வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 7
✵பாடம் 01 – 08
✵பாடம் 09 – 18
கிறிஸ்து என்னும் நபர்
மனித-இரட்சகராகிய கிறிஸ்து
குறிக்கோள்: மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தை உடைய ஓர் உண்மையான, நேர்த்தியான, இயல்பான மனிதனாக நம் இரட்சகராகிய கிறிஸ்துவைப்பற்றிய லூக்காவின் கண்ணோட்டத்தை வழங்குவது.
பொருட்சுருக்கம்: பூமியில் வாழ்ந்ததிலேயே நேர்த்தியான, இயல்பான ஒரே மனிதனாக கர்த்தராகிய இயேசுவைப்பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை லூக்காவின் சுவிசேஷம் வழங்குகிறது. இப்படிப்பட்ட மனிதன் என்ற முறையில் அவர், மனித இனத்தின் இரட்சகராக இருக்கத் தகுதியுள்ளவராயிருக்கிறார். இயேசுவின் வாழ்க்கையைப்பற்றிய லூக்காவின் பதிவு, அவருடைய மனுஷீகத்தின் முழுமையினாலும் பரிபூரணத்தினாலும் நம்மைக் கவர்கிறது. கர்த்தராகிய இயேசு மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தின்படி வாழ்ந்தார். இப்பேர்ப்பட்ட மனிதன் என்ற முறையில், இயேசுவே மனித இனத்தின் இரட்சகராக இருக்கிறார்.
பின்புலம்: வாலிபர்கள் தங்கள் வாழ்க்கையின் இந்தக் கட்டத்தினிமித்தம், மனித வாழ்க்கையை எப்படி வாழ்வது என்று தங்களுக்குத் தெரியாததுபோல சிலவேளைகளில் உணரக்கூடும். மேலும், மனித வாழ்க்கை வெறுமனே பாடுகளும், தொல்லைகளும், பிரச்சனைகளுமான வாழ்க்கைதான் என்று அவர்கள் நினைப்பதால், சிலவேளைகளில், அவர்கள் வெறுமனே தேவனைப்போல அல்லது ஒரு தேவதூதனைப்போல இருக்க வாஞ்சிக்கக்கூடும். நிஜமான, இயல்பான, உண்மையான மனிதனாகிய கிறிஸ்துவும், மனித-இரட்சகரும்தான் அவர்களுடைய தேவை. ஒவ்வொரு சூழ்நிலையிலும், சுற்றுச்சூழலிலும் எப்படி மனித வாழ்க்கை வாழ்வது என்பது அவருக்குத் தெரியும். ஒரு மனிதன் என்ற முறையில், அவர் நம் சூழ்நிலைக்குள் நுழைந்து, நம் நபராக இருந்து, நம்மூலம் தம் வாழ்க்கையை வாழமுடியும்.
அதிகாரங்கள்: லூக்கா 1–24.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
முழு வேதாகமத்திற்கும் அற்புதமான மையமாகிய கிறிஸ்து பல அம்சங்களை உடைய, சகலத்தையும் உள்ளடக்கியவராக இருக்கிறார். சகலத்தையும் உள்ளடக்கிய இந்தக் கிறிஸ்துவின் நான்கு பிரதான அம்சங்களை சித்தரிக்க, புதிய ஏற்பாடு அதின் ஆரம்பத்தில் நான்கு வாழ்க்கைவரலாறுகளை வழங்குகிறது. இவர் பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்களின்படியான தேவனுடைய கிறிஸ்துவாகிய இராஜா, அதாவது, பரலோக இராஜ்யத்தை பூமிக்கு கொண்டுவருகிறவர் என்று மத்தேயுவின் சுவிசேஷம் சாட்சிபகர்கிறது. மாற்குவின் சுவிசேஷம் இவரை தேவனுடைய அடிமையாக, அதாவது, தேவனுக்காக உண்மையாய் உழைக்கிறவராக காண்பிக்கிறது. மாற்குவின் பதிவுதான் எல்லாவற்றையும்விட மிக எளிமையான பதிவாக இருக்கிறது, ஏனென்றால், ஓர் அடிமைக்கு விளாவாரியான பதிவு தேவையில்லை. பூமியில் வாழ்ந்ததிலேயே நேர்த்தியான, இயல்பான ஒரே மனிதனாக கிறிஸ்துவைப்பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை லூக்காவின் சுவிசேஷம் காண்பிக்கிறது; இதனால், இவரே மனித இனத்தின் இரட்சகராக இருக்கிறார். யோவானின் சுவிசேஷம், தேவனுடைய மக்களுக்கு ஜீவனாகிய தேவனுடைய குமாரனாக, அதாவது, சாட்சாத்து தேவனாகவே இவரை திரைநீக்கிக் காண்பிக்கிறது. (Life-study of Luke, Message 9, pp. 73–74). இங்கே, லூக்காவின் சுவிசேஷத்தில், பரிபூரணமான, மிகச்சிறந்த மனிதனாக கிறிஸ்துவைப்பற்றிய ஓர் அற்புதமான சித்திரத்தை நாம் பார்க்கிறோம்.
