வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

வேதத்தில் உள்ள சித்திரங்களின் நிஜமாகிய கிறிஸ்து

குறிக்கோள்: முழு வேதாகமமும் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகம் என்பதையும், கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லா நேர்மறையான முன்னடையாளங்களுக்கும் உருவகங்களுக்குமான நிறைவேற்றமாக இருக்கிறார் என்பதையும் பார்ப்பது.

பொருட்சுருக்கம்: முழு வேதாகமமும் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகமாகும். பழைய ஏற்பாட்டில், கிறிஸ்து அநேக முன்னடையாளங்களிலும், உருவகங்களிலும், நிழல்களிலும் சித்தரிக்கப்படுகிறார், அவைகள் அவரைப்பற்றிய சித்திரங்களாக இருக்கின்றன. புதிய ஏற்பாட்டில், இந்த சித்திரங்கள் எல்லாவற்றிற்கும் நிஜமாக கிறிஸ்து வந்தார். பழைய ஏற்பாட்டிலுள்ள சித்திரங்களுக்கும், புதிய ஏற்பாட்டிலுள்ள அவைகளின் வரையறைக்கும் இடையே உள்ள உறவை நாம் பார்த்தால், வேதாகமம் முழுவதிலும் உள்ள கிறிஸ்துவைப் பார்க்கும்படி நாம் உதவியடைவோம். பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லா நேர்மறையான சித்திரங்களுக்கும் கிறிஸ்துவே நிஜமாக இருக்கிறார்; கிறிஸ்து இந்த சித்திரங்களின் வரையறையாகவும் விளக்கமாகவும் அமைகிறார். நாம் தகுந்தமுறையில் வேதாகமத்தை வாசிக்கும்போது, ஒவ்வொரு பக்கத்திலும் நம்மால் கிறிஸ்துவைப் பார்க்கமுடியும்; கிறிஸ்துவில் நிறைவேறுகிற பழைய ஏற்பாட்டிலுள்ள சித்திரங்களைப் பார்ப்பதின்மூலம், ஆராய்ந்தறியமுடியாத வகையில் ஐசுவரியமுள்ள நம் கிறிஸ்துவை அறிந்துகொள்ளும்படி நாம் உதவியடைகிறோம்.

பின்புலம்: இயேசுகிறிஸ்துவே புதிய ஏற்பாட்டின் கருப்பொருளாகவும் பொருளடக்கமாகவும் இருக்கிறார் என்பதை மட்டும் ஒரு வாலிபனால் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளக்கூடுமானால், இயேசுகிறிஸ்துவே தேவனுடைய பூரிப்பாகவும், முழு மனித இனத்திற்கும் தேவன் அளிக்கிற செய்தியாகவும், மனிதனுடைய எல்லாப் பிரச்சனைகளுக்கும் தேவன் கொடுக்கிற பதிலாகவும் இருக்கிறார் என்ற சத்தியத்தில் அவன் நங்கூரமிடப்பட்டிருப்பான். வாலிபர்கள் பழைய ஏற்பாட்டிலிருந்து புதிய ஏற்பாட்டிற்கு கடந்துவரும்போது, இந்த முக்கியமான உணர்வில் அவர்களை நங்கூரமிடுவதற்கு இந்தப் பாடம் அவசியமாயிருக்கிறது. இயேசுவே கருப்பொருள் என்பது நமக்குத் தெரியும், ஏனென்றால், இயேசுதான் புதிய ஏற்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ள முதல் பெயராகவும், கடைசி பெயராகவும் இருக்கிறது (Matt. 1:1 footnote 1). நாம் வேதாகமத்திடம் வரும்போது, சில மதவாதிகள் (யூத மதவாதிகளைப்போன்றவர்கள்) செய்ததுபோல நாமும் செய்யக்கூடாது, அதாவது, இந்த அற்புதமான நபரைவிட்டு வேதத்தைப் பிரிக்கக்கூடாது. நாம் வேதத்திடம் வரும்போது, இயேசுகிறிஸ்துவிடம் வரவேண்டும், ஏனென்றால், அவரிடம் வருவதால்தான் நாம் ஜீவனைப் பெறக்கூடும் (யோவான் 5:39).

