வேதாகமத்தினூடாய் ஒரு பயணம்

பகுதி 7

பாடம் 01 – 08

பாடம் 09 – 18

கிறிஸ்து என்னும் நபர்

அடிமை-இரட்சகராகிய கிறிஸ்து

குறிக்கோள்: மாற்குவின் சுவிசேஷத்தில், கிறிஸ்து தேவனுடைய திட்டத்திற்காக பாவிகளுக்கு சேவைசெய்யும் அடிமை-இரட்சகராக இருக்கிறார் என்பதைப் பார்க்க வாலிபர்களுக்கு உதவுவது.

பொருட்சுருக்கம்: கிறிஸ்துவைப்பற்றி மாற்கு எழுதிய வாழ்க்கைவரலாற்றில், கிறிஸ்து உயர்குடிப்பிறந்த இராஜாவாக காண்பிக்கப்படவில்லை, மாறாக, ஒரு தாழ்வான அடிமையாக காண்பிக்கப்படுகிறார். அவர் சேவைபெறும்படி வராமல், சேவைசெய்யவும், அநேகரை மீட்கும்பொருளாக தம் ஜீவனைக் கொடுக்கவும் வருகிற அடிமையாக இருக்கிறார் (மாற்கு 10:45). இந்த காரணத்தினால், மாற்குவின் சுவிசேஷம் மத்தேயுவின் சுவிசேஷத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு கண்ணோட்டத்தை எடுத்துக்கொள்கிறது. கிறிஸ்துவின் அற்புதமான வார்த்தைகளை நமக்கு வழங்குவதற்குப்பதிலாக, அவருடைய மேன்மையான செயல்களால் நம்மைக் கவர்வதே மாற்குவின் நோக்கமாக இருக்கிறது. ஓர் அடிமையின் வார்த்தைகள் அல்ல, அவனுடைய செயல்களே முக்கியமாக இருக்கின்றன. எனவேதான், பாவிகளை தேவனுடைய குறிக்கோளுக்குள் கொண்டுவருமாறு அவர்களுக்காக கர்த்தர் செய்த பல்வேறு செயல்களைப்பற்றிய தெளிவான விவரங்களை மாற்கு வழங்குகிறது. தேவனுடைய சேவகராக அவர் ஏசாயாவில் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்டார்; மரணபரியந்தம் தம்மைத் தாழ்த்தியவராக அவர் பவுலால் பேசப்படுகிறார். மிகத்தாழ்வான நிலைக்கு அவர் தம்மைத் தாழ்த்தினார்; ஓர் அடிமையாக அவர் தேவனுடைய குறிக்கோளுக்காக உண்மையாய் உழைத்தார். நம் இரட்சிப்புக்காக நம்மை சேவிக்க வந்த தேவனுடைய இந்த அடிமையைப்போல, இவ்வளவு மனத்தாழ்மையுள்ள, இவ்வளவு அழகான, இவ்வளவு அணுகத்தக்க நபர் யாருமில்லை.

பின்புலம்: அடிமை, சேவைசெய்தல், மனத்தாழ்மை, கீழ்ப்படிதல் ஆகிய வார்த்தைகள் வாலிபர்களுக்கு அவ்வளவு வசீகரமாகத் தோன்றாதிருக்கக்கூடும். ஆனால், நாம் அழகான அடிமை-இரட்சகராகிய கிறிஸ்துவைப் பார்த்து, நாம் எவ்வளவாய் நம் சுயத்திற்காகவே இருக்கிறோம் என்பதைப் பரிசீலிக்கும்போது, சேவைசெய்கிற ஜீவனை உடைய இந்த நபர்தான் நமக்குத் தேவை என்பதை நாம் உணர்கிறோம். மற்றவர்களைத் தொடர்புகொள்ளுதல், நடைமுறை தேவைகளை கவனித்துக்கொள்ளுதல் (சுத்தம்செய்தல், ஒழுங்குசெய்தல் போன்ற) பல துரைகளில் சபைக்கும் இந்த ஜீவன்தான் தேவைப்படுகிறது. நம் அடிமை-இரட்சகரின் சேவைசெய்கிற ஜீவனை நாம் ருசிக்கும்போது, கர்த்தர்மேலும், அவருடைய சரீரத்தின் அவயவங்கள்மேலும் உள்ள நம் அன்பும், நம் மகிழ்ச்சியும், நாம் பயனுள்ளவர்களாக இருக்கிறோம் என்ற உணர்வும்கூட அதிகரிக்கும்.

