வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 7
✵பாடம் 01 – 08
✵பாடம் 09 – 18
கிறிஸ்து என்னும் நபர்
தேவ-இரட்சகராகிய கிறிஸ்து
குறிக்கோள்: கிறிஸ்து தம் மக்களுக்கு ஜீவனாக இருக்கும்படி தேவ-இரட்சகராக வெளிப்படுத்தப்படுகிறார் என்பதுதான் யோவானுடைய சுவிசேஷத்தின் தனித்துவமான குணாதிசயம் என்பதைக் காண்பிப்பது.
பொருட்சுருக்கம்: யோவானின் சுவிசேஷம் கிறிஸ்துவை தேவ-இரட்சகராக வெளிப்படுத்துகிறது. யோவானில், கிறிஸ்து கடந்த நித்தியத்திலிருந்த தேவனாகவே காண்பிக்கப்படுகிறார், இவர் மனிதனை தம் நித்திய மறுபாதியாகவும் வெளியாக்கமாகவும் தம்மோடு நித்தியத்திற்குள் கொண்டுவர நித்தியத்தைவிட்டு காலத்திற்குள் வந்தார். இதை நிறைவேற்ற, தேவன் மனிதனுக்கு ஜீவனாக மாறவேண்டியிருந்தது. தேவன் இதைச் செய்த வழிமுறையை யோவானின் சுவிசேஷம் வெளிப்படுத்துகிறது. முதலில், தேவன் மாம்சமானார். இரண்டாவதாக, தேவன் மரணத்தினூடாய் கடந்துசென்று, உயிர்த்தெழுதலில் ஆவியானவராக தம்மையே தம் விசுவாசிகளுக்குள் வழங்கினார். இவ்விரண்டு “ஆகுதல்களும்” ஒரு கூட்டு, ஜீவாதார வஸ்துவை உற்பத்திசெய்தன, இது தேவனுடைய நித்திய வாஞ்சையை நிறைவாக்கி, திருப்திப்படுத்துகிறது. இப்படிப்பட்ட தேவ-இரட்சகர் மனிதனுக்குள் தம்மை ஜீவனாக பகிர்ந்தளிப்பதின்மூலம் ஒவ்வொரு மனிதனுடைய தேவையையும் நிறைவாக்குகிறார்.
பின்புலம்: பசி, தாகம், பலவீனம், வியாதி, கட்டு, மரணம் ஆகிய யாவும் மனித ஜீவன் எதிர்கொள்கிற குறைபாடுகளாகவும், வரம்புகளாகவும், பாடுகளாகவும் இருக்கின்றன. ஆனால், நிஜமான ஜீவன் ஒவ்வொரு மனித தேவையையும் நிறைவாக்கமுடியும். ஒரு மனிதனாக மாறி, தம் ஜீவனை வெளியிடும்படி மரித்து, உயிர்த்தெழுதலில் ஆவியானவராக மாறி, தம்மையே நமக்குள் சுவாசமாக ஊதிய, வழிமுறையினூடாய் கடந்துசென்ற மூவொரு தேவனே இந்த ஜீவன். இந்த ஜீவன் மனிதனுடைய தேவையை நிறைவாக்குகிறது, தேவனுடைய இலக்கை நிறைவேற்றுகிறது. தேவ-இரட்சகராகிய கிறிஸ்துவே இந்த ஜீவன்.