அதிகாரம்: மத்தேயு 1.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

இந்த பாடம் (அடுத்த பாடமும்கூட) பழைய ஏற்பாட்டை புதிய ஏற்பாட்டுடன் இணைக்கிறது; புதிய ஏற்பாட்டுக்குரிய ஆறு பகுதிகளின் கருப்பொருளாகிய கிறிஸ்துவை இது அறிமுகப்படுத்துகிறது.

I. முழு வேதாகமமும் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகமாகும்—யோவான் 5:39; லூக். 24:27, 44

வேதவாக்கியங்கள், தம்மைக்குறித்த சாட்சியாக இருக்கின்றன என்று கர்த்தராகிய இயேசு யோவான் 5:39-ல் பரிசேயரிடம் கூறினார்; நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது, நாம் தகுந்தமுறையில் அதை வாசிக்கவேண்டும் என்றும் அவர் அவர்களுக்குச் சுட்டிக்காட்டினார். முழு வேதாகமமும் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகமாக இருக்கிறது, எனவே நாம் வேதாகமத்தை வாசிக்கும்போது அதில் கிறிஸ்துவைத் தேடுவதுதான் அதை வாசிப்பதற்கான சரியான வழி. லூக்கா 24:27, 44 ஆகிய வசனங்களில், மோசேயின் நியாயப்பிரமாணத்திலும், சங்கீதங்களிலும், தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் தம்மைக்குறித்து எழுதப்பட்டுள்ள எல்லாவற்றையும் கர்த்தர் தம் சீடர்களில் இருவருக்குக் காண்பிக்கும்படி, வேதவாக்கியங்களை அவர்களுக்கு விளக்கிக்கூறினார். பழைய ஏற்பாட்டு வேதவாக்கியம்முழுவதும் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகமாகும். புதிய ஏற்பாடு இயேசுகிறிஸ்து என்னும் பெயருடன் ஆரம்பித்து (மத். 1:1), இயேசுகிறிஸ்து என்னும் பெயருடன் முடிவடைகிறது (வெளி. 22:21); இயேசுகிறிஸ்துவே புதிய ஏற்பாட்டின் கருப்பொருளாகவும், பொருளடக்கமாகவும் இருக்கிறார் என்று இது நிரூபிக்கிறது. வேதாகமம் ஒரு ஜீவ புத்தகமாக இருக்கிறது, ஒரு ஜீவனுள்ள நபர்தான் இந்த ஜீவன், இவர் அற்புதமான, சகலத்தையும் உள்ளடக்கிய கிறிஸ்துவே. வரப்போகிறவராகிய இந்த அற்புதமான நபரைப்பற்றி, முன்னடையாளங்களிலும் தீர்க்கதரிசனங்களிலும், பழைய ஏற்பாடு ஓர் ஓவியத்தை வழங்குகிறது. இப்போது, புதிய ஏற்பாட்டில், இந்த அற்புதமான நபர் வந்துவிட்டார். இந்த அற்புதமான நபரை நமக்குப் பரிந்துரைப்பதில், புதிய ஏற்பாட்டின் முதல் பக்கம் அவருடைய வம்சவரலாறை நமக்கு வழங்குகிறது. இந்த வம்சவரலாறை பழைய ஏற்பாட்டின் சுருக்கமாகக் கருதலாம், பழைய ஏற்பாடுதானே கிறிஸ்துவைப்பற்றிய விளாவாரியான வம்சவரலாறாக இருக்கிறது. மத்தேயுவில் உள்ள வம்சவரலாறைப் புரிந்துகொள்ள, ஒவ்வொரு சம்பவத்தின் தொடக்கத்தையும் வரலாறையும் நாம் ஆராயவேண்டும். முழு வேதாகமத்திற்கும் அற்புதமான மையமாக உள்ள கிறிஸ்து பல அம்சங்களை உடைய, சகலத்தையும் உள்ளடக்கியவராக இருக்கிறார் (Matt. 1:1, footnote 1). கிறிஸ்துவே முழு வேதாகமத்திற்கும் மையமாகவும், குவிமையமாகவும் இருக்கிறார்.