அதிகாரங்கள்: மாற்கு 1–16.

போதிக்கவேண்டிய உண்மைகளுடன்கூடிய செய்திக்குறிப்பு:

கிறிஸ்துவைப்பற்றி மத்தேயு எழுதிய வாழ்க்கைவரலாறு, பரலோக இராஜ்யத்தை பூமிக்கு கொண்டுவருவதற்காக வருகிற இராஜ-இரட்சகராக அவரைக் காண்பிக்கிறது. மாற்கு எழுதிய வாழ்க்கைவரலாறு முற்றிலும் மாறுபட்ட கண்ணோட்டத்திலிருந்து அவரைக் காண்பிக்கிறது, அவர் மனிதனை சேவிக்க ஒரு தாழ்வான அடிமையாக இருக்கிறார் என்று அது காண்பிக்கிறது. என்னே கருத்து! பிரபஞ்சத்தின் தேவன்தாமே உங்களையும் என்னையும் சேவிக்கும்படி ஓர் அடிமையாக தம்மைத் தாழ்த்தியிருக்கிறார். இந்த வாழ்க்கைவரலாற்றில், கிறிஸ்துவுக்கு எந்த வாழ்க்கைவரலாறும் இல்லை, எந்த அந்தஸ்தும் இல்லை, எந்தவொரு புறம்பான அழகும் இல்லை, சில போதக வார்த்தைகள்தான் இருக்கின்றன, ஆழமான சத்தியங்களைப்பற்றி சில வார்த்தைகள்தான் இருக்கின்றன. ஏன்? ஏனென்றால், அவர் தேவனை சேவிக்கிற ஒரு தாழ்வான அடிமை மட்டும்தான். இந்த காரணத்தினால்தான், அவருடைய அந்தஸ்தையும் போதனையையும் வலியுறுத்துவதற்குப்பதிலாக, இந்த அடிமையின் மேன்மையான செயல்களையே மாற்கு பிரதானமாக வலியுறுத்துகிறது.

I. தேவனுடைய அடிமை என்ற முறையில், கிறிஸ்து தேவனுடைய நித்திய குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக, பாவிகளை மீட்கும்பொருளாக தம் ஜீவனைக் கொடுத்து அவர்களை சேவித்தார்—மாற்கு 10:45

“அப்படியே, மனுஷகுமாரனும் ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ்செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்,” என்று மாற்கு 10:45-ல் கர்த்தர் கூறினார். இதுவே எல்லாவற்றையும்விட மிகுந்த பலமான வார்த்தையாகும்; தம் மனுஷீகத்தில் மனுஷகுமாரனாகிய அடிமை-இரட்சகர் தம் ஜீவனையும் கொடுத்து பாவிகளை சேவிப்பதற்கான தேவனுடைய அடிமையாக இருந்தார் என்று இது கூறுகிறது (Mark 10:45, footnote 1). மத்தேயுவில், அவர் இராஜாவாக இருக்கிறார்; லூக்காவில், அவர் இந்த பூமியில் வாழ்ந்தவர்களிலேயே உண்மையான, நேர்த்தியான ஒரே மனிதனாக இருக்கிறார்; யோவானில், அவர் தேவனாகவே இருக்கிறார். ஆனால் மாற்குவில், அவர் தேவனுடைய குறிக்கோளுக்காக சிரத்தையாய் பாவிகளை சேவிக்கிற ஒரு தாழ்வான அடிமையாக காண்பிக்கப்படுகிறார். அவர் தம் வாழ்க்கைமுழுவதும் தேவனுடைய குறிக்கோளுக்காக உண்மையாய் உழைத்தார்; நம்மை தேவனிடம் திரும்பவும் மீட்டுக்கொள்ளுமாறு, சிலுவையில் மீட்கும்பொருளாக அவர் தம் ஜீவனைக் கொடுத்தார். அவர் நமக்காக என்னே அற்புதமான சேவையை செய்துமுடித்தார்!