அதிகாரங்கள்: யோவான் 1, 20.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
மத்தேயு, மாற்கு, லூக்கா ஆகியவை “ஒத்த சுவிசேஷங்கள்” என்று அழைக்கப்படுகின்றன, ஏனென்றால், (அவைகள் சித்தரிக்கிற கிறிஸ்துவின் அம்சத்திற்கேற்றபடி அவைகள் நிகழ்வுகளை வெவ்வேறு விதமாக வலியுறுத்தினாலும்) அவைகளுக்கிடையே ஒரே பொதுவான கண்ணோட்டம்தான் இருக்கிறது, அவைகள் எடுத்து எழுதுகிற பல நிகழ்வுகளுக்கு ஒரே ஊற்றுதான் இருக்கிறது. எனினும், யோவான் தேர்ந்தெடுக்கிற பல நிகழ்வுகள் மற்ற சுவிசேஷங்களில் காணப்படுவதில்லை, ஏனென்றால், மனிதனுக்கு ஜீவனாக வந்த மூவொரு தேவனாகவே அவன் கிறிஸ்துவைக் காண்பிக்கிறான். எனவேதான், யோவானின் சுவிசேஷம் மற்ற சுவிசேஷங்களைவிட அதிக ஆழமாகவும், அதிக பரம்புதிராகவும் இருக்கிறது. யோவானின் சுவிசேஷம்தான் கடைசியாக எழுதப்பட்ட புதிய ஏற்பாட்டுப் புத்தகமாயிருக்க அதிக சாத்தியமுள்ளது. கர்த்தர் அவனை அழைத்தபோது அவன் செய்துகொண்டிருந்த வேலை முன்னுரைத்ததின்படி, அவனுடைய ஊழியம் மெய்யாகவே “பழுதுபார்க்கும் ஊழியமாக” மாறியது (மத். 4:21). தவறான புரிந்துகொள்ளுதலும், துர் உபதேசமும் உள்ளே ஊர்ந்துவந்திருக்கச் சாத்தியமான, சத்தியத்திலுள்ள ஓட்டைகளை அவன் தன் ஊழியத்தில் பழுதுபார்த்தான். தேவனை ஜீவனாக அனுபவிப்பதினால் மட்டுமே தேவனுடைய குறிக்கோளும் நம்முடைய இரட்சிப்பும் நிறைவேற்றப்படமுடியும் என்பதை வலியுறுத்துவதின்மூலம் அவன் இதைச் செய்தான். ஜீவனைத்தவிர வேறெந்த காரியத்தை வலியுறுத்துவதும் “கிழிச்சல்களையும்” “ஓட்டைகளையும்” உண்டாக்குகிறது; ஜீவன் மட்டுமே எல்லா சூழ்நிலையையும் பழுதுபார்த்து, தேவனுடைய பொருளாட்சிக்கு நம்மைத் திரும்பக்கொண்டுவருகிறது. யோவானின் சுவிசேஷத்தில், மூவொரு தேவன் தம் நித்திய குறிக்கோளின் நிறைவேற்றத்திற்குள்ளாக மனிதனைக் கொண்டுவருமாறு ஜீவனாக மனிதனை வந்தடையும்படி பாய்ந்தோடுகிறார்.
I. யோவானின் சுவிசேஷம் கிறிஸ்துவை தேவ-இரட்சகராக வெளிப்படுத்துகிறது
A. தேவ-இரட்சகராகிய கிறிஸ்து மனிதனை தம்முடன் நித்தியத்திற்குள் கொண்டுவர தம் நித்திய குறிக்கோளை நிறைவேற்றுமாறு, நித்தியத்தைவிட்டு காலம் என்னும் பாலத்தில் அடியெடுத்துவைத்தார்
யோவானின் சுவிசேஷம், “ஆதியிலே…” என்று தொடங்குகிறது. ஆதியாகமம்கூட இந்த வார்த்தையுடன்தான் தொடங்குகிறது, ஆனால், ஆதியாகமத்தில், சிருஷ்டிப்பும் காலமும் தொடங்குவதை மட்டுமே இது குறிக்கிறது. யோவானின் சுவிசேஷம் ஆதியாகமத்தைவிட இன்னும் நம்மைப் பின்னோக்கிக் கொண்டுசெல்கிறது, ஏனென்றால், யோவானின் “ஆதி” கடந்த நித்தியத்தைக் குறிக்கிறது! கிறிஸ்து கடந்த நித்தியத்தில் தேவனோடு இருந்தார் என்றும், அவர் தேவனாக இருந்தார் என்றும் யோவான் 1:1 அறிவிக்கிறது. அதன்பின், தேவதூதர்கள் மனுஷகுமாரன்மீது இறங்குகிறவர்களாகவும் ஏறுகிறவர்களாகவும் இருப்பார்கள் என்ற கர்த்தருடைய அறிக்கையுடன் ஒன்றாம் அதிகாரம் முடிவடைகிறது. “தேவனுடைய வீடு” என்ற அர்த்தமுள்ள பெத்தேலில் யாக்கோபு கண்ட கனவை இது குறிப்பிடுகிறது (ஆதி. 28). இறுதியாக, வரப்போகிற நித்தியத்தில் தேவனும் மனிதனும் ஒன்றாக வசிக்கப்போகும் மெய்யான பெத்தேலாகிய புதிய எருசலேமாக மாற இன்னும் பல மனிதர்களை ஆதாயப்படுத்துவதின்மூலம் மனுஷகுமாரனாகிய கிறிஸ்து தனிப்பட்ட கிறிஸ்துவிலிருந்து கூட்டுக் கிறிஸ்துவாகப் பெரிதாக்கமடைவார். எனவே, இந்த சுவிசேஷத்தின் அறிமுக அதிகாரம், கடந்த நித்தியத்திலிருந்து வரப்போகிற நித்தியம்வரை கிறிஸ்துவைக் காண்பித்து, தேவனுடைய கண்ணோட்டத்தை நமக்குக் காண்பிக்கிறது. இப்படிப்பட்ட விதத்தில் தேவன் மனிதனை இரட்சிக்க “காலம் என்னும் பாலத்தில்” அவர் என்ன நிறைவேற்றவேண்டியிருக்கிறது என்பதை இந்த சுவிசேஷம் தொடர்ந்து விவரிக்கிறது.