A.எனவே, வேதாகமத்தில் கிறிஸ்துவைத் தேடுவதே அதை வாசிப்பதற்கான மிகச்சிறந்த வழியாக இருக்கிறது—யோவான் 5:39-40

பரிசேயர்கள் வேதவாக்கியங்களை ஆராயும்போது, அவர்கள் தம்மிடம் வரவேண்டும் என்று கர்த்தராகிய இயேசு அவர்களிடம் சொன்னார் (யோவான் 5:39-40). வேதாகமம் ஜீவ புத்தகமாக இருக்கிறது; வேதத்திலிருந்து ஜீவனைப் பெற, நாம் அதை வாசிக்கும்போது, கிறிஸ்துவிடம் வரவேண்டும். மேலும், நாம் தகுந்தமுறையில் வேதாகமத்தை வாசிக்கவேண்டும். வேதாகமம் கிறிஸ்துவைப்பற்றியதாக இருப்பதால், அதில் கிறிஸ்துவைத் தேடுவதே அதை வாசிப்பதற்கான மிகச்சிறந்த வழியாக இருக்கிறது. மக்கள் பல காரணங்களுக்காக வேதாகமத்தை வாசிக்கிறார்கள். சிலர் அதை மாபெரும் இலக்கியமாகக் கருதுகிறார்கள். சிலர், ஆறுதலடைவதற்கோ அல்லது தங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கோ அதை வாசிக்கிறார்கள். வேறுசிலர், நேர்த்தியான மனித வாழ்க்கை வாழ்வது எப்படி என்பதைக் கற்றுக்கொள்வதற்காக அதை வாசிக்கிறார்கள். எனினும், வேதாகமம் பிரதானமாக என்னைப்பற்றியதோ, என் சூழ்நிலையைப்பற்றியதோ அல்லது என் பிரச்சனைகளைப்பற்றியதோ அல்ல, மாறாக, அது கிறிஸ்துவைப்பற்றிய புத்தகம் என்பதை நாம் உணரவேண்டும். வேதாகமம் ஓர் அற்புதமான நபரைப்பற்றியதாகவும், இந்த நபரோடு நமக்கு இருக்கிற சம்பந்தத்தைப்பற்றியதாகவும் இருக்கிறது. பழைய ஏற்பாட்டு கதைகளை நாம் வாசிக்கும்போது, நாம் அதில் கிறிஸ்துவைத் தேடவேண்டும், ஏனென்றால், அவரே அங்கு சித்தரிக்கப்பட்டுள்ள சித்திரங்களின் நிஜமாக இருக்கிறார்.

B. கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் பல முன்னடையாளங்களிலும், உருவகங்களிலும், நிழல்களிலும் சித்தரிக்கப்படுகிறார்

வேதாகமத்தில் ஒரு பயணம், முழு வேதத்திற்கும் மையமாக உள்ள இந்த நபரை நாடி, இவரைப் பாராட்டுகிற பயணமாக இருக்கிறது. நாம் வேதாகமத்தை வாசிக்க வரும்போது, நாம் அதில் கிறிஸ்துவைத் தேடவேண்டும், ஏனென்றால், அவரே வேதாகமத்தின் மையம். புதிய ஏற்பாட்டில் கிறிஸ்துவைப் பார்ப்பது சுலபம், ஆனால் நாம் பழைய ஏற்பாட்டை வாசிக்கும்போது, அதில் எப்படி கிறிஸ்துவைத் தேடுவது? முதலில், பழைய ஏற்பாட்டில் கிறிஸ்துவைக் கண்டுகொள்வதற்கு, பழைய ஏற்பாட்டிலுள்ள சித்திரங்களுக்கும், புதிய ஏற்பாட்டில் அற்புதமான நபராகிய கிறிஸ்துவிலுள்ள அவைகளின் நிறைவேற்றத்திற்கும் இடையே உள்ள தொடர்பை நாம் பார்க்கவேண்டும். புதிய ஏற்பாட்டில், கிறிஸ்து வெளிப்படையான வார்த்தைகளில் சித்தரிக்கப்படுகிறார், ஆனால் பழைய ஏற்பாட்டில், அநேக முன்னடையாளங்களாலும், உருவகங்களாலும், நிழல்களாலும் அவர் சித்தரிக்கப்படுகிறார், இவைகள் கிறிஸ்துவைப்பற்றிய சித்திரங்களாக இருக்கின்றன. இந்தச் சித்திரங்களில் முன்னடையாளங்களும், உருவகங்களும், நிழல்களும் அடங்கியுள்ளன; முன்னடையாளங்கள் கிறிஸ்துவை அயைாளப்படுத்துகிற நபர்களாக அல்லது பொருட்களாக இருக்கின்றன; உருவகங்கள் கிறிஸ்துவைப்பற்றிய சித்திரத்தைக் காண்பிக்கிற சூழ்நிலைகளாக இருக்கின்றன (உதாரணமாக, நம்மை உலகத்திலிருந்து இரட்சிக்கும்படி கிறிஸ்து நம் நிஜமான பஸ்காவாக இருத்தல்); நிழல்கள் கிறிஸ்துவை சித்தரிக்கிற சடங்காச்சாரங்களாக அல்லது நடைமுறைகளாக இருக்கின்றன (உதாரணமாக, ஓய்வுநாள், புசித்தல்சார்ந்த சடங்காச்சாரங்கள், பண்டிகைகள் போன்றவை). எனினும், எளிமையைக் கருத்தில்கொண்டு, இந்தப் பாடம் பிரதானமாக கிறிஸ்துவைப்பற்றிய முன்னடையாளங்களை மட்டும் குறிப்பிடுகிறது.