II. தேவனுடைய அடிமையாகிய கிறிஸ்து ஏசாயாவினாலும் பவுலினாலும் விளாவாரியாகப் பேசப்பட்டிருக்கிறார்

A. அவர் ஏசாயாவினால் தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட தேவனுடைய அடிமையாக, யெகோவாவின் சேவகராக இருக்கிறார்—ஏசா. 42:1-4, 6-7; 49:5-7; 50:4-7; 52:13—53:12

மாற்குவின் சுவிசேஷத்தில், யெகோவாவின் சேவகராகிய தேவனுடைய அடிமை என்ற முறையில் கிறிஸ்து ஏசாயாவிலுள்ள தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றமாக இருக்கிறார். “இதோ, நான் ஆதரிக்கிற என் தாசன், நான் தெரிந்துகொண்டவரும், என் ஆத்துமாவுக்குப் பிரியமானவரும் இவரே,” என்று ஏசாயா 42:1 கூறுகிறது. ஏசாயா, தேவனுடைய இந்த சேவகரை [தாசனை] மிகவும் விளாவாரியாக விவரிக்கிறது. அவர் “வறண்ட நிலத்திலிருந்து துளிர்க்கிற வேராக” ஓர் ஏழ்மையான தச்சனுடைய வீட்டில் வளர்ந்தார்; அவருக்கு ரூபமும் இல்லை, சொந்தரியமும் இல்லை, அழகும் இல்லை (ஏசா. 53:2). அவர் துக்கங்கள்கொண்ட, அசட்டைபண்ணப்பட்ட மனிதனாக, துயரத்திற்குப் பழக்கப்பட்டவராக இருந்தார் (ஏசா. 53:2-3). இப்படிப்பட்டவராக, அவர் மனித வாழ்க்கையின் எல்லா பாடுகளையும் ருசிபார்த்தார். அவர் அதிகாரிகளுக்கு அடிமையாகவும் இருந்தார் (ஏசா. 49:7), அடிக்கிறவர்களுக்கு அவர் தம் முதுகை ஒப்புக்கொடுத்தார் (ஏசா. 50:6). அவர் கூக்குரலிடவுமில்லை, வீதியில் தம் சத்தத்தைக் கேட்கப்பண்ணவுமில்லை (ஏசா. 42:2), அவர் நெரிந்த நாணலை முறிக்கவுமில்லை, மங்கியெரிகிற திரியை அணைக்கவுமில்லை (ஏசா. 42:3). தேவனுடைய அடிமையாக அவருக்கு கல்லிமானின் நாவு இருந்தது (ஏசா. 50:4), அவர் தேவனில் நம்பிக்கைகொண்டிருந்தார் (ஏசா. 50:7). அவர் நம் துயரங்களைத் தாங்கினார், நம் துக்கங்களைச் சுமந்தார், நம் அக்கிரமங்களினிமித்தம் நொறுக்கப்பட்டார், நம் சமாதானத்திற்காக சிட்சிக்கப்பட்டார் (ஏசா. 53:4-5). அவர் தம் ஆத்துமாவை மரணத்தில் ஊற்றினார் (ஏசா. 53:12). அதன்பின், உயிர்த்தெழுதலில், அவர் நம்மை நீதிப்படுத்தினார், அவர் மேன்மைபடுத்தப்பட்டு, உயர்த்தப்பட்டார் (ஏசா. 53:11; 52:13). இப்போது அவர் பூமியின் கடைசிபரியந்தமும் தேவனுடைய இரட்சிப்பாயிருக்கிறார் (ஏசா. 49:6). என்னே அற்புதமான தேவ அடிமை. மாற்குவில், இந்த தீர்க்கதரிசனங்கள் எல்லாவற்றையும் இரட்சகர் நிறைவேற்றினார். (Life-study of Mark, Message 2-ஐ பார்க்கவும்).