B. தேவ-இரட்சகராகிய கிறிஸ்துவுக்கு வம்சவரலாறு இல்லை
தேவன் என்ற முறையில், கிறிஸ்துவுக்கு வம்சவரலாறு இல்லை, எனவே யோவானின் சுவிசேஷத்தில் வம்சவரலாறு இல்லை. கிறிஸ்து நம் இரட்சகராக இருக்கும்படி வந்த தேவனாகவே இருக்கிறார் என்று யோவான் எழுதுகிறான் என்பதற்கு இது இன்னொரு நிரூபணமாக இருக்கிறது.
C. தேவ-இரட்சகராகிய கிறிஸ்து மனிதனுக்கு தேவனை ஜீவனாக கொண்டுவருகிறார்
தேவன் தம் நித்திய இலக்கை நிறைவேற்ற, மனிதனுக்கு ஜீவனாக மாறவேண்டியிருந்தது. அவர் வெறுமனே தம் இயல்பான நிலையில் மனிதனை தம்முடன் நித்தியத்திற்குள் கொண்டுவரமுடியாது. இவ்விதமாக அவர் மனிதனை தம்முடன் கொண்டுவரமுடிந்தாலுங்கூட, மிகுந்த நெருக்கமான, மிகுந்த அந்நியோந்நியமான விதத்தில் மனிதனோடு சேர்ந்து வசிக்கவேண்டுமென்ற அவருடைய வாஞ்சையை இது நிறைவாக்காது. இப்படிப்பட்ட பரஸ்பரத்தில் அவரும் மனிதனும் சேர்ந்து வசிக்கக்கூடிய தம் நித்திய வசிப்பிடத்தை அடைவதற்கு, அவர் தம்மையே ஜீவனாக மனிதனுக்குள் வைக்கவேண்டியிருந்தது. தேவன் மனிதனுக்கு ஜீவனாக மாறிய வழிமுறையையும், இந்த ஜீவன் எப்படி மனிதனை தேவனுடைய நித்திய குறிக்கோளுக்கு மீட்டுத்திருப்புகிறது என்றும் யோவான் வெளிப்படுத்துகிறது.