C. புதிய ஏற்பாட்டில் கிறிஸ்து இந்த எல்லா முன்னடையாளங்களுக்கும், உருவகங்களுக்கும், நிழல்களுக்கும் நிஜமாக இருக்கிறார்—மத். 1:1; கொலோ. 2:17

புதிய ஏற்பாட்டின் மையமாகிய இந்த நபரே பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லாச் சித்திரங்களின் நிறைவேற்றமாகவும் இருக்கிறார். இதனால்தான், கிறிஸ்துவே சகல நிழல்களுக்கும் (அவரைப்பற்றிய சித்திரங்களுக்கு—கொலோ 2:17) பொருளாக இருக்கிறார் என்று பவுல் கூறுகிறான்.

II. கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லா நேர்மறையான சித்திரங்களுக்கும் நிஜமாக இருக்கிறார்

கிறிஸ்துவே பழைய ஏற்பாட்டிலுள்ள எல்லா நேர்மறையான சித்திரங்களுக்கும் நிஜமாக இருக்கிறார். இந்தச் சித்திரங்கள் யாவும், ஆராய்ந்தறியமுடியாத வகையில் ஐசுவரியமுள்ள நம் கிறிஸ்துவின் வெவ்வேறு அம்சங்களை நமக்குக் காண்பிக்கின்றன (எபே. 3:8). வேதாகமத்தில் நாம் செய்த பயணத்தின்போது, கிறிஸ்துவைப்பற்றிய அநேக முன்னடையாளங்களை நாம் ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். கிறிஸ்து நிஜமான ஜீவ விருட்சமாக இருக்கிறார் (ஆதி. 2:9), அவர் தம் விலாவிலிருந்து எடுக்கப்பட்ட மறுபாதியாகிய சபையை அடையும் நிஜமான கணவராக இருக்கிறார் (ஆதி. 2:21-24). அவர் ஆட்டுக்குட்டியானவராக இருக்கிறார், அவர் நம் பதிலீடாக பலியிடப்பட்டார், இப்போது நம் நீதியாக நம்மை மூடியிருக்கிறார் (ஆதி. 3:21). அவர் நோவாவையும், அவனுடைய குடும்பத்தையும் தேவனுடைய நியாயத்தீர்ப்பிலிருந்து இரட்சித்த நிஜமான பேழையாக இருக்கிறார் (ஆதி. 6:14). அவர் மரணபரியந்தம் பிதாவுக்குக் கீழ்ப்படிந்த நிஜமான ஈசாக்காக இருக்கிறார், அவர் நம் பதிலீடாக மரித்த ஆட்டுக்கடாவாகவும் இருக்கிறார் (ஆதி. 22:9, 13). நிஜமான ஈசாக்கு என்ற முறையில், அவர் மனித இனத்திலிருந்து சபையை தம் மணவாட்டியாகவும் எடுத்துக்கொள்வார் (ஆதி. 24:1-67). கிறிஸ்து, யாக்கோபு கண்ட நிஜமான பரலோக ஏணியாக இருக்கிறார் (ஆதி. 28:12; யோவான் 1:51). அவர் நிஜமான யோசேப்பாகவும் இருக்கிறார், அவர் தம் பிதாவுக்குப் பிரியமானவராக இருந்தார், ஆனால் தம் சகோதரர்களால் விற்றுப்போடப்பட்டார், அவர் சகல தேசங்களுக்கும் உணவளிக்க ஐசுவரியமான உணவு நிரப்பீட்டை உடையவராகவும் இருக்கிறார் (ஆதி. 37:3, 28; 41:57). இந்த காரியங்கள் யாவும் 1-ஆம் பகுதியில் பேசப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்து நம் பஸ்காவாகவும், பஸ்கா ஆட்டுக்குட்டியாகவும் இருக்கிறார் (யாத். 12:11). அவர், நாம் புசிக்கும் மன்னாவாக இருக்கிறார் (யாத். 16:15). அவர் தேவனுடைய சாட்சியாகிய நியாயப்பிரமாணத்தின் நிஜமாகவும் (யாத். 20:1-17), பெட்டியின் நிஜமாகவும் ஆசரிப்புக் கூடாரத்தின் நிஜமாகவும் இருக்கிறார் (யாத். 25:8-10). அவர் எல்லா பலிகளாகவும் (லேவி. 1–5), நாம் புசிப்பதற்கான ஏற்ற உணவாகவும் இருக்கிறார் (லேவி. 11). கிறிஸ்து நிஜமான நசரேயராகவும் இருக்கிறார் (எண். 6:2). கிறிஸ்துவைப்பற்றிய இந்தச் சித்திரங்கள் யாவும் 2-ஆம் பகுதியில் பேசப்பட்டுள்ளது. மேலும், உபாகமத்தில், சகலத்தையும் உள்ளடக்கிய நம் நல்ல தேசமாகிய கிறிஸ்துவின் பல அம்சங்களை நாம் பார்க்கிறோம். இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேசெல்லும்! ஏராளமான அம்சங்களில் கிறிஸ்து நமக்கு என்னவாகவெல்லாம் இருக்கமுடியுமோ, அவையெல்லாவற்றையும் நமக்குக் காண்பிக்க ஆயிரக்கணக்கான சித்திரங்கள் அவருக்குத் தேவைப்படக்கூடிய அளவுக்கு அவர் அவ்வளவு ஐசுவரியமுள்ளவராகவும், சகலத்தையும் உள்ளடக்கியவராகவும் இருக்கிறார். பழைய ஏற்பாட்டிலுள்ள கிறிஸ்துவைப்பற்றிய எல்லா சித்திரங்களையும் பார்த்துதீர்ப்பது கடினம்.

