வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்
பகுதி 7
✵பாடம் 01 – 08
✵பாடம் 09 – 18
கிறிஸ்து என்னும் நபர்
வேதத்தில் உள்ள வாக்குத்தத்தங்களின் நிறைவேற்றமாகிய கிறிஸ்து
குறிக்கோள்: எப்படி தீர்க்கதரிசனங்கள் கிறிஸ்துவில் நிறைவேற்றமடைந்தன என்பதையும், கிறிஸ்துவைப் பெற்றுக்கொள்வதற்கு தீர்க்கதரிசனங்கள் எப்படி நம்மை ஆயத்தப்படுத்துகின்றன என்பதையும் பார்ப்பது.
பொருட்சுருக்கம்: கிறிஸ்து முன்கூட்டியே உருவகப்படுத்தப்பட்டு, தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டுள்ள பழைய ஏற்பாடு உட்பட முழு வேதாகமமும் கிறிஸ்துவையே குவிமையமாகக் கொண்டிருக்கிறது. தேவனைத் தேடியவர்கள் நீண்டகாலமாக காத்திருந்த நேரத்தில் கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனங்கள் அவர்களுக்கு ஊக்கமளித்தன, அவர்கள் யாருக்காக காத்திருந்தார்களோ, அவரைப்பற்றிய ஓர் ஓவியத்தை அவைகள் அவர்களுக்கு அளித்தன. கிறிஸ்து வந்தபோது, அவர் தம்மைக்குறித்து சொல்லப்பட்ட எல்லா தீர்க்கதரிசனங்களையும் ஒவ்வொரு நுணுக்கமான விவரத்திலும் நிறைவேற்றினார். எனினும், மக்கள் இதை அடையாளங்கண்டு, அவரைப் பெற்றுக்கொள்வதற்கான திராணி அவர்களுடைய இருதயத்தின் நிலைமையைச் சார்ந்திருந்தது. அவரை நேசிக்கிறவர்கள், அவர் வரும்போது நிச்சயமாய் அவருக்காக ஆயத்தமாயிருக்கும்படி, தீர்க்கதரிசனத்தின் ஒவ்வொரு நுணுக்கமான விவரத்திற்கும் நெருங்கிய கவனம்செலுத்துகிறார்கள்.
பின்புலம்: பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவைப்பற்றிய நுணுக்கமான விவரங்கள் எவ்வளவு ஐசுவரியமானவை என்பதை வாலிபர்கள் பாராட்டாமல் இருக்கக்கூடும், ஆனால் பழைய ஏற்பாட்டில் அவர்கள் கிறிஸ்துவைப் பார்த்தால், அவர்களுடைய இருதயங்கள் ஊக்கம்பெற்று, அவர்களுக்குள் கொழுந்துவிட்டு எரியும் (லூக். 24:32). கர்த்தருடைய உயிர்த்தெழுதலுக்குப்பின், ஊக்கமிழந்த இரண்டு சீடர்கள் எருசலேமைவிட்டு எம்மாவுக்கு நடந்துபோய்க்கொண்டிருந்தார்கள் (லூக். 24:13-17). கிறிஸ்து “வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்ததுதான்” இறுதியில் அவர்களுடைய திசையை மாற்றி, அவர்களுடைய இருதயங்களை ஊக்கப்படுத்தியது. இந்த கூட்டத்திலுள்ள ஊக்கமிழந்த ஓர் உயர்நிலைப்பள்ளி மாணவருக்கும் அல்லது மேல்நிலைப்பள்ளி மாணவருக்கும்கூட, இந்த பாடத்திலுள்ள அதே வார்த்தைகள் தேவைப்படலாம், அதாவது, பழைய ஏற்பாட்டிலுள்ள இந்த கிறிஸ்துவை அறிந்துகொள்வது தேவைப்படலாம். இப்பேர்ப்பட்ட கிறிஸ்துவைக்குறித்து கேள்விப்படுவதும், பழைய ஏற்பாட்டில் அவரைப்பற்றியிருக்கிற நுணுக்கமான விவரங்களைக்குறித்த கண்ணோட்டத்தைப் பெறுவதும் அவர்களுடைய இருதயங்களை ஊக்கப்படுத்தும்.
அதிகாரங்கள்: மத்தேயு 2–3.
போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:
பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு ஆகிய இரண்டுக்கும் எப்படி கிறிஸ்து குவிமையமாக இருக்கிறார் என்பதையும், எப்படி அவரில் இரண்டும் இணைந்திருக்கின்றன என்பதையும் முந்தைய பாடத்துடன்கூட இந்த பாடமும் காண்பிக்கிறது.
I. முழு வேதாகமமும் கிறிஸ்துவைக் கண்ணோட்டத்தில் கொண்டே எழுதப்பட்டது என்பதை தீர்க்கதரிசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன—எபி. 10:7; லூக். 24:25-27; யோவான் 1:45; 5:39
கிறிஸ்துவே புதிய ஏற்பாட்டின் குவிமையம் என்பதைப் பெரும்பாலானோர் உணருகிறார்கள், ஆனால், கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டின் குவிமையமாகவும் இருக்கிறார் என்பதை அநேகர் உணருவதில்லை. முந்தைய பாடத்தில் சொல்லப்பட்ட பழைய ஏற்பாட்டிலுள்ள முன்னடையாளங்கள் இதற்கு ஓர் அத்தாட்சியாக இருக்கின்றன. பழைய ஏற்பாடு கிறிஸ்துவை குவிமையமாகக் கொண்டிருக்கிறது என்பதற்கு தீர்க்கதரிசனங்கள் இன்னோர் அத்தாட்சியாக இருக்கின்றன. தேவனுடைய நித்திய குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக மனிதனை தேவனிடம் மீட்டுத்திருப்பும்படி வரப்போகிற ஒரு நபரைக்குறித்து வேதவாக்கியங்கள் மீண்டும்மீண்டும் முன்னுரைக்கின்றன. இவர் “மேசியா” என்று (எபிரேய மொழியில்) குறிப்பிடப்படுகிறார், “கிறிஸ்து” என்று (கிரேக்க மொழியில்) குறிப்பிடப்படுகிறார், “அபிஷேகம்பண்ணப்பட்டவர்” என்பதே இவ்விரண்டின் அர்த்தமாகவும் இருக்கிறது (அதாவது, தேவன் தம் திட்டத்தில் மனிதனோடு எப்படிப்பட்ட உறவைக் கொண்டிருக்கவேண்டுமென்று உத்தேசித்திருந்தாரோ, அதை மீட்டுத்திருப்புவதற்கு தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டு, தகுதிப்படுத்தப்பட்டவராக இவர் இருக்கிறார் என்பதே இதன் அர்த்தம்). நேரடியாக கிறிஸ்துவைக்குறித்து பேசாத தீர்க்கதரிசனங்கள், கிறிஸ்துவின் வருகைக்காக உலக சூழ்நிலையை ஆயத்தம்செய்ய தேவன் என்ன செய்யவிருந்தாரோ, அதைக்குறித்து பேசுகின்றன. இவ்வாறு, ஆதாம்முதற்கொண்டு, வரலாற்றில் நடைபெற்ற எல்லா நிகழ்வுகளும் கிறிஸ்துவுக்கான ஆயத்தப்படுத்துதலாகவே இருந்தன என்று பழைய ஏற்பாடு வெளிப்படுத்துகிறது. உண்மையில், கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்காக வழியை ஆயத்தம்பண்ணும்படி, வேதவாக்கியங்களில் முன்னுரைக்கப்பட்டுள்ளதை நிறைவேற்ற, இன்றும் தேவன் எல்லாவற்றையும் ஒழுங்கமைத்துக்கொண்டுதான் இருக்கிறார்!