I. கர்த்தராகிய இயேசு மனித சாராம்சத்தோடும், மனித சுபாவத்தோடும் கருவாகி, பிறந்த ஓர் உண்மையான, நேர்த்தியான, இயல்பான மனிதனாக இருந்தார்
மனித-இரட்சகர் நிஜமான மனித சுபாவத்தை உடைய ஓர் உண்மையான மனிதனாக இருக்கிறார். அவர் மனித சாராம்சத்தோடும், மனித சுபாவத்தோடும் கருவாகி, பிறந்தார். அது மட்டுமல்ல, வாழ்ந்த மனிதர்களிலேயே நேர்த்தியான, இயல்பான ஒரே மனிதனும் கர்த்தராகிய இயேசு மட்டும்தான். அவர் பரிபூரணமான மனித நற்பண்புகளைக் கொண்டிருந்தார். ஒரு மனிதன் என்ற முறையில், மனித-இரட்சகர் உண்மையானவராகவும், நிஜமானவராகவும் இருக்கிறார்; அவர் ஒரு நிஜமான மனிதனாக இருந்தார். மேலும், கர்த்தராகிய இயேசு நேர்த்தியான, இயல்பான மனிதனாகவும் இருந்தார், அதாவது, முழுவதும் நேர்த்தியான, இயல்பான மனித வாழ்க்கை வாழ்ந்த ஒரே மனிதனாகவும் இருந்தார்.
A. இயேசு, ஒரு மனித கன்னிகையின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியானவரால் கருவாகி, ஓர் உண்மையான மனிதனாகப் பிறந்தார்—லூக். 1:26-35; 2:1-20
கர்த்தராகிய இயேசு, ஒரு மனித கன்னிகையின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியானவரால் கருவாகி, ஓர் உண்மையான மனிதனாகப் பிறந்தார். ஓர் உண்மையான மனிதனாக ஒரு மனித கன்னிகையின் கர்ப்பத்தில் பரிசுத்த ஆவியானவரால் கர்த்தர் கருவானதை லூக்கா 1 விவரிக்கிறது. அவருடைய பிறப்பையும், அவருடைய பிள்ளைப்பருவத்திற்குரிய அநேக சம்பவங்களையும் லூக்கா 2 விவரிக்கிறது. கர்த்தராகிய இயேசு நிஜமான, உண்மையான, நேர்த்தியான, பரிபூரணமான மனிதனாக இருந்தார் என்பதற்கு பலமான நிரூபணங்களாக இந்த சம்பவங்களை லூக்கா வழங்குகிறான். கர்த்தராகிய இயேசு தேவனுடைய நியமனத்தின் பிரமாணத்தை நிறைவேற்ற எட்டாம் நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டதைப்பற்றிய பதிவும், மனித வாழ்வின் இயற்கையான பிரமாணத்தின்படி அவர் வளர்ந்ததும், அவர் தம் மனித பெற்றோருக்குக் கீழ்ப்படிந்திருந்ததும் அவர் ஒரு நேர்த்தியான, உண்மையான மனிதனாக இருந்தார் என்பதற்கு தெளிவான, பலமான நிரூபணமாக இருக்கின்றன. (I.A.-வின் கீழ் உள்ள இந்தக் குறிப்புகள் யாவும் இப்பகுதியில் பாடம் 14 முதல் 16 வரை இன்னும் அதிக விளாவாரியாக விவரிக்கப்படும்.)