II. தேவன் மனிதனுக்கு ஜீவனாக மாறிய வழிமுறையை யோவானின் சுவிசேஷம் வெளிப்படுத்துகிறது
ஜீவன் (கிரேக்கமொழியில், ஜோயீ, அதாவது சிருஷ்டிக்கப்படாத தேவ ஜீவன்) வேதாகமத்தின் வேறெந்த புத்தகத்தையும்விட அதிகமாக, யோவானில் முப்பத்தைந்து முறை குறிப்பிடப்பட்டிருக்கிறது. தாமே ஜீவன் என்பதை யோவானில்தான் கர்த்தர் அறிவிக்கிறார் (யோவான் 14:6). நாம் மறுபடிஜெநிப்பிக்கப்பட இந்த ஜீவனைப் பெறவேண்டும் என்றும் (யோவான் 3:6-7), வழிமுறையினூடாய் கடந்துசென்ற மூவொரு தேவனை நம் சுவாசமாகவும் (யோவான் 20:22), நம் உணவாகவும் பானமாகவும் (யோவான் 6:32-63) நாம் அனுபவித்துமகிழவேண்டும் என்றும்கூட யோவான் நமக்குச் சொல்லுகிறது, இவை யாவும் ஜீவனைப்பற்றிய விஷயங்களாகும். யோவான் மட்டும்தான் கர்த்தருடைய விலாவிலிருந்து பாய்ந்தோடிய இரத்தத்தையும் தண்ணீரையும்பற்றி கூறுகிறான் (யோவான் 19:34); சட்டரீதியாக நம்மை மீட்கிற கர்த்தருடைய இரத்தத்தை மட்டுமல்ல, சபையை உற்பத்திசெய்வதற்காக நாம் எப்படி ஜீவாதாரமாக இரட்சிக்கப்படுகிறோம் என்பதைக் குறிக்கிற தண்ணீரையும் அவன் வலியுறுத்துகிறான் (ஒப்பீடு, தீத்து 3:5; எபே. 5:25-27).
A. வார்த்தை மாம்சமானது—யோவான் 1:14
முதலாவது, நித்தியமாய் முன்பே இருந்த தேவன் காலத்திற்குள் அடியெடுத்துவைத்து, மாம்சமுள்ள ஒரு மனிதனாக மாறவேண்டியிருந்தது! மனிதனுக்கு ஜீவனாக மாற தேவன் எடுத்துக்கொண்ட வழிமுறையின் முதல் படி இதுதான். தேவனுடைய ஊனுருவாகிய கிறிஸ்துவுக்குள் ஒப்பற்ற, சிருஷ்டிக்கப்படாத, தெய்வீக ஜீவன் இருந்தது (யோவான் 1:4), அது மனிதனை வந்தடையவிருந்தது!
B. அவருடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ளாதபடி மனிதனை தடைசெய்த எல்லாவற்றோடும் இடைபட்டு, தம்முடைய மனுஷீகம் என்னும் கூட்டிற்குள் மறைந்திருந்த தெய்வீக ஜீவனை வெளியிடும்படி அவர் மரித்தார்—யோவான் 1:29; 3:14-15; 12:24
மனிதன் தேவனை ஜீவனாகப் பெற்றுக்கொள்ள வழியை சரிசெய்யும்படி, மனிதனின் சட்டரீதியான மீட்பிற்காக தேவ ஆட்டுக்குட்டியாக மரிக்க, தேவன் ஒரு மனிதனாக மாறவேண்டியிருந்தது. தம்முடைய மனுஷீகம் என்னும் கூட்டிற்குள் அடங்கியிருந்த தெய்வீக ஜீவனை வெளியிடுவதற்காகவும் அவர் மரிக்கவேண்டியிருந்தது. எனவே, ஒரு கோதுமை மணி, பிற மணிகளை உற்பத்திசெய்வதற்காக தனக்குள் இருக்கிற ஜீவனை வெளியிடும்படி மரிக்கவேண்டியதுபோலவே, அவரும் தம் தெய்வீக ஜீவனை வெளியிட்டு, இன்னும் பலருக்குள் தம்மையே மறுஉற்பத்திசெய்யும்படி மரித்தார். அவருடைய தெய்வீக ஜீவனுடன் அவருடைய எல்லையில்லாத, வரம்பற்ற தெய்வீக ஆள்தத்துவம் அவருடைய மாம்சத்திலிருந்து வெளியிடப்படுமாறு, இந்த மரணம் அவருடைய மனுஷீக கூட்டை உடைத்தது. ( ஜானின் படிகமயமாக்கல்-ஆய்வு , செய்தி 10, ப 104).இவ்வாறு, ஜீவனாகிய தேவன் பெருக்கமடைந்து, தம் அதிகரிப்பை ஆதாயப்படுத்திக்கொண்டார்!