A. அபிஷேகம்பண்ணப்பட்டவரின் வருகைக்கு அவசியமான எல்லாக் காரியங்களையும் நிறைவேற்றும்படி தேவன் வேலைசெய்துகொண்டிருந்தபோது, தேவனைத் தேடியவர்கள் நீண்டகாலமாக காத்திருந்த நேரத்தில், பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் அவர்களை ஊக்குவிக்கும் செயல்பாட்டைச் செய்தன—ரோ. 15:4; கலா. 4:5; மாற்கு 1:14-15
தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட மக்களிடம் தீர்க்கதரிசனங்கள் இல்லாமல், முன்னடையாளங்கள் மட்டுமே இருந்திருந்தால், ஊக்கமிழக்கச்செய்யும் அநேக சூழ்நிலைகளை சகிப்பதற்குத் தேவையான ஊக்கம் அவர்களுக்கு குறைவுபட்டிருக்கும். சிலவேளைகளில், ஓர் இலக்கையும், அந்த இலக்கை அடைவதற்கு அவசியமான வழிமுறையையும் பெற்றோர் ஒரு பிள்ளைக்கு விளக்கிக்கூறவேண்டும், அப்போது அந்தப் பிள்ளை அந்த வழிமுறையை சகித்துக்கொள்ள சித்தமாயிருப்பான். இஸ்ரவேல் மக்களின் காத்திருப்பை சகித்துக்கொள்ளக்கூடியதாக்கவும், கிறிஸ்து வரும்போது அவர்கள் அவரை அடையாளங்கண்டுகொள்ளுமாறு முன்கூட்டியே அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒருவிதமான புகைப்படமாக இருக்கவும் அவர்களுக்கு தீர்க்கதரிசனங்கள் தேவைப்பட்டன. இந்த தீர்க்கதரிசனங்கள், தேவனைத் தேடியவர்களுக்குப் பிரகாசமான வெளிச்சங்களாக ஒளிவீசியிருக்கவேண்டும். கிறிஸ்து வந்த நேரத்தின்போது, இஸ்ரவேலின் மகிமை மண்ணில் கிடந்தது, இஸ்ரவேலின் தேவனை ஏற்றுக்கொள்ளாத மக்களால் (ரோமர்களால்) நல்ல தேசம் ஆட்சிசெய்யப்பட்டது. நான்காயிரம் ஆண்டுகால பாவமும், நோயும், தோல்வியும் அநேகருடைய நம்பிக்கையை மங்கச்செய்துவிட்டது. இவையெல்லாவற்றின் மத்தியிலும், லூக்கா 2:25-32-ல் காணப்படுவதுபோல, விழித்திருந்து, காத்திருக்கிற சிலரை, அதாவது, தம்மைப் பெற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிற சிலரை கர்த்தர் கண்டார். அவ்வளவு காலம் கடந்துசென்றபிறகும், தீர்க்கதரிசனங்களின்மூலம் சிலர் இன்னும் தங்கள் நம்பிக்கை உயிருடன் வைத்திருந்தார்கள். அவர் மீண்டும் தரிசனமாகும்போது, நாம் அவருக்காக காத்திருந்து, விழித்திருக்கிறவர்களாக இருப்போமா?
B. தேவனைத் தேடியவர்கள் யாருக்காக காத்திருந்தார்களோ, அந்த ஆச்சரியமான அபிஷேகம்பண்ணப்பட்டவரின் சித்திரத்தை அவர்களுக்கு வழங்கும் செயல்பாட்டை பழைய ஏற்பாட்டு தீர்க்கதரிசனங்கள் செய்தன—1 பேதுரு 1:10-11; சங். 40:7
பழைய ஏற்பாட்டின் ஒரே புத்தகம் எதிலும் இயேசுவின் முழு வாழ்க்கைவரலாறையும் தேவன் கொடுக்கவில்லை. அதற்குப்பதிலாக, வேதம்முழுவதும் இங்கும் அங்குமாக கிறிஸ்துவைப்பற்றிய விவரங்களை அவர் வெளியிட்டார். எனவே, கிறிஸ்துவைப்பற்றிய சித்திரத்தின் துண்டுகள் பழைய ஏற்பாடுமுழுவதும் சிதறியிருக்கின்றன, இவைகள் ஒரு புதிரைப்போல ஒன்றாகப் பொருந்தக்கூடியவையாகும். இவைகளை ஒன்றாக சேர்க்கும்போது, அடையாளங்கண்டுகொள்ளக்கூடிய ஒரு வாழ்க்கையின் சித்திரத்தை இவை வழங்குகின்றன. மிகுந்த விலையேறப்பெற்றவரான கிறிஸ்துவை ஆராய்ந்து, தேடுவதினால் மட்டுமே கண்டுபிடிக்கவேண்டியிருந்தது. இவ்விதமாக, யார் நிஜமாகவே அவருக்காக அக்கறைப்படுகிறார்களோ, அவர்கள் அவரைப் பெற்றுக்கொள்ளமுடியும்.