B. அவர் பவுலால் பேசப்பட்ட, மரணபரியந்தமும் கீழ்ப்படிந்த அடிமையாக இருந்தார்—பிலி. 2:5-9

கிறிஸ்து எப்படி மிகத்தாழ்வான நிலைக்கு தம்மைத் தாழ்த்திக்கொண்டார் என்பதைப்பற்றி பிலிப்பியரில் பவுல் பேசுகிறான். தேவ ரூபம்கொண்டிருந்த அவர் தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபம் எடுத்துக்கொண்டார். அவர் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்ததின்மூலம், மேலும் தம்மைத் தாழ்த்தினார். இது ஏதாவது ஒரு மரணமல்ல, மாறாக, சிலுவையின் மரணம். ஆகையால், எல்லாவற்றையும்விட உயர்ந்த சிகரத்திற்கு தேவன் அவரை உயர்த்தி, எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார், அது இயேசு என்ற நாமம் ஆகும்.

III. தேவனுடைய அடிமையாக, கிறிஸ்து மிக அழகாகவும், போற்றத்தக்கவராகவும், அணுகத்தக்கவராகவும் இருக்கிறார்

மத்தேயுவில், கிறிஸ்து இராஜாவாக காண்பிக்கப்படுகிறார், ஆனால், மாற்கு அவரை ஒரு தாழ்வான, அழகான, போற்றத்தக்க, அணுகத்தக்க அடிமையாக காண்பிக்கிறது. இந்த காரணத்தினால், நாம் மாற்குவின் புத்தகத்தைப் பொக்கிஷமாகக் கருதவேண்டும். அமெரிக்க ஜனாதிபதி தன் பதிவிக்காலத்தை முடித்தபிறகு, ஒரு பராமரிப்பாளராக சேவைசெய்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் ஜனாதிபதியாக இருந்தபிறகு, மற்றவர்களுக்கு சேவைசெய்ய ஒரு பராமரிப்பாளராகும்படி மனமுவந்து தன்னைத் தாழ்த்துவார். இது மேன்மையானதாக இருக்குமல்லவா? இப்படிப்பட்ட ஒருவர் ஜனாதிபதியாக இருந்ததிலுள்ள மேன்மை, அவர் ஒரு பராமரிப்பாளராக மாறியதிலுள்ள மேன்மைக்கு ஒப்பாகமுடியாது. அவர் ஜனாதிபதியாக இருந்ததைவிட, அவர் ஒரு பராமரிப்பாளராக இருப்பதற்காக பெரும்பாலான குடிமக்கள் அவரை அதிகமாகப் பாராட்டுவார்கள் என்று நான் நம்புகிறேன். அவர் ஒரு ஜனாதிபதியாக இருப்பதில், அவருடைய மனுஷீகத்தின் அழகைக்குறித்து நாம் அவ்வளவு அதிகமாகப் பார்க்கமாட்டோம். அவர் மற்றவர்களுக்கு சேவைசெய்ய ஒரு பராமரிப்பாளராக மாறுவாரானால், அவருடைய மனுஷீகத்திலுள்ள அழகை, அதாவது, நற்பண்பை நாம் பார்ப்போம். அமெரிக்க ஜனாதிபதி என்ற உயர்ந்த பதவி வகித்தபின்பு, ஒருவர் ஒரு பராமரிப்பாளராக மாறுவது எவ்வளவு அழகானது! ஒரு ஜனாதிபதியின் முன்னிலையில் நம்மில் யாரும் செளகரியமாக உணர்வோமா என்பது சந்தேகம்தான், ஆனால், ஒரு பராமரிப்பாளரிடம் நாமெல்லாரும் செளகரியமாக உணர்வோம். ஒரு முன்னாள் ஜனாதிபதி ஒரு பராமரிப்பாளராகப் பணிபுரிவதைப் பார்ப்பது எவ்வளவு மேன்மையானதாக இருக்கும், ஏனென்றால், மேன்மையான மனித நற்பண்புகளை நாம் அவரில் பார்ப்போம்! நீங்கள் எப்படிப்பட்ட நபரை விரும்புகிறீர்கள், ஜனாதிபதியையா அல்லது பராமரிப்பாளரையா? நான் ஒரு ஜனாதிபதியுடன் இருப்பதைவிட, ஒரு பராமரிப்பாளருடன் இருப்பதையே விரும்புகிறேன். வெள்ளை மாளிகையில் ஓர் இரவு தங்கியிருக்கும்படி ஜனாதிபதி என்னை அழைப்பாரானால், வீட்டில் இருக்கும் உணர்வு எனக்கு இருக்காது. ஒரு முன்னாள் ஜனாதிபதி ஒரு பராமரிப்பாளராக மாறி, ஓர் இரவு என்னை தன் வீட்டிற்கு அழைப்பாரானால், நான் மிகவும் செளகரியமாக உணர்வேன். (Life-study of Mark, Message 1, p. 4).