- தேவன் மனிதனை சிருஷ்டித்ததிலுள்ள பிரமாணத்தின்படி, இயேசு தம் தாயின் கர்ப்பத்தில் ஒன்பது மாதங்கள் வளர்ச்சியடைந்து, ஒரு மனித குழந்தையாகப் பிறந்தார்—லூக். 2:6-7
- இயேசு ஆபிரகாமின் சட்டப்பூர்வமான சந்ததியாக இருக்கும்படி, தேவனுடைய நியமனத்தின் பிரமாணத்தை நிறைவேற்ற எட்டாம் நாளில் விருத்தசேதனம்பண்ணப்பட்டார்—லூக். 2:21-24; ஆதி. 18:9-14; 12:3; கலா. 3:8, 14
- ஒரு சிறுவனாக இயேசு தம் மனித பெற்றோருக்குக் கீழ்ப்பட்டு, மனித வாழ்விற்குரிய பிரமாணத்தின்படி வளர்ந்தார்—லூக். 2:40-52
B. இயேசு நேர்த்தியான, இயல்பான மனிதன் என்பதை நிரூபிக்க, லூக்கா இந்த மனிதனின் வாழ்க்கைவரலாறை வழங்கி, இவர் மனித இனத்தின் இரட்சகராக இருக்கத் தகுதியுள்ளவர் என்று சாட்சிபகர்கிறது—லூக். 3:23-38
மனித-இரட்சகரைப்பற்றிய சுவிசேஷமாகிய லூக்காவுடைய சுவிசேஷத்தின் வம்சவரலாறு மனிதனிடமிருந்து தொடங்கி தேவனிடம் பின்னோக்கிச் செல்கிறது (வச. 23, 38). இந்த சுவிசேஷம் அவருடைய மனுஷீக-தெய்வீக அந்தஸ்தை உறுதிப்படுத்த அவருடைய மனுஷீகத்தை வலியுறுத்துகிறது.பூமியில் வாழ்ந்ததிலேயே நேர்த்தியான, இயல்பான ஒரே மனிதனாக கிறிஸ்துவைப்பற்றிய ஒரு முழுமையான சித்திரத்தை லூக்காவின் சுவிசேஷம் வழங்குகிறது; அதனால், இவரே மனித இனத்தின் இரட்சகராக இருக்கிறார்.நான்கு சுவிசேஷங்களில், மத்தேயுவிலும் லூக்காவிலும் வம்சவரலாறுகளைப்பற்றிய பதிவு இருக்கிறது; மாற்குவிலும் யோவானிலும் இல்லை. இயேசுவே பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட தேவனுடைய கிறிஸ்துவாகிய இராஜா என்று சாட்சியளிக்க, மத்தேயு இந்த இராஜாவின் முன்னோரையும் அந்தஸ்தையும் நமக்குக் காண்பித்து, இவர் தாவீதின் சிங்காசனத்திற்கு தகுந்த வாரிசாக இருக்கிறார் என்பதை நிரூபிக்கவேண்டியிருக்கிறது. இயேசு ஒரு நேர்த்தியான, இயல்பான மனிதர் என்பதை நிரூபிக்க, லூக்கா இந்த மனிதரின் தலைமுறைகளைக் காண்பித்து, இவர் மனித இனத்தின் இரட்சகராக இருக்கத் தகுதியுள்ளவராயிருக்கிறார் என்று சான்றளிக்கவேண்டியிருக்கிறது. ஓர் அடிமையைப்பற்றிய பதிவுக்கு, மாற்கு அவருடைய வம்சத்தை நமக்கு சொல்ல தேவையில்லை. இயேசு தேவனாகவே இருக்கிறார் என்பதை திரைநீக்கிக் காண்பிக்க, யோவானும் ஒரு மனித வம்சவரலாறை நமக்கு அளிக்க தேவையில்லை. அதற்கு மாறாக, அவர் தேவனுடைய வார்த்தையாக, ஆதியில் சாட்சாத்து தேவனாகவே இருக்கிறார் என்று யோவான் அறிவிக்கிறது.3:23-38ல், மனித-இரட்சகரின் வம்சவரலாறு இயேசுவிலிருந்து ஆதாம்வரை பின்னோக்கிச் செல்கிறது.லூக்கா இயேசுவின் வம்சவரலாறைக் கூறுவதின்மூலம், அவர் மனித இனத்தின் இரட்சகராக இருக்கும்படி ஒரு நேர்த்தியான மனிதராக இருக்கிறார் என்பதை நிரூபிக்க, மனித இனத்தின் முதலாம் தலைமுறையாகிய ஆதாம்வரை பின்னோக்கிச் செல்கிறான் (Life-study of Luke, Message 9, p. 74).