II. கிறிஸ்து முன்னுரைக்கப்பட்டபடியே துல்லியமாக வந்து, தம்மைப்பற்றிய எல்லா தீர்க்கதரிசனங்களையும் நிறைவேற்றினார்
A. கிறிஸ்துவைக்குறித்து சொல்லப்பட்ட தீர்க்கதரிசனங்கள், அடையாளங்கண்டுகொள்ளக்கூடிய ஒரு சித்திரத்தை வரைந்தன
வேதாகமத்தில் சொல்லப்பட்டுள்ள முதல் தீர்க்கதரிசனம் கிறிஸ்துவைப்பற்றியதாகும். “ஸ்திரீயின் வித்து” சர்ப்பத்தின் (சாத்தானின்) தலையை நசுக்கும் என்று ஆதியாகமம் 3:15-ல் தேவன் வாக்களித்தார். தன் முதல் பிள்ளைதான் அந்த வாக்குத்தத்தம்பண்ணப்பட்டவர் என்று ஏவாள் தவறாக கருதினாள், ஆனால், நிஜமான ஸ்திரீயின் வித்தாக ஒரு கன்னியினால் பிறந்த இயேசுவே அந்த நிஜமான ஸ்திரீயின் வித்து (ஏசா. 7:14). இந்த வித்து [சந்ததி] ஆபிரகாமின்மூலம் வரும் என்று மேலும் வாக்களிக்கப்பட்டது (கலா. 3:16). எனவே, வரப்போகிறவர் யூதர்களிலிருந்து வருவார், ஆனால் அவர் யூதர்களுக்காக மட்டுமே வரமாட்டார். ஆபிரகாமின் இந்த சந்ததியில், சகல தேசங்களும் ஆசீர்வதிக்கப்படும் (ஆதி. 12:3)! இன்னும் குறிப்பாக, கிறிஸ்து தாவீதின் சந்ததிகளில் ஒருவராக யூதாவின் கோத்திரத்திலிருந்து வருவார் என்றும் பழைய ஏற்பாடு முன்னுரைத்தது (2 சாமு. 7:12-14; சங். 89:3; மத். 1:1). பெத்லகேம் அவருடைய பிறப்பிடமாக இருக்கும் (மீகா 5:2), எனினும் அவர் நசரேயன் என்று அழைக்கப்படுவார் (மத். 2:23); இது, வேண்டுமென்றே செய்யப்பட்ட ஒரு மாற்றமாகும், புறம்பான விதத்தில் மட்டுமே தீர்க்கதரிசனங்களை அறிந்திருந்தவர்களை இது குழப்பியது (மத். 2:1-6; யோவான் 1:46; 7:41-43). அவர் இம்மானுவேலாக, அதாவது, நம்மோடிருக்கிற தேவனாக இருந்தாலும் (ஏசா. 7:14), இன்னும் சொல்லப்போனால், அவர் வல்லமையுள்ள தேவனாகவும் நித்திய பிதாவாகவும் இருந்தாலும் (ஏசா. 9:6), அவர் எந்தவொரு புறம்பான அழகும் அல்லது சொந்தரியமும் இல்லாமல், மனித துயரத்தினால் சூழப்பட்டு, பாராட்டுதலின்றி வளருவார் (ஏசா. 53:2-3). அவர் யாரை இரட்சிக்க வந்தாரோ, அவர்களால் புறக்கணிக்கப்பட்டு (ஏசா. 53:3-4, 7-8; சங். 22:6-8), முப்பது வெள்ளிக்காசுக்காக காட்டிக்கொடுக்கப்படுவார் (சக. 11:12). நம் பாவங்களுக்காக விலைக்கிரயம்செலுத்தி, நம் சாபத்தை நீக்கும்படி அவர் சிலுவையில் மரிப்பார் (ஏசா. 53:10; சங். 22:16-18; உபா. 21:23; கலா. 3:13-14; அப். 13:29; 1 கொரி. 15:3). அவர் ஒரு குற்றவாளியைப்போல கொல்லப்பட்டாலும், ஐசுவரியவான்களிடையே அடக்கம்பண்ணப்படுவார் (ஏசா. 53:9). எருசலேமை மீண்டும் கட்டுமாறு அதிகாரப்பூர்வமான கட்டளை பிறப்பிக்கப்பட்டபின், 483-ஆம் வருடத்தில் அவர் மரிப்பார் (தானி. 9:25-26; பகுதி 6, பாடம் 16-ஐ பார்க்கவும்). அவர் மரித்தோரைவிட்டு உயிர்த்தெழுவார்; உயிர்த்தெழுதலில், தம் பெருக்கமும் அதிகரிப்புமாகிய சந்ததியினால் அவர் திருப்தியடைவார் (ஏசா. 53:10-11; 1 கொரி. 15:4). அவர் தேவனால் உயர்த்தப்பட்டு (சங். 118:22; 110:1; ஏசா. 53:12), இன்னும் பிறவாத தலைமுறைகளிடம் பேசப்படுவார் (சங். 22:30-31), இன்னும் சொல்லப்போனால், சகல தேசங்களிடமும் பேசப்படுவார் (ஏசா. 11:10). பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவைப்பற்றி இன்னும் அநேக தீர்க்கதரிசனங்கள் இருக்கின்றன; இந்த பாடத்தின் முடிவில் ஓப்பிட்டுக்காக குறிப்பிடப்பட்டுள்ள The Conclusion to the New Testament-ல் உள்ள செய்திகளைப் பார்க்கும்படி சேவைசெய்கிறவர்களை ஊக்குவிக்கிறோம். எனினும், ஓரிரு தீர்க்கதரிசனங்களுக்குள்ளாக விளாவாரியாகச் செல்வதற்குப்பதிலாக, மேலே செய்யப்பட்டதுபோல, தீர்க்கதரிசனங்களிலிருந்து ஒரு வாழ்க்கையின் துண்டுகளை சேர்த்திணைத்து ஒரு சித்திரத்தை உருவாக்க முயலுங்கள்.