C. உயிர்த்தெழுதலில் அவர் தம் விசுவாசிகளுக்குள் தம்மையே வழங்கும்படி, முழுநிறைவடைந்த ஆவியானவராக மாறினார்—யோவான் 7:39; 20:22
கிறிஸ்துவின் இரண்டு “ஆகுதல்களை” தெளிவாய் சித்தரிக்கிற சுவிசேஷம் யோவான் மட்டும்தான். முதலில், தேவனாகிய அவர் மனிதமாம்சமாகுதலின்மூலம் ஒரு மனிதனானார் (யோவான் 1:14); இரண்டாவதாக, அவர் மனிதனால் ஜீவனாக சுவாசிக்கப்படும்படி உயிர்த்தெழுதலில் ஆவியானார் (யோவான் 7:39; 20:22; ஒப்பீடு, 1 கொரி. 15:45). தெய்வீக, பரம்புதிரான மண்டலத்தில் தெய்வீக, பரம்புதிரான ஜீவனைப்பற்றிய புத்தகமாகிய யோவானின் சுவிசேஷத்தில், கிறிஸ்து முதலில் தேவனாகவே இருக்கிறார் (யோவான் 1:1), இறுதியில் அவர் சகலத்தையும் உள்ளடக்கிய ஆவியானவராக முழுநிறைவடைகிறார். இப்படிப்பட்ட ஆவியானவராக, தேவன் கடைசியில் மனிதனின் ஜீவனாக மனிதனுக்குள் வரமுடியும். (யோவானின் சுவிசேஷத்தில் கிறிஸ்துவின் பகிரங்கமான பரமேறுதலைப்பற்றிய பதிவு இல்லை, ஏனென்றால், தேவன் ஜீவனாக விசுவாசிகளுக்குள் நுழைந்துவிட்டார் என்பதையே அது வலியுறுத்துகிறது.)
D. தேவன் மனிதனுக்கு ஜீவனாக மாறுவதின்மூலம், அவர் தம் நித்திய இலக்கை அடைகிறார்
தேவன் ஜீவனாக மனிதனை வந்தடைந்தபின், அவரைத் திருப்திப்படுத்துகிற ஏதோவொன்று உற்பத்தியாகிறது, அதாவது, ஜீவாதாரமானதும் கூட்டானதுமான ஏதோவொன்று உற்பத்தியாகிறது. அது, யோவான் 14-ல் உள்ள பிதாவின் வீடும், யோவான் 15-ல் உள்ள கொடிகளோடுகூடிய திராட்சச்செடியும், யோவான் 16-ல் உள்ள புதிய பிள்ளையும் ஆகும். அது யோவான் 3:29-ல் உள்ள மணவாட்டியாகவும், யோவான் 1:51-ல் உள்ள பெரிதாக்கப்பட்ட மனுஷகுமாரனாகவும்கூட இருக்கிறது. ஒருவன் தேவனை ஜீவனாகப் பெற்றுக்கொண்டவுடன், அவன் தேவனுடைய கட்டிடத்திற்காக ஒரு ஜீவனுள்ள கல்லாகவும் (ஒப்பீடு, யோவான் 1:42), திராட்சச்செடியில் ஒரு கொடியாகவும், பிதாவின் வீட்டில் ஒரு வாசஸ்தலமாகவும், புதிய மனிதனின் ஓர் அவயவமாகவும், கிறிஸ்துவினுடைய மணவாட்டியின் ஒரு பகுதியாக நிச்சயிக்கப்பட்ட ஒரு கன்னிகையாகவும் மாறுகிறான். தேவன் ஜீவனாக நம்மை வந்தடைந்திருப்பதால், இவை யாவும் நடைபெறுகின்றன. இறுதியாக, நாமெல்லாரும் மூவொரு தேவனுடன் முழுவதுமாக இழைந்திணைவோம். நித்திய ஜீவனுக்கென்று பொங்கிப்பாய்கிற ஊற்றுக்கு ஒப்பான இந்த ஜீவன் (யோவான் 4:14) நித்திய ஜீவனின் கூட்டுமொத்தமாகிய புதிய எருசலேமில் முழுநிறைவேற்றமடையும். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இன்று நாம் அனுபவித்துமகிழ்கிற தெய்வீக ஜீவனின் ஒவ்வொரு சிறுபகுதியும் புதிய எருசலேமை விளைவிக்கும். இதுவே இன்று நமக்குள் இருக்கிற இந்த ஜீவனின் இறுதி விளைவு. தேவனுடைய குறிக்கோளையும் இரட்சிப்பையுங்குறித்த இப்பேர்ப்பட்ட உயர்ந்த பாராட்டுதலை யோவானின் சுவிசேஷம் நமக்கு அருள்கிறது!