C. கர்த்தராகிய இயேசு தெய்வீகமும் மனுஷீகமும் ஆகிய இரண்டையும் உடைய தேவ-மனிதனாக இருக்கிறார்
கர்த்தராகிய இயேசு தெய்வீக சாராம்சமும் மனுஷீக சாராம்சமும் ஆகிய இரண்டையும் உடைய, தெய்வீக சுபாவமும் மனுஷீக சுபாவமும் ஆகிய இரண்டையும் உடைய, தேவ-மனிதனாக இருக்கிறார். அவரில், இவ்விரண்டு சாராம்சங்களும் ஒன்றாகக் கலந்திருக்கின்றன. தேவனை உள்ளடக்கிக்கொண்டு, அவரை வெளிக்காட்ட, அவரிடம் மனித சுபாவம் அதின் நற்பண்புகளோடுகூட இருந்தது. கர்த்தராகிய இயேசு மனித-இரட்சகராயிருக்கிறார் என்பதை நாம் பார்க்கவேண்டும். மனித-இரட்சகர் என்ற முறையில், அவர் தெய்வீக சாராம்சத்துடன் பரிசுத்த ஆவியானவரால் கருவானார்.மனிதனை வந்தடைகிற தேவனே பரிசுத்த ஆவியானவர்.ஒரு குறிப்பிட்ட சாரப்பொருளின் உள்ளார்ந்த ஆக்கக்கூறுதான் சாராம்சம். மனித-இரட்சகர் தெய்வீக சுபாவத்தோடு மட்டுமல்ல, தெய்வீக சாராம்சத்தோடும் பரிசுத்த ஆவியானவரால் கருவானார்.மனித-இரட்சகர் மனித சாராம்சத்தோடு ஒரு மனித கன்னிகையினாலும் பிறந்தார். மரியாள் எனப்பட்ட ஒரு கன்னிகை, இயேசு என்ற பெயருள்ள ஒரு குமாரனை தன் கர்ப்பத்தில் கருத்தரித்து, பெற்றெடுத்தாள் என்று லூக்கா 1:27, 31 ஆகியவைகளில் நாம் பார்க்கிறோம். மனித-இரட்சகர் தெய்வீக சாராம்சத்தோடு பரிசுத்த ஆவியானவரால் கருவாகி, மனித சாராம்சத்தோடு ஒரு மனித கன்னிகையினால் பிறந்ததால், தெய்வீக சாராம்சம், மனுஷீக சாராம்சம் ஆகிய இரண்டு சாராம்சங்களும் அவரிடம் இருக்கின்றன. அவரில் மனித சாராம்சத்துடன் தெய்வீக சாராம்சத்தின் கலந்திணைதல் காணப்படுகிறது (Life-study of Luke, Message 1, pp. 4–5). (இந்த விஷயம், இப்பகுதியின் 11-ஆம் பாடத்தில் இன்னும் அதிக விவரமாய் பேசப்படும்.)
II. கர்த்தராகிய இயேசு மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தின்படி வாழ்ந்தார்
இங்கு, “ஒழுக்கம்” என்ற வார்த்தை, பாரம்பரிய அர்த்தத்தின்படி பயன்படுத்தப்படவில்லை. மாறாக, இது மிகுந்த நேர்த்தியான மனித வாழ்க்கையைக் குறிக்கிறது, அதாவது, தேவன் கோருகிறதும், மனிதன் அடையவேண்டுமென்று தேவன் உத்தேசித்ததுமான வாழ்க்கைத் தரத்தைக் குறிக்கிறது. கர்த்தராகிய இயேசுவே மிகச்சிறந்த மனிதனாக இருந்தார், நிஜமான ஒரே மனிதனாக இருந்தார், வாழ்ந்த மனிதர்களிலேயே மெய்யான, நேர்த்தியான ஒரே மனிதனாக இருந்தார். மனித நற்பண்புகளில் தெய்வீக குணாம்சங்கள் வெளிக்காட்டப்பட்ட வாழ்க்கையை அவர் வாழ்ந்தார் என்பதே, அவர் மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தின்படி வாழ்ந்தார் என்பதின் அர்த்தமாகும். இந்த ஒழுக்கம், தெய்வீக குணாம்சங்களால் மனித நற்பண்புகள் பலப்படுத்தப்பட்டு, செறியூட்டப்படுவதைப்பற்றிய விஷயமாகும் (Life-study of Luke, Message 10, p. 86). மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தின்படி கர்த்தர் வாழ்ந்த வாழ்க்கை, இப்பகுதியின் 17, 18 ஆகிய பாடங்களில் இன்னும் அதிக விவரமாய் பேசப்படும்.
A. கர்த்தராகிய இயேசு, தெய்வீக குணாம்சங்களைக்கொண்டு பலப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்ட தம் மனித நற்பண்புகளால் மனித வாழ்க்கையில் தேவனை வெளிக்காட்டினார்
தேவனை உள்ளடக்கிக்கொண்டு, அவரை வெளிக்காட்டும்படி அவர் ஒரு பாத்திரமாக மனிதனை சிருஷ்டித்தார். தேவன் சிருஷ்டித்த மனிதனிடம் தேவனுடைய தெய்வீக குணாம்சங்களுக்கு ஒத்த மனித நற்பண்புகள் இருந்தன (இது 18-ஆம் பாடத்தில் இன்னும் அதிக விவரமாய் பேசப்பட்டுள்ளது). மனித நற்பண்புகள் ஒரு கையுறையைப்போல் இருக்கின்றன; தெய்வீக குணாம்சங்கள் இந்த நற்பண்புகளின் உள்ளடக்கமாகவும் நிஜமாகவும் உள்ள கையைப்போல் இருக்கின்றன. அன்பு, மனதுருக்கம், பரிவு, மென்மை, தைரியம், பொறுப்பு போன்ற, மனிதனிடமுள்ள தேவன்-சிருஷ்டித்த மனித நற்பண்புகள் அன்பு, ஒளி, பரிசுத்தம், நீதி, உண்மை போன்ற தெய்வீக குணாம்சங்களுக்கு ஒத்திருக்கின்றன. கர்த்தராகிய இயேசுவின் மனித நற்பண்புகள் தெய்வீக குணாம்சங்களைக்கொண்டு பலப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டன. இதனால், அவர் மனுஷீகத்தில் தேவனை வெளிக்காட்டுகிற வாழ்க்கை வாழ்ந்தார்.