A. பழைய ஏற்பாட்டிலுள்ள முன்னடையாளங்களுக்கு கிறிஸ்து வரையறையாகவும் விளக்கமாகவும் அமைகிறார்—மத். 1:1; கலா. 3:14

பழைய ஏற்பாட்டிலுள்ள சித்திரங்கள் புதிய ஏற்பாட்டில் வரையறுக்கப்படுகின்றன. உதாரணமாக, ஆபிரகாம் தன் குமாரனாகிய ஈசாக்கை மோரியா மலையின்மேல் தேவனுக்கு ஒப்புக்கொடுத்தான்; ஈசாக்கு தன் தந்தைக்குக் கீழ்ப்படிந்தவனாக, மரத்தையும் சுமந்துகொண்டு, மனமுவந்து சென்றான். இக்கதையில், ஈசாக்கு கிறிஸ்துவுக்கு முன்னடையாளமாக இருக்கிறான் (பகுதி 1-ல் பாடம் 15-ஐ பார்க்கவும்). எனினும், இந்த முன்னடையாளத்தை வரையறுக்க கிறிஸ்து இல்லையென்றால், இது நமக்கு மிகவும் சுவாரஸ்யமான ஒரு கதையாக மட்டுமே தோன்றும். நாம் புதிய ஏற்பாட்டுக்கு வரும்வரை, இந்த முன்னடையாளத்தை நம்மால் புரிந்துகொள்ளமுடிவதில்லை. கொல்கொதா இருந்த இடமாகிய (மத். 27:33) மோரியா மலையில் நமக்காக மரிக்கும்படி, பிதாவின் சித்தப்படி (மத். 26:39-42), கிறிஸ்து எப்படி மனமுவந்து சிலுவைக்குச் சென்றார் என்பதை நாம் சுவிசேஷங்களில் பார்க்கிறோம் (மத். 16:21; 26:1-2). அவர் எந்த மரத்தின்மேல் ஒப்புக்கொடுக்கப்படவிருந்தாரோ, அந்த மரத்தையும் அவர் சுமந்துசென்றார் (யோவான் 19:17)! இவ்வாறு, ஆபிரகாமின் குமாரனுடைய நிஜமாகிய கிறிஸ்து பழைய ஏற்பாட்டு முன்னடையாளத்தின் வரையறையாக இருக்கிறார்; பழைய ஏற்பாட்டு சித்திரம் எதைப்பற்றியது என்று அவர் நமக்குக் காண்பித்தார். ஆபிரகாம் இவ்விதமாக ஈசாக்கை ஒப்புக்கொடுத்தபின், ஆபிரகாமின் சந்ததியில் பூமியின் தேசங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்று தேவன் ஆபிரகாமுக்கு வாக்களித்தார் (ஆதி. 22:18). எனவே, மத்தேயு 1:1-ல் “ஆபிரகாமின் குமாரனாக” கிறிஸ்து அறிமுகப்படுத்தப்பட்டபோது, ஆவியானவரைக்குறித்த வாக்குத்தத்தத்தை நாம் விசுவாசத்தின்மூலம் ‍பெற்றுக்கொள்ளுமாறு, அவரில்தான் தேவனுடைய ஆசீர்வாதம் பூமியின் சகல தேசங்களுக்கும் வரும் என்பதும் அதின் அர்த்தமாக இருக்கிறது (கலா. 3:14). நாம் பவுலின் நிருபங்களை வாசிக்கும்வரை, இந்த முன்னடையாளத்தின் முழு உட்கருத்தையும் நாம் உணர்ந்துகொள்வதில்லை! இவ்வாறு, கிறிஸ்து பழைய ஏற்பாட்டில் உள்ள தம்மைப்பற்றிய எல்லா சித்திரங்களுக்குமான வரையறையாக இருக்கிறார்.