III. இப்படிப்பட்ட தேவ-இரட்சகரால் ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவாக்கமுடியும்
இயேசு செய்த பல காரியங்கள், எப்படி ஜீவனாகிய தேவன் ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவாக்கமுடியும் என்பதை அடையாளப்படுத்துகிற அடையாளங்களாக இருந்தன என்று யோவான் உணர்ந்துகொண்டான். இவைகளில் முதல் அடையாளம் ஒரு கல்யாணத்தில் நிகழ்ந்தது; அங்கே, ஆறு கற்சாடிகளில் இருந்த தண்ணீரை கர்த்தர் திராட்சரசமாக மாற்றினார். மனிதனிலுள்ள மரணத்தை ஜீவனாக மாற்றுவதுதான் இந்த ஜீவனின் கோட்பாடு என்று இது சுட்டிக்காட்டுகிறது! என்னே அற்புதமான சுவிசேஷம்! நம் சூழ்நிலை என்னவாக இருந்தாலும் சரி, நம் நிஜமான தேவை இந்த ஜீவன்தான்! ஜீவனின் மறுபடிஜெநிப்பித்தல் ஒழுக்கமுள்ளவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 2:23–3:36), ஜீவனின் திருப்திப்படுத்துதல் ஒழுக்கமில்லாதவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 4:1-42), ஜீவனின் சுகமாக்குதல் மரித்துகொண்டிருக்கிறவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 4:43-54), ஜீவனின் உயிர்ப்பித்தல் செயலற்றவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 5:1-47), ஜீவனின் போஷித்தல் பசியுள்ளவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 6:1-71), ஜீவனின் தாகந்தணித்தல் தாகமுள்ளவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 7:1-52), ஜீவனின் விடுவித்தல் பாவத்தால் கட்டுண்டவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 7:53–8:59), ஜீவனின் பார்வையும் ஜீவனின் மேய்த்துப்பேணுதலும் மதத்தில் குருடர்களாக உள்ளவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 9:1–10:42), ஜீவனின் உயிர்த்தெழச்செய்தல் மரித்தவர்களின் தேவையை நிறைவாக்குகிறது என்றும் (யோவான் 11:1-57) யோவானிலுள்ள இந்த “அடையாளங்கள்” (அல்லது, சம்பவங்கள்) சுட்டிக்காட்டுகின்றன! ஒவ்வொரு மனிதனும் இந்த வகைகளுள் ஒன்றில் இருக்கிறான். வழிமுறையினூடாய் கடந்துசென்ற மூவொரு தேவனே இந்த ஜீவன். கிறிஸ்துவில் ஆவியாகிய தேவனால் மட்டுமே ஒவ்வொரு மனிதனின் தேவையையும் நிறைவாக்கமுடியும். இதுவே யோவானுடைய சுவிசேஷமாக மாறியது, இதுவே நம்முடைய சுவிசேஷமாகவும் மாறவேண்டும்! நம் இரட்சகர் தம்மை நம் ஜீவனாக நமக்கு கொண்டுவருவதின்மூலம் நம்முடைய ஒவ்வொரு தேவையையும் நிறைவாக்கக்கூடிய தேவனாகவே இருக்கிறார். (இந்த சூழ்நிலைகள் எல்லாவற்றிலும் உள்ள தேவையை கர்த்தர் நிறைவாக்குவதைப்பற்றிய ஒரு பொருட்சுருக்கத்தை The Mending Ministry of John, Chapter 2, pp. 10-13-ல் காணலாம்.)