B. கர்த்தராகிய இயேசு, ஆதிமுதல் தேவன் உத்தேசித்திருந்த மனிதனாக இருந்தார்—ஆதி. 1:26; 2:7-9
C. கர்த்தராகிய இயேசு, இந்த பூமியில் வாழ்ந்ததிலேயே நேர்த்தியான, இயல்பான ஒரே மனிதனாக இருந்தார்
III. இப்பேர்ப்பட்ட ஒரு மனிதனாக, இயேசுகிறிஸ்து தம் தெய்வீக குணாம்சங்களோடுகூடிய தம் மனித நற்பண்புகளில் மனித இனத்திற்கு ஊழியஞ்செய்கிற, மனித இனத்தின் இரட்சகராக இருக்கிறார்
கர்த்தர் தம் தெய்வீக குணாம்சங்களோடுகூடிய தம் மனித நற்பண்புகளில் மனித இனத்திற்கு ஊழியஞ்செய்தார். நம்முடைய இரட்சகர் ஓர் உண்மையான மனிதனாக இருந்தார். கர்த்தராகிய இயேசு தம் மனித நற்பண்புகளில் தேவனுடைய தெய்வீக குணாம்சங்களை முழுவதும் வெளிக்காட்டிய மனித வாழ்க்கை வாழ்ந்ததின்மூலம், அவர் பாவமில்லா, பரிபூரண மனிதனாகவும் இருந்தார். பாவமில்லா, பரிபூரண மனிதனாகவும் இருந்த ஓர் உண்மையான மனிதன் என்ற முறையில்தான், அவர் நம் பதிலீடாக நமக்காக மரிக்கத் தகுதியுள்ளவராயிருந்தார். மேலும், மனித-இரட்சகராகிய கிறிஸ்துவைப்பற்றிய ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை லூக்காவின் சுவிசேஷம் காண்பிக்கிறது. தம் மனித நற்பண்புகளில் தெய்வீக குணாம்சங்களை வெளிக்காட்டுகிற மனிதன் என்ற முறையில், அவர் அவ்வளவு நேர்த்தியான, இயல்பான, பரிபூரணமான, நேர்மையான மனிதராக இருந்தும், மென்மையான, மனதுருக்கமுள்ள மனிதராகவும் இருந்தார். அவருடைய மனித நற்பண்புகள் பாவிகளாகிய நம்முடைய விழுந்துபோன, புறக்கணிக்கப்பட்ட, தாழ்வான நிலையில்கூட, அவர் நம்மை வந்தடையும்படிச்செய்தன. கர்த்தராகிய இயேசு பாவிகளைத் தொடர்புகொண்டபோது, தம் இரட்சிக்கும் கிருபையிலுள்ள தேவனை விழுந்துபோன மனித இனத்திற்கு அவர் வெளிப்படுத்தினார். தெய்வீக குணாம்சங்களால் பலப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்ட அவருடைய நற்பண்புநிறைந்த வாழ்க்கை, மிகவும் விழுந்துபோன பாவிகள்கூட தேவனைக் கிருபையாக அறிந்துகொள்ளும்படிச்செய்தது.