B. வேதாகமம் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது என்பதை தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றம் நிரூபிக்கிறது
எல்லா தீர்க்கதரிசனங்களும் நிறைவேற்றப்பட்டிருப்பது, வேதாகமம் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது என்ற நம் நம்பிக்கையை பலப்படுத்தவேண்டும், ஏனென்றால், நிகழ்காலம்போல அல்லது கடந்தகாலம்போல, எதிர்காலத்தைக்குறித்து தேவனால் மட்டுமே எழுதமுடியும்.
III. நாம் தீர்க்கதரிசனங்களை எவ்வாறு பெற்றுக்கொள்கிறோம் என்பது, நம் இருதயத்தையே சார்ந்திருக்கிறது—எபே. 1:19; எபி. 6:11
வார்த்தையில் கிறிஸ்துவைப்பற்றி தெளிவாக சித்தரிக்கப்பட்டிருந்தாலும், கிறிஸ்து வந்தபோது அநேகர் அவரைத் தவறவிட்டுவிட்டார்கள்; அவரில்தான் வேதவாக்கியங்கள் நிறைவேறுகின்றன என்பதை இன்றும்கூட அநேகரால் அடையாளங்கண்டுகொள்ளமுடியவில்லை அல்லது அவர்கள் அடையாளங்கண்டுகொள்ள சித்தமில்லாதவர்களாக இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்களின் இருதயங்களுக்குள் கிறிஸ்து பிரகாசிக்காதபடி, அவர்கள் சாத்தானால் குருடாக்கப்பட்டிருக்கிறார்கள் (2 கொரி. 4:3-4). அவரைக்குறித்து பேசுகிறவர்களாக வந்த தீர்க்கதரிசிகளை சிலர் அடித்து, கொல்லவும் செய்தார்கள் (மத். 23:37 மாற்கு 12:5-7). கிறிஸ்துவின் சீடர்கள் அவருடைய நிறைவேற்றங்களை கண்கூடாகக் கண்டபிறகும்கூட, எப்படி வேதவாக்கியங்கள் தம்மில் நிறைவேறுகின்றன என்பதைப் பார்ப்பதற்கு அவர் அவர்களுடைய மனதைத் திறக்கவேண்டியிருந்தது (லூக். 24:25-27, 44-47). இவ்வாறு வார்த்தையில் அவரைப்பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை அவர்கள் பெற்றபிறகுதான், அவர் அவர்களை தம்முடைய சாட்சிகளாக இருக்கும்படி கட்டளையிடமுடிந்தது (லூக். 24:48-49). நாம் திறம்பட அவருடைய சாட்சிகளாக இருப்பதற்கு, வேதவாக்கியங்களில் கிறிஸ்துவைப் பார்க்கவேண்டும் என்று இது சுட்டிக்காட்டுகிறது. சுவிசேஷத்தைப் பிரசங்கிப்பதில், தீர்க்கதரிசனம் ஒரு முக்கியமான பங்குவகித்தது என்று நடபடிகளிலுள்ள பதிவு சுட்டிக்காட்டுகிறது (அப். 2:30-35; 3:18, 20; 7:48-52; 8:28-35; 10:43; 13:22-41; 17:2-3, 10-11; 18:28; 26:22-23, 27-28). எனினும், வார்த்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது, கேட்போரின் இருதயங்களையே சார்ந்திருந்தது.