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: ஜீவனாக நம்மை வந்தடைய தேவன் கடந்துசென்ற வழிமுறையை யோவானின் சுவிசேஷம் எப்படி வெளிப்படுத்துகிறது என்பதை வலியுறுத்துங்கள். தேவன் ஒரு மனிதனுக்குள் (இயேசுவுக்குள்) பாய்ந்தோடினார், இயேசு மனிதர்களிடையே பேசியபோதும் நடந்தபோதும் அவர் பாய்ந்தோடிக்கொண்டேயிருந்தார். அவருடைய வார்த்தைகள் இந்த ஜீவனின் பாய்ந்தோடுதலாகவே இருந்தன (யோவான் 6:63). இறுதியாக, பாய்ந்தோடுகிற இந்த தேவன் (யோவான் 19:34-ல் உள்ள தண்ணீராக) இயேசுவின் மரணத்தில் பாய்ந்தோடி (ஒப்பீடு, 4:14), அவருடைய உயிர்த்தெழுதலின்மூலம் அவருடைய விசுவாசிகளுக்கு அளிக்கப்பட்டார், அவர்கள் சுவாசிப்பதற்கான காற்றாகவும் அவர் அடையாளப்படுத்தப்படுகிறார் (யோவான் 20:22). ஒரு பாய்ந்தோடுதலாக தேவன் என்னவாகவெல்லாம் இருக்கிறாரோ, அவை யாவும் நித்தியத்திற்கும் தேவனும் மனிதனும் வசிக்கும் பரஸ்பர வசிப்பிடமாகிய புதிய எருசலேமில் இறுதியாக வந்துநிறைவடையும்.
சுவிசேஷ செயலாக்கம்: யோவான் 2 முதல் 11 வரையுள்ள எந்த சம்பவத்தையும் சுவிசேஷத்திற்காகப் பயன்படுத்தமுடியும், ஆனால் பொதுவாகப் பார்த்தால், தேவன் மனிதனுக்கு ஜீவனாக இருக்க விரும்புகிறார் என்று யோவானிலுள்ள சித்திரம் நமக்குக் காண்பிக்கிறது. தேவன் நம்மேல் கொண்டுள்ள அன்பே இதற்கான அவருடைய உள்நோக்கம் என்று யோவான் 3:16 சுட்டிக்காட்டுகிறது. வெறுமனே தன் பாவங்கள் சுத்திகரிக்கப்படுவது மட்டும் மனிதனுடைய நிஜமான தேவையல்ல; தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்வதே மனிதனுடைய நிஜமான தேவை. வேதாகமத்தின் ஆரம்பத்திலிருந்தே, அதாவது, மனிதன் ஜீவவிருட்சத்திற்குமுன்பாக நிறுத்தப்பட்டு, அறிவுவிருட்சத்தைப் புசியாதபடி எச்சரிக்கப்பட்ட நேரத்திலிருந்தே இது வெளிப்படுத்தப்பட்டது. ஜீவனாகிய தேவன் இல்லாமல், நம் வாழ்வு வெறுமையானது, மதிப்பற்றது, அர்த்தமற்றது. தேவனுடைய ஜீவனே மிக உயர்ந்த ஜீவன். மிக உயர்ந்த ஜீவனில், மிக உயர்ந்த உணர்வும், மிக உயர்ந்த செயல்பாடும், மிக உயர்ந்த அனுபவமகிழ்ச்சியும் இருக்கிறது! நம்முடைய ஜீவன் சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் மட்டும்தான், ஆனால் தேவனுடைய ஜீவனோ சிருஷ்டிக்கப்படாத, நித்திய ஜீவனாகும். தேவன் தாமே நமக்கு ஜீவனாக இருக்க விரும்புகிறார்! ஒருகாலத்தில் இது சாத்தியமற்றதாக இருந்தது, ஆனால் இன்று தம்மை நமக்கு ஜீவனாக கிடைக்கக்கூடியவராக்கும்படி அவர் இப்போது எல்லாவற்றையும் செய்துமுடித்திருக்கிறார். நாம் செய்யவேண்டியதெல்லாம் விசுவாசிப்பது மட்டும்தான், அதாவது, பெற்றுக்கொள்வது மட்டும்தான் (யோவான் 1:12).
முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.).
பின்புல வாசிப்புக்காக: Life-study of John, Message 1.
ஒப்பீடுகள்: Life-study of John, Messages 1, 6-7, 43, 46, 48, 51; The Divine Dispensing of the Divine Trinity, Chapters 11-13; The Fulfillment of God’s Purpose by the Growth of Christ in Us, Chapter 1, pp. 10-11; The Mending Ministry of John, Chapters 1-3, 5-6; Crystallization-study of the Gospel of John, Messages 1-7, 10-11; Message 13, pp. 130-131; Messages 14-16.