A. வாழ்ந்த மனிதர்களிலேயே உண்மையான, பரிபூரணமான ஒரே மனிதன் என்ற முறையில், கர்த்தராகிய இயேசு மனிதனுடைய இரட்சகராக மரிப்பதற்குத் தன்னிகரற்ற தகுதியுள்ளவராயிருந்தார்
B. மிகச்சிறந்த, மிக நேர்த்தியான மனிதன் என்ற முறையில், கர்த்தராகிய இயேசு, விழுந்துபோன பாவிகளை வந்தடைந்து, அவர்களுக்கு ஊழியஞ்செய்யமுடிந்தது
C.கர்த்தருடைய வாழ்க்கை, விழுந்துபோன மனித இனத்திற்கு, தம் இரட்சிக்கும் கிருபையிலுள்ள தேவனை வெளிப்படுத்தியது
மனித-இரட்சகராகிய கிறிஸ்துவைப்பற்றிய ஒரு குறிப்பிட்ட சித்திரத்தை லூக்காவின் சுவிசேஷம் காண்பிக்கிறது. லூக்கா 7:36-50-ல், ஒரு பரிசேயனுடைய வீட்டில், பாவியாகிய ஒரு பெண்ணை கர்த்தர் தொடர்புகொண்டதைப் பரிசிலீத்துப்பாருங்கள். பரிவு, மனதுருக்கம், தயவு, பொறுமை, இரக்கம், புரிந்துகொள்ளுதல், அன்பு, ஞானம் ஆகிய கர்த்தருடைய நற்பண்புகள் யாவும் இங்கே காட்சியாக்கப்படுகின்றன. இந்த நற்பண்புகள் அன்பு, மன்னிப்பு, சமாதானம், இரக்கம் ஆகிய தெய்வீக குணாம்சங்களைத் தங்கள் உள்ளடக்கமாகக்கொண்டு நிறைந்திருக்கின்றன. பாவிகளைத் தொடர்புகொள்கிற இப்பேர்ப்பட்ட நபராக கர்த்தர் அவர்களுக்கு தேவனுடைய இரட்சிக்கும் கிருபையை வெளிப்படுத்தி, அதை அவர்களுக்கு வழங்கமுடிந்தது. கர்த்தர் சிலுவையில் திருடனை இரட்சிப்பதைப்பற்றிய சம்பவத்தைக்கூட (லூக். 23:32-43), அல்லது நல்ல சமாரியனும் (லூக். 10:25-37) மேய்ப்பனுமாகிய (லூக். 15:3-7) கர்த்தரைப்பற்றிய உவமைகளைக்கூட பரிசீலித்துப்பாருங்கள். இவையெல்லாவற்றிலும், கர்த்தர் தம் தெய்வீக குணாம்சங்களோடுகூடிய தம் மனித நற்பண்புகளில் தேவனுடைய இரட்சிக்கும் கிருபையை பாவிகளுக்கு வழங்குவதை நாம் பார்க்கிறோம். (தெய்வீக குணாம்சங்களால் பலப்படுத்தப்பட்டு, உயர்த்தப்பட்ட கர்த்தருடைய மனித நற்பண்புகளைச் சுட்டிக்காட்டுவதற்கு, இந்த சம்பவங்களைப் பேசுவதோ அல்லது வாலிபர்களுடன் சேர்ந்து இவைகளை வாசிப்பதோ உதவியாக இருக்கக்கூடும். Life-study of Luke, Messages 2, 11 ஆகியவைகளையும் பாருங்கள்.)
IV. தெய்வீக குணாம்சங்களால் பலப்படுத்தப்பட்டு, செறியூட்டப்பட்ட மனித நற்பண்புகளைக்கொண்டுள்ள கிறிஸ்து இன்று நமக்குள் வாழ்கிறார்
இன்று நமக்குள் வாழ்கிற கிறிஸ்து, தெய்வீக குணாம்சங்களால் பலப்படுத்தப்பட்டு, செறியூட்டப்பட்ட மனித நற்பண்புகளை உடையவராகவே இருக்கிறார். அவர் பூமியில் இருந்தபோது, மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தின்படி அவர் வாழ்ந்தார். இப்பேர்ப்பட்ட வாழ்க்கை தெய்வீக குணாம்சங்களும் மனித நற்பண்புகளும் சேர்ந்த ஒரு தொகுப்பாக இருந்தது. நிச்சயமாக, கர்த்தராகிய இயேசு இப்படிப்பட்ட வாழ்க்கையை சீடர்களுக்குவெளியேதான் வாழ்ந்தார். ஆனால், அவர் உயிர்த்தெழுந்த நேரம்முதல், இப்படிப்பட்ட வாழ்க்கையை அவர் விசுவாசிகளுக்குள் வாழ்ந்துவருகிறார். மிக உயர்ந்த ஒழுக்கத் தரத்தின்படியுள்ள வாழ்க்கையை, அதாவது, தெய்வீக குணாம்சங்களும் மனித நற்பண்புகளும் சேர்ந்த ஒரு தொகுப்பாகிய வாழ்க்கையை மனித-இரட்சகர் இன்றும் நமக்குள் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் இதன் அர்த்தம். நாம் இதைப் பார்த்தால், “இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்,” என்று பவுலோடு சேர்ந்து நாமும் சொல்லுவோம் (கலா. 2:20). உங்களுக்குள் வாழ்கிற கிறிஸ்து தெய்வீக குணாம்சங்களாலும் மனித நற்பண்புகளாலுமான தொகுப்பாக இருக்கிறார் என்பதை நீங்கள் எப்போதாவது உணர்ந்திருக்கிறீர்களா? அவர் பூமியில் வாழ்ந்த வாழ்க்கையை இப்போது அவர் நமக்குள் வாழும்படி நாடுகிறார். (Life-study of Luke, Message 2, pp. 13–14). Christ as the Reality, Chapters 6, 13, 16 ஆகியவைகளையும் பாருங்கள்.