IV. அடிமை என்ற முற‍ையில், அவருடைய அற்புதமான வார்த்தைகளைவிட, அவருடைய மேன்மையான செயல்களே வலியுறுத்தப்படுகின்றன

“…பரலோக இராஜ்யத்தைப்பற்றிய இரட்சகரின் ஆச்சரியமான போதனைகளையும் உவமைகளையும் நமக்கு வழங்குகிற மத்தேயுவையும், தெய்வீக சத்தியங்களைப்பற்றிய அவருடைய ஆழமான வெளிப்பாடுகளை வழங்குகிற யோவானையும்போல, அடிமையானவரின் அற்புதமான வார்த்தைகளால் நம்மைக் கவர்வதல்ல, மாறாக, அவருடைய சுவிசேஷ சேவையில் அவருடைய மேன்மையான செயல்களால் நம்மைக் கவர்வதே மாற்குவின் நோக்கம். அடிமை-இரட்சகர் தேவனுக்காக பாவிகளுக்கு வழங்கிய இரட்சிக்கும் சேவையில் அவருடைய சிரத்தையையும், உத்தமத்தையும், மற்ற நற்பண்புகளையும் சித்தரிக்குமாறு, மற்ற சுவிசேஷங்களைவிட அதிக விவரத்தை மாற்குவின் சுவிசேஷம் வழங்குகிறது (Mark 1:1, footnote 1). உதாரணமாக, அடிமை-இரட்சகர் ஒரு கூட்டம் பிசாசுகளைத் துரத்தியதை மாற்கு 5:1-20 பதிவுசெய்கிறது. மாற்குவில் உள்ள இந்த பகுதி, மத்தேயு 8:28-34ல் உள்ள அதின் இணைப்பகுதியைவிட அதிக விளாவாரியாக இருக்கிறது. கர்த்தருடைய வேலையினால் நம்மைக் கவர்வதற்காக மாற்கு இதைச் செய்கிறது. அதன்பின், “நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து” (மத். 16:16) என்று பேதுரு கர்த்தரிடம் கூறிய பகுதியாகிய மத்தேயு 16:13-20ல் மத்தேயு கிறிஸ்துவின் போதனையைக்குறித்து விவரம் அளிப்பதுபோல, மாற்கு 8:27-30ல் மாற்கு அதிகமாக விவரம் அளிக்கவில்லை என்பதை நாம் காண்கிறோம். மாற்குவின் பதிவு, கர்த்தருடைய அற்புதமான வார்த்தைகளுக்குப்பதிலாக, அடிமையாக அவர் செய்த வேலையை வலியுறுத்த முற்படுகிறது. ஓர் அடிமையின் சேவையில் அவனுடைய சிரத்தையான உழைப்பு எந்தளவுக்கு முக்கியமோ, அந்தளவுக்கு அவனுடைய வார்த்தைகள் முக்கியமானவையல்ல என்பது ஒரு விதி.