A. கிறிஸ்துவை நேசிக்கிறவர்கள் அவருடைய தரிசனமாகுதலுக்காக ஏங்குகிறார்கள், கிறிஸ்து எப்படிப்பட்ட நேரத்தில் தரிசனமாவார் என்பதை அவர்கள் ஆராய்ந்துபார்க்கிறார்கள்—1 பேதுரு 1:10-11
கிறிஸ்துவை நேசிக்கிறவர்களுக்கு, தீர்க்கதரிசனங்கள் உயிர்நாடிபோன்றவையாகும். பிரியமான யாரோவொருவருக்காக காத்திருக்கிறவன், அந்த நபர் எப்படி வருவார், எப்போது வருவார் என்பதைக்குறித்த எந்தவொரு சிறு தகவலையும் தேடிக்கண்டுபிடிப்பதுபோல, நாம் கிறிஸ்துவைப்பற்றிய தீர்க்கதரிசனங்களுக்குள்ளாக மூழ்கவேண்டும். அவர் எப்படி வருவார் என்று வேதாகமம் சொன்னதோ, அப்படியே அவர் முதல்முறை வந்தார்; எனவே, அவர் எப்படி வருவார் என்று வேதாகமம் சொல்லுகிறதோ, அப்படியே அவர் இரண்டாவது முறையும் வருவார் என்று நாம் அறிந்துகொள்ளலாம். அவர் முதல்முறை வந்தபோது, அனுதினமும், நுணுக்கமாக விழித்திருந்தவர்கள் மட்டுமே, அவர் வரும்போது அவருக்காக ஆயத்தமாயிருந்தார்கள். பொதுவான விதத்தில் தீர்க்கதரிசனங்களை அறிந்திருந்தவர்கள் அவரைத் தவறவிட்டார்கள் (யோவான் 7:42-43). எனவே, அவர் தரிசனமாகும்போது, நாம் நிஜமாகவே அவருக்காக ஆயத்தமாயிருக்கும்படி, தீர்க்கதரிசனங்களிலிருந்து ஒவ்வொரு துப்பையும் நாம் தேடிக்கண்டுபிடிக்கவேண்டும். இந்த தீர்க்கதரிசனங்கள் முழுவதும் வியாக்கியானம்செய்யப்பட்டு, நமக்கு வழங்கப்பட்டிருக்கின்றன என்பதற்காக கர்த்தரைத் துதியுங்கள்!
B. கிறிஸ்துவை விடிவெள்ளி நட்சத்திரமாக அனுபவித்துமகிழ்ந்து, அவருடைய இராஜ்யத்திற்குள் நுழையவேண்டுமென்றால், தீர்க்கதரிசன வார்த்தையை நம் இருதயங்களில் பசுமையாய்க் காத்துக்கொள்ள நாம் உண்மையுள்ளவர்களாயிருக்கவேண்டும்—2 பேதுரு 1:19; வெளி. 2:28
நாம் கர்த்தரை நேசித்தால், நாம் அவருடைய தரிசனமாகுதலை நேசிக்கிறவர்களாக இருப்போம் (2 தீமோ. 4:8); தானாகவே நாம் அவருக்காக ஏங்கி, விடிவெள்ளி நட்சத்திரத்திற்காக விழித்திருப்பதுபோல, அவருக்காக விழித்திருப்போம். ஆகவே, அவருடைய வருகை நம் ஏக்கமாக மாறும்வரை, நம்மைக் கவர்ந்திழுக்கும்படி நாம் கர்த்தரிடம் கேட்டுக்கொள்ளவேண்டும். வாச்மென் நீ, வாலிபனாக இருந்தபோது, தன் ஆசாபாசங்களை ஈர்த்த வேறு ஏதோவொன்றுடன் போராடிக்கொண்டிருந்தார், ஆனால் இறுதியாக, கர்த்தருடைய இரக்கத்தினால், “பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு? பூலோகத்தில் உம்மைத்தவிர எனக்கு வேறே விருப்பமில்லை,” என்று அவரால் சொல்லமுடிந்தது (சங். 73:25). இதனால், கர்த்தருடைய மறுவருகையைக்குறித்த அவருடைய பாடல்களில் (958, 959, 960 ஆகிய பாடல்களில்) நேசிக்கிற ஒருவனுடைய இருதயத்தின் நறுமணத்தை நிஜமாகவே உங்களால் உணரமுடியும். நம்மிடம் இப்படிப்பட்ட இருதயம் இருந்தால், தீர்க்கதரிசனங்கள் நம்மை ஊக்கப்படுத்தும், கர்த்தருடைய தரிசனமாகுதலுக்காக நம்மைக் காத்துக்கொள்ள அவைகள் உதவும். விழித்திருக்கிறவர்களாக அவர் காணக்கூடிய மக்களாக நாம் இருப்போமா? (மத். 24:42-44).
உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: கிறிஸ்து தம் மனிதமாம்சமாகுதலில் முதல்முறை பூமிக்கு வந்தபோது, அவர் பெத்லகேமில் பிறப்பார் என்பதையும், அவர் தாவீதின் சந்ததியாக இருப்பார் என்பதையும் அநேகர் அறிந்திருந்தார்கள். உண்மையில், கிறிஸ்து யார் என்பதைக்குறித்தும், அவர் எப்படி வருவார் என்பதைக்குறித்தும் பழைய ஏற்பாடு பல விவரங்களை வெளிப்படுத்துகிறது, இவையெல்லாம் இருந்தும், வெகுசிலரே அவரைப் பெற்றுக்கொண்டார்கள். இப்படிப்பட்ட பரம இரகசியத்தை பின்னணியாகக்கொண்டு இந்த பாடத்தை அமைக்கலாம். குறிப்பு II. ல் குறிப்பிடப்பட்டுள்ள சில தீர்க்கதரிசனங்களைப் பயன்படுத்தி, கிறிஸ்துவைப்பற்றிய ஓர் ஓவியத்தை வாலிபர்களுக்கு வழங்குங்கள்; இந்த தீர்க்கதரிசனங்கள் உண்மைநிகழ்விற்கு நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குமுன்பே சொல்லப்பட்டன என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள். அதன்பின், மக்கள் ஏன் அவரைத் தவறவிட்டார்கள்? என்று கேளுங்கள். அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்களுக்கேற்ப யாரையாவது மக்கள் கண்டால், அவர்கள் தகவல்தெரிவிப்பதற்கு ஏதுவாக, பெத்லகேமில் “அறிவிப்புகள்” ஒட்டப்பட்டிருக்கலாம். ஞானிகள் பெத்லகேமுக்கு வந்தபோது, எல்லாரும் இயேசுவைப் பார்க்க சந்தோஷமாய் சென்றிருக்கவேண்டும்! ஆனால், அதற்கு மாறாக, யாருமே செல்லவில்லை. எல்லாரும் இந்தச் செய்தியைக்குறித்து கரிசனைகொண்டிருந்ததுபோல் தோன்றுகிறது, ஆனால் தவறான விதத்திலேயே கரிசனைகொண்டிருந்தார்கள். அதன்பின், நம்மைப்பொருத்தவரை எப்படி? என்று கேளுங்கள். நாம் கர்த்தருடைய வருகையை எதிர்பார்த்திருக்கிறோமா? கர்த்தருக்குள் நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கு இது ஒரு நல்ல பரிட்சையாகும். நாம் அவர்மேல் பசியாயிருந்தால், அவர் எப்போது, எங்கு, எப்படி வருவார் போன்றவைகளை நாம் அறிந்துகொள்ள விரும்புவோம். அப்போது, தீர்க்கதரிசனங்கள் நமக்கு உயிர்நாடிபோல் இருக்கும். ஆனால், நம் இருதயம் கிறிஸ்துவுக்காக மட்டுமே இல்லையென்றால், நாம் தீர்க்கதரிசனங்களை சற்று அசட்டைபண்ணவோ அல்லது அவைகளை வெறுமனே “மேலோட்டமாக விரும்பவோ” முயற்சிசெய்வோம். எனவே, நம் இருதயம் நம் ஒப்பற்ற இலக்காக கர்த்தரைப் பின்தொடரும்படி கவர்ந்திழுக்கப்படும்வரை, நம்மில் தொடர்ந்து கிரியைசெய்யுமாறு நாம் கர்த்தரிடம் கேட்டுக்கொள்ளவேண்டும்.