B. கிறிஸ்துவின் வாழ்க்கை, முன்னடையாளங்களைக்குறித்து நமக்கு நினைவூட்டுகிறது—மத். 1:1; 2 சாமு. 7:12-14; யோவான் 1:29

சுவிசேஷங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள கிறிஸ்துவின் வாழ்க்கையை நாம் பார்க்கையில், பழைய ஏற்பாட்டிலுள்ள சித்திரங்கள் நமக்குப் பரிச்சயமாயிருக்கும்போது, அனைத்தும் நமக்கு அதிக முக்கியத்துவம்வாய்ந்ததாக இருக்கின்றன. உதாரணமாக, மத்தேயு 1:1-ல் அவர் “தாவீதின் குமாரனாக” அறிமுகப்படுத்தப்படுகிறார் (ஒப்பீடு மாற்கு 10:47). அவரே தாவீதின் சிங்காசனத்தை சுதந்தரிக்கப்போகிறவராகவும், தேவனுக்கு வீட்டைக் கட்டப்போகிறவராகவும், என்றென்றைக்கும் ஸ்தாபிக்கப்படக்கூடிய இராஜ்யத்தை உடையவராகவும் இருக்கிறார் என்பதை நாம் உடனே உணர்ந்துகொள்ளவேண்டும் (2 சாமு. 7:12-13). யோவானின் சுவிசேஷத்தில், கிறிஸ்து “தேவ ஆட்டுக்குட்டியாக” அறிமுகப்படுத்தப்படுகிறார் (யோவான் 1:29). இது பஸ்கா ஆட்டுக்குட்டியை நமக்கு ஞாபகப்படுத்துகிறது; நம் மீட்பைக்குறித்த அதின் உட்கருத்தை நாம் உணரும்போது, அது நமக்கு மிகவும் அர்த்தமுள்ளதாக மாறுகிறது. அதுபோல, கிறிஸ்துவின் வாழ்க்கையிலுள்ள பல காரியங்கள் பழைய ஏற்பாட்டு சித்திரங்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன, அதினால் இவைகள் நமக்கு மிகுந்த முக்கியத்துவம்வாய்ந்தவையாக மாறுகின்றன.