A. அவர் செயல்களை உடனே செய்தார்—மாற்கு 1:10, 42-43

ஓர் அடிமையைப்பற்றிய மாற்குவின் பதிவு, இந்த அடிமையின் நபருடைய அந்தஸ்தின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கவில்லை, மாறாக, இவருடைய சேவையின் சிரத்தையைப் பிரதிபலிக்கிறது. உடனே என்ற வார்த்தை, அவனுடைய பதிவில் நாற்பத்திரண்டு முறை பயன்படுத்தப்படுகிறது. (Mark 1:10, footnote 1). கர்த்தர் உடனடியாகவும், நிலையாகவும் தேவனுக்குக் கீழ்ப்படிந்தார் என்று இது காண்பிக்கிறது. அவர் மேன்மையான குணமுள்ள அடிமையாக இருந்தார். பலவேளைகளில், ஒரு சிறிய வேலைசெய்யும்படி நம்மைக் கேட்டுக்கொள்ளும்போது, நாம் அதை உடனே செய்வதில்லை, ஆனால், சிரத்தையுள்ள தேவ அடிமை என்ற முறையில், கர்த்தர் உடனடியாகவும் உத்தமமாகவும் செயல்களைச் செய்தார். அவர் ஒருபோதும் காலங்கடத்தவில்லை, அவர் ஒருபோதும் வேண்டா வெறுப்புடன் செய்யவில்லை.

B. அவர் சிரத்தையுடன் செயல்களைச் செய்தார்—மாற்கு 1:35; 3:20-21

தேவனுடைய அடிமை என்ற முறையில் கர்த்தர் மிகவும் சிரத்தையுள்ளவராக இருந்தார். “அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார்,” என்று மாற்கு 1:35 கூறுகிறது. கர்த்தர் மிகவும் தாமதமாகவே உறங்கச் சென்றிருக்கக்கூடும் என்றாலும், பிதாவின் சித்தத்தை நாடவும், பிதாவின் விருப்பத்தின்படி தம் சுவிசேஷ சேவையை நிறைவேற்றவும் பிதாவிடம் ஜெபிக்குமாறு அவர் அதிகாலமே எழும்புவதற்கு சிரத்தையாயிருந்தார். மாற்கு 3:20-21ல், சாப்பிடுவதற்குகூட நேரமில்லாத அளவுக்கு கர்த்தர் அவ்வளவாய் வேலையில் ஈடுபாடாயிருந்தார். அவர் தேவனுடைய குறிக்கோளுக்காக சிரத்தையாய் உழைத்தார், அவர் பாவிகளுக்காக செய்த சேவையில் சோம்பலாயில்லை.

C. அவர் ஒழுங்கான முறையில் செயல்களைச் செய்தார்—மாற்கு 6:39-40

ஐந்தாயிரம்பேருக்கு உணவளித்த அற்புதத்தை கர்த்தர் நிகழ்த்தியபோது, ஒழுங்குள்ள மனுஷீகத்தை அவர் காண்பித்தார். நூறுநூறுபேராகவும், ஐம்பதைம்பதுபேராகவும் மிக ஒழுங்கான முறையில் அவர் மக்களை உட்காரவைத்தார். இதனால், ஒழுங்கான முறையில் சீடர்கள் உணவை விநியோகிக்கமுடிந்தது. கர்த்தர், பாவிகளுக்கான தம் சுவிசேஷ சேவையில், செயல்களை உடனே செய்த, சிரத்தையான, ஒழுங்குள்ள தேவ அடிமையாக இருந்தார் என்பதை கர்த்தருடைய மேன்மையான செயல்களை கவனிப்பதின்மூலம் நாம் கண்டுகொள்கிறோம்.

உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செயலாக்கம்: பலவேளைகளில், மற்றவர்களை சேவிக்க நமக்கு விருப்பம் இருப்பதில்லை, மாறாக, நாம் சேவிக்கப்படுவதற்கு மட்டுமே அக்கறைப்படுகிறோம். மற்றவர்கள் நம் தேவைகளை நிறைவாக்கும்போதும், நம் விருப்பங்களுக்குத் தங்கள் கவனத்தை செலுத்தும்போதும், நாம் அதை அனுபவித்துமகிழ்கிறோம். ஆனால், (பாத்திரங்களைக் கழுவுவது, குப்பையை அகற்றுவது, புல்வெளியைக் கத்தரிப்பது, கூடும் அரங்கத்தை சுத்தம்செய்வது, மற்றவர்களுடைய இரட்சிப்புக்காக அவர்களிடம் கர்த்தரைக்குறித்து பேசுவது போன்றவைகளில்) மற்றவர்களுக்கு உதவி தேவைப்படும்போது, சிலவேளைகளில் நாம் சேவைசெய்ய அந்தளவுக்கு விரும்புவதில்லை. மற்றவர்களை சேவிக்கவேண்டுமானால், நாம் நம் வசதியையும், நம் திட்டத்தையும், நம் முன்னாக்கிரமிப்புகளையும், நம் செளகரியத்தையும், நம் பெருமையையும் ஒதுக்கிவைத்துவிட்டு, கீழே குனிந்து, நம்மைநாமே தாழ்த்தவேண்டியிருக்கிறது. கர்த்தர் நமக்காக இதைச் செய்தார். அவர் தம் மகிமையை ஒதுக்கிவைத்துவிட்டு (ஒப்பீடு, பாடல் எண் 82), நமக்கு சேவைசெய்ய ஓர் அடிமையாகும்படி கீழே குனிந்தார். நாம் தேவனுடைய குறிக்கோளுக்குள் கொண்டுவரப்படுவதற்காக, நம்மிடம் எதையும் எதிர்பார்க்காமல், அவர் வந்து, பாவிகளாகிய நமக்காக சேவையை நிறைவேற்றினார். இப்போது, மற்றவர்களின் இரட்சிப்புக்காக தம்மையே அவர்களுக்குப் பரிமாறும்படி அவர் நமக்குள் வசிக்கிறார். நாம் மற்றவர்களை நண்பராக்கிக்கொள்வதினாலும், அவர்களை சந்திப்பதினாலும், மற்றவர்களை மீட்கும்பொருளாக தம் ஜீவனைக் கொடுத்த கிறிஸ்துவைப்பற்றி அவர்களிடம் பேசுவதினாலும் நாம் அவர்களை சேவிக்கமுடியும். அவர் நம்மை சேவித்தார்; இப்போது, மற்றவர்களின் இரட்சிப்புக்காக அவருடைய சேவைசெய்யும் ஜீவனின் நிரப்பீட்டினால் நாம் அவர்களை சேவிக்கமுடியும்.