சுவிசேஷ செயலாக்கம்: இந்த பாடத்தை இரண்டு படிகளில் சுவிசேஷத்திற்காக பிரயோகிக்கலாம்: 1) வேதாகமம் தேவனால் எழுதப்பட்டது என்பதை தீர்க்கதரிசனங்கள் உறுதிப்படுத்துகின்றன. இவ்வளவு ஏராளமான தீர்க்கதரிசனங்கள் தற்செயலாக நிறைவேறியிருக்க சாத்தியமேயில்லை. ஒருவிதத்தில், தீர்க்கதரிசனம் உரைக்கப்படுகிற ஒவ்வொருமுறையும் வேதாகமம் தன்னைத்தானே ஒரு இக்கட்டான நிலைமைக்குள்ளாக்கிக்கொள்கிறது, ஆனால், தாமே தேவன் என்றும், வேதாகமம் தம்முடைய வார்த்தை என்றும் வெளியரங்கமாக்க தேவன் தீர்க்கதரிசனத்தைப் பயன்படுத்துகிறார். 2) இந்த அற்புதமான புத்தகம் எதனிடம் அல்லது யாரிடம் நம்மை வழிநடத்துகிறது? நாம் இயேசுகிறிஸ்துவில் விசுவாசம்வைக்கவேண்டும் என்று வேதாகமம் நம்மிடம் சாட்சிபகர்கிறது. இயேசுகிறிஸ்து மோசடிசெய்பவரோ அல்லது வஞ்சகரோ அல்ல, எனினும் அவர் வெறுமனே ஒரு மாமனிதனும் அல்ல. இது நமக்கு எப்படித் தெரியும்? வேதாகமம் அளிக்கிற சாட்சியின்மூலம் இது நமக்குத் தெரியும். இயேசுகிறிஸ்து தம்மை யாரென்று சொல்லுகிறாரோ, அதுவாகவே இருக்கிறார் என்பதை நிரூபிக்க ஒவ்வொரு தீர்க்கதரிசனத்தையும் ஒரு பரிட்சையாகப் பயன்படுத்தமுடியும். குறிப்பு II-ல் விளக்கப்பட்டுள்ளபடி, அவர் நிறைவேற்றிய பல தீர்க்கதரிசனங்களைப் பட்டியலிடுங்கள். அவரே நிஜமான இரட்சகர், அவர் மட்டும்தான் இரட்சகர், வேதாகமத்தின் “அங்கீகார முத்திரை” அவருக்கு மட்டும்தான் இருக்கிறது. வேறுசிலர் தங்களைத்தாங்களே மேசியா என்று சொல்லியிருக்கிறார்கள், ஆனால் கிறிஸ்துவில் மட்டும்தான் தீர்க்கதரிசனங்கள் நிறைவேறியிருக்கின்றன. நம்மெல்லாருக்கும் ஓர் இரட்சகர் தேவைப்படுவதால், நாம் யாரை அணுகவேண்டும்? தேவனுடைய சொந்த வார்த்தையாகிய வேதாகமம் இயேசுகிறிஸ்துவைத்தவிர வேறு யாரையும் சுட்டிக்காட்டவில்லை. நாம் தேவனிடம் கொண்டுவரப்பட விரும்பினால், நாம் அவர்மூலம்தான் வரவேண்டும் (யோவான் 14:6). இதுவே தேவனுடைய ஏற்பாடு, இதுவே சத்தியம் என்று வேதமும் சாட்சிபகர்கிறது. கிறிஸ்து மட்டுமே தேவனுடைய இரட்சிப்பின் வழியாக இருக்கிறார். இந்த இரட்சிப்பை நாம் எப்படி பெற்றுக்கொள்கிறோம்? இதையும் வேதாகமம் நமக்குச் சொல்லுகிறது! கிறிஸ்துவில் விசுவாசம்வைப்பதின்மூலம் உண்டாகும் இரட்சிப்பின் வழியை தெளிவாக சித்தரிக்கிற ஓரிரு வசனங்களைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.
முக்கியமான விஷயங்கள்: வேதாகமம் தேவனுடைய வார்த்தையாக இருக்கிறது என்பதை அறிந்துகொள்ளுதல் (II.F.1); முழு வேதாகமமும் கிறிஸ்துவைப்பற்றியது என்பதை அறிந்துகொள்ளுதல் (II.F.2).
பின்புல வாசிப்புக்காக: The Conclusion of the New Testament, Message 1. (Messages 34-38ஐயும் ஆய்வுசெய்யும்படி பரிந்துரைக்கிறோம்.)
REFERENCES: The Conclusion of the New Testament, Messages 1, 34–39; The Prophecy of the Four “Sevens” in the Bible, Chapter 6; Journey through the Bible, Unit 1, Lesson 7; Unit 6, Lessons 10–11, 16, 18.