள் வாழ்ந்து, ஒவ்வொருநாளும் அவர்களோடு இருந்து, இராஜ்ய வாழ்க்கை வாழ அவர்களுக்கு வழிகாட்டக்கூடுமானால், அது எவ்வளவு அற்புதமாயிருக்கும். இப்படிப்பட்டவர்தான் நம் கிறிஸ்து. அவர் ஒப்பற்றவராயிருக்கிறார், ஏனென்றால், இராஜாவாக அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு நாளும் நம்மோடும், நமக்குள்ளும் இருக்கிறார். நாம் தகாத ஏதோவொன்றை செய்தாலோ, ஏதோவொன்றை பேசினாலோ, எங்கேயாவது சென்றாலோ அல்லது ஏதோவொன்றை கையாண்டாலோ, நமக்குள் இருக்கிற இராஜா தம் அதிருப்தியைக்குறித்து நமக்குள் ஓர் ஆளுகைசெய்யும் உணர்வை மென்மையாய் நமக்குக் கொடுக்கத் தொடங்குவார். அதன்பின், இந்த ஆளுகைசெய்யும் உணர்வுக்கு நாம் நம்மைத் திறந்துகொடுத்து, கிருபையைப் பெற்றுக்கொள்ளும்போது, ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஜீவனில் ஆளுகைசெய்ய அவர் தம் இராஜரீக ஜீவனைக்கொண்டு நம்மை நிரப்புகிறார் (ரோ. 5:17). இவ்வாறு, நாம் அவருடைய விருப்பத்தின்படி இராஜ்ய வாழ்க்கை வாழ்கிறோம்.
சுவிசேஷ செயலாக்கம்: அநேகமாக, மத்தேயுவில் யோவான் ஸ்நானனால் பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷம்தான், பிரசங்கிக்கப்பட்ட சுவிசேஷங்களிலேயே மிகுந்த சக்திவாய்ந்த, இருதயத்தை உணர்த்துவிக்கிற பிரசங்கமாக இருக்கக் கூடும். “மனந்திரும்புங்கள், பரலோக ராஜ்யம் சமீபித்திருக்கிறது,” என்று இராஜ-இரட்சகராகிய கிறிஸ்துவின் முன்னோடியான யோவான் தைரியமாய் அறிவித்தான் (மத். 3:2). ஒவ்வொரு மனிதனும் தன் சிந்தனையில் அடியோடு மாற்றங்கொண்டு, தன் வாழ்க்கைத் தேடலில் திருப்பமடையவேண்டும் என்று இந்த ஒரே வார்த்தையினால் யோவான் சுட்டிக்காட்டினான். மனிதனுடைய தேடலின் இலக்கு மற்ற காரியங்களாக இருந்திருக்கிறது; இப்போது அவன் தேவனிடமும், அவருடைய பரலோக, ஆவிக்குரிய இராஜ்யத்திடமும் திரும்பவேண்டும் (ஒப்பீடு Matthew 3:2, footnote 2). “…வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?இப்பொழுதே கோடரியானது மரங்களின் வேர் அருகே வைத்திருக்கிறது; ஆகையால், நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு அக்கினியிலே போடப்படும். மனந்திரும்புதலுக்கென்று நான் ஜலத்தினால் உங்களுக்கு ஞானஸ்நானங் கொடுக்கிறேன்; எனக்குப்பின் வருகிறவரோ என்னிலும் வல்லவராயிருக்கிறார், அவருடைய பாதரட்சைகளைச் சுமக்கிறதற்கு நான் பாத்திரன் அல்ல; அவர் பரிசுத்த ஆவியினாலும் அக்கினியினாலும் உங்களுக்கு ஞானஸ்நானம் கொடுப்பார்,” என்று யோவான் மக்களிடம் தொடர்ந்துகூறினான் (மத். 3:7, 10-11). மனந்திரும்புகிறவர்களை பரிசுத்த ஆவியானவரிலும், மனந்திரும்பாதவர்களை அக்கினிக்கடலிலும் கிறிஸ்து ஞானஸ்நானம்பண்ணுவார் என்று பாகுபாடின்றி எல்லா மக்களுக்கும் யோவான் அறிவித்தான். நீங்கள் நித்திய ஜீவனைப் பெற்று, அவருடைய இராஜ்யத்திற்குள் நுழைய பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுமாறு, இன்றே மனந்திரும்பி, கிறிஸ்துவில் விசுவாசம்வையுங்கள். இல்லாவிட்டால், கிறிஸ்து உங்களை அக்கினியில் ஞானஸ்நானம்பண்ணுவார் (ஒப்பீடு Matt. 3:11, footnote 1).
முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்புக்காக: Life-study of Matthew, Message 1.
ஒப்பீடுகள்: Life-study of Matthew, Messages 1; 4; 5; 7; Message 8, pp. 99–103; Messages 70–72;
Life-study of Mark, Message 13.