C. வேறுவழியில் நம்மால் அறிந்துகொள்ளமுடியாத, கிறிஸ்துவைப்பற்றிய பல விவரங்களை முன்னடையாளங்களின்மூலம் நாம் அறிந்துகொள்கிறோம்

பழைய ஏற்பாட்டிலுள்ள சித்திரங்கள் இல்லாவிட்டால், கிறிஸ்துவைப்பற்றிய அநேக காரியங்களை நம்மால் ஒருபோதும் புரிந்துகொள்ளமுடியாது. உதாரணமாக, ஆராய்ந்தறியமுடியாத வகையில் கிறிஸ்து ஐசுவரியமுள்ளவராக இருக்கிறார் என்று பவுல் நமக்குச் சொல்லுகிறான் (எபே. 3:8). எனினும், நல்ல தேசம் என்ற முன்னடையாளம் இல்லாவிட்டால், “சகலத்தையும் உள்ளடக்கியவர்” என்பதின் அர்த்தத்தை நம்மால் எப்படி புரிந்துகொள்ளமுடியும்? இப்படிப்பட்ட காரியங்களை வார்த்தைகளால் வெளிப்படுத்துவது கடினம், இருப்பினும், ஒரு சித்திரம் “ஓராயிரம் வார்த்தைகளுக்குச் சமம்.” ஆதியாகமம் 22-ல், மோரியா மலைக்கு போகும் வழியில் ஈசாக்கு தன் தந்தையுடன் ஐக்கியங்கொண்டதைப்பற்றிய சம்பவம், புதிய ஏற்பாட்டில் காணப்படாத விவரங்களைக்குறித்த இன்னொரு உதாரணமாகும். கிறிஸ்து சிலுவையில் அறையப்படப்போகும் வழியில் நிச்சயமாக அவர் தம் பிதாவுடன் ஐக்கியங்கொண்டார், ஆனால் புதிய ஏற்பாடு இதைக்குறித்து வெளிப்படையான வார்த்தைகளில் எதையும் சொல்லவில்லை. எனினும், ஆதியாகமம் 22-ல், கிறிஸ்துவுக்கும் அவருடைய பிதாவுக்கும் இடையே உள்ள ஐக்கியத்தைப்பற்றிய ஓர் அழகான சித்திரம் காணப்படுகிறது.

III. பழைய ஏற்பாட்டிலுள்ள கிறிஸ்துவைப்பற்றிய சித்திரங்களையும், கிறிஸ்துவில் அவைகளின் நிறைவேற்றத்தையும் பார்க்க கற்றுக்கொள்வதின்மூலம், ஆராய்ந்தறியமுடியாத வகையில் ஐசுவரியமுள்ள நம் கிறிஸ்துவை அறிந்துகொள்வதற்கு நாம் உதவியடைகிறோம்—எபே. 3:8

முழு வேதாகமமும் கிறிஸ்துவைப்பற்றிய புத்தகமாக இருக்கிறது. பழைய ஏற்பாடு கிறிஸ்துவைப்பற்றிய சித்திரங்களால் நிறைந்திருக்கிறது, கிறிஸ்துவே இந்த எல்லா சித்திரங்களுக்கும் நிஜமாகவும், நிறைவேற்றமாகவும் இருக்கிறார். நாம் தகுந்தமுறையில் வேதாகமத்தை வாசிக்கும்போது, ஒவ்வொரு புத்தகத்திலும் நம்மால் கிறிஸ்துவைப் பார்க்கமுடியும்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: பழைய ஏற்பாடு ஒரு வீட்டின் வரைபடத்தைப்போன்றது. இந்த வரைபடம் வீட்டைப்பற்றிய பல விவரங்களைத் தருகிறது, வீடு எப்படியிருக்கும் என்பதை இது காண்பிக்கிறது. எனினும், இந்த வரைபடம் “நிஜமான பொருள்” அல்ல, வெறும் வடைபடத்தினால் யாரும் திருப்தியடையமாட்டார்கள். மேலும், உங்களிடம் வரைபடம் மட்டுமே இருந்தால், இறுதி உற்பத்திப்பொருள் துல்லியமாய் எப்படியிருக்கும் என்பதை கற்பனைசெய்வது கடினம். புதிய ஏற்பாட்டிலுள்ள கிறிஸ்து வீட்டைப்போல் இருக்கிறார். நம்மிடம் அவர் இருக்கும்போது, நம்மிடம் எல்லாம் இருக்கிறது. இருப்பினும், ஒரு வீடு கட்டிமுடிக்கப்பட்டபிறகுகூட, அதின் வடிவத்தையும் வடிவமைப்பையும் புரிந்துகொள்வதற்கு, நீங்கள் அதின் வரைபடத்தை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டியிருக்கலாம். அதேபோல, இப்போது கிறிஸ்து வந்துவிட்டதால், நம் கிறிஸ்துவின் சகல ஐசுவரியங்களையும் அறிந்துகொள்வதற்கு, பழைய ஏற்பாட்டிலுள்ள அவரைப்பற்றிய சித்திரங்களுக்கு நாம் திரும்பிச்செல்லத்தான் வேண்டியிருக்கிறது (எபே. 3:8, 18).