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: லூக்கா 7:36-50ஐ வாசித்து, அதில் ஒரு பரிசேயனுடைய வீட்டில், பாவியாகிய ஒரு பெண்ணை கர்த்தர் மன்னித்ததைப் பரிசீலித்து, கர்த்தருடைய மனித நற்பண்புகளையும், அவைகளை பலப்படுத்தி, உயர்த்திய தெய்வீக குணாம்சங்களையும் எடுத்துக்காட்ட கொஞ்சம் நேரம் செலவிடுங்கள். விழுந்துபோன மனிதர்களை வந்தடைந்து, தேவனுடைய இரட்சிக்கும் கிருபையை அவர்களுக்கு வழங்கும்படி கர்த்தர் மனித-இரட்சகராக இருப்பதின் இனிமையை வாலிபர்களுக்கு காண்பிக்க இந்த சம்பவத்தைப் பயன்படுத்துங்கள். லூக்கா 7:36-50ல், தன்னுடன் உணவருந்தும்படி கர்த்தராகிய இயேசுவை அழைத்த சீமோன் என்ற ஒரு பரிசேயனுடைய வீட்டிற்குள் பாவியாகிய ஒரு பெண் வந்தாள். இந்தப் பெண்ணை சீமோன் அற்பமாய் எண்ணினான். ஆயினும், பாவியாகிய இந்தப் பெண்ணை கர்த்தர் ஏற்றுக்கொண்டு, அவளை மன்னித்தார். “இந்த சம்பவத்தைப்பற்றிய பதிவை நாம் வாசிக்கும்போது, மனித-இரட்சகராகிய இயேசு தம் மனித நற்பண்புகளின்படி நடந்துகொண்டார் என்று நாம் பார்க்கிறோம். அவள் ‘அவருடைய பாதங்களைத் தன் கண்ணீரினால் நனைத்து, தன் தலைமயிரினால் துடைத்து, அவருடைய பாதங்களை முத்தஞ்செய்து, பரிமளதைலத்தைப் பூசியபோதுகூட,’ அவர் அந்தப் பாவியாகிய பெண்ணால் கலக்கமடையவேயில்லை (வ. 38). நாம் கர்த்தராகிய இயேசுவாக இருந்திருந்தால், அநேகமாக, நாம் இந்தப் பெண்ணின் நடத்தையினால் தொந்தரவடைந்திருப்போம். ‘நான் இந்த வீட்டிற்கு விருந்தாளியாக வந்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியாதா? நான் உணவருந்திக்கொண்டிருக்கிறேன் என்பது உனக்குத் தெரியவில்லையா?’ என்று நாம் அவளிடம் சொல்லியிருக்கக்கூடும். எனினும், அப்படி நடந்துகொள்வது நேர்த்தியான மனித நற்பண்புகளின்படி நடந்துகொள்ளத் தவறுவதாகும். இந்த சூழ்நிலையில், இந்தப் பெண் தன் பாவங்களைக்குறித்து உணர்வடைந்திருக்கிறாள் என்பதை மனித-இரட்சகர் உணர்ந்து, அவர் மிக தயவாகவும், பொறுமையாகவும் இருந்தார். அவர் இரக்கமாகவும் இருந்தார். மக்கள் அடிக்கடி அன்பைப்பற்றிப் பேசுகிறார்கள், ஆனால் அரிதாகவே இரக்கத்தைப்பற்றிப் பேசுகிறார்கள். எனினும், இரக்கம் அன்பைவிட அதிக மென்மையானதாயிருக்கிறது. இரக்கமாயிருப்பதென்றால், மற்றவர்களுடைய ஏழ்மையான நிலைமையிலும், தாழ்வான நிலையிலும் அவர்களிடம் பரிவாயிருப்பதாகும். கர்த்தராகிய இயேசு இந்தப் பெண்ணிடம் தயவாகவும், பொறுமையாகவும், இரக்கமாகவும் இருந்ததோடுகூட, அவர் அவளைப் புரிந்துகொள்ளவும்செய்தார். பலவேளைகளில் நாம் மற்றவர்களைப் புரிந்துகொள்ளத் தவறுகிறோம், ஆனால், இந்தப் பெண்ணைப்பற்றிய விஷயத்தில், கர்த்தராகிய இயேசு அதிகமாய் புரிந்துகொள்கிறவராக இருந்தார். மேலும், அவர் ஞானமும் அன்பும் உள்ளவராகவும் இருந்தார்” (Lifestudy of Luke, Message 11, p. 90). இங்கு, தெய்வீக மன்னிப்பிலும் (லூக். 7:47-48), சமாதானம் அளிப்பதிலும் (லூக். 7:50) கர்த்தருடைய தெய்வீக குணாம்சங்கள் வெளிக்காட்டப்படுகின்றன. பாவங்களை மன்னிக்கத் தகுதியுள்ள ஒரேவொருவர் தேவன் மட்டும்தான். எனவே, மன்னிப்பு என்பது ஒரு தெய்வீக குணாம்சமாகும். சமாதானம் அளிப்பதும் ஒரு தெய்வீக குணாம்சம்தான், ஏனென்றால், தேவனால் மட்டுமே உள்ளான சமாதானத்தை அளிக்கமுடியும். தம் தெய்வீக குணாம்சங்களுடன் தம் மனித நற்பண்புகளில் நமக்கு ஊழியஞ்செய்கிற, நம்முடைய பிரியமான கர்த்தராகிய இயேசு இப்பேர்ப்பட்ட இனிமையான, நேசிக்கப்படத்தக்க, அணுகத்தக்க மனித-இரட்சகராக இருக்கிறார்.