சுவிசேஷ செயலாக்கம்: நாம் நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளுமாறு, மரணபரியந்தம் கீழ்ப்படிந்தவராக, ஓர் உண்மையுள்ள அடிமையாக கர்த்தர் வந்ததுதான் பாவிகளுக்காக அவர் செய்த சேவையின் மிகவும் தொடுகிற, விலையேறப்பெற்ற அம்சமாக இருக்கக்கூடும். இந்தச் செய்திக்குறிப்பின் முதல் மூன்று குறிப்புகளைப் பயன்படுத்தி, மிகுந்த விரியமுள்ள விதத்தில் சுவிசேஷத்தைப் பேசலாம்:1) தேவனுடைய அடிமை என்ற முறையில் கிறிஸ்து தேவனுடைய நித்திய குறிக்கோளின் நிறைவேற்றத்திற்காக, பாவிகளை மீட்கும்பொருளாக தம் ஜீவனைக் கொடுத்து அவர்களை சேவித்தார் என்பதைக் குறிப்பாக வலியுறுத்துங்கள் (ஒப்பீடு, Mark 10:45, footnote 1).2) அதன்பின், நம் அடிமை-இரட்சகரான கர்த்தராகிய இயேசுவின் விலையேறப்பெற்றத்தன்மையினால் மக்களைக் கவரும்படி, ஏசாயாவிலுள்ள நம் அற்புதமான அடிமை-இரட்சகரின் பாடனுபவிக்கும் வாழ்க்கையைப்பற்றிய விளாவாரியான சித்திரத்தைப் பயன்படுத்துங்கள்.3) சிலுவைமரணத்தில் முடிந்த இப்படிப்பட்ட ஒரு தாழ்மையான, கீழ்ப்படிகிற வாழ்க்கைக்குப்பின், அவர் உயர்த்தப்பட்டு, பிரபஞ்சத்திலுள்ள எல்லா நாமத்திற்கும் மேலான நாமம் அளிக்கப்பட்டார் என்றும், முழங்கால் யாவும் முடங்கி, இயேசுகிறிஸ்துவே கர்த்தர்! என்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும் என்றும் பவுல் சொல்லுகிறான். பிலிப்பியர் 2-ல் உள்ள இந்தப் பகுதி, கர்த்தருடைய பரமேறியநிலைக்குரிய உன்னதமான நிலைப்பாட்டை சரியாகப் பறைசாற்றுகிறது. இருப்பினும், இப்பேர்ப்பட்ட மகத்துவமான, வல்லமையுள்ள, உயர்த்தப்பட்ட ஒருவர் மிகவும் அழகானவராய், போற்றத்தக்கவராய், அணுகத்தக்கவராய் இருக்கிறார்! மிகுந்த விலையேறப்பெற்றவரான கிறிஸ்துவை நாம் மக்களுக்கு வழங்கவேண்டும். நாம் எவ்வளவு அதிகமாக அவரை விவரித்து, அவருடைய விலையேறப்பெற்றத்தன்மையைக்குறித்து பேசுகிறோமோ, அவ்வளவு அதிகமாக, அதைக் கேட்கிறவர்களின் ஆள்தத்துவத்திற்குள் ஏதோவொன்று உட்செலுத்தப்படும். உட்செலுத்தப்படுகிற இந்த ஏதோவொன்று அவர்களுடைய விசுவாசமாக மாறும்; இந்த விசுவாசம் அவர்களை நம் பிரசங்கத்திற்கு மாறுத்தரம் அளிக்கும்படிச்செய்யும்.நாம் கிறிஸ்துவைப் பாராட்டுவதின்மூலம் விசுவாசிப்பதற்கான நம் திராணியாக மாறும்படி நமக்குள் பிரசங்கிக்கப்படுகிற கிறிஸ்துவே விசுவாசம் (Life-study of Galatians, Message 8, p. 73).

முக்கியமான விஷயங்கள்: நம் நிறைவான இரட்சிப்புக்காக அநேக அம்சங்களில் கிறிஸ்துவையும், அவருடைய நபரையும் வேலையையும்பற்றிய அடிப்படை சத்தியங்களைப் புரிந்துகொள்ளுதல் (II.C.). .

பின்புல வாசிப்புக்காக: Life-study of Mark, Messages 1–2; Christ as the Reality, Chapter 7, pp. 75–76.

REFERENCES: Christ as the Reality, Chapter 7, pp 75–76; Life-study of Mark, Messages 1–3; Message 17, p 154; Message 60, pp 509–510; Mark 1:1, footnote 1; Mark 1:10, footnote 1; Mark 10:45, footnote 1; The Secret of Experiencing Christ, Chapter 2, p 24; Life-study of Galatians, Message 8, p 73.