சுவிசேஷ செயலாக்கம்: “இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோவா. 1:29)!” பழைய ஏற்பாட்டின் அனைத்து பலிகளுக்கும் நிஜமாகவும், நிறைவேற்றமாகவும் கர்த்தராகிய இயேசு வருவதை யோவான் ஸ்நானன் கண்டபோது, அவன் பூரிப்படைந்து இந்த வார்த்தைகளை அறிவித்தான். மனிதனுடைய வீழ்ச்சிக்குப்பின் தேவனால் அளிக்கப்பட்ட முதல் பலியை யோவான் தன் அறிவிப்பில் நினைவுகூர்ந்திருக்கலாம் (ஆதி. 3:21); தங்கள் பாவத்தை மூடவும், அதின் அபராதமாகிய மரணத்தைச் சுமக்கவும் ஓர் ஆட்டுக்குட்டி தேவனால் அடிக்கப்படுவதை ஆதாமும் ஏவாளும் அப்போது நேரில் கண்டிருக்கலாம் (ஆதி. 2:17; ரோ. 6:23). வருடங்கள்தோறும் இஸ்ரவேல் மக்களால் செலுத்தப்பட்ட எண்ணற்ற மிருகங்களை (எப்போதும் தங்கள் பாவங்களை மூடுவதற்கு மட்டுமே உதவினாலும், ஒருபோதும் அவைகளைச் சுத்திகரிக்கமுடியாதவைகளை) நினைத்து, இவ்வளவு நீண்டகாலத்திற்குப்பின், சித்திரத்திற்குப்பதிலாக நிஜம் வந்துவிட்டது என்பதற்காக அவன் பாராட்டினால் நிறைந்தவனாக இருந்திருக்கவேண்டும்! உலகத்தின் பாவத்தை நீக்கவும், மரண தண்டனையை சரியாய் பெற்றிருக்கவேண்டியவர்களாகிய நமக்காக மரணத்தை அனுபவிக்கவும் வந்த நிஜமான தேவ ஆட்டுக்குட்டியாக கர்த்தராகிய இயேசுவை யோவான் ஸ்நானன் அடையாளங்கண்டு, பாராட்டினான். இப்போது, நாமும் இந்த தேவ ஆட்டுக்குட்டியானவரைப் பாராட்டவேண்டும். அவருக்குள் விசுவாசிப்பதின்மூலம், நம் பாவங்கள் கழுவப்படுகின்றன, நாம் பாவத்தின் மரண அபராதத்திலிருந்து இரட்சிக்கப்படுகிறோம். தேவ ஆட்டுக்குட்டியாகவும், பிரபஞ்சத்திலுள்ள எல்லா நேர்மறையான காரியத்தின் நிஜமாகவும் அவரைப் பெற்றுக்கொள்ள, உங்கள் இருதயத்தில் விசுவாசிப்பதினாலும், உங்கள் பாவங்களைவிட்டு மனந்திரும்புவதினாலும், இயேசுவின் நாமத்தைநோக்கிக் கூப்பிடுவதினாலும் சுத்திகரிக்கப்பட்டு, இரட்சிக்கப்படுங்கள் (ரோ. 10:9, 13)! அவரைப் பெற்றுக்கொள்ளுங்கள், நிஜத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் (யோவான் 14:6)!

முக்கியமான விஷயங்கள்: பழைய ஏற்பாட்டின் முன்னடையாளக் கோட்பாட்டை அறிந்துகொள்ளுதல் (I.D.); முழு வேதாகமமும் கிறிஸ்துவைப்பற்றியது என்பதை அறிந்துகொள்ளுதல் (II.F.2).

BACKGROUND READING: The Conclusion of the New Testament, Messages 41–43.

REFERENCES: The Conclusion of the New Testament, Messages 41–45; Life-study of Matthew, Message 1, pp 1–2; Matthew 1:1, footnote 1.