சுவிசேஷ செயலாக்கம்: இன்று மனிதனின் வாழ்க்கை, பரிதாபப்படும்வகையில் தாழ்வாக இருக்கிறது. பள்ளிகளில் கற்பிக்கப்படுகிற ஒழுக்கத்தின் தரமும், சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிற ஒழுக்கத்தின் தரமும் வேகமாய் மதிப்புகுறைந்துவருகிறது. நேர்த்தியான ஒழுக்கமும், தூய்மையான உள்நோக்கங்களும், பலமான குணமும், மற்றவர்களை நேசிக்கிற இருதயமும், பேச்சில் உண்மையும் உள்ள ஒரு நபரை இன்றைய சமுதாயத்தில் காண்பது (அசாத்தியமில்லாவிட்டாலுங்கூட) கடினம்தான். உங்கள் பெற்றோரையும், நண்பர்களையும், நீங்கள் நேசிப்பதாக சொல்லிக்கொள்கிறவர்களையும்பொருத்தவரை, உங்களையும் உங்கள் இருதயத்தையும் நீங்கள் பரிசீலித்துப்பாருங்கள். நிஜமாகவே நம் இருதயத்தில் என்ன இருக்கிறது என்பது, நம் வாய் என்ன பேசுகிறதோ, அதினால் வெளியரங்கமாகிறது என்று வேதாகமம் கூறுகிறது (மத். 12:34). தேவனால் நமக்கு நித்திய ஜீவனைத் தரமுடியும் என்று நமக்குத் தெரியும், ஆனால், நாம் ஏழ்மையான நம் வாழ்க்கைமுறையிலிருந்து எப்படி இரட்சிக்கப்படமுடியும்? மனிதமாம்சமாகுதலில், வரம்பற்ற தேவன் வரம்புள்ள ஒரு மனிதனாக மாறி, தம் மனுஷீகத்தில் நறுமணமுள்ள தம் நற்பண்புகளின்மூலம் தம் ஐசுவரியமான குணாம்சங்களில் அபரிமிதமான தேவனை வெளிக்காட்டினார். மற்றவர்களை தம்மிடம் கவர்ந்திழுக்கக்கூடிய எந்தவொரு புறம்பான அழகும் அவரிடம் இல்லை (ஏசா. 53:2-3), எனினும், தெய்வீகமாய் செறியூட்டப்பட்ட அவருடைய மனுஷீகம் மக்களை ஈர்த்து, உடனே எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவரைப் பின்தொடரும்படி அவர்களை வற்புறுத்தியது (மத். 4:21-22). நாம் பெற்றுக்கொள்வதற்கு கிறிஸ்துவின் மனித வாழ்க்கை எளிதாய் கிடைக்கிறது என்பதுதான் இன்றைய நற்செய்தி! இப்பேர்ப்பட்ட அற்புதமானவர் ஜீவன்தரும் ஆவியானவராக மாறியிருக்கிறார் (1 கொரி. 15:45); அவரை நம் அனுதின வாழ்வின் ஊற்றாகப் பெற்றுக்கொள்ளமுடியும் (கலா. 2:20). இவ்வாறு, நாம்கூட மிக உயர்ந்த மட்டத்தில், அதாவது, மிக உயர்ந்த மனுஷீகத்தை வெளிக்காட்டுகிற மிக உயர்ந்த தரமுள்ள வாழ்க்கையை வாழமுடியும். முழுமையான தேவன் மட்டுமல்லாமல், பரிபூரணமான மனிதனாகவும் இருக்கிற இவரைப் பெற்றுக்கொள்ளும்படி இப்போதே நீங்கள் முடிவுசெய்யலாம்.
முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்புக்காக: Life-study of Luke, Message 2; Message 10, pp. 84–87; Message 11, 89–92; Message 27, pp. 227–229.
ஒப்பீடுகள்: Life-study of Luke, Messages 1–2, 9–11; Message 15, p. 129; Message 25; Message 27, pp. 227–229; Messages 57–61; Christ as the Reality, Chapter 6, pp. 61–63; Chapter 13, pp. 131–136; Chapter 16, pp. 153–159.